ஞாயிறு, 17 மே, 2009

புதிய வடிவில் 5 ரூபாய் நாணயம்

பொதுமக்கள் புகார் எதிரொலியாக புதிய வடிவில் 5 ரூபாய் நாணயம் அறிமுகப்படுத்தப்படுகிறது.

தற்போது நாணயங்கள் 25 பைசா, 50 பைசா, 1 ரூபாய், 2 ரூபாய், 5 ரூபாய், 10 ரூபாய் என புழக்கத்தில் உள்ளன.

இவை அனைத்தும் நிதித்துறை மூலம் தயாரிக்கப்பட்டு, இந்திய ரிசர்வ் வங்கி மூலம் பொதுமக்களிடம் புழக்கத் தில் விடப்படுகிறது.

உலோக கலவையிலான புதிய வகை நாணயங்களை உருவாக்க நிதித்துறை அமைச்சகம் தான் சிபாரிசு செய்து வருகிறது.

அந்த வகையில் இந்திய ரிசர்வ் வங்கி உலோக வடிவிலான 5 ரூபாய் நாணயங்களை தயாரித்து கடந்த ஆண்டு (2008) அறிமுகப்படுத்தியது.

ஆனால், அது தற்போது புழக்கத்தில் உள்ள 50 பைசா நாணய அளவில் உள்ளது.

இது பொதுமக்களிடையே பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

50 பைசா என நினைத்து 5 ரூபாய் நாணயத்தை எடுத்து கொடுத்து விடுகின்றனர். இதனால் பொதுமக்களுக்கு கடும் நஷ்டம் ஏற்படுகிறது.

எனவே, புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள 5 ரூபாய் நாணயத்தின் வடிவை மாற்ற வேண்டும் என்று இந்திய ரிசர்வ் வங்கியிடம் புகார்கள் குவிந்த வண்ணம் உள்ளன.

எனவே, புதிய வடிவில் 5 ரூபாய் நாணயத்தை வெளியிட இந்திய ரிசர்வ் வங்கி முடிவு செய்துள்ளது.

அந்த நாணயம் மஞ்சள் நிறத்தில் வடிவமைக்கப்படுகிறது.

தற்போதுள்ள வடிவத்தை விட வித்தியாசமாகவும் உருவாக்கப்படுகிறது.

இதேபோல, ஒரு ரூபாய் மற்றும் 2 ரூபாய் நாணயங்களும் மாற்றி வடிவமைக்கப்பட உள்ளன.

இந்த தகவலை ரிசர்வ் வங்கி உயர் அதிகாரிகள் தெரிவித்தனர்.

எஸ்.எஸ்.எல்.சி.தேர்வு முடிவு 28-ந்தேதி வெளிவருகிறது

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மாநிலத்தில் இருந்து பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வை 6541 பள்ளியில் இருந்து 8 லட்சத்து 42 ஆயிரத்து 350 மாணவ- மாணவிகள் பரீட்சை எழுதினார்கள்.

இவர்களில் 4 லட்சத்து 16 ஆயிரத்து 512 பேர் மாணவர்கள். 4 லட்சத்து 25 ஆயிரத்து 835 பேர் மாணவிகள்.

பத்தாம் வகுப்பு மெட்ரிக்குலேசன் பாடத்திட்டத்தின் கீழ் ஒரு லட்சத்து 16 ஆயிரத்து 287 மாணவ- மாணவிகள் தேர்வு எழுதினார்கள்.

சென்னையில் 16,369 பேர் பரீட்சை எழுதினார்கள்.

10-ம் வகுப்பு ஆங்கிலோ இந்தியன் பாடத் திட்டதின் கீழ் 4697 மாணவ-மாணவிகள் தேர்வு எழுதி உள்ளனர்.

ஓ.எஸ்.எல்.சி. பாடத்திட்டம் கீழ் 1361 மாணவ- மாணவிகள் தேர்வு எழுதினார்.

விடைத்தாள் திருத்தும் பணி முடிந்து மதிப்பெண் பதிவு செய்யும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

ஓரிரு நாட்களில் இந்த பணியும் நிறைவடைகிறது.

பிளஸ்-2 தேர்வு முடிவு இந்த ஆண்டு தாமதமாக வெளியிடப்பட்டது.

பாராளுமன்ற தேர்தல் நடந்ததால் கடந்த ஆண்டை விட 5 நாட்கள் தாமதமாக முடிவு வெளியானது.

இதனால் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு முடிவு தள்ளிப்போகிறது.

வருகிற 28-ந்தேதி தேர்வு முடிவு வெளியாக வாய்ப்பு உள்ளது.

அதற்கு முன்னதாக வெளியிட தேர்வுத் துறை தீவிர பணியில் ஈடுபட்டு வருகிறது.

பிளஸ்-2 மாணவர்களுக்கு 25-ந்தேதி மதிப்பெண் பட்டியல் வழங்கப்படுகின்றன.

டேட்டா சென்டரில் மதிப்பெண் பட்டியல் பிரிண்ட் செய்யும் பணி மும்முரமாக நடந்து வருகிறது.

22-ந்தேதிக்குள் இந்த பணிகள் முடியும் அதன் பிறகு மாவட்ட வாரியாக மதிப்பெண் பட்டியல் பள்ளிகளுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.

ஆயத்த ஆடை, வடிவமைப்பு பயிற்சி!

ஆடை வடிவமைப்பு மற்றும் பயிற்சி மையத்தின் (ஏடிடிசி) சார்பில் ஆயத்த ஆடை மற்றும் ஆடை வடிவமைப்பு பயிற்சிகள் நடைபெறவுள்ளன.

இது குறித்து பயிற்சி மையத்தின் இணைப்பதிவாளர் டி.சி.பாலசுப்பிரமணியன் வெளியிட்டுள்ள அறிக்கை:

பத்தாம் வகுப்பு தேறிய ஆண், பெண் இருபாலரும் இதற்கு விண்ணப்பிக்கலாம். 3 மாதத்திலிருந்து 2 ஆண்டுகள் வரை கற்றுக் கொள்ளும் பயிற்சிகள் உள்ளன.

பயிற்சி பெற்ற அனைவருக்கும் வேலை வாய்ப்பு வழங்கப்பட வேண்டும்.

இப் பயிற்சியில் கலந்து கொள்ள விரும்புபவர்கள் ஜூன் 30-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

மேலும் விவரங்களுக்கு:

  • டி.சி.பாலசுப்பிரமணியன்,
  • இணைப்பதிவாளர்,
  • எண் - 116பி (பழைய எண் 70ஏ), வெள்ளாளர் தெரு,
  • முகப்பேர் மேற்கு,
  • கோல்டன் ஃபிளாட்ஸ் பஸ் நிறுத்தம் அருகில்,
  • சென்னை - 37.
  • தொலைபேசி: 044 - 2625 4216.
  • செல்: 98417 88369.