சனி, 15 மார்ச், 2008

நிறைவு பகுதி - பேரூராட்சி தலைவரும் இஸ்லாமிய ஜக்கிய ஜமாஅத்தின் தலைவருமான எம். எஸ். முஹமது யூனுஸ் அவர்கள் அளித்த பேட்டியின் 3-வது பகுதி.


1. ஜமாஅத் சார்பாக ஊர் மக்கள் கணக்கெடுப்பு பணி ஆரம்பிக்கப்பட்டு, அது முழுமையடையாமல் உள்ளதே?
இந்த விசயத்தில் மக்கள் மிகவும் ஆர்வமாக ஆரம்பத்தில் கேட்ட தகவல்களைக் கொடுத்து வந்தார்கள். இதற்காக மற்றும் கல்விக்குழு தங்களின் பங்களிப்புகளை அளித்து வந்தார்கள். 50 சதவீத கணக்கெடுப்பு முடிக்கப்பட்டது உண்மைதான். இதற்கிடையில் அவரவர்களுக்கு உண்டான வேலை நிமித்தம் காரணமான தொடர முடியாமல் உள்ளது. யாரையும் கட்டாயப்படுத்தி மீத வேலைகளை தொடரச் சொல்ல இயலாத நிலையில் இக்கணக்கெடுப்பை முழுமையாக முடிக்கனும் என்கிற ஆர்வம் இருக்கிறது. இன்ஷா அல்லாஹ் கூடிய விரைவில் முடிக்க முயற்சிக்கிறோம்.

2. பேரூராட்சி திட்டத்தின் கீழ் செம்மைபட்டு வரும் மீராப்பள்ளி மயானத்தில் சில குடும்ப கோரிகள் ஏன் அகற்றப் படாத நிலையில் உள்ளது?
அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் மீராப்பள்ளி மயானத்தில் காடுகள் அகற்றப்பட்டு, வேலிகளை எடுத்துவிட்டு சுவர்கள் எழுப்பப்பட்டு, பவர் சேவர் எனப்படும் மின் விளக்குகள் கம்பங்களுடன் அமைக்கப்பட்டுள்ளது. பாதையும் புதிதாகப் போடப்பட்டு மண் அடிக்கும் பணி நடைப்பெற்று வருகிறது. இது பற்றி அந்தந்த குடும்பத்தாரிடம் அனுமதி கேட்டு கோரிகளை அகற்றிவிட்டு ஒரே மட்டமாக ஆக்கிவிடலாம் என்று நானே சொல்லியிருந்தேன். பரங்கிப்பேட்டையைப் பொறுத்தவரை பல கொள்கையுடையவர்கள் வாழ்ந்து வருகிறார்கள். இதில் 100 வருடங்களாக பாரம்பரியமாக எங்களின் குடும்பத்தினரை அடக்கம் செய்து வருகிறோம் என்று சிலர் கூறிவரும் காரணத்தினால், முழுமையாக கோரிகளை அகற்றி ஊரில் ஒரு சலசலப்பினை உருவாக்க நாங்கள் விரும்பவில்லை. மீராப்பள்ளி நிர்வாகத்தின் நிலையும் இதுதான். தற்போது அதிக கோரிகள் தானாகவே இடிந்து போய்விட்டது. சிறிய அளவில் தான் மீதமுள்ள கோரிகள் உள்ளது. இதற்கு மேல் குடும்ப கோரி என்று யாரும் புதிதாக கட்ட வாய்ப்பு இல்லை. மீதமுள்ள கோரிகள் விரைவில் தானாகவே இடிந்துவிட்ட பிறகு, 10 வருடங்களுக்குப் பிறகு கோரிகள் இல்லாத மயானத்தை நாம் பார்க்கலாம்.

