ஜமாஅத் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ஜமாஅத் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், 13 பிப்ரவரி, 2012

பதவியேற்பு விழா துளிகள் (படங்களுடன்)


:::: 10.20-க்கு தொடங்கிய விழா 11.55-க்கு நிறைவுபெற்றது.

:::: 10.40-க்கு பதவி பிரமாணம் செய்து வைக்கப்பட்டது

:::: மவ்லவி கபீர் அஹமது மதனி, வழக்கறிஞர் செய்யது அன்சாரி, சிதம்பரம் மூசா, கேப்டன் ஹமீது ஆகியோர் தலா 10 நிமிடங்கள் உரையாற்றினார்கள்.

:::: சிதம்பரம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் K.பாலகிருஷ்ணன் 10.45க்கு வருகை தந்தார்.
:::: சால்வை அணிவிக்க வந்தவர்களை தன் கையில் கொடுக்கும்படி தலைவர் நூர் முஹம்மது கேட்டு கொண்டார். அதனால் யாரும் சால்வைகள் போர்த்தவும் இல்லை – யாருக்கும் போர்த்தப்படவும் இல்லை.
:::: கேப்டன் ஹமீது ஜமாஅத் நிதிக்கு காசோலை மூலம் ரூ12,000 வழங்கினார்.

:::: விழாவில் கலந்துக்கொண்ட சிறப்பு விருந்தினர்களுக்கு நினைவுப்பரிசுகள் வழங்கப்பட்டது.

:::: பரங்கிப்பேட்டை பேரூராட்சி மன்ற தலைவர் M.S.முஹம்மது யூனுஸ் உள்ளிட்ட முன்னாள் ஜமாஅத் நிர்வாகிகள் யாரும் கலந்துக்கொள்ளவில்லை.

:::: முன்னாள் அமைச்சரும், புவனகிரி தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான செல்வி இராமஜெயம் வருகை தரவில்லை.

:::: பரங்கிப்பேட்டை பேரூராட்சி மன்ற 8-வது வார்டு உறுப்பினர் அருள்முருகன் கலந்துக்கொண்டார்.

:::: இந்தியன் ஓவர்சீஸ் வங்கி முதுநிலை மேலாளர் பாண்டியத்துரை கலந்துக்கொண்டார்.

:::: நகர தி.மு.க.அவைத்தலைவர் வழக்கறிஞர் தங்கவேல் கலந்துக்கொண்டார்.

::::தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் (TNTJ) சார்பில் யாரும் கலந்துக் கொள்ளவில்லை.

:::: மனிதநேய மக்கள் கட்சி நிர்வாகி பிலால், இந்திய தவ்ஹீத் ஜமாஅத் (INTJ) நிர்வாகி ஹாஜா ஆகியோர் கலந்துக் கொண்டனர்.

:::: பரங்கிப்பேட்டை பேரூராட்சி மன்ற முன்னாள் துணைத்தலைவர் செழியன் மற்றும் ஆரியநாட்டு சலங்குகாரத்தெரு பஞ்சாயத்தார்கள் கலந்து கொண்டனர்.

:::: மாதக்கோயில் தெரு பஞ்சாயத்தார்கள் கலந்துக்கொண்டனர்

:::: பரங்கிப்பேட்டை காவல்நிலைய ஆய்வாளர் சுப்ரமணியன் கலந்துக்கொண்டார்.

:::: சிதம்பரம் தாலுகா காவல்துறை ஆய்வாளர் புகழேந்தி பற்கேற்கவில்லை

:::: அழைப்பிதழ் வழங்குவதற்கு பொறுப்பேற்றவர்கள் செய்த குளறுபடியால் சில முக்கியஸ்தர்களுக்கு அழைப்பிதழ் விடுப்பட்டதாக பரவலாக பேசப்பட்டது

:::: கா.மு.கவுஸ் நன்றியுரையாற்றுவார் என்று குறிப்பிடப்பட்டு இறுதியில் மாற்றம் செய்யப்பட்டதால் ஆவேசமுற்ற கா.மு.கவுஸ் நிகழ்ச்சி முடிந்த பின்னர் அதுப்பற்றி குரலெழுப்பிய போது தலைவர் டாக்டர் நூர் முஹம்மது அவரை சமாதானப்படுத்தினார்.
:::: பதவி ஏற்பு விழா முடிவடைந்து சற்று தாமதமாக வந்த பான்மல், டாக்டரை சந்தித்து வாழ்த்து கூறினார்.

