வெள்ளி, 4 ஜூலை, 2008

கடலூர் கலெக்டர் நடத்திய பாடம்!


சில மேனிலைப்பள்ளிகளில் 100-க்கு 88 மாணவர்கள் ஃபெயில். 50 விழுக்காடு தேர்ச்சி பெற்றவை ஒரு சில பள்ளிகள் தான். இப்படி கல்வியில் தாழ்ந்து தலைகுனிந்து நிற்கும் கடலூர் மாவட்டத்தில் மாணவர்களில் தரத்தை உயர்த்துவது எப்படி? மாவட்டத்திலுள்ள 42 மேனிலைப் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களையும் அழைத்துக்கூட்டம் போட்டார் கலெக்டர் ராஜேந்திர ரத்னூ!

"நமது கவனம் சிதையக்கூடாது. ஆகவே முதலில் நமது செல்ஃபோன்களை ஆஃப் செய்து விடுவோம்". என்ற அறிவிப்போடு பேச்சைத் தொடங்கினார்.
இடையில் ஒரு செல்ஃபோன் இடைவிடாமல் அலற, சத்தம் வந்த திசை நோக்கி நடந்தார் கலெக்டர்.... அலறியது சேத்தியாதோப்பு பெண்கள் மேன்நிலைப்பள்ளியில் தலைமையாசிரியை சந்திராவின் செல்போன் என்பதைக்கண்டறிந்தார்.

"ஏம்மா ஆஃப் பண்ணலை?" கொஞ்சம் கோபமாகக் கேட்டார். ஆசிரியை கண்கள் கலங்கி விட்டன. "எனக்கு ஆஃப் பண்ணத்தெரியலை சார்!" உண்மையைச் சொன்னார் ஆசிரியை.

"ஒரு தலைமை ஆசிரியை இது கூடத் தெரியாமல் இருக்கலாமா?" தலையில் அடித்துக் கொண்ட கலெக்டர், மற்ற தலைமையாசிரியர்களைப் பார்த்து "நான் பேசியதை எல்லாம் குறிப்பெடுத்துக்கொண்டீர்களா?" என்றார். "இல்லீங்க சார்!" எல்லாரும் தலையாட்டினார்கள். "சரி போகட்டும்... நான் என்ன சொன்னேன்னு சொல்லுங்க பார்ப்போம்", கீரப்பாளையம், கருப்பேரி பள்ளித் தலைமையாசிரியர்களைப் பார்த்துக்கேட்டார்.

கடைசி பெஞ்ச் மாணவர்களைப் போல திருதிருவென விழித்தார்கள் அந்த ஆசிரியர்கள். இவர்களை வைத்துக்கொண்டு கடலூர் மாவட்டத்தின் கல்வித்தரத்தை எப்படி மேம்படுத்துவது?
நன்றி: நக்கீரன் (05-07-2008)

திங்கள், 30 ஜூன், 2008

நோட்டு புத்தகங்கள், சீருடை பெற மாணவ-மாணவியர் ஆர்வ மிகுதியில் கூட்டத்தில் முட்டி மோதினர்.


பரங்கிப்பேட்டை இஸ்லாமிய சமூக நலவாழ்வு சங்கம் (சிங்கப்பூர்) நிதியுதவியுடன் 8-வது ஆண்டாக பரங்கிப்பேட்டை இஸ்லாமிய ஐக்கிய ஜமாஅத் சார்பில் நேற்று (29-06-2008) நடைபெற்ற விழாவானது திருவிழா போன்று காட்சியளித்தது.


இலவச நோட்டு புத்தகங்கள்-சீருடைகள் 1 முதல் 12 வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தனித்தனி பகுதிகளாக பிரிக்கப்பட்டு வழங்கினாலும் மாணவ-மாணவியரின் ஆர்வ மிகுதியால் கூட்ட நெரிசலில் முட்டி மோதினர். இவற்றை விநியோகிப்பதற்காக கிரஸண்ட் சங்க (CWO) , கல்விக்குழு உறுப்பினர்கள் மற்றும் இளைஞர்கள் நியமிக்கப்பட்டு 750 மாணவ-மாணவியருக்கு இலவச நோட்டு புத்தகங்கள் மற்றும் சீருடைகள் வழங்கப்பட்டது.

பரங்கிப்பேட்டை மாணவர்களுக்கு சேர்க்கையில் சிறப்பு கவனம் அளிக்க கோரியதை அங்கீகரித்தார் துணைவேந்தர்.


பரங்கிப்பேட்டை இஸ்லாமிய சமூக நலவாழ்வு சங்கம் (சிங்கப்பூர்) நிதியுதவியுடன் 8-வது ஆண்டாக பரங்கிப்பேட்டை இஸ்லாமிய ஐக்கிய ஜமாஅத் சார்பில் நேற்று (29-06-2008) நடைபெற்ற விழாவில் இஸ்லாமிய ஐக்கிய ஜமஅத் தலைவரும் பேரூராட்சி மன்ற தலைவருமான எம்.எஸ். முஹமது யூனுஸ் உரையாற்றும் போது, பரங்கிப்பேட்டை கல்வியில் பின்தங்கியிருப்பதையும் சுனாமி பாதித்த பகுதியாக இருப்பதையும் கருத்தில் கொண்டு அண்ணாமலைப் பல்கலைகழகத்தில் விண்ணப்பிக்கும் பரங்கப்பேட்டை மாணவர்களுக்கு சேர்க்கையில் சிறப்பு கவனம் அளிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். அதைத் தொடர்ந்து பேசிய பல்கலைகழக துணைவேந்தர் இந்த கோரிக்கை ஏற்பதாக உறுதியளித்து பேசியதில் அரங்கம் அதிர கரகோசத்தைப் பெற்றார்.