3. அவசத்திற்கோ முதலுதவிக்கோ கூப்பிட்டால் எந்த டாக்டரும் வருவதே கிடையாத நிலையில் இது குறித்து எந்த நடவடிக்கையும் நீங்கள் எடுத்தீர்களா?
பரங்கிப்பேட்டையில் முன்பு டாக்டர் நூர் முஹமது அவர்கள் மருத்துவ சேவை செய்து வந்தபோது, எந்த நேரத்திலும் (வீட்டிற்கு வந்தே) அவசரகால மற்றும் முதலுதவி சிகிச்சையளித்து வந்தார். அதன் பிறகு சில தொய்வுகள். அதன் பிறகு வேறு யாரும் வீட்டிற்கு கூப்பிட்டால் வருவது கிடையாது. இதற்காக வேண்டுகோள் விடுத்தும், சணடைப் போட்டும் பலனில்லை. இதற்கிடையில் கிள்ளை ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணிபுரியும் டாக்டர் ஷகீலா பேகம் என்பவர் ஊரில் க்ளினிக் ஆரம்பிக்க ஜமாஅத்தை அனுகியபோது, ஒரு கோரிக்கையை முன்வைத்தோம். அதாவது, எந்த சமுதாயத்தினரின் அவசரத்திற்காகவும் போன் செய்தாலும் சேவை மனப்பாண்மையுடன் சென்று பார்க்னும் என்று கூறினோம். இங்கு உயிர் போகிற தருணத்தில் கூட எந்த டாக்டரும் வந்து பல்ஸ் பார்க்க்கூட வரமுடியாத நிலையில் நிச்சயம் நீங்கள் இந்த சேவை செய்ய வேண்டும் என்று மிகவும் வலியுறுத்திக் கூறினோம். அவர் இதை ஏற்றபிறகு, நாங்களே முன்னின்று மீராப்பள்ளித் தெருவில் (நவாப்ஜான் நானா அவர்களுடைய) ஒரு வீட்டை வாடகைக்கு பெற்றுத் தந்துள்ளோம். தற்போது யார் கூப்பிட்டாலும் வருகிறார். அதுமட்டுமில்லாமல் காட்டுமன்னார்குடியிலிருந்து ஒரு டாக்டர் (அய்னுல்லாகான்) ஊரில் க்ளினிக் ஆரம்பிக்க வீடு எதுவும் கிடைக்காமல் சிரமபட்டு ஜமாஅத்தை அணுகியபோது, சின்னத்தெருவில் ஷேக் இமாம் நானா அவர்களின் பழைய வீட்டின் போர்ஷன் ஒன்றை வாடகைக்குப் பெற்று தந்துள்ளோம். அவரும் எங்கள் கண்டிஷனுக்கு ஒத்துக்கொண்டு தற்போது அவரும் அவசர சிகிச்சைக்கு எந்த நேரம் கூப்பிட்டாலும் மறுக்காமல் வருகிறார். அரசு மருத்துவமனையை பொறுத்தவரையில், ஆரம்பத்தில் இரண்டு டாக்டர்கள் மட்டுமே இருந்து வந்தனர். இதற்காக அமைச்சரிடம் முறையிட்டு தற்போது நான்கு டாக்டர்களைப் பெற்றுள்ளோம். இது மட்டுமில்லாமல் தற்போது புதிய கட்டிடம் கட்டப்பட்டு மேலும் விரிவாக்ம் செய்யப்பட உள்ள நிலையில், இந்த அரசு மருத்துமனையை தாலுக்கா அந்தஸ்து உள்ள மருத்துவமனையாக மாற்றித் தர கேட்டிருக்கிறோம். ஆறு மாதத்திற்குள் இது தாலுக்கா அந்தஸ்து பெற்ற மருத்துவமனையாக மாறிவிடும் என்று உறுதியளித்துள்ளார்கள். இதனால் ஆறு நிரந்தர மருத்துவர்கள் இங்கு இருப்பார்கள் இதுமட்டுமில்லாமல் இன்னும் நிறைய வசதிகளும் நம் மருத்துவமனைக்கு கிடைக்கும். தற்போது டாக்டர் பிரச்னை 99 சதவீதம் முடிவுக்குவந்துவிட்டது.

