செய்தி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
செய்தி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், 27 டிசம்பர், 2010

ரேஷன் கார்டுதாரர்கள் கவனத்துக்கு...

ரேஷன் கார்டுகளின் செல்லத்தக்க காலம் ஓராண்டு நீடிக்கப்பட்டு உள்ளதால், ரேஷன் கார்டுகளில் இணைக்க வேண்டிய உள்தாள்களை, பொதுமக்கள் ரேஷன் கடைகளில் பெற்றுக் கொள்ளலாம் என்று, கடலூர் மாவட்ட ஆட்சியர் பெ. சீதாராமன் அறிவித்து உள்ளார்.

மாவட்ட ஆட்சியர் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

கடலூர் மாவட்டத்தில் தற்போது நடைமுறையில் உள்ள 6,61,200 ரேஷன் கார்டுகளின் செல்லத்தக்க காலம், 31-12-2010 உடன் முடிவடைகிறது.

1-1-2011 முதல் இந்த ரேஷன் கார்டுகளின் செல்லத்தக்க காலத்தை, ஓராண்டுக்கு நீடித்து தமிழக அரசு ஆணை பிறப்பித்து உள்ளது.

இதற்காக ரேஷன் கார்டுகளில் இணைத்துக் கொள்ள வேண்டிய உள்தாள்களை, ரேஷன் கடைகள் மூலம் வழங்க, விற்பனையாளர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டு உள்ளது.

மொத்தம் உள்ள ரேஷன் கார்டுகளைக் கணக்கில் கொண்டு, ரேஷன் கடை விற்பனையாளர்கள் கூட்டத்தைக் கட்டுப்படுத்த வேண்டும்.

தேவையற்ற முறையில் கடைகளில் கூட்டம் கூடுவதைத் தவிர்க்க, முன்கூட்டியே திட்டமிட்டு, அறிவிப்புப் பலகையில் ஒட்டி, தினசரி குறிப்பிட்ட எண்ணிக்கை ரேஷன் கார்டுதாரர்களை வரவழைத்து, உள்தாள்களை வழங்க விற்பனையாளர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

ரேஷன் கார்டுகளில் உள்தாள்களை இணைக்கும்போது, பதிவேட்டில் குடும்பத் தலைவர் அல்லது வயது வந்த குடும்ப உறுப்பினர் மட்டும் கையொப்பம் அல்லது கைரேகை வைத்து, ரேஷன் கார்டுதாரர்கள் 1-1-2011 முதல் பொருள்களைப் பெற்றுக் கொள்ள ஏதுவாக, உள்தாள்களை இணைத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

ரேஷன் கார்டுதாரர்கள் ஒரே நாளில் ரேஷன் கடைகளுக்குச் செல்லாமல், அவரவர்களுக்கு ஒதுக்கப்பட்ட தினத்தை கண்டறிந்து, அந்த நாள்களில் சென்று பயனடையுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

இதில் ஏதேனும் சந்தேகம் இருந்தால், ரேஷன் கடை விற்பனையாளர், வருவாய் ஆய்வாளர், குடிமைப்பொருள் தனி வட்டாட்சியர், வட்ட வழங்கல் அலுவலர் ஆகியோரைத் தொடர்பு கொண்டு விவரங்களைப் பெறலாம் என்றும் ஆட்சியரின் செய்திக் குறிப்பு தெரிவிக்கிறது.

Source: Dinamani

வியாழன், 19 நவம்பர், 2009

மய்யத் செய்தி

மேட்டுத் தெரு, மர்ஹூம் எஹ்யா மரைக்காயர் அவர்களின் மகனாரும், மர்ஹூம் எஸ்.ஒய். சாய மரைக்காயர் அவர்களின் தம்பியுமான எஸ்.ஒய். முஹம்மது உஸ்மான் மர்ஹூம் ஆகி விட்டார்கள்.

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.

இன்ஷா அல்லாஹ் இன்று (19-11-09 வியாழன்) மாலை 4 மணிக்கு நல்லடக்கம் மீராப்பள்ளியில்

செவ்வாய், 17 நவம்பர், 2009

மய்யத் செய்தி

வடுகர் தெரு மர்ஹூம் ஹஜ்ஜி முஹம்மது அவர்களின் மகனும், ஹஜ்ஜி முஹம்மது, ஷேக் அலாவுதீன், கஜ்ஜாலி, இமாம் ஆகியோரின் தகப்பனாரும், ஷேக் இஸ்மாயில் அவர்களின் மாமனாருமாகிய முஹம்மது இப்ராஹீம் அவர்கள் மர்ஹூம் ஆகிவிட்டார்கள்.