:::: இரு திருமண நிகழ்ச்சிகள் நடைபெற வேண்டி இருந்ததால் நிகழ்ச்சி சற்று விரைவாக முடிக்கப்பட்டது.
:::: 11.38-க்கு தொடங்கிய தனது ஏற்புரையை டாக்டர் 11.50-க்கு நிறைவு செய்தார்.

:::: நன்றியுரைக்கு பின்னர் வந்திருந்தோர் டாக்டரை கட்டித் தழுவி தங்களது ஸலாத்தினையும் – வாழ்த்துக்களையும் தெரிவித்தனர்.

:::: தாயகம் வந்திருக்கும் பஷீர் அஹமது (தம்மாம்), குலாம் ஜெய்லானி மியான் (குவைத்), ஹுஸைன் (ரியாத்) உள்ளிட்ட வெளிநாடு வாழ் பரங்கிப்பேட்டை சகோதரர்களின் அமைப்பு பிரதிநிதிகளும் இந்த நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டனர்.

:::: விழா முடிவில் அனைவர்களுக்கும் இனிப்பு வழங்கப்பட்டது.


:::: மாலை 6 மணிக்கு ஜமாஅத்தின் முன்னாள் நிர்வாகிகள் ஜமாஅத் அலுவலகத்தை திறந்து, புதிய நிர்வாகத்திடம் ஒப்படைத்தனர்.


களத்தொகுப்பு: ஹம்துன் அப்பாஸ் / MGF

ஞாயிறு, 6 டிசம்பர், 2009

இஸ்லாமிய ஐக்கிய ஜமாஅத் தொழில் நுட்ப பயிற்சி விளக்க நிகழ்ச்சி









இஸ்லாமிய ஐக்கிய ஜமாஅத் சார்பாக தீ எச்சரிக்கை அமைப்பு, தீயணைப்பு முறைகள், உள்ளிட்ட பயிற்சி நுட்பங்களை விளக்கும் பயனுள்ள் நிகழ்ச்சி நேற்றும் இன்றும் (05.12.2009, 06.12.2009) இரண்டு நாட்கள், ஹாஜி ஹபிபுல்லாஹ் மரைக்காயர் நினைவு ஷாதி மஹாலில் நடைபெற்றது. 05.12.09 அன்று மாணவர்களுக்கும் 06.12.09 இன்று மாணவிகளுக்கும் நடைபெற்றது. அளவான எண்ணிக்கையில் எதிர்பார்க்கப்பட்ட மாணவர்கள் மற்றும் மாணவிகள் அதிகம் பேர் கலந்து கொண்டு தங்களின் ஆர்வத்தினை வெளிக்காட்டினர்.
நிகழ்ச்சியினை துவக்கி வைத்து பேசிய ஜமாஅத் தலைவர் முஹம்மது யூனுஸ், சமுதாயத்தின் கல்வி வளர்ச்சிக்கு இஸ்லாமிய ஐக்கிய ஜமாஅத் செய்து வரும் முயற்ச்சிகளை குறிப்பிட்டு பேசினார்கள். மாணவர்களின் வசதிக்கேற்ப எந்த விதமான பயிற்சி வகுப்புக்களும் அவர்களின் கோரிக்கைகளை கேட்டு எடுக்க ஜமாஅத் தயாராக உள்ளது என்றும் அறிவித்தார்.
பிறகு துபாய் வாழ் சகோதரர் ஹசன் பசர் தீ எச்சரிக்கை அமைப்பு, தீயணைப்பு முறைகள், CCTV, CENTRAL BATTERY SYSTEM உள்ளிட்ட பயிற்சி நுட்பங்களை சாதாரண மாணவனும் புரிந்து கொள்ளகூடிய வகையில் எளிய நடையிலும், விளக்கமாகவும் நடத்தினார். மாணவர்களின் மற்றும் மாணவிகளின் கேள்விகளுக்கும் விளக்கமாக பதில் அளித்தார்.

வந்திருந்த நூற்றுக்கு மேற்ப்பட்ட மாணவர்களும் எழுபத்தைந்துக்கும் குறையாத மாணவிகளும் நமது சமுதாய இளம் தலைமுறையினருக்கு மத்தியில் கல்வி மற்றும் அறிவுசார் நுட்பத்திற்கு தேடல் அதிகரித்திருப்பதை அடையாளம் காட்டினார்கள்.

நிறைவாக பேசிய கல்விக்குழுவை சார்ந்த சகோதரர், தனது விடுமுறை காலத்திலும் இதுபோல் சமுதாய பணிகளில் செயல்படும் ஹசன் பசர் அவர்களுக்கும், ஆர்வத்துடன் வந்திருந்த மாணவ மாணவியர்களுக்கும் இஸ்லாமிய ஐக்கிய ஜமாத்தின் சார்பில் நன்றியினை தெரிவித்துக்கொண்டார்.

