எச்சரிக்கை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
எச்சரிக்கை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், 21 டிசம்பர், 2010

வேண்டாமே பிளாஸ்டிக் உணவுப் பொட்டலம்...!











வெளியூர் செல்லும் நமதூர் அன்பர்கள் கவனத்திற்கு...

வெளியூரில் உள்ள சில ஓட்டல் மற்றும் மெஸ்களில் மெல்லிய பிளாஸ்டிக் பேப்பரில் உணவை பார்சல் செய்து கொடுக்கின்றனர். வெப்பம் காரணமாக, பிளாஸ்டிக் பேப்பரில் உள்ள கெமிக்கல் உணவு பொருட்களில் கலக்கக்கூடிய அபாயம் உள்ளது.

எனவே, எச்சரிக்கையாக இருந்து ஆரோக்கியமான உணவை உட்கொள்ளுமாறு MYPNO அன்புடன் கேட்டுக் கொள்கின்றது.

செவ்வாய், 27 அக்டோபர், 2009

பன்றி காய்ச்சலிலிருந்து உங்களையும், உங்கள் குடும்பத்தையும் பாதுகாத்துக் கொள்ளுங்கள்










காணாமல் போகும் பரங்கிப்பேட்டையின் அடையாளங்கள்

குளங்கள்

எந்த ஊருக்குமே ஆறு, குளம், வாய்க்கால்கள் போன்ற நீர்நிலைகள்தான் வளத்திற்கு ஆதாரம். நமதூரில் சில பத்து வருடங்களுக்கு முன்பு வரை ஏராளமாக இருந்த நீர் நிலைகள் இப்போது எங்கே? தனிப்பட்ட நபர்களின் நிலங்களுக்கு அருகே இருந்து அவர்களால் மெதுவாக ஆக்கிரமிக்கப்பட்டு ஜீரணிக்கப்பட்ட குளங்களயும் வாய்க்கால்களும் நிறைய உள்ளன. அதை அவர்களுக்கும் அல்லாஹ்வுக்கும் இடையில் விட்டுவிட்டு, பள்ளிவாசல்களின் குளங்களுக்கு வருவோம்.

நீச்சல் என்ற அற்புதமான உடற்பயிற்சியை உயிர்காப்பை நமக்கெல்லாம் கற்றுதருவதற்கு, முன்பு எத்தனை குளங்கள் இருந்தன! கிட்டதட்ட அனைத்து பள்ளிகுளங்களும்.... அனைத்தும் எங்கே? எல்லா குளங்களும் பராமரிப்பின்றி பல காலமாய் தூர் வாரப்படாமல் அழிவின் விளிம்பிற்கு சென்று கொண்டுள்ளது என்பது ஒரு வேதனை என்றாலும், அதைபற்றிய கவலையோ, அக்கறையோ சீர் செய்யும் சிந்தனையோ எந்த பள்ளிவாசலின் நிர்வாகத்தினருக்கும் முஹல்லாவாசிக்குகூட இல்லை என்பது அதைவிட அதிகமாய் மனதை அறுக்கும் வேதனை அல்லவா?

அன்பிற்குரியவர்களே !

சற்று சிந்தித்து பார்ப்போம். எது எதற்க்கெல்லாமோ நம் முன்னோர்கள குறைசொல்லும் நாம், இன்னும் 50 வருடங்கள் கழித்து எத்தனை முஸ்லிம்கள் தொழவருவார்கள் என்ற தீர்க்க சிந்தனையோடும், விசாலமனதுடனும், விரிவாக்கும் வசதிகளுடனும், அற்புதமான பள்ளிவாசல்கள், இறையில்லங்களை நம் முன்னோர்கள் நமக்காக நிர்மாணித்து விட்டு சென்றுள்ளனர். அதைவிட அதிக விசாலத்தனத்துடன், குளங்களை வெட்டி நன்மையை நிலையாக தேடி வைத்து சென்றுள்ளனர்.

நமக்கு வழங்கப்பட்ட இத்தகைய பொக்கிஷங்களை நாம் எந்த நிலைமையில் நமது சந்ததியினரிடம் கையளித்து செல்லப்போகிறோம் என்பதை சற்றாவது சிந்தித்து பார்க்கவேண்டாமா? புதிதாக ஒன்றும் செய்ய முடியாதென்றாலும் இருப்பதை சிறப்பாக காப்பாற்றி வைப்பதே சிறந்த செயலாக இறைவனால் கருதப்படும் அல்லவா? இங்கேயும் ஒரு ஸ்பெயினை வேண்டி விரும்பி அழைப்பவர்கள போலல்லவா நாம் அலட்சியமாக இருக்கிறோம்! குளங்கள் என்பது நமது கலச்சார அடையாளங்களில் ஒன்று. இந்த ஊரின் நிலத்தடி நீர்நிலையின் அளவுகோல், அதனை நிர்ணயிப்பதும் அதுவே.