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்

இன்ஷா அல்லாஹ் இன்று மாலை 4 மணிக்கு நல்லடக்கம் புதுப்பள்ளியில்.

புதன், 4 பிப்ரவரி, 2009

ஹர்த்தால்- கடையடைப்பு

இலங்கையில் நடைபெறும் இனப்படுகொலையில் அப்பாவி தமிழ் மக்கள் அநியாயமாக கொல்லப்படுவதை கண்டித்து இன்று நடைபெற்ற ஹர்த்தால்- கடையடைப்பு பரங்கிபேட்டையில் உண்மையாக எடுபட்டது. அரசு மற்றும் அரசு சார்ந்த நிறுவனங்கள் இயங்கினாலும் கடைகள், வர்த்தக நிறுவனங்கள் எதுவும் இயங்கவில்லை. வழக்கம் போல மருந்தகங்கள் திறந்திருந்தன.

முழுமையான செய்திக்கு (படங்களுடன்) .... இங்கு சொடுக்கவும்
.

புதன், 12 நவம்பர், 2008

புதிய நிர்வாகத்தின் கீழ் கிரஸண்ட் நல்வாழ்வுச்சங்கம்

பரங்கிப்பேட்டை, கிரஸண்ட் நல்வாழ்வுச்சங்கத்தில் கடந்த சிலவருடங்களாக தலைவர் எம். கவுஸ் ஹமீது அவர்கள் பொறுப்பேற்று சிறப்பாக செயல்பட்டு வந்தார். தற்போது அவர் பொறுப்பில் இருந்து விலகிக் கொண்டதால், முன்னாள் நிர்வாகி எம்.கே. அபுல்ஹசன் அவர்கள் முன்னிலையில் 03.10.08 அன்று புதிய தலைவராக ஏ.எல். ஜாபர் சாதிக் அவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டார். துணைத்தலைவராக ஹெச்.எம். முஹம்மது காமில், பி. முபாரக் அஹமது ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். செயலாளராக ஏ.ஹெச். இர்ஃபான் அஹமது அவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டார். மேலும் புதிய நிர்வாகிகளும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

பாரம்பரியம் வாய்ந்த கிரஸண்ட் நல்வாழ்வுச்சங்கத்திற்கும், தேர்ந்தெடுக்கப்பட்ட புதிய நிர்வாகத்திற்கு mypno வலைப்பூ சார்பிலும் கல்விக்குழு சார்பிலும் நல்வாழ்த்துக்கள தெரிவித்துக்கொள்கிறோம்.

இலங்கை தமிழர்கள் படுகொலை கண்டித்து மெளன ஊர்வலம்

இலங்கையில் தமிழர்கள் படுகொலை செய்யப்படுவதை கண்டித்து மனித உரிமைகள் கழகத்தினர் பரங்கிப்பேட்டையில் கடந்த 09.11.2008 ஞாயிறு அன்று மெளன ஊர்வலம் நடத்தினர். ஊர்வலத்தில் மாநில ஒருங்கிணைப்பாளர் பவாணி, ஜெயபால் தலைமை தாங்கினார். மாவட்ட தலைமை அமைப்பாளர் அழகப்பா, ராஜகோபால் முன்னிலை வகித்தார். சிறப்பு விருந்தினராக பேரூராட்சி மன்ற தலைவர் முஹம்மது யூனூஸ் கலந்துக் கொண்டார். ஊர்வலம் பரங்கிப்பேட்டை, அகரம் வீரப்ப பூங்காவிலிருந்து பஸ்நிலையம் வழியாக கச்சேரித் தெருவில் உள்ள மனித உரிமைகள் கழக அலுவலகத்தை அடைந்தது. இதில் மாவட்ட அமைப்பாளர்கள் ஜெயராமன், லோகநடேசன், மாவட்ட துணை அமைப்பாளர் ராஜேந்தின், மாவட்ட வழக்கறிஞர் சுதாகர், மாவட்ட நிருபர் ரவி, நகர அமைப்பாளர் மாரியப்பன், துணை அமைப்பாளர் முத்துகுமார், ஒருங்கிணைப்பாளர் சுந்தரமூர்த்தி, மாவட்ட புரலவர் முத்து குமரன், செய்திபிரிவு கார்த்திகைபாலன், மகளிர் அணி தாட்சாயிணி, இளஞர் அணி அலி அக்பர் மற்றும் உத்ராபதி, வடிவேல், இளங்கோ முடிவில் குமார் அவர்கள் நன்றி கூறினார்.

