ஆட்சியர் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ஆட்சியர் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், 9 ஜூன், 2011

சிறந்த பள்ளிகளில் பிளஸ் 1 பயில அரசு உதவித் தொகைக்கு அணுகலாம்

அரசுப் பள்ளிகளில் 10-ம் வகுப்பு படித்து, அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்கள்,தமிழகத்தின் சிறந்த தனியார் பள்ளிகளில் பயில, உதவித் தொகை பெறுவதற்கு அணுகலாம் என்று கடலூர் மாவட்ட ஆட்சியர் வி. அமுதவல்லி அறிவித்து உள்ளார்.

ஆட்சியர் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

கடலூர் மாவட்ட அரசுப் பள்ளிகளில் படித்து, 10-ம் வகுப்பு பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்கள் இச்சலுகையைப் பெறலாம். பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த 3 மாணவர்கள், 3 மாணவிகள் மற்றும் மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் 2 மாணவர்கள், 2 மாணவிகள் ஆக மொத்தம் 10 மாணவர்கள் இச்சலுகையைப் பெறுவதற்குத் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

தேர்ந்தெடுக்கப்படும் மாணவர்கள், அவர்கள் விரும்பும் தமிழகத்தில் தலைசிறந்த தனியார் மேல்நிலைப் பள்ளிகளில் சேர்ந்து, பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்பில் பயில நிதி உதவி வழங்கப்படும். இத்திட்டத்தில் உதவிபெற விரும்பும் மாணவர்களின் பெற்றோர் ஆண்டு வருமானம் ரூ.1 லட்சத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும்.

இத்திட்டத்தில் தேர்ந்தெடுக்கப்படும் மாணவருக்கு, ஆண்டுக்கு ரூ.28 ஆயிரத்துக்கு மிகாமல் 2 ஆண்டுகளுக்கு, மொத்தம் ரூ.56 ஆயிரம் நிதிஉதவி அளிக்கப்படும்.

தகுதி உள்ள மாணவ மாணவியர் கடலூர் மாவட்ட பிற்பட்டோர் நல அலுவரை அணுகுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் என்று அந்த செய்திக் குறிப்பு தெரிவிக்கிறது.

செவ்வாய், 29 மார்ச், 2011

கடலூர் மாவட்டத்தில் 1-ம் தேதி முதல் வாக்காளர் சீட்டு

ஏப்ரல் 1-ம் தேதி முதல் வாக்காளர் சீட்டு வழங்கப்படும் என்று கடலூர் மாவட்ட ஆட்சித் தலைவர் பெ.சீதாராமன் தெரிவித்தார். ஞாயிற்றுக்கிழமை ஆட்சியர் கூறியது:

அனைத்து வாக்குச் சாவடிகளுக்கு முன்பும் சிறிய பந்தல் அமைக்கப்பட வேண்டும் என்று உத்தரவிடப்பட்டு உள்ளது.

வெயிலில் மக்கள் களைத்துப் போகாமல் இருக்க ஓரல் டிஹைட்ரேஷன் பவுடர் கலக்கிக் கொடுப்பதற்கு வசதியாக, அனைத்து வாக்குச்சாவடி அலுவலர்களுக்கும், ஓரல் டிஹைட்ரேஷன் பவுடர் பொட்டலங்கள் வழங்கப்படும்.

வாக்குச் சாவடிகளில் உள்ள கேமரா, மின் இணைப்பு போன்றவற்றில் ஏற்படும் பழுதுகளை நீக்க ஊராட்சி ஒன்றிய வாரிய தொழில்நுட்பக் குழு அமைக்கப்பட்டு உள்ளது.

தேர்தல் அலுவலர் 17 ஏ பதிவுப் புத்தகத்தை பராமரிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

யாருக்கும் வாக்களிக்க விரும்பவில்லை என்பதை பதிவு செய்ய 49ஓ வசதி இருக்கும்.

வாக்காளர் அடையாள அட்டை, வாக்காளர் சீட்டு வைத்து இருப்போர் மட்டுமே வாக்களிக்க முடியும்.

வாக்காளர் சீட்டு 1-4-2011 முதல் வழங்கப்படும்.