இது போல பல நிகழ்ச்சிகள் மேலும் நடத்த ஆலோசனைகள் மாணவ மாணவியர் தரப்பிலிருந்து வந்தது கவனிக்கத்தக்கது.

ஒரு துறையில் கல்வியும் அனுபவமும் பெற்ற ஒருவர் தனது சமுதாய இளம் தலைமுறையின் எதிர்காலத்திற்க்காக இலவசமாக இவ்வாறு நடத்துவது புதுமையாக இருந்தது அதுவும் இதே பயிற்சிக்கு பல ஆயிரங்களில் கட்டணம் வாங்கி படிக்கும் சூழல் இருக்கும் இந்த கால கட்டத்தில்.
இந்த வகையில் இது ஒரு வித்தியாசமான நிகழ்ச்சியே. இது போல பல நல்ல விஷயங்கள் இனி அடிக்கடி நடப்பதை எதிர்பார்ப்போம்.

ஞாயிறு, 21 ஜூன், 2009

புவனகிரியில் தீ விபத்து! பரங்கிப்பேட்டை ஐக்கிய ஜமாஅத் உதவி!!

புவனகிரி, பவளக்காரத் தெருவில் ஏற்பட்ட தீ விபத்தில் 5 முஸ்லிம் குடும்பங்களூம் 5 மாற்று சமுதாய குடும்பங்களும் பாதிக்கப்பட்டது.

பாதிக்கப்பட்ட இவர்களுக்கு MKMS காண்டிரக்டர் ஜனாப். பஷீர் அவர்கள் ஜமாஅத்தை முன்னிறுத்தி ரூ 10,000 உதவி வழங்கினார்.

ஜமாஅத் பைத்துல்மால் மூலம் ரூ5,000. ஜமாஅத் நிர்வாகிகள் மூலம் ரூ9,000 ஆக மொத்தம் ரூ14,000 பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்கப்பட்டது.

ஜமாஅத் செயலாளர் ஜனாப். நிஜாமுத்தீன் அவர்கள் தனிப்பட்ட முறையில் 10 சேலைகளையும் வழங்கினார்.

லயன்ஸ் கிளப் சார்பாக ஜனாப். கவுஸ் ஹமீது அவர்கள் 15 போர்வைகள் மற்றும் பாய்களை நிவாரணமாக வழங்கினார்.

திங்கள், 23 மார்ச், 2009

ஜமாஅத் நிர்வாகிகள் பதவியேற்பு





நமதூர் ஜமாஅத் தலைவர் தேர்தலில் வெற்றிபெற்ற திரு. யூனூஸ் அவர்கள் தமக்கு உதவியாக அமைய உள்ள நிர்வாகக்குழுவினர் பெயர்களை அறிவித்திருந்தது அறிந்ததே.

நேற்று காலை 11 மணியளவில் பதவியேற்பு நிகழ்ச்சி மஹ்மூதியா ஷாதிமஹலில் சிறப்பாக நடைபெற்றது. பொதுமக்களும், பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்தவர்களும் கலந்து சிறப்பித்தனர்.

நிர்வாகக் குழுவின் பல்வேறு அணிகளுக்கு தலைவர் விளக்கமளித்தார்.

ஞாயிறு, 1 பிப்ரவரி, 2009

ஓட்டு இல்லை!


எதிர் வரும் ஜமாஅத் தேர்தலில் வெளிநாட்டுவாழ் பரங்கிப்பேட்டை மக்கள் ஆன்லைன் வழியாக ஓட்டு போடும் தீர்மானம் நிறைவேற்றப்ட்டிருந்ததாக ஏற்கனவே தகவல் வெளியான நிலையில், தற்போது NRIகளுக்கு ஓட்டு இல்லை என்கிற செய்தி கசிந்துள்ளதால் இவர்களிடைளே சிறிது சலசலப்பு ஏற்பட்டுள்ளது.  


இந்நிலையில், தேர்தல் குழுவை தொடர்பு கொண்டு கேட்டபோது, "சில நாட்கள் முன்பு வரை அப்படித்தான் (ஆன்லைன் ஓட்டு) இருந்தது. ஆனால் சற்று உள்ளார்ந்து பார்த்ததில் இது இந்திய அரசியல் சட்டத்தில் பொருந்தவில்லை(?) எனவே, NRI களுக்கு வாக்களிக்கும் உரிமை கொடுக்க இயலவில்லை" என்று கூறினர்.

