ஞாயிறு, 26 ஜூலை, 2009

இறப்புச் செய்தி

பெரிய ஆசாரகாண தெரு மர்ஹும் Z. சாலியா மரைக்காயர் (ராஜா நானா) மனைவியும் M.S.சாகுல் ஹமீது, M.S.பக்கிர் மாலிமாரின் தாயாரும் A.R. ஜபார் அலியின் சகோதரியும் பதுருல் ஜமான் மாமியாருமான தங்காமா என்கிற சஹர்வான் பி மர்ஹும் ஆகிவிட்டார்கள் இன்ஷா அல்லாஹ் இன்று மாலை 4 மணிக்கு நல்லடக்கம் புதுப்பள்ளியில்.
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

தகவல்: இஸ்லாமிய ஐக்கிய ஜமாஅத்

அல்-மதரஸத்துல் மஹ்மூதிய்யா அரபிக்கல்லூரி ஹாஃபிழ் பட்டமளிப்பு விழா!

பரங்கிப்பேட்டை மாநகரில் சுமார் 35 ஆண்டுகளாக செயல்படும் அல்-மதரஸத்துல் மஹ்மூதிய்யா அரபிக்கல்லூரியின் 3வது ஹாஃபிழ் பட்டமளிப்பு விழா கடந்த வெள்ளிக்கிழமை (24.07.2009) அன்று மீராப்பள்ளி, மதரஸா வளாகத்தில்

நடைபெற்றது.

ஜமாஅத் தலைவர் எம்.எஸ். முஹம்மது யூனுஸ் தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில் மதரஸா நிர்வாகி கலிமா கே. ஷேக் அப்துல் காதர் மரைக்காயர் முன்னிலை வகித்தார்

மதரஸா பேராசிரியர் எஸ். முஜிபுர் ரஹ்மான் ரஷாதி கிராஅத் ஓதினார்.

மதரஸா முதல்வர் ஏ.சித்தீக் அலீ பாகவீ வரவேற்புரையாற்றினார்.

தமிழ்நாடு மாநில ஜமாஅத்துல் உலமா சபை தலைவர் ஏ.இ.எம். அப்துர் ரஹ்மான் ஹழ்ரத், லால்பேட்டை மன்பவுல் அன்வார் மதரஸா முதல்வர் ஏ.நூருல் அமீன் ஹழ்ரத் உள்ளிட்டோர் சிறப்புரையாற்றினர்.

சென்னை காஷிஃபுல் ஹுதா மதரஸா முதல்வர் கே. முஹம்மது யஃகூப் ஹழ்ரத் ஹாஃபிழ் மாணவர்களுக்கு பட்டம் (ஸனது) வழங்கி துஆ செய்தார்கள்.

ஐந்து மாணவர்கள் பட்டம் பெற்றார்கள்.

மதரஸா நிர்வாகி ஏ. முஹம்மது ஆரிஃப் ஆண்டறிக்கை வாசித்தார். (இணைப்பை பார்வையிடுக).

மற்றொரு நிர்வாகி ஏ. பஷீர் அஹ்மத் நன்றியுரையாற்றினார்.

இவ்விழாவில் சென்னை, லால்பேட்டை, சிதம்பரம் மதரஸா பேராசிரியர்கள், பட்டம் பெற்ற மாணவர்களின் பெற்றோர்கள், உறவினர்கள், பரங்கிப்பேட்டை நகர ஆலிம்கள், பள்ளிவாசல் இமாம்கள், முத்தவல்லிகள், பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.















சனி, 25 ஜூலை, 2009

சிதம்பரம் பகுதியில் தொடரும் தீ விபத்துகள்

சிதம்பரம், காட்டுமன்னார்கோவில் தாலுகாக்களில் கடந்த ஒருமாதமாக தொடர் தீ விபத்துகள் ஏற்பட்டு வருகின்றன. இவ்விரு தாலுகாக்களில் கோட்டைமேடு, கீழசெங்கல்மேடு, இளமங்கலம், வானமாதேவி, சி.சாத்தமங்கலம், கீரப்பாளையம், சிதம்பரம் சின்னமார்க்கெட், வடக்கு மெயின்ரோடு, உள்ளிட்ட பகுதிகளில் தொடர்ந்து தீ விபத்துகள் ஏற்பட்டுள்ளன. இதில் 200-க்கும் மேற்பட்ட வீடுகள் மற்றும் கடைகள் எரிந்து சாம்பலாகியுள்ளன. மூதாட்டி ஒருவரும், இளம்பெண் ஒருவரும் தீயில் சிக்கி இறந்துள்ளனர். ஆடு, மாடு உள்ளிட்ட கால்நடைகளும் இறந்துள்ளன என்று தினமணி நாளேடு செய்தி வெளியிட்டுள்ளது.

மேலும் இதுப்போன்றே இம்மாத துவக்கத்தில் பரங்கிப்பேட்டை நெல்லுக்கடை தெருவில் வெல்டிங் கடை ஒன்றிலும் தீ விபத்து ஏற்பட்டது. இந்நிலையில் நேற்று மதியம் மாதக்கோயில் பகுதியிலிருந்த சவுக்கு தோப்பில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது, தகவல் அறிந்த பரங்கிப்பேட்டை தீயணைப்புத்துறையினர் விரைந்து சென்று தீயை அணைத்தனர் அதற்குள் 5 ஏக்கர் நிலப்பரப்பில் இருந்த முந்திரி, சவுக்கு மரங்கள் எரிந்து நாசமானது. இதன் மதிப்பு சுமார் ரூ.5 லட்சம் ஆகும் என்று தினகரன் நாளேடு செய்தி வெளியிட்டுள்ளது.

மாவட்டத்தில் தீ தடுப்பு நடவடிக்கைகள் குறித்து, காவல்துறை, தீயணைப்புத் துறை அதிகாரிகளுடன் மாவட்ட ஆட்சியர் நேற்று ஆலோசனை நடத்தினார், பின்னர் இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், இச்சம்பவங்களில் எவ்வித குற்ற நோக்கமும் இல்லை என்றும், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்தும் குறிப்பிட்டுள்ளார் என தினமணி நாளேடு தெரிவிக்கிறது