ஞாயிற்றுக்கிழமை பயிற்சிக்கு வரும் தேர்தல் பணியாளர்களைத் தெரிந்து கொண்டு, 28-3-2011 அன்று, கணினிக் குலுக்கல் மூலம் தேர்தல் பணியாளர்கள் தேர்வு செய்யப்படுவர்.

வாக்குச் சாவடிகளில் 1000க்கு மேல் வாக்காளர்கள் கூடாது என்பதற்காக, தேர்தல் ஆணையத்திடம் கூடுதலாக 50 வாக்குச்சாவடிகள் கேட்டுப் பெற்றுள்ளோம் என்றார் ஆட்சியர்.

News: Dinamani

வியாழன், 17 மார்ச், 2011

பொது இடங்களில் உள்ள கட்சி கொடிகளை 48 மணி நேரத்துக்குள் அகற்ற வேண்டும் - அனைத்து கட்சிகளுக்கும் கலெக்டர் சீத்தாராமன் உத்தரவு

கடலூர் மாவட்டத்தில் பொது இடங்களில் அமைக்கப்பட்டுள்ள கட்சி கொடிகளை 48 மணி நேரத்துக்குள் அகற்ற வேண்டும் என கலெக்டர் சீத்தாராமன் அனைத்து கட்சியினருக்கும் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

சட்டமன்ற தேர்தலில் பதட்டமான வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவை வெப் கேமரா மூலம் கம்ப்ïட்டரில் பதிவு செய்யப்பட உள்ளது. இதை நேரடியாக கண்காணிப்பதற்கான செயல் விளக்கம் கடலூர் மாவட்ட பொதுமக்கள் குறைகேட்பு கூட்ட அரங்கில் மாவட்ட தேர்தல் அதிகாரியும், கலெக்டருமான சீத்தாராமன் தலைமையில் நேற்று காலை நடந்தது.

இதில் கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) வீரராகவராவ், வருவாய் அதிகாரி ராஜேந்திரன், பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் மனோகரன், தேர்தல் நடத்தும் அதிகாரிகள் கல்யாணம், கணபதி, திருவேங்கடம், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (தேர்தல்) சுந்தரேசன், செய்தி-மக்கள் தொடர்பு அதிகாரி முத்தையா ஆகியோர் கலந்து கொண்டனர்.

முன்னதாக கலெக்டர் சீத்தாராமன் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறுபவர்கள் மீது பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்க தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. தேர்தல் நடத்தை விதிமுறைகளை பொறுத்தவரை சுவர் விளம்பரங்கள், விளம்பர டிஜிட்டல் பேனர்கள், கட்சிக்கொடிகள் ஒரு பகுதியாகவும், பணம், பரிசுபொருட்கள் மற்றும் மதுபாட்டில்களை கடத்தி செல்லுதல், இலவசங்கள் விநியோகம் ஆகியவற்றை இன்னொரு பகுதியாகவும் பிரிக்கப்பட்டுள்ளன.

அந்த வகையில் கடலூர் மாவட்டத்தில் இதுவரை தேர்தல் நடத்தை விதிகளை மீறி அமைக்கப்பட்டிருந்த 5 ஆயிரத்து 651 சுவர் மற்றும் டிஜிட்டல் பேனர் விளம்பரங்கள், கட்சி கொடிகள் அகற்றப்பட்டுள்ளன. இதில் தி.மு.க. சார்பில் 1,735, அ.தி.மு.க. சார்பில் 2,082, காங்கிரஸ் சார்பில் 305, விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் 832, பா.ம.க. சார்பில் 145, தே.மு.தி.க. சார்பில் 250 விளம்பரங்கள் வைக்கப்பட்டிருந்தன. அவற்றை அகற்றியதற்கான செலவை அந்தந்த கட்சி வேட்பாளர்களிடம் வசூலிக்கப்படும்.

