புதன், 20 மே, 2009

மறுமதிப்பீட்டிற்கு விண்ணப்பிக்கும் முன் உஷார்! குறைந்த மதிப்பெண் கிடைக்கவும் வாய்ப்பு!!

பிளஸ் 2 மாணவர்கள், மறுகூட்டல் அல்லது மறுமதிப்பீடு கோரி விண்ணப்பம் செய்யும் முன், பாட ஆசிரியரிடம் ஆலோசனை பெற்று அவசியம் தேவை என்றால் மட்டுமே விண்ணப்பம் செய்ய வேண்டும்.

மறுமதிப்பீட்டுக்கு விண்ணப்பித்தால் கூடுதலாக மதிப்பெண்கள் கிடைத்துவிடும் என, கண்ணை மூடிக்கொண்டு விண்ணப்பித்தால், ஏற்கனவே பெற்ற மதிப்பெண்கள் குறைவதற்கும் அதிக வாய்ப்புகள் இருக்கின்றன.

பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியானதைத் தொடர்ந்து, ஒன்று முதல் மூன்று பாடங்கள் வரை தோல்வியடைந்த மாணவர்கள் உடனடித் தேர்வு எழுதுவதற்கும், தேர்ச்சி பெற்ற மாணவர்கள் விடைத்தாள் நகல் பெறுவதற்கும் விண்ணப்பித்து வருகின்றனர்.

விடைத்தாள் நகல் பெற்ற ஐந்து தினங்களுக்குள், மறுகூட்டலுக்கோ அல்லது மறுமதிப்பீடு கோரியோ மாணவர்கள் விண்ணப்பம் செய்யலாம்.

மறுகூட்டல் அல்லது மறுமதிப்பீட்டிற்கு விண்ணப்பிக்கும்போது மாணவர்கள் பலமுறை யோசிக்க வேண்டும்.

ஏற்கனவே எந்த ஆசிரியர் விடைத்தாளைத் திருத்தினாரோ, அதே ஆசிரியர் மீண்டும் மறுகூட்டல் செய்யவோ அல்லது விடைத்தாளைத் திருத்தவோ மாட்டார்.

இதற்கென நியமிக்கப்பட்டுள்ள ஆசிரியர் குழுதான், இப்பணிகளை மேற்கொள்ளும்.

சில மாணவர்களுக்குத் தவறுதலாக கூடுதல் மதிப்பெண்கள் வழங்கப்பட்டிருக்கலாம்; சில விடைகளுக்கு அதிக மதிப்பெண்கள் கொடுக்கப்பட்டிருக்கலாம்.

ஒரு விடைக்குக் கொடுக்கப்பட்ட மதிப்பெண்கள் மிகவும் அதிகம் என ஆசிரியர் கருதினால், மதிப்பெண்கள் குறையலாம்.

கவனமின்மையால் கூடுதலாகத் தரப்பட்ட மதிப்பெண்களும் குறைக்கப்படும்.

மறுகூட்டல் அல்லது மறுமதிப்பீட்டில் என்ன மதிப்பெண்கள் வருகிறதோ அதுதான் இறுதி மதிப்பெண்களாக கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும்.
முந்தைய மதிப்பெண் ரத்தாகி விடும்.

அதிக மதிப்பெண்களுக்கு ஆசைப்பட்டால், இருக்கிற மதிப்பெண்களையும் இழக்கக் கூடிய அபாயம் இதில் இருக்கிறது.

எனவே, மாணவர்கள் விடைத்தாள் நகல் பெற்றதும், பெற்றோர் மற்றும் பாட ஆசிரியரின் ஆலோசனையைக் கேட்டு அதன்படி செயல்படுவது நல்லது.

சுய வேலைவாய்ப்பு தொழில் பயிற்சிகள்

மதுரை டி. கல்லுப்பட்டி டாக்டர் ஜே.சி. குமரப்பா கிராமிய தொழில் நுட்ப வளர்ச்சி நிறுவனத்தின் சார்பில் சுய தொழில் ஆர்வலர்களுக்கு உதவித் தொகையுடன் கூடிய திறன் வளர்ப்பு பயிற்சிகள் ஜூன் 4-ம் தேதி தொடங்குகிறது.

பயிற்சிகளின் விவரம்:

  • ஐந்து மாத கால தையல் மற்றும் எம்பிராய்டரி (மகளிர் மட்டும்)

  • நான்கு மாத கால எலெக்ட்ரிக்கல் மற்றும் எலெக்ட்ரானிக் பொருள்கள் பழுது நீக்கும் பயிற்சி

  • மூன்று மாத கால கட்டிங் மற்றும் டெய்லரிங் (மகளிர் மட்டும்)

  • இரண்டு மாத கால ஃபிட்டர், பிளம்பர் மற்றும் பம்ப் மெக்கானிசம் பயிற்சி

  • ஒரு மாத கால டிடர்ஜெண்ட் சோப்பு தயாரிப்பு உள்ளிட்ட பயிற்சிகள் அளிக்கப்படும்.

