வாக்காளர் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
வாக்காளர் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், 29 மார்ச், 2011

கடலூர் மாவட்டத்தில் 1-ம் தேதி முதல் வாக்காளர் சீட்டு

ஏப்ரல் 1-ம் தேதி முதல் வாக்காளர் சீட்டு வழங்கப்படும் என்று கடலூர் மாவட்ட ஆட்சித் தலைவர் பெ.சீதாராமன் தெரிவித்தார். ஞாயிற்றுக்கிழமை ஆட்சியர் கூறியது:

அனைத்து வாக்குச் சாவடிகளுக்கு முன்பும் சிறிய பந்தல் அமைக்கப்பட வேண்டும் என்று உத்தரவிடப்பட்டு உள்ளது.

வெயிலில் மக்கள் களைத்துப் போகாமல் இருக்க ஓரல் டிஹைட்ரேஷன் பவுடர் கலக்கிக் கொடுப்பதற்கு வசதியாக, அனைத்து வாக்குச்சாவடி அலுவலர்களுக்கும், ஓரல் டிஹைட்ரேஷன் பவுடர் பொட்டலங்கள் வழங்கப்படும்.

வாக்குச் சாவடிகளில் உள்ள கேமரா, மின் இணைப்பு போன்றவற்றில் ஏற்படும் பழுதுகளை நீக்க ஊராட்சி ஒன்றிய வாரிய தொழில்நுட்பக் குழு அமைக்கப்பட்டு உள்ளது.

தேர்தல் அலுவலர் 17 ஏ பதிவுப் புத்தகத்தை பராமரிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

யாருக்கும் வாக்களிக்க விரும்பவில்லை என்பதை பதிவு செய்ய 49ஓ வசதி இருக்கும்.

வாக்காளர் அடையாள அட்டை, வாக்காளர் சீட்டு வைத்து இருப்போர் மட்டுமே வாக்களிக்க முடியும்.

வாக்காளர் சீட்டு 1-4-2011 முதல் வழங்கப்படும்.

ஞாயிற்றுக்கிழமை பயிற்சிக்கு வரும் தேர்தல் பணியாளர்களைத் தெரிந்து கொண்டு, 28-3-2011 அன்று, கணினிக் குலுக்கல் மூலம் தேர்தல் பணியாளர்கள் தேர்வு செய்யப்படுவர்.

வாக்குச் சாவடிகளில் 1000க்கு மேல் வாக்காளர்கள் கூடாது என்பதற்காக, தேர்தல் ஆணையத்திடம் கூடுதலாக 50 வாக்குச்சாவடிகள் கேட்டுப் பெற்றுள்ளோம் என்றார் ஆட்சியர்.

News: Dinamani

வியாழன், 17 மார்ச், 2011

பொது இடங்களில் உள்ள கட்சி கொடிகளை 48 மணி நேரத்துக்குள் அகற்ற வேண்டும் - அனைத்து கட்சிகளுக்கும் கலெக்டர் சீத்தாராமன் உத்தரவு

கடலூர் மாவட்டத்தில் பொது இடங்களில் அமைக்கப்பட்டுள்ள கட்சி கொடிகளை 48 மணி நேரத்துக்குள் அகற்ற வேண்டும் என கலெக்டர் சீத்தாராமன் அனைத்து கட்சியினருக்கும் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

சட்டமன்ற தேர்தலில் பதட்டமான வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவை வெப் கேமரா மூலம் கம்ப்ïட்டரில் பதிவு செய்யப்பட உள்ளது. இதை நேரடியாக கண்காணிப்பதற்கான செயல் விளக்கம் கடலூர் மாவட்ட பொதுமக்கள் குறைகேட்பு கூட்ட அரங்கில் மாவட்ட தேர்தல் அதிகாரியும், கலெக்டருமான சீத்தாராமன் தலைமையில் நேற்று காலை நடந்தது.

இதில் கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) வீரராகவராவ், வருவாய் அதிகாரி ராஜேந்திரன், பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் மனோகரன், தேர்தல் நடத்தும் அதிகாரிகள் கல்யாணம், கணபதி, திருவேங்கடம், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (தேர்தல்) சுந்தரேசன், செய்தி-மக்கள் தொடர்பு அதிகாரி முத்தையா ஆகியோர் கலந்து கொண்டனர்.

முன்னதாக கலெக்டர் சீத்தாராமன் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறுபவர்கள் மீது பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்க தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. தேர்தல் நடத்தை விதிமுறைகளை பொறுத்தவரை சுவர் விளம்பரங்கள், விளம்பர டிஜிட்டல் பேனர்கள், கட்சிக்கொடிகள் ஒரு பகுதியாகவும், பணம், பரிசுபொருட்கள் மற்றும் மதுபாட்டில்களை கடத்தி செல்லுதல், இலவசங்கள் விநியோகம் ஆகியவற்றை இன்னொரு பகுதியாகவும் பிரிக்கப்பட்டுள்ளன.

