வெள்ளி, 5 டிசம்பர், 2008

மீண்டும் ஒரு புயல் சின்னம்!


வங்க கடலில் மீண்டும் ஒரு புதிய காற்றழுத்தத் தாழ்வு நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் மீண்டும் கடும் மழை பெய்யும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.

நிஷா புயல் காரணமாக தமிழ்நாட்டில் கடந்த 10 நாட்களுக்கு மேலாக தொடர்ந்து மழை கொட்டியது. இதில் பரங்கிப்பேட்டை உள்பட தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகள் வெள்ளத்தில் மிதந்தன.

கடந்த சில நாட்களாகத் தான் மழை நின்றுள்ளது. இந்நிலையில் மீண்டும் வங்க கடலில் இந்தோனேசியாவுக்கு வட மேற்கு பகுதியில் அந்தமான் அருகே குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ளது.

அது தொடர்ந்து வட மேற்கு திசையை நோக்கி நகர்ந்து வருகிறது. இது சனிக்கிழமை வாக்கில் சென்னைக்கு அருகே வந்து விடும் என்பதால் அன்று இரவு முதல் தமிழகத்தில் மீண்டும் மழை ஆரம்பிக்கவுள்ளது.

சமீபத்திய புயல் மழை ஏற்படுத்திய பாதிப்பே இன்னும் விலகாமல், பல பகுதிகள் வெள்ளத்தில் மிதந்து கொண்டிருக்கும் நிலையில் மீண்டும் உருவாகியுள்ள புயல் குறித்த செய்தி பரங்கிப்பேட்டை மக்களை, குறிப்பாக தாழ்வான பகுதியில் வசிக்கும் மக்களை பீதியில் ஆழ்த்தியுள்ளது.

புதன், 3 டிசம்பர், 2008

கல்லும் முள்ளும் காலுக்கு மெத்தை ....

புயல் மழை நின்று போனது. மக்களின் சங்கட வாழ்வும் இன்னல்களும் மாறாமல் அப்படியேதான் தொடர்கிறது. மக்கள் நலத்திற்கான அடிப்படை சமுதாய கட்டமைப்புக்களில் முக்கியமானது தரமான சாலை வசதி. பேரூராட்சியின் கீழ் உள்ள ஊர் தெருக்கள் முழுவதும் சிமென்ட் சாலைகள் பளபளக்க, முட்லூர் முதல் பெரிய தெரு முனை வரையிலான நெடுஞ்சாலை துறையினரின் பொறுப்பில் உள்ள, (ஏற்கனவே தில்லாங்குத்தான) சாலை அசிங்கமாய் பல்லிளிக்கிறது. (பார்க்க படங்கள்)

ஊரின் முதுகெலும்பு போன்ற முக்கிய சாலையான இது (ஹை ஸ்கூல் ரோடு, கீரைகார தெரு, மற்றும் முட்லூர் வரைக்குமான பிரசித்தி பெற்ற வழவழ் சாலை ) மிக மோசமான நிலையில் இருப்பது, அதன் வழியாக செல்லும் பொதுமக்கள் அனைவருக்கும் மிகுந்த் அவஸ்தையையும் சிரமத்தையும் அளிக்கிறது. வாகனங்கள் பஞ்சர் ஆவது, கற்கள் சிதறி மேலே தெறிப்பது வாடிக்கை நிகழ்வாகிவிட்டது.


எக்காலத்திர்க்குமான மிக மோசமான தெரு என்ற சிறப்பு பெயரை பெற்றிருந்த பெரிய தெருவே பளபள என்று ஆகிவிட்ட நிலையில் இன்னும் சீர் பெறாத இந்த தெரு அந்த பெயரை விரைவில் பெறுமா என்பது பலரின் கேள்வியாக இருக்கிறது. இதற்க்கான திட்டம் தீட்டப்பட்டு, இன்னும் நடைமுறை படுத்தபடாத நிலையில் நெடுஞ்சாலை துறையினரின் இந்த அலட்சியபோக்கு மாறுமா?

செவ்வாய், 2 டிசம்பர், 2008

புதிய வலைப்பூ அறிமுகம்

பரங்கிப்பேட்டை பற்றிய புதிய வலைப்பூ பரங்கிப்பேட்டை செய்தி மடல் என்கிற பெயரில் ஹம்துன் அப்பாஸ் உருவாக்கி செய்தி சேவையை அளித்து வருகிறார். சவூதி அரேபியாவில் பணிபுரிந்து வரும் இவர் தற்போது தாயகம் திரும்பியிருக்கிறார். விடுப்பில் இருக்கும் இவர் ஊரில் தான் கண்ட விசயங்களை புகைப்படங்களுடன் இந்த வலைப்பூவில் பதிவிடும் விசயம் சிறப்பம்சம். இது பற்றி அப்பாஸ் கூறுகையில் ஊரில் (விடுப்பில்) இருக்கும் மிச்ச நாட்கள் வரை ஊரைப் பற்றிய தகவல்கள் மற்றும் செய்திகளை எனது கண்ணோட்டத்தில் அளித்து வருகிறேன். ஆர்வ மிகுதி மற்றும் சேவை எண்ணத்துடன் நான் இதை செய்து வந்தாலும் விடுப்பிற்கு பிறகு ஊரைப் பற்றிய செய்திகள் என்னால் சேகரித்து தரமுடியாவிட்டாலும் வேறு பதிப்புகளை எனது கண்ணோட்டத்தில் பதிவிடுவேன் என்றார்.

இவரது வலைப்பூ முகவரி: http://pnonews.blogspot.com/




இதேபோன்று கிரஸண்ட் நல்வாழ்வுச் சங்கமும் (CWO) தனது வலைப்பூ ஒன்றை துவங்கியுள்ளது. இதில் CWO-வின் சேவைகள் மற்றும் இதர தகவல்கள், செய்திகள் பதிவிடப்பட்டுள்ளது. மேலும் கடந்த வாரம் பெய்த கன மழையின் பாதிப்பின்போது CWO மேற்கொண்ட நிவாரணப் பணிகள் புகைப்படங்களுடன் பதிவிடப்பட்டுள்ளது.

CWO- வின் வலைப்பூ முகவரி: http://crescentpno.blogspot.com/