சனி, 26 ஜூலை, 2008

தொடரும் அவலங்கள்

பரங்கிப்பேட்டையில் அரசியல்வாதிகளின் அலட்சியத்தால் பணி முடிந்தும் திறக்கப்படாமல் இருக்கும் அரசு மருத்துவமனை மற்றும் பெண்கள் உயர்நிலைப்பள்ளி வரிசையில் இன்னுமொரு அரசு அலுவலகம்.


பரங்கிப்பேட்டையில் சார்பதிவாளர் அலுவலகம் ரூ.3 லட்சம் மதிப்பில் புதுப்பித்து பல மாதங்களாகியும் இது வரை திறக்காததால் பொது மக்கள் அவதியடைந்து வருகின்றனர். பரங்கிப்பேட்டை கச்சேரி தெருவில் உள்ள சார்பதிவாளர் அலுவலகத்திற்கு பரங்கிப் பேட்டை, கிள்ளை, புதுச்சத்திரம் சுற்றியுள்ள கிராமங்களில் உள்ளவர்கள் பல்வேறு பணிகளுக்கு வந்து செல்கின்றனர். சார்பதிவாளர் அலுவலகம் கட்டி பல ஆண்டுகள் ஆனதால் பல இடங்களில் விரிசல் ஏற்பட்டது. மழை காலங்களில் காங்கிரீட் காரையில் இருந்து தண்ணீர் கீழே கொட்டியதால் முக்கிய ஆவணங்கள் நனைந்தன. மேலும் அலுவலகத் திற்கு வந்து சென்ற பொதுமக்களும் பாதித்தனர்.

இந்நிலையில் பொதுப்பணித்துறை மூலம் சார்பதிவாளர் அலுவலகத்தை ரூ. 3 லட்சம் மதிப்பில் புதுப்பிக்க ஆறு மாதத்திற்கு முன் டெண்டர் விடப்பட்டு பணிகள் துவங்கின. இதனால் சார்பதிவாளர் அலுவலகம் பரங்கிப் பேட்டை பெரிய மதகு அருகே வாடகை கட்டடத்தில் இயங்குகிறது. தற்போது பணிகள் முடிந்து பல மாதங்களாகியும் இது வரை சார்பதிவாளர் அலுவலகம் இடமாற்றம் செய்யாததால் மக்கள் பெரிதும் பாதிக்கிப்படுகின்றனர். இந்த பகுதியில் பத்திரம், ஜெராக்ஸ், சாப்பாடு வசதி போன்ற எந்த வசதியும் இல்லாததால் பொதுமக்கள் கடும் அவதியடைகின்றனர். இதனால் கால விரயம் ஏற்படுவதுடன், செலவும் அதிகமாக ஏற்படுகிறது. பொதுமக்கள் நலன் கருதி உடன் சார்பதிவாளர் அலுவலகத்தை திறக்க கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

நன்றி: தின-மலர்

வெள்ளி, 25 ஜூலை, 2008

அதிரடி மழையால் பரங்கிப்பேட்டை சிலு சிலு.

பரங்கிப்பேட்டையில் நிலவி வந்த வெப்பத்தை தணிக்கும் வகையில் நேற்று இரவு அதிரடியாக நல்ல மழை பெய்தது. இடி மின்னலுடன் பெய்த இந்த மழையினால் இன்று காலை வெப்பம் குறைந்து சிலுசிலுவென உள்ளது. நேற்று இரவு மழை பெய்தபோது மினசாராம் சுமார் ஒரு மணி நேரம் நிறுத்தப்பட்டது.

புதன், 23 ஜூலை, 2008

ஐக்கிய தவ்ஹீத் ஜமாஅத் ITJ சார்பாக இலவச நோட்டு புத்தகம் வழங்கும் நிகழ்ச்சி


ஐக்கிய தவ்ஹீத் ஜமாஅத் (ITJ) சார்பாக இலவச நோட்டு புத்தகம் வழங்கும் நிகழ்ச்சி ITJ நகர செயலாளர் P.M. அப்துல்ஹமீது தலைமையில் S.M.J. அப்பார்ட்மண்ட் வளாகத்தில் நடைப்பெற்றது. இந்நிகழ்ச்சியில் அண்ணாமலை பல்கலைகழகம் பேராசிரியர் DR. S. அஜ்மல் கான் அவர்கள் கலந்துக்கொண்டு இலவச நோட்டு புத்தகம் வழங்கினார். மற்றும் ஆலீமா ஹமீதுன்னிசா அவர்கள் சமூக தீமைகள் என்ற தலைப்பில் உரையாற்றினார். இந்நிகழ்ச்சியில் மாவட்டத்தலைவர் A.கலீமுல்லாஹ், நகரத்தலைவர் I . ஹபீப் முஹம்மது மற்றும் கிளை நிர்வாகிகள், பொது அமைப்புகளின் நிர்வாகிகள், பொதுமக்கள் பலர் கலந்துக்கொண்டனர். இறுதியாக அப்துல் அலீம் நன்றியுறையாற்றினார்.