செவ்வாய், 10 மார்ச், 2009

கடும் மணற்புயல் : ரியாதிலும் வானிலை மாற்றம்




மாறிவரும் வானிலை பரங்கிப்பேட்டையில் குளுமையை ஏற்படுத்த, ரியாதிலோ கடும் மணற்புயல். வாகனத்தில் செல்பவர்களுக்கு எதிரே உள்ளது/வருவது தெரியாத அளவுக்கு
கடும் மணற்காற்று வீசுகிறது.
வெளியே தலைகாட்ட முடியவில்லை.

சில நிறுவனங்கள் விடுமுறை அறிவித்துள்ளன. சாலைகளில் தத்தம் முகப்பு விளக்குகளின் ஒளிரும் வெளிச்சநம்பிக்கைகளைப் பற்றி நகரும் வாகனங்களுக்கு எறும்பினும் சற்றே வேகம் அதிகம்.
சில, பல விமான சேவைகளும் விலக்கப்படலாம் என்று தெரிகிறது.
இந்த மணற்புயலைப் போல கடந்த வருடங்களில் கண்டதில்லை என்று ரியாத் வாழ் தமிழர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

சட்டென்று மாறியது வானிலை

இந்த கோடை வெயிலுக்கு மூனாருக்கோ கொல்லி மலைக்கோ தப்பித்து ஓடி விட பரங்கி மகா ஜனங்கள் சிலர் திட்டமிட்டு இருந்திருக்கலாம். ஆனால், கடந்த இரண்டு நாட்க்களாக ஊட்டியை தூக்கியடிக்கும் ரம்மியமான பரங்கிபேட்டை கிளைமேட்டை பார்த்து அவர்கள் நிச்சயம் தங்கள் திட்டத்தை மாற்றி கொண்டிருப்பார்கள்.

சில வாரங்களாக கொளுத்தி எடுத்த வெயிலுக்கு பதில் செய்வது போல் இதமான தூறல், அழகான காற்று, மிதமான மழை என்று களை கட்டுகிறது பரங்கிபேட்டை சீதோஷன நிலை.


இதோ இப்போது கூட, இருண்ட வானமும், அது பொழியும் ஜில் மழையும், அது தரும், உடம்பை ஊடுருவும் குளிருடனும் இந்த பதிவினை பதிக்கிறோம். (வெளிநாட்டு சகோஸ்... பொறாமை தவிர்க்க)


இந்த திடீர் பருவ மாற்றத்தின் ஒரே ஒரு சந்தோஷ முரண் : வழக்கமாக காலை 8 - 10 போகும் கரண்ட் கூட இன்று போகவில்லை. (இப்ப தானே சொல்லி இருக்கோம்....)

திங்கள், 9 மார்ச், 2009

அவசர கால உதவியில் ஜமாஅத் ஆம்புலன்ஸ்

இன்று நடைபெற்ற எதிர்பாரா விபத்தில் காயம் அடைந்தவர்களை உடனடியாகவும் மிகவும் அக்கறையுடனும், பாராட்டத்தக்க அளவில் நமது அரசு மருத்துவமனை மருத்துவர்களும் ஊழியர்களும் சிகிச்சை அளித்தனர். அந்த அவசர நிலையிலும் இதனை கவனிக்க முடிந்தது.

ஆனால் தலையில் கடுமையாக அடிபட்ட இருவரும் ஒரு குழந்தையும் மிகவும் மோசமான நிலைக்கு செல்ல, தலைமை டாக்டர் அவர்களை கடலூருக்கு கொண்டு செல்ல சொல்லி விட்டார். உடனடியாக 253800 என்ற ஜமாஅத் எண்ணுக்கு போன் செய்து சொல்லி விட்டு அரசு மருத்துவமனையின் ஆம்புலன்ஸ் என்ன ஆயிற்று என்று கேட்டால்.. டிரைவர் இல்லை என்று பதில் வந்தது. பரவாயில்லை எங்களுக்கு தெரிந்த நிறைய டிரைவர் இருக்கிறார்கள் வரச்சொல்கிறோம் என்றதற்கு இல்லை... அரசு டிரைவர் தவிர வேருயாரும் ஆம்புலன்சை எடுக்க கூடாது என்பது அரசு விதி என்று பதில் வந்தது. பிறகு பேசியதில், ஆம்புலன்ஸ் டிரைவர் இன்று ஒரு நாள் தான் லீவ் போட்டார் (?) அன்று போய் இது போல் நடந்து விட்டது என்றார்கள்.
அவசரத்திற்கு இல்லாத அரசு மருத்துவமனை ஆம்புலன்சை நொந்து கொண்டே அவசர எண் 108 க்கு போன் செய்தால் .... இதே கதை தான். கனிவாக விபரம் கேட்டவர்கள் "மன்னிக்கவும் ஒரு அரசு மருத்துவமனையிலிருந்து இன்னொரு அரசு மருத்துவமனைக்கு அம்புலன்சை இயக்க எங்களுக்கு அனுமதி இல்லை" (?) என்று கூறிவிட்டார்கள்.
அடுத்த பத்தே நிமிடத்தில் இஸ்லாமிய ஐக்கிய ஜமாத்தின் ஆம்புலன்ஸ் அங்கு வரவும் தான் அனைவருக்கும் நிம்மதி வந்தது.