அந்த வகையில் கடலூர் மாவட்டத்தில் இதுவரை தேர்தல் நடத்தை விதிகளை மீறி அமைக்கப்பட்டிருந்த 5 ஆயிரத்து 651 சுவர் மற்றும் டிஜிட்டல் பேனர் விளம்பரங்கள், கட்சி கொடிகள் அகற்றப்பட்டுள்ளன. இதில் தி.மு.க. சார்பில் 1,735, அ.தி.மு.க. சார்பில் 2,082, காங்கிரஸ் சார்பில் 305, விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் 832, பா.ம.க. சார்பில் 145, தே.மு.தி.க. சார்பில் 250 விளம்பரங்கள் வைக்கப்பட்டிருந்தன. அவற்றை அகற்றியதற்கான செலவை அந்தந்த கட்சி வேட்பாளர்களிடம் வசூலிக்கப்படும்.

அதேபோல பணம், பரிசுபொருட்கள் மற்றும் மது கடத்தல் போன்ற தேர்தல் நடத்தை விதி மீறல்கள் தொடர்பாக இதுவரை 62 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதில் பணம் கடத்தி வந்ததாக தொடர்பாக திட்டக்குடியில் ரூ.41/4 லட்சமும், கடலூரில் ரூ.2 லட்சமும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

இது குறித்து விசாரிக்க வருமானவரித்துறை அதிகாரியின் தலைமையில் 8 பேர்கொண்டகுழு அமைக்கப்பட்டுள்ளது. பிடிபட்ட பணத்தை அவர்களிடம் ஒப்படைத்துவிடுவோம். அவர்களின் விசாரணைக்கு பின்னர் அந்த பணத்துக்குரிய ஆதாரங்களை தெரிவித்தால் அந்தபணம் உரியவரிடம் உடனடியாக வழங்கப்படும். இல்லை என்றால் தேர்தல் முடிவடைந்த பின்னரே ஒப்படைக்கப்படும்.

வாக்காளர்களுக்கு பணம் கொடுத்து ஓட்டுப் போட செய்வதை தடுக்க வேண்டும் என்ற நோக்கத்தில்தான் இந்த விதிமுறை பின்பற்றப்படுகிறது. எனவே பொதுமக்கள் யாரும் ரூ.1 லட்சத்துக்கு மேல் பணத்தை எடுத்து செல்ல வேண்டாம். மருத்துவ செலவுக்காக பணத்தை எடுத்துச் சென்றால் அதற்குரிய ஆவணங்களை எடுத்துச் செல்ல வேண்டும்.

வேட்பாளர்களின் செலவு கணக்குகளை கண்காணிக்கவும் எளிதில் அறிந்து கொள்ளவும் அவர்களும் வங்கியில் கணக்கு தொடங்க வேண்டும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. மேலும் வங்கியில் இருந்து வேட்பாளர்கள் ரூ.1 லட்சத்துக்கு மேல் எடுத்தால் அதற்கான விவரத்தை தேர்தல் நடத்தும் அதிகாரிகளிடம் தெரிவிக்க வேண்டும்.

தேர்தல் விளம்பரங்கள் தொடர்பாக அதிரடி மாற்றத்தை தேர்தல் ஆணையம் கொண்டுவந்துள்ளது. அதன்படி பொது இடங்களில் பறக்கவிடப்பட்டுள்ள கட்சி கொடிக்கம்பங்களும் மறுக்கப்பட்ட விளம்பரங்களில் அடங்கும் என அறிவித்துள்ளது. அதன்படி கடலூர் மாவட்டத்தில் நெடுஞ்சாலை, சந்திப்புகள் உள்ளிட்ட பொது இடங்களில் அமைக்கப்பட்டுள்ள கட்சி கொடிக்கம்பங்களை அகற்றுவதால் சட்ட-ஒழுங்கு பிரச்சினை ஏற்படும். இதை கருத்தில் கொண்டு கட்சிக் கொடிகளை 48 மணி நேரத்துக்குள் அவரவர்களே அகற்ற வேண்டும். கட்சி கொடிகளை அகற்றியபின் கொடிக்கம்பங்களில் வெள்ளை நிற பெயிண்ட் அடித்து விட வேண்டும். குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் கட்சி கொடிகளை அகற்றாவிட்டால் நாளை (வியாழக்கிழமை) தேர்தல் நடத்தை விதி மீறல் கண்காணிப்பு குழுக்கள் மூலம் அவைகள் அகற்றப்பட்டு அதற்கான செலவை வேட்பாளர்களின் கணக்கில் சேர்த்துக் கொள்ளப்படும்.