திங்கள், 10 நவம்பர், 2008

கண்டன பொதுக்கூட்டம்

பரங்கிபேட்டை வெள்ளாற்று பாலம் இன்னும் கட்டி முடிக்கப்படாமல் தேக்க நிலையில் இருப்பதை விரைந்து கட்டி முடிக்க கோரியும் பரங்கிபேட்டை அரசு மருத்துவமனையில் தேவையான மருத்துவர்களை நியமிக்க கோரியும் மார்க்சிஸ்ட் கம்யுனிஸ்ட் கட்சி சார்பில் இன்று மாலை பரங்கிபேட்டை சஞ்சீவிராயர் கோவில் தெரு சந்திப்பில் கண்டன கூட்டம் நடந்தது.
அதில் தோழர் ராஜேந்திரன், முராத் மற்றும் தோழர் மூசா உட்பட பலர் கலந்து கொண்டு கண்டன உரை நிகழ்த்தினார்கள்.

மூசா அவர்கள் பேசுகையில் தற்போது நிகழும் அரசியல் சார்பான பிரச்சனய்கள் அனைத்தையும் ஒரு பிடி பிடித்தார். இஸ்லாத்தில் வன்முறைக்கு இடமேயில்லை என்று ஹைதராபாதில் கூடிய தேவ்பந்து உலமாக்கள் ஆறாயிரம் பேர் கொடுத்திருக்கும் பத்வாவை குறிப்பிட்டு பேசினார். மத்திய அரசின் அமெரிக்க அடிமை போக்கையும், மாநில அரசின் மின் வெட்டு உள்ளிட்ட அனைத்து பிரச்சனைகளையும் குறித்து தனது வழக்கமான ஸ்டைலில் உரையாற்றினார்.

சனி, 8 நவம்பர், 2008

பரங்கிப்பேட்டையில் தீவிரவாதத்திற்கு எதிராக முஸ்லிம்கள் போராட்டம்

பரங்கிப்பேட்டை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் இன்று மாலை 4 மணியளவில் பரங்கிப்பேட்டை அரசு மருத்துவமனை அருகில் தீவிரவாததிற்கு எதிராக முஸ்லிம்கள் கண்டண ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதில் பெண்கள் உட்பட ஏராளமான முஸ்லிம்கள் பங்கு பெற்றனர்.




அடிக்கடி குண்டு வெடிப்புகளை நிகழ்த்தி மீண்டும் அதே நயவஞ்சக முறையில் இந்து முஸ்லிம் ஒற்றுமையை சீர்குலைக்க சதிச்செயல் புரியும் சங்பரிவார தீவிரவாத அமைப்புகளை தடை செய்யக் கோரியும் சங்பரிவார பயங்கரவாதிகளை கைது செய்ய கோரியும் அப்பாவி முஸ்லிம்களை முஸ்லிம் தீவிரவாதிகள் என்று கொட்டை எழுத்தில் போட்டு குண்டு வைத்த சங்பரிவார தீவிரவாதிகளை மக்கள் மத்தியில் அடையாளம் காட்ட தவறிய மீடியாக்களை கண்டித்தும் அனைத்து குண்டு வெடிப்பு வழக்குகளையும் சிபிஐ விசாரனைக்கு மாற்றம் செய்ய கோரியும் இந்த கண்டன ஆர்ப்பாட்டம் அமைந்திருந்தது.

வெள்ளி, 31 அக்டோபர், 2008

சிறுபான்மை இளைஞர்களுக்கு தொழிற்பயிற்சி!

சிறுபான்மை இளைஞர்களுக்கு தொழிற்பயிற்சி!
அக் 31க்குள் விண்ணப்பிக்க வேண்டுகோள்!!

தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம், படித்து வேலையில்லாத சிறுபான்மை சமுதாயத்தைச் சேர்ந்த இளைஞர்களுக்கு மாவட்ட தலைநகரங்கள் மற்றும் சிறுபான்மையினர் அதிகமாக வசிக்கும் இடங்களில் தேர்ந்தெடுக்கப்பட்ட பயிற்சி நிலையங்கள் மூலமாக தொழிற்பயிற்சி வழங்க உள்ளது.

இப்பயிற்சியில் கம்ப்யூட்டர் ஹார்டுவேர் அண்ட் நெட் ஒர்க்கிங், சி.சி. பிளஸ், பிளஸ், டி.டி.பி. டேலி வித் எம்.எஸ். ஆபீஸ் ஆகிய பயிற்சிகள் அளிக்கப்படும்.

10-ம் வகுப்பு தேர்ச்சி அல்லது தோல்வியடைந்த இளைஞர்கள் தங்கள் குடும்ப ஆண்டு வருமானம் ஒரு லட்சத்துக்கு மிகாமல் இருந்தால் இப்பயிற்சியில் சேர தகுதி உடையவர்கள் ஆவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை

எனவே, விருப்பம் உள்ள சிறுபான்மையின இஸ்லாமிய இளைஞர்கள் தங்கள் விண்ணப்பத்தை வெள்ளைத்தாளில் எழுதி அதனுடன் சாதிச் சான்றிதழ் நகல், 10ஆம் வகுப்பு மதிப்பெண் பட்டியல் நகல் அல்லது கூடுதல் கல்வித் தகுதி இருந்தால் அதற்குரிய சான்றிதழ்கள், வருமான சான்றிதழ் நகல், பள்ளி அல்லது கல்லூரி மாற்று சான்றிதழ் நகல் ஆகியவற்றை இணைத்து தபாலில்

மேலாண்மை இயக்குநர்,
தமிழ்நாடு சிறுபான்மையின பொருளாதார மேம்பாட்டுக் கழகம்,
5வது தளம்,
807, அண்ணாசாலை,
சென்னை.

என்ற முகவரிக்கு வருகிற 31ஆம் தேதிக்குள் அனுப்ப வேண்டும்.

தபால் உறையின் மேல் பகுதியில் பயிற்சியின் பெயர், பயிற்சி பெற விரும்பும் ஏதேனும் ஒரு பாடத்தினை மட்டும் குறிப்பிட வேண்டும். இந்த வாய்ப்பை முஸ்லிம் சமுதாய இளைஞர்கள் பயன்படுத்திக் கொள்ளுமாறு கடலூர் மாவட்ட இந்திய யூனியன் முஸ்லிம் லீக் செயலாளர் சுக்கூர் கேட்டுக்கொண்டுள்ளார்.

வெள்ளி, 10 அக்டோபர், 2008

இன்று முதல் ஏழரைக்கு நெருங்குகிறது மின்வெட்டு.

நேற்று வரை 5 மணி நேரமாக இருந்து வந்த மின்சார நிறுத்தம் இன்று முதல் 6 மணி 30 நிமிடங்கள் (ஆறரை மணிநேரம் - ஏழரைக்கு நெருக்கமாக) என்று கடலூர் மாவட்ட மின்(வெட்டு) வாரியம் அறிவித்துள்ளது.

தமிழ்நாடு மின்சார வாரிய கடலூர் மின் பகிர்மான வட்ட மேற்பார்வை மின் பொறியாளர் சுதர்சன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:- தமிழகத்தில் தற்பொழுது நிலவி வரும் மின் தட்டுப்பாட்டை சமாளிக்கும் வகையில் கடலூர் மின் பகிர்மான வட்டத்துக்கு உட்பட்ட துணை மின் நிலையங்களில் இருந்து தினமும் 5 மணி நேரம் மின்சாரம் நிறுத்தப்பட்டு வந்தது. ஆனால் இன்று (வெள்ளிக்கிழமை) முதல் காலை 6 மணி முதல் மாலை 6 மணிக்குள் 4 மணி நேரமும், மாலை 6 மணி முதல் இரவு 9 மணிக்குள் 1 மணி நேரமும், இரவு 9 மணி முதல் மறுநாள் காலை 6 மணிக்குள் 1 1/2 மணி நேரமும் என தினமும் 6 1/2 மணி நேரம் சுழற்சி முறையில் மின்சாரம் நிறுத்தம் செய்யப்பட உள்ளது.