அதேபோல பணம், பரிசுபொருட்கள் மற்றும் மது கடத்தல் போன்ற தேர்தல் நடத்தை விதி மீறல்கள் தொடர்பாக இதுவரை 62 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதில் பணம் கடத்தி வந்ததாக தொடர்பாக திட்டக்குடியில் ரூ.41/4 லட்சமும், கடலூரில் ரூ.2 லட்சமும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

இது குறித்து விசாரிக்க வருமானவரித்துறை அதிகாரியின் தலைமையில் 8 பேர்கொண்டகுழு அமைக்கப்பட்டுள்ளது. பிடிபட்ட பணத்தை அவர்களிடம் ஒப்படைத்துவிடுவோம். அவர்களின் விசாரணைக்கு பின்னர் அந்த பணத்துக்குரிய ஆதாரங்களை தெரிவித்தால் அந்தபணம் உரியவரிடம் உடனடியாக வழங்கப்படும். இல்லை என்றால் தேர்தல் முடிவடைந்த பின்னரே ஒப்படைக்கப்படும்.

வாக்காளர்களுக்கு பணம் கொடுத்து ஓட்டுப் போட செய்வதை தடுக்க வேண்டும் என்ற நோக்கத்தில்தான் இந்த விதிமுறை பின்பற்றப்படுகிறது. எனவே பொதுமக்கள் யாரும் ரூ.1 லட்சத்துக்கு மேல் பணத்தை எடுத்து செல்ல வேண்டாம். மருத்துவ செலவுக்காக பணத்தை எடுத்துச் சென்றால் அதற்குரிய ஆவணங்களை எடுத்துச் செல்ல வேண்டும்.

வேட்பாளர்களின் செலவு கணக்குகளை கண்காணிக்கவும் எளிதில் அறிந்து கொள்ளவும் அவர்களும் வங்கியில் கணக்கு தொடங்க வேண்டும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. மேலும் வங்கியில் இருந்து வேட்பாளர்கள் ரூ.1 லட்சத்துக்கு மேல் எடுத்தால் அதற்கான விவரத்தை தேர்தல் நடத்தும் அதிகாரிகளிடம் தெரிவிக்க வேண்டும்.

தேர்தல் விளம்பரங்கள் தொடர்பாக அதிரடி மாற்றத்தை தேர்தல் ஆணையம் கொண்டுவந்துள்ளது. அதன்படி பொது இடங்களில் பறக்கவிடப்பட்டுள்ள கட்சி கொடிக்கம்பங்களும் மறுக்கப்பட்ட விளம்பரங்களில் அடங்கும் என அறிவித்துள்ளது. அதன்படி கடலூர் மாவட்டத்தில் நெடுஞ்சாலை, சந்திப்புகள் உள்ளிட்ட பொது இடங்களில் அமைக்கப்பட்டுள்ள கட்சி கொடிக்கம்பங்களை அகற்றுவதால் சட்ட-ஒழுங்கு பிரச்சினை ஏற்படும். இதை கருத்தில் கொண்டு கட்சிக் கொடிகளை 48 மணி நேரத்துக்குள் அவரவர்களே அகற்ற வேண்டும். கட்சி கொடிகளை அகற்றியபின் கொடிக்கம்பங்களில் வெள்ளை நிற பெயிண்ட் அடித்து விட வேண்டும். குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் கட்சி கொடிகளை அகற்றாவிட்டால் நாளை (வியாழக்கிழமை) தேர்தல் நடத்தை விதி மீறல் கண்காணிப்பு குழுக்கள் மூலம் அவைகள் அகற்றப்பட்டு அதற்கான செலவை வேட்பாளர்களின் கணக்கில் சேர்த்துக் கொள்ளப்படும்.

ஆனால் தனியார் இடத்தில் அனுமதி பெற்று கட்சி கொடிகளை பறக்க விடலாம். அதேபோல கிராமங்களில் தனியார் சுவர்களில் அனுமதி பெற்று விளம்பரங்கள் செய்யலாம்.