ஆனால் தனியார் இடத்தில் அனுமதி பெற்று கட்சி கொடிகளை பறக்க விடலாம். அதேபோல கிராமங்களில் தனியார் சுவர்களில் அனுமதி பெற்று விளம்பரங்கள் செய்யலாம்.

தேர்தல் பார்வையாளர்களும் செல்போனில் தொடர்புகொள்ள தொடங்கி விட்டார்கள். கடலூர், சிதம்பரம், குறிஞ்சிப்பாடி, காட்டுமன்னார்கோவில், புவனகிரி ஆகிய 5 தொகுதிகளுக்கு வேட்பாளர்களின் செலவு கணக்குகளை கண்காணிக்க பார்வையாளர் நியமிக்கப்பட்டுள்ளர். காட்டுமன்னார்கோவிலுக்கு ஒரு தேர்தல் பார்வையாளரும், சிதம்பரம், புவனகிரிக்கு ஒரு தேர்தல் பார்வையாளரும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

கடலூர் மாவட்டத்தில் பதட்டமான 199 வாக்குச்சாவடிகளையும் வெப் கேமரா மூலம் கம்ப்யூட்டரில் பதிவு செய்ய உள்ளோம். வாக்காளர் யாருக்கு வாக்களிக்கிறார் என்ற விவரம் தெரியாத வகையில் வாக்குச்சாவடிக்குள் கேமரா பொருத்தி வாக்குப்பதிவை கம்ப்யூட்டரில் பதிவு செய்யப்படும். இந்த வாக்குப்பதிவு விவரத்தை பொதுமக்கள் இன்டர்நெட்டில் பார்க்க முடியாது. தேர்தல் அதிகாரிகள் மட்டுமே பார்க்க முடியும்.

கடந்த முறை வாக்குபதிவின்போது கம்ப்யூட்டர்களை இயக்க தனி அதிகாரிகள் நியமிக்கப்பட்டனர். ஆனால் இம்முறை கல்லூரி மாணவர்களை கொண்டு அவை இயக்கப்பட உள்ளன.

மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களை போல, தேர்தலுக்கு பயன்படுத்தப்பட உள்ள லேப்டாப் கம்ப்யூட்டர்களையும் தேர்தல் பார்வையாளர்கள் பார்த்து அவர்களின் அனுமதி பெற்ற பின்னரே வாக்குப்பதிவுக்கு பயன்படுத்தப்படும். வாக்குபதிவின்போது எந்தவித இடையூறும் ஏற்படாத வகையில் கம்ப்யூட்டரை முன்கூட்டியே பரிசோதனை செய்து தயார் நிலையில் வைக்கப்படும்.

பொதுமக்கள் வாக்களிக்கும்போது லேப்டாப் கம்ப்யூட்டர் முன்பு நின்று தங்கள் பெயரை ஒரு முறை சொல்லிவிட்டு செல்ல வேண்டும். வாக்குப்பதிவின்போது ஏற்படும் பிரச்சினைகளை அறிந்து கொள்ள இந்த நவீனமுறை கையாளப்படுகிறது.

வழக்கமாக பூத் சிலிப்புகளை சம்பந்தப்பட்ட அரசியல் கட்சிகளே வீடு தேடி வந்து கொடுப்பார்கள். ஆனால் தற்போது முதல் முறையாக பூத் சிலிப்புகள் அந்தந்த வாக்குச்சாவடி அதிகாரிகள் மூலம் வீடுகள் தோறும் நேரடியாக விநியோகம் செய்யப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

முன்னதாக சட்டமன்ற தேர்தலுக்கு பயன்படுத்தப்பட உள்ள லேப்டாப் கம்ப்யூட்டர்கள் கூட்ட அரங்கில் பார்வைக்காக வைக்கப்பட்டிருந்தன. அவற்றை கலெக்டர் சீத்தாராமன் மற்றும் அதிகாரிகள் பார்வையிட்டனர்.

Source: Daily Thanthi

செவ்வாய், 1 பிப்ரவரி, 2011

கடலூர் மாவட்டத்தில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க விண்ணப்பிக்கலாம்

கடலூர் : வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கவும், திருத்தம் செய்யவும் விண்ணப்பிக்கலாம்.

கலெக்டர் சீத்தாராமன் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:

எதிர்வரும் சட்டசபை தேர்தலை முன்னிட்டு வாக்காளர் பட்டியலை தொடர் சுருக்க முறை திருத்தப் பணி மேற்கொள்ள தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது. அதனையொட்டி மாவட்டத்தில் உள்ள 9 சட்டசபை தொகுதிகளில் வாக்காளர் பட்டியில் பெயர் விடுபட்டவர்கள், தொகுதி மாற்றம், நீக்கல் மற்றும் திருத்தம் செய்ய விரும்புபவர்கள் உரிய படிவங்களை பூர்த்தி செய்து சமர்ப்பிக்கலாம்.

