வேலை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
வேலை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், 16 செப்டம்பர், 2009

வேலை தேடி சென்ற பரங்கிப்பேட்டை வாலிபர் சென்னையில் மரணம்



சென்னை:

பரங்கிப்பேட்டை பண்டக சாலையை சேர்ந்தவர் சமீம் அஹமது (த.பெ.: மர்ஹூம் மாலிக் அஹமது) வயது சுமார் 38.

இவர் கடந்த 15 நாட்களாக சென்னையில் வேலை தேடி திரிந்த நிலையில் கடந்த வெள்ளி கிழமை அன்று அதிகாலையில் ஃபஜர் தொழுகை நேரத்தில் மண்ணடி, செம்புதாஸ் தெரு பள்ளிவாசல் வெளியில் உட்கார்ந்த நிலையில் மரணம் அடைந்துள்ளார்.

பி.காம் பட்டதாரியான இவர் சில ஆண்டுகளுக்கு முன்பு கத்தார் நாட்டில் வேலை பார்த்திருக்கிறார். அங்கு ஏற்பட்ட பழக்கத்தில் இலங்கையை சார்ந்த ஒரு பெண்ணை இங்கு அழைத்து வந்து திருமணம் செய்து நல்ல முறையில் வாழ்க்கை நடத்தி வந்த நிலையில் இவருடைய தாயார் இறப்பிற்கு பிறகு மன-உளைச்சல் ஏற்பட்டு அதனை தொடர்ந்து வாத நோயால் பாதிக்கப்பட்டு முழு சிகிச்சை பெற்று குணமடைந்துள்ளார்.

இருந்தும் மன-உளைச்சல் காரணமாக மனைவியுடன் ஏற்பட்ட கசப்புணர்வு சந்தேகமாக மாறியதால் தனது இரு பிள்ளைகளுடன் இவரது மனைவி இலங்கைக்கு திரும்பி விட்டார்.

இதனால் மேலும் மனஉளைச்சலுக்கு ஆளாகிவிட்ட இவர் கடந்த 3 வாரங்களுக்கு முன்பு தனது உறவினர் மூலம் தனது மனைவி-பிள்ளைகளை மீண்டும் என்னிடம் திரும்பி வந்துவிடச் சொல்லுங்கள், வேலைக்கு சென்று ஒழுங்காக கவனித்து கொள்கிறேன் என்று முறையிட்டுள்ளார். ஆனால் யாரும் சரியான முயற்சி எடுக்காத நிலையில் சென்னைக்கு வேலை தேடி சென்றுள்ளார்.

மண்ணடி செம்புதாஸ் தெருவில் பள்ளிவாசலுக்கு வெளியில் பிளாட்பாரம் போன்ற ஒரு இடத்தில் தங்கி வந்திருக்கிறார். கடந்த வாரம் வியாழன் மாலை சற்று பலவீனமாக இருந்துள்ளதை அஸர் தொழுகையில் சிலர் பார்த்துள்ளனர். அன்று நோன்பு பிடித்திருந்ததாகவும் சிலர் கூறினர்.

இந்நிலையில் மறுநாள் காலை வெள்ளி பஜர் தொழுகை சமயத்தில் உட்கார்ந்த நிலையில் மரணம் அடைந்துள்ளார். தொழுகைக்கு வந்தவர்கள் இதனை பள்ளி நிர்வாகத்திற்கு உடனடியாக தெரிவித்து பரிசோதத்தில் இவருடைய பாஸ்போர்ட் காப்பி மற்று சான்றிதழ்கள் வைத்து இவர் பரங்கிப்பேட்டையை சார்ந்தவர் என்று அறிந்து, உடன் மண்ணடி பகுதியில் தங்கியிருந்த பரங்கிப்பேட்டை சகோதரர்களை தொடர்பு கொண்டு முறையாக உறுதி செய்யப்பட்டது.

அடையாளம் காட்டிய இந்த ஒரு சில சகோதரர்கள் இவரது உறவினருக்கு தெரிவித்ததுடன் ஜமாஅத் தலைவருக்கும் தகவல் அளித்தனர். பின்னர் பள்ளியில் குளுப்பாட்டி-சுத்தம் செய்து கபன் ஆடை அணிவித்து மருத்துவ சான்றிதழ் பெற்று அவசர ஊர்தியில் எடுத்து பரங்கிப்பேட்டை அண்ணா நகரில் வசிக்கும் இவரது மூத்த சகோதரர் நிசார் மற்றும் மைத்துனர் இல்யாஸ் ஆகியோரிடம் ஒப்படைத்தனர்.

பின்பு ஒரு சில மணிநேரத்திற்கு பின், மீராப்பள்ளியில் மாலை 4 மணிக்கு நல்லடக்கம் செய்யப்பட்டது.

திங்கள், 1 ஜூன், 2009

அந்நிய மொழி கற்றால் ஆயிரக்கணக்கில் வேலை வாய்ப்பு!