வியாழன், 9 அக்டோபர், 2008

ஆயுத பூஜை கொண்டாட்டங்கள்

ஆயுத பூஜை கொண்டாட்டங்கள் பரங்கிபேட்டை சஞ்சிவிராயர் கோயில் தெருவில் ஆட்டோ டிரைவர்களின் ஆயுத பூஜை கொண்டாட்டங்கள் நடந்தன. தெருவெங்கும் தோரணம். ஸ்பீக்கர் கட்டி பாட்டு. சேட்டு பூசனிகாய் உடைக்க மன்சூர் தேங்காய் உடைக்க ஆட்டோ சங்க தலைவர் நிசார் மற்றும் சிலர் கடைகள் தோரும் சென்று படைத்த பொறி மற்றும் சுண்டலை விநியோகித்தனர். ஆட்டோக்கள் அனைத்தும் விபூதி குங்குமம் பூசப்பட்டு வாழை தார்கள் கட்டப்பட்டு பரங்கிபேட்டை சுற்றி ஊர்வலம் வந்தனர்.

வியாழன், 11 செப்டம்பர், 2008

பத்திரிகைகளில் பரங்கிப்பேட்டை செய்திகள்

பரங்கிப்பேட்டை அருகே முதியோர் இல்லம் திறப்பு


பரங்கிப்பேட்டை அருகே ரூ.30 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட முதியோர் இல்லத்தை கலெக்டர் ராஜேந்திர ரத்னு திறந்து வைத்தார். சுனாமி மறுவாழ்வுப் பணிகளில் உத்திரபிரதேச எம்.பி.,க்கள் சைலந்திர குமார், ராம்கோபால் வர்மா, பிரிஜ்பூஷன் சரன்சிங் ஆகியோர் தலா ரூ.10 லட்சம் நிதி உதவியுடன் பரங்கிப்பேட்டை அருகே கரிக்குப்பம் கிராமத்தில் முதியோர் இல்லம் கட்டப்பட்டது. அதற்கான திறப்பு விழா நடந்தது.


கலெக்டர் ராஜேந்திர ரத்னு இல்லத்தை திறந்து வைத்து பேசியதாவது: இக்கட்டடத்திற்கு நிதியுதவி வழங்கியவர்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த முதியோர் இல்லத்தினை கிரீடு தொண்டு நிறுவனம் நல்ல முறையில் செயல்படுத்தி வருகிறது. இங்கு 25 முதியோர்கள் தங்க உள்ளனர். இதன் பராமரிப்பிற்குரிய உதவிகள் மத்திய அரசின் மூலம் பெற்றுத் தரப்படும். முதியோர் தங்கள் பொழுதுபோக்கிற்காக காய்கறி தோட்டம், பூந்தோட்டம் அமைத்து அதன் பயன்களை பெற வேண்டும். அடுத்தாண்டு இந்த இல்லத்திற்கு சுற்றுச்சுவர் கட்டித் தரப்படும் என்றார்.


முன்னதாக சமூக நல அலுவலர் அன்பழகி வரவேற்றார். டி.ஆர்.ஓ., கணேஷ், பரங்கிப்பேட்டை ஒன்றியக் குழு சேர்மன் முத்துப் பெருமாள், கொத்தட்டை ஊராட்சித் தலைவர் தங்கபாண்டியன், சென்டெக்ட் இயக்குனர் பச்சைமால், கிரீடு செயலாளர் நடனசபாபதி ஆகியோர் கலந்து கொண்டனர். சுப்பையன் நன்றி கூறினார்.


திருமண உதவி திட்டத்தில் 23 பேருக்கு காசோலை


பரங்கிப்பேட்டையில் திருமண உதவி திட்டத்தில் 23 பெண்களுக்கு காசோலை வழங்கப்பட்டது. பரங்கிப்பேட்டை ஒன்றியத்தில் பல்வேறு கிராமங்களில் உள்ள 23 இளம்பெண்களுக்கு மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் திருமண நிதியுதவி திட்டத்தின் கீழ் ரூ. 3 லட்சத்து 45 ஆயிரம் காசோலை வழங்கப் பட்டது.

