வியாழன், 14 ஏப்ரல், 2011

பரங்கிப்பேட்டையில் அமைதியான வாக்குப்பதிவு: 68% வரை பதிவு!

பரங்கிப்பேட்டை: பரங்கிப்பேட்டையில் அமைதியான முறையில் நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் சுமார் 65 முதல் 68 சதவீதம் வரையிலான வாக்குகள் பதிவாகின. நகரில் பல்வேறு வாக்குச்சாவடிகளில் நடைபெற்ற வாக்குபதிவில் ஆண்களைவிட பெண்கள் அதிக ஆர்வத்துடன் நீண்ட வரிசையில் காத்திருந்து தமத வாக்குப்பதிவினை செலுத்தினர். முற்பகலில் மட்டுமின்றி பிற்பகலிலும் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்றது. வாக்குப்பதிவு அமைதியாக நடந்து முடிந்ததற்கு மட்டுமின்றி, அரசியல் கட்சிகளை முறைகேடுகள் செய்ய விடாமல் வெகுவாக தடுத்த வகையில், தேர்தல் ஆணையத்தை மக்கள் பாராட்டி வருகின்றனர். 

வாக்குப் பதிவு மாலை முடிந்ததும் அனைத்து வேட்பாளர்களின் முகவர்கள் முன்னிலையில் வாக்குப்பதிவு எந்திரங்கள் சீல் வைக்கப்பட்டன. அவை அனைத்தும் வாக்குகள் எண்ணப்படும் மையங்களுக்கு எடுத்துச் செல்லப்பட்டது. தேர்தல் முடிவுகள் ஒரு மாதத்திற்கப்பிறக மே 13-ல் வெளியாவதால், துணை ராணுவத்தின் பாதுகாப்பில் வைத்து கருவூலங்களை போல வாக்குப்பதிவு எந்திரங்களுக்கு 24 மணி நேரப் பாதுகாப்பு அளிக்கப்பட்டு வருகிறது.

புதன், 13 ஏப்ரல், 2011

வாக்குபதிவில் பெண்கள் ஆர்வம்! நீண்டவரிசையில் காத்திருந்து ஓட்டு போட்டனர்.


பரங்கிப்பேட்டை: இன்று காலை சரியாக 8 மணிக்கு துவங்கிய வாக்குபதிவு விறுவிறுப்புடன் நடைபெற்று வருகிறது. ஆண்களைவிட பெண்கள் அதிகம் ஆர்வத்துடன் தமது வாக்குபதிவினை செலுத்துகின்றனர். வெயிலையும் பொருட்படுத்தாது, நீண்ட வரிசையில் காத்திருந்து ஓட்டு போடுகின்றனர். பகல் 12.30 மணி நிலவரப்படி, 27 சதவீதம் வாக்குகள் பரங்கிப்பேட்டையில் பதிவாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 
 
வாக்கப் பதிவினையொட்டி, பரங்கிப்பேட்டையில் பெரும்பாலான கடைகள், வணிக நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளது. இதனால் நகரின் முக்கிய வணிகப்பகுதியான சஞ்சிவீராயர் கோயில் தெரு முனை வெறிச்சோடி காணப்படுகிறது.

பரங்கிப்பேட்டையில் வாக்குப் பதிவு துவங்கியது!

பரங்கிப்பேட்டை: சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப் பதிவு இன்று காலை 8 மணிக்கு பலத்தப் பாதுகாப்புடன் துவங்கியது. பரங்கிப்பேட்டை அரசு மகளிர் பள்ளி, கும்மத்துபள்ளி, சலங்குகாரத்தெரு அரசினர் ஆரம்ப பள்ளி உட்பட கரிகுப்பம், சேவாமந்திர் பள்ளிகளில் அமையப்பெற்றுள்ள வாக்குச் சாவடிகளில் விறுவிறு வாக்குபதிவு நடைபெற்று வருகிறது. காலை நிலவரப்படி, பெண்கள் அதிக ஆர்வத்துடன் அவர்களுக்கான தனி வரிசையில் நின்று வாக்கு பதிவை செலுத்தி வருகின்றனர். வாக்குச் சாவடிக்குட்பட்ட எல்லையில் கண்காணிப்பு அதிகப்படுத்தப் பட்டுள்ளது.

முன்னதாக நேற்றே இந்த வாக்குச்சாவடிகள் பலத்த பாதுகாப்பின் கீழ் வந்து, வாக்களிக்கும் நடைமுறைகளுக்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன. துவங்கியவுடன் ஒரு சில பூத்துகள் தவிர கூட்டம் சற்று குறைவாக இருந்தது. தற்போது (காலை மணி 9.15) மக்கள் கூட்டம் சற்று அதிகமாக வரத்துவங்கியுள்ளது. எல்லைக்கு வெளியே பூத் சிலிப் வழங்கப்பட்டு வருகிறது.