முஸ்லிம்கள் ஆயிரம் வருடம் இந்தியாவை ஆண்டார்கள். ஆனாலும் அவர்கள் (குறிப்பாக முகலாய மன்னர்கள்) வரலாற்று ஆய்வாளர்களால் மிகவும் புகழப்படுவது கட்டிடங்கள், தோட்டங்கள், மற்றும் நீர்நிலைகள் உருவாக்கத்தில் அவர்களின் பங்களிப்பிற்க்காகத்தான். தூர்வாரப்படாமல் அழுகிப்போய்கொண்டிருக்கும் ஒவ்வொரு பள்ளிவாசல் குளமும், அங்கு தொழவரும்/தொழ வராத ஒவ்வொரு முஹல்லாவாசிக்கும் அவமானச்சின்னமாகத்தான் கருதப்படவேண்டும்.

இந்த விஷயத்தில் தூர் வாரும் செலவுதான் பிரதான பிரச்சனையாக முன்வைக்கப்படுகிறது. நிச்சயமாக சொல்கிறோம். அல்லாஹ்வுக்காக அவனது இல்லம் சம்மந்தபட்ட சொத்துக்களில் ஒன்றை சீர்செய்வதற்காக முயல்கிறோம் என்ற எண்ணத்தில் செயல்பட்டால் இதற்கான நிதி என்பது சிரமமே இல்லை.

அல்லாஹ் தான் கொடுக்கிறவன்.

அவர்கள் அதற்காகதான் நிர்வாகிகளாக இருக்கிறார்கள்.

அதுபோல் குளம் தூர்வாருகின்றவர் செய்யும் தவறுகளில் ஒன்று தூர்வாரும் போது குளத்தை சுற்றி சிமெண்ட் கட்டை சுவர்கள் கட்டாமல் மண்தடுப்புக்கல் மட்டுமே வைத்து முடித்துவிடுவது அது கண்டிப்பாக நிலைக்காது அறை குறை முதலீடுபோல் மிகசில வருடத்திலேயே மீண்டும் தூர்வாரும் அவசியம் ஏற்படும். உதாரணம் மீராப்பள்ளியில் உறுதியான சிமெண்ட் தடுப்பு சுவர் அதற்கு அருகாமையில் மேற்கு புறமுள்ள இரண்டு பள்ளிகளில் கட்டப்பட்ட வீதமும் அதன் இன்றைய நிலையும். அடிப்படையாக இரண்டு விஷயங்கள மனதில் கொண்டாலே போதும். 1. அந்நாளில் உங்களுக்கு வழங்கப்பட்ட அருட்கொடைகள் பற்றி நிச்சயமாக கேள்விகேட்கப்படுவீர்கள் என்ற நம்மை படைத்த இறைவனின் எச்சரிக்கை. - சூரா அத்தகாசுர்(102): 2.

சதக்கத்துல் ஜாரியா எனும் நிலையான தர்மத்தில் ஒன்றுதான் இந்த குளங்கள சீர் செய்யும் விஷயம் என்பதால், நீங்கள் ஒரு பள்ளியில் நிர்வாகியாக இருந்தால் இந்த விஷயத்தை முன்னெடுக்க வேண்டும் என்ற நிய்யத்! அல்லது நீங்கள் ஒரு முஹல்லாவாசி என்றால் அல்லாஹ்வுக்காக இந்த விஷயம் குறித்து பள்ளி நிர்வாகத்திற்க்கு ஒத்துழைக்க வேண்டும், நிர்வாகத்திற்கு அந்த எண்ணமே இல்லையென்றால் அதுகுறித்து அவர்களுக்கு அழுத்தம் தரவேண்டும் என்ற நிய்யத்!

நிச்சயமாக அல்லாஹ் நிய்யத் (எண்ணங்கள) தான் கவனிக்கின்றான். அல்லாஹ் மிக அறிந்தவன்.