பரங்கிப்பேட்டை ஒன்றிய குழு சேர்மன் முத்துப்பெருமாள் தலைமை தாங்கி, காசோலை வழங்கினார். நிகழ்ச்சியில் ஒன்றிய ஆணையாளர்கள் ராமச்சந்திரன், நடராஜன், மேலாளர் ராமச்சந்திரன் ஆகியோர் பங்கேற்றனர்.


நன்றி : ஒரு காலை நாளிதழ்

செவ்வாய், 2 செப்டம்பர், 2008

புகைப்படச் செய்திகள்

பரங்கிப்பேட்டை மாதாகோயில் தெருவில் கட்டப்பட்ட ஆரம்ப சுகாதார நிலைய கட்டிடத்தை மாவட்ட ஆட்சித்தலைவர் துணை இயக்குநர் மீராவிடம் ஒப்படைத்த நிகழ்ச்சி.
பரங்கிப்பேட்டை பேரூராட்சிக்கு ஆசிய வளர்ச்சி வங்கி மூலம் ரூ.11 லட்சம் மதிப்பீட்டில் மினிலாரியை மாவட்ட ஆட்சித்தலைவர் வழங்கினார்.
தகவல்: குவைத்திலிருந்து... பரங்கிப்பேட்டை கலீல் பாகவீ

வெள்ளி, 22 ஆகஸ்ட், 2008

பரங்கிப்பேட்டை பாலத்தில் வாகனவரி வசூலிப்பை நிறுத்த கோரிக்கை.




பரங்கிப்பேட்டை பக்கிம்காங் கால்வாய் குறுக்கே இருக்கும் பாலத்திற்கு அதன் ஒப்பந்த காலம் முடிந்தும் வாகனவரி வசூல் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதனால் பொதுமக்கள் மட்டுமின்றி தனியார் வாகனங்கள் மற்றும் வெளியூர் ஆட்களும் சிரமப்படுகின்றனர். இதனை கருத்தில் கொண்டு தனியார் வாகனங்கள் ஊர் உள்ளே வருவதற்கு அதிகம் தயக்கம் காட்டுகின்றனர்.

பலருக்கும் இடைஞ்சலாக இருக்கும் இந்த வரம்பு மீறிய வாகனவரியை நிறுத்தகோரி கிரஸண்ட் நல்வாழ்வு சங்கம் (C.W.O.) சார்பில் மவாட்ட ஆட்சியருக்கு கோரிக்கை மனு அளிக்கப்பட்டுள்ளது.

'நீரின்றி அமையாது உலகு': திருமணங்களில் வீணடிக்கப்படும் குடிநீர்.

எத்தனை வகை வகையாக விருந்தளித்தாலும் அவற்றுடன் குடிக்க தண்ணீர் இல்லையென்றால் விருந்து ருசிக்காது. அந்த வகையில் இன்றைய விருந்துகளில் குடிநீராக பயனபடுவதும் பரிமாறப்படுவதும் பாக்கெட் தண்ணீர் எனப்படும் பிளாஸ்டிக் உறையில் அடைக்கப்பட்ட தண்ணீர். சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் என்ற பெயரில் வரும் இவ்வகையான பாக்கெட் தண்ணீரில் ஒரு வகையான (பிளாஸ்டிக்) நாற்றம் சேர்ந்து வருவதால் இதனை தற்போது யாரும் விரும்பி அருந்துவதில்லை. திருமண நிகழ்ச்சியின்போது உணவு உண்டபின் கை கழுவுவதற்கே அதிகம் பயன்படும் இந்த பாக்கெட் தண்ணீர் அவசரத்திற்கு மட்டும் (தொண்டையில் உணவு அடைபடும் தருணங்களில்) சிலர் அருந்துகின்றனர். மற்றபடி இதனை அதிகப்படியாக உபயோகிப்பது (குடிப்பதற்கும் சரி, விளையாடுவதற்கும் சரி) குழந்தைகள் மற்றும் சிறுவர்-சிறுமியர்களே.