தேர்தல் பார்வையாளர்களும் செல்போனில் தொடர்புகொள்ள தொடங்கி விட்டார்கள். கடலூர், சிதம்பரம், குறிஞ்சிப்பாடி, காட்டுமன்னார்கோவில், புவனகிரி ஆகிய 5 தொகுதிகளுக்கு வேட்பாளர்களின் செலவு கணக்குகளை கண்காணிக்க பார்வையாளர் நியமிக்கப்பட்டுள்ளர். காட்டுமன்னார்கோவிலுக்கு ஒரு தேர்தல் பார்வையாளரும், சிதம்பரம், புவனகிரிக்கு ஒரு தேர்தல் பார்வையாளரும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

கடலூர் மாவட்டத்தில் பதட்டமான 199 வாக்குச்சாவடிகளையும் வெப் கேமரா மூலம் கம்ப்யூட்டரில் பதிவு செய்ய உள்ளோம். வாக்காளர் யாருக்கு வாக்களிக்கிறார் என்ற விவரம் தெரியாத வகையில் வாக்குச்சாவடிக்குள் கேமரா பொருத்தி வாக்குப்பதிவை கம்ப்யூட்டரில் பதிவு செய்யப்படும். இந்த வாக்குப்பதிவு விவரத்தை பொதுமக்கள் இன்டர்நெட்டில் பார்க்க முடியாது. தேர்தல் அதிகாரிகள் மட்டுமே பார்க்க முடியும்.

கடந்த முறை வாக்குபதிவின்போது கம்ப்யூட்டர்களை இயக்க தனி அதிகாரிகள் நியமிக்கப்பட்டனர். ஆனால் இம்முறை கல்லூரி மாணவர்களை கொண்டு அவை இயக்கப்பட உள்ளன.

மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களை போல, தேர்தலுக்கு பயன்படுத்தப்பட உள்ள லேப்டாப் கம்ப்யூட்டர்களையும் தேர்தல் பார்வையாளர்கள் பார்த்து அவர்களின் அனுமதி பெற்ற பின்னரே வாக்குப்பதிவுக்கு பயன்படுத்தப்படும். வாக்குபதிவின்போது எந்தவித இடையூறும் ஏற்படாத வகையில் கம்ப்யூட்டரை முன்கூட்டியே பரிசோதனை செய்து தயார் நிலையில் வைக்கப்படும்.

பொதுமக்கள் வாக்களிக்கும்போது லேப்டாப் கம்ப்யூட்டர் முன்பு நின்று தங்கள் பெயரை ஒரு முறை சொல்லிவிட்டு செல்ல வேண்டும். வாக்குப்பதிவின்போது ஏற்படும் பிரச்சினைகளை அறிந்து கொள்ள இந்த நவீனமுறை கையாளப்படுகிறது.

வழக்கமாக பூத் சிலிப்புகளை சம்பந்தப்பட்ட அரசியல் கட்சிகளே வீடு தேடி வந்து கொடுப்பார்கள். ஆனால் தற்போது முதல் முறையாக பூத் சிலிப்புகள் அந்தந்த வாக்குச்சாவடி அதிகாரிகள் மூலம் வீடுகள் தோறும் நேரடியாக விநியோகம் செய்யப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

முன்னதாக சட்டமன்ற தேர்தலுக்கு பயன்படுத்தப்பட உள்ள லேப்டாப் கம்ப்யூட்டர்கள் கூட்ட அரங்கில் பார்வைக்காக வைக்கப்பட்டிருந்தன. அவற்றை கலெக்டர் சீத்தாராமன் மற்றும் அதிகாரிகள் பார்வையிட்டனர்.

Source: Daily Thanthi

செவ்வாய், 1 பிப்ரவரி, 2011

கடலூர் மாவட்டத்தில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க விண்ணப்பிக்கலாம்

கடலூர் : வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கவும், திருத்தம் செய்யவும் விண்ணப்பிக்கலாம்.

கலெக்டர் சீத்தாராமன் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:

எதிர்வரும் சட்டசபை தேர்தலை முன்னிட்டு வாக்காளர் பட்டியலை தொடர் சுருக்க முறை திருத்தப் பணி மேற்கொள்ள தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது. அதனையொட்டி மாவட்டத்தில் உள்ள 9 சட்டசபை தொகுதிகளில் வாக்காளர் பட்டியில் பெயர் விடுபட்டவர்கள், தொகுதி மாற்றம், நீக்கல் மற்றும் திருத்தம் செய்ய விரும்புபவர்கள் உரிய படிவங்களை பூர்த்தி செய்து சமர்ப்பிக்கலாம்.