ஆக்கம்: ஹமீது மரைக்காயர்

வியாழன், 21 மே, 2009

தனியார் பள்ளிகளில் கட்டணக் கொள்ளை...! தொடக்க கல்வியில் 'இங்கிலீஷ் மீடியம்' வருமா?

இன்றைக்கு கல்வி ஒரு மிகப் பெரிய வர்த்தக விஷயமாகிவிட்டது.

படித்தவர்கள் மட்டுமல்லாமல், பாமரர்களும் கூட, தங்கள் குழந்தைகள் உயர் கல்வி பெற வேண்டும் என்பதில் ஆர்வமாகவும், உறுதியாகவும் இருக்கின்றனர்.

உயர் கல்வி பெற்றால் மட்டுமே குழந்தைகளின் எதிர்கால வாழ்க்கை வளம் பெறும் என, பெரும்பாலான பெற்றோர்கள் உணரத் துவங்கிவிட்டனர்.

இதனால், தங்கள் குழந்தைகள் துவக்கத்தில் இருந்தே, தரமான கல்வி பெறும் வகையில், சிறந்த பள்ளிகளை தேர்வு செய்து சேர்க்கின்றனர்.

இதனால், எல்.கே.ஜி., யு.கே.ஜி., வகுப்புக்களில் கூட சேர்க்கைக்காக காத்துக்கிடக்க வேண்டியுள்ளது.

பெற்றோர்களை பொறுத்த வரையில், தனியார் கல்வி நிறுவனங்களில் தங்கள் குழந்தைகளை சேர்த்தால் மட்டுமே அவை சிறப்பாக ஆங்கில அறிவு பெறும் என்ற எண்ணம் மேலோங்கி நிற்கிறது.

துவக்கத்தில் இருந்தே ஆங்கில அறிவு பெற்றால் மட்டுமே, தங்கள் குழந்தைகள் உயர் கல்வியில் சிறந்த மதிப்பெண் பெறுவார்கள்; நல்ல நிறுவனங்களில் பணி கிடைக்கும்; அதன் மூலம் கூடுதல் சம்பளம் பெற முடியும் என்பது அவர்களின் எண்ணம்.

ஒரு வகையில், அவர்களின் எண்ணம் சரியானது தான்.

இன்றைக்கு, ஆங்கிலம் மட்டுமே இணைப்பு மொழியாக உள்ளது.

முன்னைப் போல அல்லாமல், இன்றைய இளைஞர்கள் சர்வ சாதாரணமாக வெளிநாடுகளுக்கு சென்று, பணிபுரிய வேண்டியுள்ளது.

எனவே, அலுவலக பணிக்கும், தகவல் தொடர்புக்கும் ஆங்கில அறிவு அவசியம் என்பதை ஏற்றுக் கொள்ளக் கூடியதே.

ஆனாலும், அதற்காக பல ஆயிரம் ரூபாய்களை செலவு செய்ய வேண்டிய கட்டாயத்தில் பெற்றோர்கள் தள்ளப்படுகின்றனர்.

சராசரி மற்றும் நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்தவர்களுக்கு இது ஒரு பெரும் சுமையாகவே மாறிவிடுகிறது.

குறிப்பிட்ட சில தனியார் பள்ளிகளில் ஒன்றாம் வகுப்பில் சேர, 10 முதல் 15 ஆயிரம் ரூபாய் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.

இந்நிலையில், அரசு பள்ளிகளில், தொடக்க கல்வியில் இங்கிலீஷ் மீடியத்தை கொண்டு வந்தால், இப்பிரச்னைக்கு ஒரு நிரந்தர தீர்வு கிடைக்கும்.

இன்றைய நிலையில், அரசு பள்ளிகளில், தற்போது ஆறாம் வகுப்பு முதல் இங்கிலீஷ் மீடியம் உள்ளது.

சிறப்பு கட்டணம் செலுத்தினால், இங்கிலீஷ் மீடியத்தில் குழந்தைகள் படிக்கலாம். இந்நிலையில், தொடக்க கல்வியில் இருந்து இங்கிலீஷ் மீடியத்தை அறிமுகப்படுத்தினால், குழந்தைகள் முன்கூட்டியே ஆங்கில அறிவை பெறும் வாய்ப்பு கிடைக்கும்.

மேலும், தனியார் பள்ளிகளில் பல ஆயிரம் ரூபாய்களை கட்டணமாக கட்ட வேண்டிய கட்டாயமும் பெற்றோருக்கு ஏற்படாது.