கெமிக்கல் கலந்த இன்கினால் பிரிண்ட் செய்யப்படும் தயரிப்பு தேதிகூட (சாப்பாட்டு தட்டின் மீது வைத்து தருவதால் அந்த தேதியும்) மறைந்து அழிந்து சற்று இளஞ்சூடாக தண்ணீர் இருப்பதால் இது பல வியாதிகளுக்கு காரணமாக அமைகிறது என்கிறார் ஒரு சமூக ஆர்வளர்.

எக்ஸ்ட்ரா தகவல்:
'நீரின்றி அமையாது உலகு'. ஆனால், இந்த காலகட்டத்தில், சுத்திகரிக்கப்பட்ட தண்ணீர் என்று கூறி, கலப்பட தண்ணீரினை கேன்களில் அடைத்து விற்கும் கும்பல் ஒன்று சென்னையில் ஆங்காங்கே அலைகிறது. அசுத்தமான தண்ணீர் பாக்கெட் மினரல் வாட்டர் என்று விற்ற காலம் போய், இப்போது போலி ஐ.எஸ்.ஐ. முத்திரைகளுடன் கேன்களும் விற்பனை செய்யப்படுகின்றன. சென்ற வாரமும், தாம்பரம் பகுதியில் நிக்ரா மினரல் வாட்டர் நிறுவனம் நிக்ரா, மானட்சா, கிளாஸ், ஜாய், இமேஜ் என்னும் பெயர்களில் போலி ஐ. எஸ். ஐ. முத்திரைகளுடன் விற்பனை செய்தது கண்டுபிடிக்கப்பட்டு, 1986 ஆண்டு இந்திய தர நிர்ணய சட்டத்தின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. குற்றம் நிரூபிக்கப்பட்டால் ரூபாய் அம்பதாயிரம் அபராதமும், ஓராண்டு சிறைத் தண்டனையும் (ஏதேனும் ஒன்றோ அல்லது இரண்டுமோ) விதிக்கப்படலாம்.

இது போன்ற போலிகள் பற்றி நாம் வேறெங்கிலும் காண்போமேயானால், கீழ்க்காணும் முகவரிகளில் புகார் தெரிவிக்கலாம்:
இந்திய தர நிர்ணய நிறுவனம்,
தென் மண்டல அலுவலகம்,
சி. ஐ. டி. வளாகம்,
4வது குறுக்கு சாலை,
தரமணி, சென்னை – 113.
தொ. பே.: 10914422541087,
மின்னஞ்சல் : sro@bis.org.in

செவ்வாய், 19 ஆகஸ்ட், 2008

சுனாமி குடியிருப்புகள் எந்த நேரத்திலும் இடிந்து விழும் அபாயம்!

பரங்கிப்பேட்டையில் சுனாமியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தொண்டு நிறுவனம் மூலம் கட்டப்பட்ட குடியிருப்புகள் பல இடங்களில் விரிசல் ஏற்பட்டுள்ளதால் இடிந்து விழும் ஆபத்தான நிலையில் உள்ளது. பரங்கிப்பேட்டை கருணாநிதி சாலை கடந்த சுனாமியின்போது கடுமையாக பாதிக்கப்பட்டது. பாதிக்கப் பட்டவர்களுக்கு அரசு மற்றும் தொண்டு நிறுவனங்கள் மூலம் பல்வேறு வசதிகள் செய்துகொடுக்கப்பட்டது.

இந்நிலையில் கடந்த ஆண்டு சுனாமியால் பாதிக்கப்பட்ட 63 பேருக்கு புதுச்சத்திரம் பிளஸ் தொண்டு சார்பில் ரூ. தலா ரூ. ஒரு லட்சத்து 50 ஆயிரம் மதிப்பில் நிரந்தர குடியிருப்புகள் கட்ட ஏற்பாடு செய்யப்பட்டது. அதில் தற்போது சுமார் 29 குடியிருப்புகள் கட்டிமுடிக்கப்பட்டுள்ளது. 30க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் பாதியளவு வேலைகள் முடிந்துள்ளது. பத்துக்கும் மேற்பட்ட குடியிருப்புகள் இன்னும் ஆரம்ப கட்ட வேலைக்கூட நடைபெறாமல் உள்ளது. இந்நிலையில் புதியதாக கட்டி முடிக்கப்பட்ட 29 குடியிருப்புகளில் 5க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் பல இடங்களில் விரிசல் ஏற்பட்டு எந்த நேரத்திலும் இடிந்து விழும் ஆபத்தான நிலையில் உள்ளது. இதுகுறித்து சம்மந்தப் பட்ட தொண்டு நிறுவனம் மற்றும் அதிகாரிகளிடம் குடியிருப்புக்கு சொந்தமானவர்கள் புகார் செய்தும் எந்த நடவடிக்கையும் இல்லை என பாதிக்கப்பட்டவர்கள் புலம்புகின்றனர்.

