திங்கள், 6 ஜூலை, 2009

சில நிமிடங்களில் கருகி காலி கொட்டகையானது வெல்டிங் ஷாப்

பரங்கிப்பேட்டை:

நெல்லுக்கடை தெருவில் கீற்று கொட்டகையில் வெல்டிங் பட்டறை ஒன்று இயங்கி வந்தது.

இன்று இந்த பட்டறையில் தினசரி வேலை நடந்துகொண்டிருந்த போது, சிறிய தீப்பொறி கொட்டகையில் தெறித்து தீ பரவியது.

ஆனால் சில நிமிட நேரங்களில் தீ கொட்டகை முழுதிற்கும் பரவியதினால் அணைக்க முயற்சித்தும் பலனற்று கருகிப் போனது.

அதிகப் பொருட் சேதம் தவிர்க்கப்பட்டாலும், வெல்டிங் பட்டறைகள் இதுபோன்று கொட்டகையில் பாதுகாப்பின்றி குடியிருப்பு பகுதிகளுக்கிடையே இயங்குவது சட்டவிதிகளுக்கு முரணானது.

இனிமேலாவது இது போன்ற சம்பவங்களை கருத்தில் கொண்டு கீற்று கொட்டகையை தவிர்க்க வேண்டும் என்றார் அருகில் கடை வைத்திருக்கும் கடைகாரர் ஒருவர்.

பரங்கிப்பேட்டை லயன்ஸ் கிளப் விழாவில் மாணவ-மாணவிகளுக்கு பரிசளிப்பு!

பரங்கிப்பேட்டை:

பரங்கிப்பேட்டை லயன்ஸ் கிளப் புதிய நிர்வாகிகள் நேற்று பொறுப்பேற்றுக்கொண்டனர்.

அப்போது கும்மத்பள்ளி மாணவ-மாணவிகளுக்கு இலவச நோட்டு புத்தகங்கள் மற்றும் நினைவு பரிசு வழங்கப்பபட்டது.

மேலும் இவ்வவிழாவில் அரசுத் தேர்வுகளில் முதல் மதிப்பெண்கள் பெற்ற மாணவ-மாணவிகளுக்கு நினைவு பரிசுகளும், கும்மத்பள்ளி ஆரம்ப பள்ளியின் வகுப்பறைக்கு பாயும் வழங்கப்பட்டது.

இவ்விழாவில் புதிய நிர்வாகிகள் மற்றும் பழைய நிர்வாகிகள் உட்பட சிறப்பு விருந்தினர்கள் மற்றும் பலர் கலந்துக் கொண்டனர்.

விழா இறுதியில் உணவு பரிமாறப்பட்டது.

அதிரடி போஸ்டர்களும் குமுறல்களும்

பரங்கிப்பேட்டை:

பாராளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்றமைக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக நேற்று முன் தினம் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் பரங்கிப்பேட்டை நகருக்கு வருகை புரிந்தார்.

இவருடைய திடீர் வருகையினால் செய்வதறியாது திகைத்து நின்ற நகர சிறுத்தைகள் அதிரடியாக நன்றி அறிவிப்பு போஸ்டர்களை வீதியெங்கும் சுவர்களில் ஒட்டினர்.

ஆனால் இது சிலருக்கு (வீட்டு உரிமையாளர்கள்) சற்று கோபத்தை வரவழைத்தது. தேர்தலின் போதுதான் அனுமதியின்றி எங்கள் வீட்டு சுவர்களை வீணாக்கி சென்றார்கள்.

இருந்தும் தேர்தலில் வெற்றி பெற்றமைக்கு நன்றி தெரிவிக்கிறோம் என்கிற பெயரில் காலம் கடந்து இப்போது அதிரடியாக எங்கள் வீட்டு சுவர்களை வீணாக்கி சென்றுள்ளனர் என்று குமுறினார் ஒரு இல்லத்தரசர்.