படிவங்களை அந்தந்த பகுதிகளில் உள்ள நகராட்சி மேலாளர், தாலுகா அலுவலகங்களில் தலைமையிட துணை தாசில்தார் அல்லது ஆர்.டி.ஓ.,வின் நேர்முக உதவியாளர்களிடம் தேர்தல் அறிவிப்பு வெளியாகி, வேட்பு மனுத்தாக்கல் முடிவதற்கு 10 நாட்களுக்கு முன்பு வரை கொடுக்கலாம் என செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

நன்றி: Dinamalar

திங்கள், 27 டிசம்பர், 2010

ரேஷன் கார்டுதாரர்கள் கவனத்துக்கு...

ரேஷன் கார்டுகளின் செல்லத்தக்க காலம் ஓராண்டு நீடிக்கப்பட்டு உள்ளதால், ரேஷன் கார்டுகளில் இணைக்க வேண்டிய உள்தாள்களை, பொதுமக்கள் ரேஷன் கடைகளில் பெற்றுக் கொள்ளலாம் என்று, கடலூர் மாவட்ட ஆட்சியர் பெ. சீதாராமன் அறிவித்து உள்ளார்.

மாவட்ட ஆட்சியர் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

கடலூர் மாவட்டத்தில் தற்போது நடைமுறையில் உள்ள 6,61,200 ரேஷன் கார்டுகளின் செல்லத்தக்க காலம், 31-12-2010 உடன் முடிவடைகிறது.

1-1-2011 முதல் இந்த ரேஷன் கார்டுகளின் செல்லத்தக்க காலத்தை, ஓராண்டுக்கு நீடித்து தமிழக அரசு ஆணை பிறப்பித்து உள்ளது.

இதற்காக ரேஷன் கார்டுகளில் இணைத்துக் கொள்ள வேண்டிய உள்தாள்களை, ரேஷன் கடைகள் மூலம் வழங்க, விற்பனையாளர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டு உள்ளது.

மொத்தம் உள்ள ரேஷன் கார்டுகளைக் கணக்கில் கொண்டு, ரேஷன் கடை விற்பனையாளர்கள் கூட்டத்தைக் கட்டுப்படுத்த வேண்டும்.

தேவையற்ற முறையில் கடைகளில் கூட்டம் கூடுவதைத் தவிர்க்க, முன்கூட்டியே திட்டமிட்டு, அறிவிப்புப் பலகையில் ஒட்டி, தினசரி குறிப்பிட்ட எண்ணிக்கை ரேஷன் கார்டுதாரர்களை வரவழைத்து, உள்தாள்களை வழங்க விற்பனையாளர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

ரேஷன் கார்டுகளில் உள்தாள்களை இணைக்கும்போது, பதிவேட்டில் குடும்பத் தலைவர் அல்லது வயது வந்த குடும்ப உறுப்பினர் மட்டும் கையொப்பம் அல்லது கைரேகை வைத்து, ரேஷன் கார்டுதாரர்கள் 1-1-2011 முதல் பொருள்களைப் பெற்றுக் கொள்ள ஏதுவாக, உள்தாள்களை இணைத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

ரேஷன் கார்டுதாரர்கள் ஒரே நாளில் ரேஷன் கடைகளுக்குச் செல்லாமல், அவரவர்களுக்கு ஒதுக்கப்பட்ட தினத்தை கண்டறிந்து, அந்த நாள்களில் சென்று பயனடையுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

இதில் ஏதேனும் சந்தேகம் இருந்தால், ரேஷன் கடை விற்பனையாளர், வருவாய் ஆய்வாளர், குடிமைப்பொருள் தனி வட்டாட்சியர், வட்ட வழங்கல் அலுவலர் ஆகியோரைத் தொடர்பு கொண்டு விவரங்களைப் பெறலாம் என்றும் ஆட்சியரின் செய்திக் குறிப்பு தெரிவிக்கிறது.

Source: Dinamani