4. அரசு ஆண்கள் பள்ளியில் மாணவர்களுக்கு விளையாட்டு மைதானம் போன்ற வசதிகள் இல்லாமல் உள்ளதே?
கடந்த 100 ஆண்டுகளுக்கு மேலாக விளையாட்டுத் திடலாக இருந்து வந்த இடத்தில்தான் அரசினர் ஆண்கள் பள்ளி இப்போது புதிதாக இயங்கி வருகிறது. இறைவனின் கிருபையால், ஜமாஅத்தின் முயற்சியால்தான் விளையாட்டுத்திடலை அரசுக்கு (மாவட்ட ஆட்சித் தலைவருக்கு) புதிய பள்ளிக்கு காட்டினோம். இராஜஸ்தான் அரசு 1 கோடியே 20 இலட்ச ரூபாயும் வேல்ட் விஷன் 40 இலட்ச ரூபாயும் ஆக மொத்த 1.60 கோடி ரூபாய் செலவில் எல்லா வசதிகளுடனும் அருமையான கட்டிடத்தை கட்டிக் கொடுத்தார்கள். அதில் ஒரு சில குறைபாடுகள் இருக்கத்தான் செய்கிறது. இன்னும் ஒரு சில ஆண்டுகள் சென்றால்தான் எல்லா குறைகளையும் நிவர்த்தி செய்ய முடியும். அது ஏற்கனவே பள்ளமான இடம் - மழை காலத்தில் தண்ணீர் தேங்கும் இடம். இது சம்மந்தமாக சுனாமி திட்ட அலுவலர்கள் போன்றோர் வந்து பார்த்து சைக்கிள் ஸ்டாண்ட், ஆழ்துளை கிணறு (நல்ல தண்ணீருக்காக) மற்றும் (விளையாட்டுத்திடலுக்கு போதிய இடம் உள்ளதால்) மண் அடித்தல் போன்றப் பணிகளை செய்து தர இருக்கிறார்கள். மேலும் லயன்ஸ் க்ளப் உதவியுடன் விளையாட்டடுத்திடலைச் சுற்றியும் பள்ளியிலும் மரங்கள் நடப்பட்டு வருகிறது. எல்லாம் சரியாக கொஞ்ச கால அவகாசம் தேவைப்படுகிறது. விரைவில் சரி செய்யப்பட்டுவிடும். இது மட்டுமில்லாமல் மாணவர்கள் பெரியமதகு செல்லாமல் வண்ணாரப்பாளையம் வழியாக செல்ல தரைப்பாலம் ஒன்றினை அமைக்க முயற்சிகள் மேற்கொண்டு வருகிறேன். மாவட்ட ஆட்சியர் ஒப்புதல் கொடுத்து விட்டார்.

5. அதே பள்ளியில் சில மாணவர்களின் ஒழுங்கு நடவடிக்கை குறித்து பிரச்சனை எழுந்துள்ளதே? குறிப்பாக மொபைல் ஃபோனை தவறாகப் பயன்படுத்துவதாகவும் சர்ச்சை உருவாகியுள்ளது, பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவராக இருக்கும் நீங்கள் இது குறித்து நடவடிக்கை மேற்கொண்டீர்களா?
உண்மைதான். ஆனால் மொபைல் ஃபோனை தவறாக பயன்படுத்திய தகவல் எனக்குத் தெரியவில்லை. தூரமாக பள்ளி சென்று விட்டதால் கண்கானிப்பு குறைவாக உள்ளது. வகுப்புகள் முடிவதற்கு முன்பே மாணவர்கள் வெளியேறிவிடுவதாக தகவல்கள் வருகிறது. பெற்றோர் ஆசிரியர் கழகத்தின் சார்பாக பலமுறை இதை கண்டித்து சொல்லியிருக்கிறேன். பள்ளியின் தலைமையாசிரியர் பதவிக்காலம் முடிவடைய இன்னும் ஒரு மாதம் உள்ளது. இதற்குப் பிறகு புதிய தலைமையாசிரியர் பதவியேற்றவுடன் இது குறித்து பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் என்கிற முறையில் எல்லா பெற்றோர்களையும் அழைத்து இதற்கு ஒரு சுமூக தீர்வு காண வழிவகை செய்வேன். மொபைல் போன் பயன்படுத்த அரசு தடைவிதித்துள்ளது. இது சம்மந்தமாக அரசினர் பெண்கள் பள்ளியிடம் பேசியதற்கு அங்கு யாரும் பயன்படுத்துவதில்லை என தெரியவந்நது. ஆண்கள் பள்யிலும் இதை கடைப்பிடிக்கிறார்கள். இருந்தாலும் இது குறித்து மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கிறேன்.

