வியாழன், 13 ஆகஸ்ட், 2009

இறப்புச் செய்தி

பொன்னந்திட்டு சின்ன தைக்கால் ரசுல்கான் அவர்களின் இளைய மகனாரும், பரங்கிப்பேட்டை டில்லி சாஹிப் தர்கா (புது நகர்) பாஷாபாய் அவர்களின் இளைய மருமகனுமாகிய அக்பர் அலி மர்ஹும் ஆகிவிட்டார்கள். இன்று வியாழன் (13-08-2009) மாலை கிலுர் நபி பள்ளியில் நல்லடக்கம் செய்யப்பட்டது. இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்

தகவல்: இஸ்லாமிய ஐக்கிய ஜமாஅத்

நம்மை நாமறிவோம்

பரங்கிப்பேட்டையின் கல்வி வளர்ச்சிக்காக தொடர்ந்து பாடுபட்டு வரும், இஸ்லாமிய ஐக்கிய ஜமாஅத்-தின் கல்விப் பிரிவான "கல்விக்குழு" வருகின்ற ஞாயிற்றுக்கிழமை (16-08-2009) காலை 8.30 மணிக்கு மஹ்மூதியா ஷாதி மஹாலில் 8 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ-மாணவர்கள் மட்டும் பங்கு பெறும் வகையில், நம்மை நாமறிவோம் என்ற தலைப்பில் கட்டுரை மற்றும் திறனறி போட்டி என இரு வகை போட்டிகளை நடத்த ஏற்பாடு செய்துள்ளது.

இதில் முதல் வகையாக, பாடப்பிரிவுகள், பொது அறிவு, உலக நடப்பு போன்றவற்றிலிருந்து சுமார் 50 கேள்விகளை உள்ளடக்கிய கேள்வி தாள் கொள்குறி வகையில் (objective type) இருக்கும், மேலும் "சமுதாயத்தில் உங்களை மிகவும் பாதிக்கும் அவலம் எது? நீங்கள் என்ன படித்து, எந்த பதவிக்கு வந்து அதனை நீக்க எவ்விதம் பாடுபடுவீர்கள்? என்ற தலைப்பில் ஒரு கட்டுரை ஒன்றையும் வரைய வேண்டும்.

இரண்டாவது வகையாக, மாணவர்களிடையே மறைந்திருக்கும் அவர்களின் தனித்திறமைக்கு மெருகூட்டும் வகையில் அவற்றை அடையாளப்படுத்தி ஊக்கப்படுத்திட ஏதுவாக "தனித்திறமை" போட்டி ஒன்றும் நடத்தப்படுகின்றது. போட்டியில் கலந்து கொள்ள விரும்பும் மாணவர்கள், தாங்கள் பள்ளி ஆசிரியர்களையோ அல்லது இஸ்லாமிய ஐக்கிய ஜமாஅத் அலுவலகத்தையோ அணுகி பெயரினை பதிவு செய்திட வேண்டுமென்று கல்விக்குழு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு தெரிவிக்கின்றது.

புதன், 12 ஆகஸ்ட், 2009

பரங்கிப்பேட்டையில் சுனாமி பீதி

கடலூர் மாவட்டம் பரங்கிப்பேட்டை மற்றும் கிள்ளை கடலோரப் பகுதி கிராமங்களில் செவ்வாய்க்கிழமை சுனாமி முன்னெச்சரிக்கையால் இப்பகுதி மக்கள் பீதியடைந்தனர். அந்தமான் நிக்கோபர் தீவுகளுக்கு அருகில் திங்கள்கிழமை நள்ளிரவு கடலுக்கடியில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனையொட்டி மத்திய அரசால் இந்தியாவில் செவ்வாய்க்கிழமை அதிகாலை சுனாமி முன்னெச்சரிக்கை அறிவிப்பு வெளியிடப்பட்டது. இதனையொட்டி சிதம்பரத்தை அடுத்த கிள்ளை, பரங்கிப்பேட்டை பகுதியில் பில்லுமேடு, எம்ஜிஆர் திட்டு உள்ளிட்டப் பகுதிகளில் சுனாமி எச்சரிக்கை சங்கு செவ்வாய்க்கிழமை அதிகாலை ஊதப்பட்டது. இதனால் அப்பகுதி மக்கள் பீதியடைந்தனர். தீயணைப்புத் துறையினர் தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்தனர். பின்னர் சுனாமி எச்சரிக்கை அறிவிப்பு வாபஸ் பெறப்பட்டதால் கிள்ளை, பரங்கிப்பேட்டை பகுதிகள் மீண்டும் வழக்கமான நிலைக்கு திரும்பின, என்று இன்றைய தினமணி நாளேடு செய்தி வெளியிட்டுள்ளது.