நன்றி :- தின மலர்

சனி, 16 ஆகஸ்ட், 2008

பரங்கிப்பேட்டையில் சுதந்திரதின விழா நிகழ்ச்சிகள்

62-வது இந்திய சுதந்திர தினத்தை முன்னிட்டு பரங்கிப்பேட்டையில் பல்வேறு இடங்களில் இந்திய தேசிய கொடி ஏற்றப்படடடது. காலை 9 மணிக்கு பேரூராட்சி அலுவலகத்தில் பேரூராட்சித் தலைவர் முஹமது யூனுஸ் தேசிய கொடியை ஏற்றினார். அனைத்துப் பள்ளிகூடங்களிலும் சுதந்திர தின விழா நிகழ்ச்சிக் நடைபெற்றது.


கிரஸண்ட் நல்வாழ்வு சங்கம் (CWO) சார்பாக அதன் நடைபெற்ற விழாவிலும் அதனை தொடர்ந்து அரிமா சங்கம் (Lions Club) சார்பில் மீராப்பள்ளி அருகிலும் சட்டமன்ற உறுப்பினர் திருமதி செல்வி ராமஜெயம் பங்கு கொண்டு இந்திய கொடியை ஏற்றி வைத்தார்.
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் இந்திய சுதந்திரத்தில் முஸ்லிம்களின் பங்கு என்கிற கருத்தை மையமாக கொண்டு சிறப்பு கண்காட்சி மஹ்மூதியா ஷாதி மஹாலில் நடைபெற்றது. இந்த கண்காட்சியில் பல அரிய தகவல் துணுக்குகள் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தது பயனுள்ள தகவல் தரும் விசயமாக அமைந்திருந்தது. இதனை தொடர்ந்து மாலை 6 மணிக்கு சிறப்புக் சொற்பொழிவும் நடைபெற்றது.

மாலை 6 மணிக்கு சின்னக் கடைமுனையில் ஜமாஅத்துல் உலமா சார்பில் சுதந்திர சிறப்புப் பொதுக்கூட்டம் நடைபெற்றது. தளபதி ஷஃபிக்குர்ரஹ்மான் (இந்திய யூனியன் முஸ்லீம் லீக்) கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றினர். சிறப்பு அழைப்பாளராக ஆஸ்திரேலியன் பள்ளி முதல்வர் பாண்டியன் கரந்துக்கொண்டார். இவ்விழாவில் இந்திய சுதந்திரத்தில் முஸ்லிம்களின் பங்கு, இஸ்லாம் கூறும் மனிதநேயம் குறித்து சிறப்புரை வழங்கப்பட்டது.

ஞாயிறு, 20 ஜூலை, 2008

மாநில அளவில் நடைபெற்ற கராத்தே போட்டியில் கடலூர் மாவட்டம் (பரங்கிப்பேட்டை மாணவர்) இரண்டாவது இடம்

மாநிலம் தழுவிய கராத்தே போட்டியில் கடலூர் மவாட்டம் சார்பாக பரங்கிப்பேட்டை மாணவர் தமிழரசன் இரண்டாம் இடத்தை பெற்று சாதனை புரிந்துள்ளார். சலங்குகாரத் தெருவைச் சார்ந்த இந்த மாணவர் தமிழரசன். 11-வது படிக்கும் இம்மாணவர் தன்னுடைய சுயஆர்வத்தினால் இப்போட்டியில் பங்கு பெற்று இந்த வெற்றியைப் பெற்றுள்ளார்.

புதுடெல்லியில் நடைபெற்ற விழா ஒன்றில் தமிழக முதல்வர் கருணாநிதியிடமிருந்து இதற்கான பரிசையும் பாராட்டையும் இம்மாணவர் பெற்றார்.