6. நம் கண் முன்பே சில நாட்களுக்கு முன்பு ஒரு பள்ளிச் சிறுமியை தெரு நாய் ஒன்று பாய்ந்து கடித்தது. பொது மக்களுக்கு இடைஞ்சல் தரும் தெரு நாய்களை பிடிக்க பேரூராட்சி நடவடிக்கை எடுக்குமா?
இப்போது தெரு நாய்களை பிடிக்க அரசு தடை செய்துள்ளது. இதற்கு பதிலாக ஆண் நாய்களை பிடித்து அதற்கு குடும்ப கட்டுப்பாடு செய்து திரும்ப வந்து விட்டுவிட வேண்டும் என அரசு அறிவிப்பு செய்திருக்கிறது. இது பெரும்பாலும் சாத்தியம் கிடையாது. நான் பேரூராட்சிக்கு வந்த உடனேயே நிறைவேற்றிய முதல் தீர்மானமே இந்த தெருநாய் ஒழிப்பு தீர்மானம்தான். அரசாங்க சட்டம் ஒருபுறமிருந்தாலும் மக்கள் நலனை கருத்தில் கொண்டு 10 நாட்களாக 498 நாய்களைப் பிடித்தோம். இதனால் மற்ற நாய்கள் பதுங்க ஆரம்பித்து விட்டது. மீதம் உள்ள சுமார் 500 நாய்களையும் பிடிக்க ஏற்பாடு செய்தபோது வேண்டாத சில நபர்கள் 'இவர் அரசாங்கத்தை மீறி செயல்படுகிறார்' என்று புகார் அளித்துவிட்டதால், அரசு தரப்பில் இனி நாய்களை பிடித்து குடும்ப கட்டுப்பாடு மட்டும் செய்ய ஏற்பாடு செய்யுங்கள் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இது சம்மந்தமாக எல்லா பேரூராட்சிகள் மற்றும் நகராட்சிகள் சார்பாக முதல்வர் கருணாநிதி தலைமையில் கூடிய கூட்டத்தில் இது முன் வைக்கப்பட்டுள்ளது. அரசு இதை பரிசீலிக்கும் என்று கூறியுள்ளது