படிவங்களை அந்தந்த பகுதிகளில் உள்ள நகராட்சி மேலாளர், தாலுகா அலுவலகங்களில் தலைமையிட துணை தாசில்தார் அல்லது ஆர்.டி.ஓ.,வின் நேர்முக உதவியாளர்களிடம் தேர்தல் அறிவிப்பு வெளியாகி, வேட்பு மனுத்தாக்கல் முடிவதற்கு 10 நாட்களுக்கு முன்பு வரை கொடுக்கலாம் என செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

நன்றி: Dinamalar

வியாழன், 7 மே, 2009

அடையாள அட்டை இல்லாதோர் வாக்களிப்பது எப்படி?

தேர்தலில் வாக்காளர் அடையாள அட்டை இல்லாதவர்கள் எப்படி வாக்களிப்பது என்பது குறித்து தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

வாக்களிப்பதற்கு முக்கியமாக தேவை தேர்தல் ஆணையம் வழங்கும் புகைப்பட வாக்காளர் அடையாள அட்டை. ஆனால், இந்த அட்டை இல்லாமல் பல வாக்காளர்கள் இருக்கிறார்கள்.

புகைப்பட வாக்காளர் அடையாள அட்டை இல்லாதவர்களும் வாக்களிக்க சில புகைப்பட அடையாள ஆவணங்களை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதில் ஏதாவது ஒன்றைக் காட்டி வாக்களிக்கலாம்.

அதன்படி வாக்காளர் அடையாள அட்டை இல்லாதவர்கள் 13 வகையான ஆவணங்களில் ஒன்றைக் காட்டி வாக்களிக்கலாம்.

அந்த 13 ஆவணங்கள்...

  1. பாஸ்போர்ட்

  2. ஓட்டுனர் உரிமம்

  3. வருமான வரி பான் அட்டை

  4. மத்திய மாநில அரசுகள் பொதுத்துறை நிறுவனங்கள், உள்ளாட்சி அமைப்புகள், பப்ளிக் லிமிடெட் நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களுக்கு வழங்கிய போட்டாவுடன் கூடிய அடையாள அட்டை.

  5. அரசு வங்கிகள், தபால் அலுவலகங்கள் வழங்கிய பாஸ் புக்குகள் மற்றும் விவசாயிகளுக்கான பாஸ் புக்குகள்

  6. நிலம், வீட்டு விற்பனை பத்திரங்கள், மனை பட்டா

  7. பிற்படுத்தப்பட்டோர், எஸ்.சி., எஸ்.டி. சான்றிதழ்கள்

  8. ஓய்வு ஊதிய ஆவணங்கள்

  9. சுதந்திர போராட்ட வீரர்களின் அடையாள அட்டை

  10. துப்பாக்கி லைசென்ஸ்

  11. உடல் ஊனமுற்றோர்க்கான சான்றிதழ்

  12. தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில் வழங்கப்பட்ட அடையாள அட்டை

  13. மருத்துவ காப்பீடு திட்டத்திற்காக வழங்கப்பட்ட ஸ்மார்ட் கார்டுகள்.

இந்த 13 ஆவணங்களில் ஏதாவது ஒன்று இருந்தால் போதும். அதைக் காட்டி வாக்களிக்கலாம்.

சில நேரங்களில் குடும்பத் தலைவர் உள்பட குடும்பத்தில் வேறு சிலருக்கும் புகைப்பட வாக்காளர் அடையாள அட்டை இல்லாமல் இருக்கும். அப்படிப்பட்டவர்கள், குடும்பத் தலைவர் மேற்கண்ட ஆவணங்களில் ஒன்றைக் காட்டினால் போதும், மொத்த குடும்பமும் அவருடன் சேர்ந்து வாக்களிக்கலாம். தனித் தனியாக அடையாள அட்டை தர தேவையில்லை.

இதை விட முக்கியம் வாக்காளர் பட்டியலில் நமது பெயர் இடம் பெற்றிருப்பது. அது இல்லாமல் இதில் எதைக் காட்டினாலும் வாக்களிக்க முடியாது. எனவே முதலில் வாக்காளர் பட்டியலில் நமது பெயர் இருக்கிறதா என்பதை உறுதி செய்து கொள்ள வேண்டியது மிக மிக அவசியம்.

வாக்களிப்பது நமது ஜனநாயகக் கடமை. எனவே 13ம் தேதி மறக்காமல், புகைப்பட அடையாள அட்டை அல்லது மேற்கண்ட 13 ஆவணங்களில் ஒன்றுடன் முதல் வேலையாக போய் ஓட்டுப் போட்டு விட்டு வந்து விடுங்கள்.

Source: தட்ஸ் தமிழ்