தாய்மொழியை மட்டும் படிக்காமல் அந்நிய நாட்டு மொழிகளையும் கற்று புலமை பெற்றவர்களுக்கு கைநிறைய சம்பளத்துடன் மொழி பெயர்ப்பாளர் வேலை ஆயிரக்கணக்கில் கொட்டிக்கிடக்கிறது.

குறிப்பாக ஃபிரெஞ்ச், ஜெர்மன், ரஷ்ய மொழிகளைக் கற்றால் வேலைவாய்ப்பு குறித்து சற்றும் கவலை கொள்ளத் தேவையில்லை.

மொழிபெயர்ப்பாளரின் பணி:

பொது நிர்வாகம், அறிவுரைகள், தொழில்நுட்ப விவரங்கள், அரசியல் பேச்சுகள் மற்றும் புத்தகங்கள் போன்றவற்றை மொழிபெயர்க்க வேண்டியிருக்கும்.

பணி இடம்:

பல மொழிகளைக் கற்றவர்களுக்கு பல இடங்களில் வாய்ப்புகள் இருந்தாலும் ஹோட்டல்கள், சுற்றுலாத்துறை, தகவல் தொடர்பு, சினிமா போன்ற பொழுதுபோக்கு, வணிகம், தொழில் நிறுவனங்கள், தூதரகங்களில் அதிக அளவில் மொழிபெயர்ப்பாளர்கள் தேவைப்படுகிறார்கள்.

இதற்காக வெளிநாடுகளுக்குச் செல்வதற்கு சுலபமாக பாஸ்போர்ட் கிடைக்கிறது.

பாடத்திட்ட வகைகள்:

அந்நிய மொழிகள் குறித்து கற்க மூன்று வகையான படிப்புகள் உள்ளன.

  1. சான்றிதழ் படிப்பு
  2. டிப்ளமோ
  3. டிகிரி படிப்புகள்.

சான்றிதழ் மற்றும் டிகிரி படிப்புகளில் சேர பனிரெண்டாம் வகுப்பு முடித்திருந்தால் போதுமானது.

எனினும் டிப்ளமோ படிப்பில் சேர பெரும்பாலான இடங்களில் நாம் சேர விரும்பும் மொழியில் சான்றிதழ் படிப்பை முடித்திருக்க வேண்டும்.

இப்படிப்புகளில் அந்தந்த மொழிகளில் பேசுவதற்கும், செய்தித்தாள்கள், புத்தகங்களை படிப்பதற்கும் நேரடியாக பயிற்சி அளிக்கப்படுவதால் அஞ்சல் வழியில் இப்படிப்புகள் சொல்லித்தரப்படுவதில்லை.

எங்கெங்கு பயிலலாம்?:

  • சென்னைப் பல்கலைக் கழகம், சேப்பாக்கம், சென்னை - 2 வருட டிப்ளமோ (ஜப்பான் மொழி)
  • ஹைதராபாத் பல்கலைக் கழகம், ஹைதராபாத் - 1 வருட டிப்ளமோ (சீன மொழி)
  • மொழிப்பள்ளி, ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழகம், புதுதில்லி - பிஏ (சீனம் மற்றும் ஜப்பான் மொழிகள்)
  • டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கர் மரத்வாடா பல்கலைக் கழகம், அவுரங்காபாத் - 1 வருட டிப்ளமோ (சீன மொழி)
  • பஞ்சாபி பல்கலைக் கழகம், பாட்டியாலா- சான்றிதழ் மற்றும் டிப்ளமோ (சீன மொழி)
  • உத்கல் பல்கலைக் கழகம், வாணி விஹார், புவனேஸ்வர் - 2 வருட டிப்ளமோ (சீன மொழி)
  • தில்லி பல்கலைக் கழகம், தில்லி - 1 வருட சான்றிதழ் (சீன மொழி)
  • லக்னௌ பல்கலைக் கழகம், லக்னௌ - சான்றிதழ் மற்றும் டிப்ளமோ (சீன மொழி)
  • பனாரஸ் இந்து பல்கலைக் கழகம், வாரணாசி - 2 வருட டிப்ளமோ (சீன மொழி), 1 வருட சான்றிதழ் படிப்பு (ஜப்பான் மொழி)
  • தில்கா மஞ்ஜி பாகல்பூர் பல்கலைக்கழகம், பாகல்பூர் - பிஏ (சீனம் மற்றும் ஜப்பான் மொழிகள்)
  • மும்பை பல்கலைக் கழகம், எம்ஜி சாலை, மும்பை - பிஏ (சீனம் மற்றும் ஜப்பான் மொழிகள்)
  • விஷ்வ பாரதி, சாந்தி நிகேதன் - சீனம் மற்றும் ஜப்பான் மொழிகளில் சான்றிதழ் மற்றும் டிப்ளமோ படிப்புகள்
  • புணே பல்கலைக் கழகம், கல்லூரிச் சாலை, கோல்கத்தா - சான்றிதழ் மற்றும் டிப்ளமோ படிப்புகள் (ஜப்பான் மொழி), பிஏ (ஹீப்ரு மொழி)
  • காலிகட் பல்கலைக் கழகம், மலப்புரம், கோழிக்கோடு - பிஏ (ஹீப்ரு)