'கமிஷன்' அடிப்படையில் ஷூ, யூனிபார்ம் விற்பனை : ஏஜன்ட்டுகளாக மாறிய மெட்ரிக் பள்ளிகள்

கட்டணக் 'கொள்ளை' மட்டும் போதாமல், கமிஷன் அடிப்படையில் ஷூ, யூனிபார்ம் போன்றவற்றையும், 'கமிஷன் ஏஜன்ட்'களைப் போல் விற்று 'சம்பாதிக்கும்' முயற்சியில் இறங்கி விட்டன சில தனியார் பள்ளிகள்.

தெருவுக்குத் தெரு தனியார் ஆங்கிலப் பள்ளிகள் புற்றீசல் போல் பெருக்கெடுத்து வருகின்றன.

கின்டர் கார்டன் பள்ளிகள், ஒன்றாம் வகுப்பு முதல் 10ம் வகுப்பு - பிளஸ் 2 வரை மெட்ரிக் பள்ளிகள் எனப் பெருகிவிட்டன.

ஒவ்வொரு பள்ளிகளும் தனித்தனியாக சீருடைகளை வடிவமைத்துள்ளன.

ஷூ, சாக்ஸ், டை, பெண் குழந்தைகள் என்றால் 'பெனேபாம்' என கழுத்தை இறுக்கிப் பிடிக்கும் வகையில் தான் சீருடைகள் வடிவமைக்கப்பட்டுள்ளன.

ஆண்டு தோறும் மே, ஜூன் மாதங்களில் ஆண்டு கல்விக் கட்டணம் என ஆயிரக்கணக்கில் வசூலிப்பதுடன், நோட்புக்களுக்கு என தனிக் கட்டணமும் வசூலித்துக் கொள்கின்றன.

இது மட்டுமின்றி, ஒரு சில பள்ளிகள் தங்களிடம் தான் ஷூ, யூனிபார்ம் துணிகளை வாங்க வேண்டும், டெய்லர்களிடம் கொடுக்க பெற்றோர் விரும்பினால் அதற்கும் 'கட்'. 'நாங்கள் கை காட்டும் டெய்லரிடம் தான் யூனிபார்ம் தைத்துக் கொள்ள வேண்டும்' என்ற கட்டளை வேறு.

'சரி, சென்ற ஆண்டு வாங்கிய யூனிபார்ம் நன்றாக உள்ளது. இம்முறை வேண்டாம்' என்று கூறினால், அதை பள்ளி நிர்வாகம் செவி சாய்க்காமல், 'நோ, நோ... நீங்கள் கண்டிப்பாக யூனிபார்ம் வாங்கியாக வேண்டும். கடந்தாண்டு வாங்கிய யூனிபார்ம் அளவு சிறிதாகி விட்டால் என்ன செய்வது' என 'கண்டிஷன்' போடுகின்றனர்.

குறைந்தபட்சம் ஒரு யூனிபார்ம், ஒரு செட் ஷூ வாங்கியாக வேண்டும் என நிர்பந்திக்கின்றது பள்ளி நிர்வாகம்.

ஆனால், அவர்கள் வழங்கிய ஷூ, சீருடைகள் கொடுக்கும் பணத்திற்குத் தரமானதாக இல்லை என்பதே பெற்றோரின் ஆதங்கம்.

பள்ளியில் சேர்த்தாகி விட்டது, இனி வேறு பள்ளியில் சேர்த்தால் அங்கும் டொனேஷன், பீஸ் எனச் செலுத்தியாக வேண்டுமே என்பதால், பெற்றோர் பலரும் வேறு வழியின்றி தரமில்லாத ஷூ, யூனிபார்ம்களை வாங்கிச் செல்கின்றனர்.

'எதில் தான் இப்படிப் பணம் பார்ப்பது என்ற வரைமுறை கூட இல்லாமல் போய்விட்டது என்று ஆதங்கப்படுகின்றனர் பெற்றோர்.

தற்போது அதிக வேலை வாய்ப்பு மற்றும் சில சிக்கல்களில் உள்ள பெற்றோர், ஆண்டுதோறும் மே மாதம் வந்தாலே பயப்படும் அளவுக்கு இப்பள்ளிகள் வசூலை அதிகப்படுத்தி பயமுறுத்துகின்றன.

இந்த நிலை மாறுவது எப்போது என்பது தொடர்ந்து கேள்விக்குறியாகும்.