7. பள்ளிவாசல்களின் பொதுக்குளங்கள் சரியான முறையில் பராமரிக்கப்படாமல் உள்ளது பற்றி....
எங்களுடைய காலங்களிலெல்லாம் குளத்தில் குளிக்க வேண்டிய கட்டாயம் இருந்தது. இதற்கு கூட்டுக் குடும்ப வாழ்கை முறை முக்கிய காரணமாக இருந்து வந்தது. அப்போதெல்லாம் வீட்டிற்கு பொதுவாக இருக்கும் கிணற்றில் தண்ணீர் எடுத்து துவைக்க வேண்டியிருந்ததால் குளத்தில் அதிகம் பேர் குளிக்க வருவார்கள். ஆனால் தற்போது தனிக்குடும்பம், ஷவர் பாத் என மாறி அதிகமாய் யாரும் குளத்திற்கு செல்வது கிடையாது. வழக்கமாய் குளத்தில் குளித்தே பழகியவர்கள் வந்து கொண்டுதான் இருக்கிறார்கள். அந்த காலத்தில் 100 பேர் குளித்தார்கள் என்றால் இப்போது 10 பேர்தான் குளத்திற்கு வருகிறார்கள். இருந்தாலும் நம்முடைய பள்ளிகளின் பழமையான குளங்களை குளிப்பதற்க ஏற்றவாறு மாற்றியமைக்கனும் என்கிற எண்ணம் இருக்கிறது. இதற்காக பேரூராட்சியிலும் தீர்மானம் நிறைவேறியுள்ளது. ஊர் மக்கள் ஒத்துழைப்பு தந்தால் விரைவில் இது சரி செய்யப்படும். குடிசைகள் நிறைந்த ஹக்கா சாயபு தர்காவளாக பகுதி மக்களின் அவசியம் கருதி அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தில் ஒரு லட்சம் செலவில் அங்குள்ள குளத்தை தூர் வாரி படிகட்டு கட்ட ஏற்பாடு செய்து பணிகள் நடந்து கொண்டு வருகின்றன.

2 கருத்துகள்:

  1. அல்ஹம்துலில்லாஹ்.ஜனாப்.யூனூஸ் நானா அவர்களின் பேட்டியின் மூலம் ஊருக்கான பல்வேறு திட்டப்பணிகளை அறிய முடிந்தது.எல்லா பணிகளும் தொய்வின்றி தொடர்ந்திட ஆவண செய்வீர்கள் என நம்புவதோடு.தங்களின் சமுதாய பணி தொடர்ந்திட இறைவன் அருள் புரிவானாக….

    மேலும் பல்வேறு அலுவல்களுக்கிடையே இணைய வாசகர்களுக்காக இப்பேட்டியை வலைப்பூவில் பதிவேற்றிய சகோதரர்களுக்கும் இறைவன் அருள் புரிவானாகா….

    பதிலளிநீக்கு
  2. அஸ்ஸலாமு அலைக்கும்

    கூர்மையான கேள்விகள்..

    கருத்தாழமிக்க பதில்கள் ...

    தலைவர், ஜனாப். முஹம்மது யூனுஸ் நானா அவர்களின்
    பேட்டி முழுவதும் இப்படி சிறப்பாகவே இருந்தது.

    அல்ஹம்துலில்லாஹ்..

    கேள்வியாளர்களின் பெயர்களும் குறிப்பிடப்பட்டிருந்தால்
    நன்றாக இருந்திருக்கும்.

    ( ஒரு வேளை கேள்வியாளர்கள் இல்லையோ.....?)


    இப்பேட்டி முழுவதையும், கணிணி பயன்படுத்தாத மற்றவர்களும்
    அறிந்திடும் வகையில் அச்சு பிரதியாக வெளியிடுவதன் மூலம்,
    " தலைவர் என்ன செஞ்சார்........, ஜமாத் என்ன செஞ்சிச்சி" ..............
    என்ற நம்மவர்களின் வழக்கமான சலிப்புகளையும், குறைக்கலாம்
    என்று நான் நம்புகிறேன்.

    வலைப்பூ நிர்வாகிகளுக்கு என் நன்றி

    அன்புடன்

    ஹம்துன் A. அப்பாஸ்
    050 61 71 642
    அல் ஹஸா
    சவுதி அரேபியா

    பதிலளிநீக்கு

வெளிச்சமூட்டிய வெளக்குகள்

இன்று நினைத்து பார்க்க முடியாத அளவில் விஞ்ஞானம் வளர்ந்து விட்டது. அன்று தாமஸ் ஆல்வா எடிசன் என்கிற ஒரு விஞ்ஞானி கண்டுபிடித்த ஒரு 'டங்ஸ்டன...