உதவித்தொகை பயிற்சிகள்:

  • ஆறு மாத கால காலணி மற்றும் தோல் பொருள்கள் தயாரிப்பு

  • மூன்று மாத கால காலணி மற்றும் தோல் பொருள்கள் தயாரிப்பு

  • மோட்டார் வைண்டிங் உள்ளிட்ட பயிற்சிகளும்

  • இரண்டு மாத கால நோட்டு புத்தகங்கள் தயாரித்தல்

  • குளியல் மற்றும் சலவை சோப்பு தயாரித்தல்

  • பழங்கள், காய்கறிகள் பதப்படுத்தல்

  • மண்பாண்டம் தயாரித்தல்

  • ஒரு மாதகால ஸ்பைசஸ் மற்றும் மசாலா தயாரித்தல்

  • மோட்டார் வைண்டிங் பயிற்சி உள்ளிட்டவை அளிக்கப்படும்.

18 வயதுள்ள குறைந்தபட்சம் 8-வது வகுப்பு படித்த ஆண், பெண் இருபாலரும் இதற்கு விண்ணப்பிக்கலாம்.

உதவித் தொகை திட்டத்தில் உள்ள பயிற்சிகளில் சேர்ந்து விடுதிகளில் தங்குபவருக்கு மாதம் ரூ. 800 உதவித் தொகை வழங்கப்படும்.

விண்ணப்பம் மற்றும் விவரக் குறிப்பை ரூ. 25 செலுத்தி பெற்றுக் கொள்ளலாம்.

தபாலில் பெற ரூ. 35 மணியார்டர் அனுப்ப வேண்டும்.

விண்ணப்பிப்போர் தங்களைப் பற்றிய முழு விவரத்துடன் பெற விரும்பும்

பயிற்சியைக் குறிப்பிட்டு தகுதிச் சான்றிதழ், பாஸ்போர்ட் அளவு புகைப்படம், ரூ. 5க்கான தபால் தலை ஒட்டிய சுய விலாசமிட்ட கவர் ஆகியவற்றை இணைத்து மே 31 - ம் தேதிக்குள் அனுப்ப வேண்டும்.

விண்ணப்பிக்க வேண்டிய முகவரி:

  • டாக்டர் ஜே.சி. குமரப்பா கிராமிய தொழில்நுட்ப வளர்ச்சி நிறுவனம்,

  • காந்தி நிகேதன் ஆசிரமம்,

  • டி. கல்லுப்பட்டி - 625 702,

  • மதுரை மாவட்டம்.

  • தொலைபேசி: 04549 - 272 365.

பரங்கிப்பேட்டை, கிள்ளையை இணைக்கும் வகையில் வெள்ளாற்றின் குறுக்கே பாலம் கட்டும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது

பரங்கிப்பேட்டை, கிள்ளையை இணைக்கும் வகையில் வெள்ளாற்றின் குறுக்கே பாலம் கட்டும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

வெள்ளாறு

கடலூர் மாவட்டம் சிதம்பரம் தாலுகாவை சேர்ந்த பரங்கிப்பேட்டை, கிள்ளை ஆகிய பேரூராட்சிகளின் குறுக்கே மிகப்பெரிய வெள்ளாறு செல்கிறது.

இந்த வெள்ளாறு வழியாக கிள்ளை மற்றும் பரங்கிப்பேட்டை பொது மக்கள் படகு மூலம் சென்று வந்தனர்.

மழைக் காலங்களில் வெள்ளாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்படும்.

அப்போது படகுகள் செல்வது நிறுத்தப்படும்.

இதனால் பொதுமக்கள், மாணவ-மாணவிகள், வியாபாரிகள் சிதம்பரம் வண்டிகேட், புவனகிரி வழியாக சுமார் 30 கிலோ மீட்டர் தூரம் சுற்றி பரங்கிப்பேட்டைக்கு சென்று வந்தனர்.

இதே போல் பரங்கிப்பேட்டை பகுதி மக்களும் சிதம்பரம் வந்து தான் கிள்ளைக்கு சென்று வந்தனர்.

ரூ.16 கோடி

இதனால் இந்த 2 பேரூராட்சிகளில் உள்ள மக்கள் கிள்ளை- பரங்கிப்பேட்டையை இணைக்கும் வகையில் வெள்ளாற்றின் குறுக்கே பாலம் கட்ட வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.

பொதுமக்களின் கோரிக்கை ஏற்கப்பட்டு வெள்ளாற்றின் குறுக்கே பாலம் கட்ட ரூ.16 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.

அதற்கான பணிகள் டெண்டர் விடப்பட்டு கடந்த 2 மாதமாக நடந்து வருகிறது.

இதில் சுமார் 1/2 கிலோ மீட்டர் தூரம் வெள்ளாற்றை முற்றிலும் மணல் கொட்டி தண்ணீர் வராமல் தடுத்துவிட்டனர்.

பின்னர் பில்லர் அமைக்கும் பணியும் வேகமாக நடந்து வருகிறது.

இந்த பில்லர் 150 அடி ஆழம் கொண்டதாக அமைக்கப்பட்டு வருகிறது.

ராட்சத இரும்பு

தற்போது இரவு, பகலாக பெரிய ராட்சத இரும்பு கம்பிகள் மூலம் பில்லர் அமைக்கும் பணி வேகமாக நடந்து வருகிறது.

இந்த பணியில் 5-க்கும் மேற்பட்ட பொக்லைன் இயந்திரம், டிப்பர் லாரிகள், ராட்சத இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

பணிகள் துரிதமாக நடைபெற்று வருவதால் இந்த வேலைகள் வருகிற மழைக் காலத்திற்குள் முடிவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.