இந்த ஆன்லைன் ஓட்டு மூலம் முழுமையாக ஓட்டுகள் கிடைத்திராவிட்டாலும், ஒரு குறிப்பிட்ட சதவீதத்தினர் நிச்சயமாக இந்த வாக்கெடுப்பில் பங்கு கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தேர்தல் குழுவின் இம்முடிவு ஏமாற்றமே அளிக்கிறது.

செவ்வாய், 25 நவம்பர், 2008

வரலாறு காணாத மழை




ஊரில் இன்று வரலாறு காணாத மழை பெய்துகொண்டிருக்கிறது.
டெல்லிசாஹிப் தர்கா பகுதியில் வசிக்கும் சுமார் 350ஏழை முஸ்லிம் குடும்பங்கள் வெள்ளத்தில் பாதிக்கப்பட்டுள்ளன.



ஜமாஅத் அவர்களை பத்திரமாக வெளியேற்றி ஷாதிமஹலில் தங்க வைத்துக்கொண்டிருக்கிறது. அவர்களுக்கான உணவு ஏற்பாடுகளும் செய்யப்படுகின்றன.

இயற்கைச்சீற்றத்திலிருந்து நாம் அனைவரும் இறைவனிடம் பாதுகாவல் தேடுவோமாக.

ஏழைக்குடும்பங்களுக்கான உணவு ஏற்பாட்டில் பொருளாதார ரீதியாக உதவ நினைக்கும் நம் சகோதரர்கள் யாரும், விரும்பினால், விரைந்து ஜமாஅத்தை அணுகவும்


தகவல்: R.தவ்ஹீத்

திங்கள், 10 நவம்பர், 2008

இஸ்லாமிய ஐக்கிய ஜமாத்தின் மாதந்திர செயற்குழு கூட்டம்

இஸ்லாமிய ஐக்கிய ஜமாத்தின் மாதந்திர செயற்குழு கூட்டம் நேற்று மாலை அசர் தொழுகைக்கு பிறகு நடைபெற்றது.
1. கடந்த ரமலான் மாதத்தில் ஜகாத், பித்ரா வசூல் மற்றும் விநியோகம் குறித்த வரவு செலவு அறிக்கையை ஜனாப் இலியாஸ் நானா அவர்கள் வாசித்து அளித்து குழுவின் ஒப்புதல் பெறப்பட்டது.

2. கடலூர் மாவட்ட ஜமாத்கள் ஒருங்கிணைப்பு கமிட்டி ஒன்று உருவாக்கப்பட்டு இருப்பதை ஜமாஅத் தலைவர் விபரமாக தெரிவித்தார்.

3. இந்த ஜமாத்தின் செயல் காலம் அடுத்த வருடம் பிப்ரவரி மாதத்துடன் முடிவடைய இருப்பதால் அடுத்த மாதம் பொதுக்குழு கூட்டி (ஒரு அட்வகேட் மூலம்) பொதுக்குழுவில் வைத்து தேர்தல் நடைமுறைகளை தெளிவு படுத்த இருப்பதாக தலைவர் கூறினார்.

பிறகு பொது விஷயங்கள் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டன. ஜாமத்தில் இளைஜர்களை அதிக அளவில் சேர்பது குறித்து ஜனாப் ஹாஜி மௌலவி சாஹிப் வலியுறுத்த அதற்கு பதிலளித்த ஜமாஅத் தலைவர் நூற்றி என்பது செயற்குழு உறிப்பினர்களில் என்பது பேர் இளைஞர்கள் என்றும் அவர்களில் பலர் அழைக்கப்பட்டும் வருவது கிடையாது என்று தெரிவித்தார்.

கடலூர் மாவட்ட ஜமாத்கள் ஒருங்கிணைப்பு கமிட்டியின் நோக்கம் என்ன என்று உறுப்பினர் ஜனாப் கலிக்குஜ் ஜமான் அவர்கள் கேள்வி எழுப்ப முஸ்லிம்களின் பொருளாதாரம், மாற்று சசமுதாயதினருடனான பிரச்சனைகள் மற்றும் அரசு நலத்திட்டங்களை பாமர மக்களுக்கு கொண்டு செல்லும் பொது நோக்கங்கள் என்று ஜமாத்கள் ஒருங்கிணைப்பு கமிட்டியின் நோக்கம் பற்றி ஜமாஅத் தலைவர் விவரித்தார்.
கடலூர் மாவட்டம் மட்டுமல்லாமல் மாநிலம் முழுதுமே, ஒரு ஜமாஅத் எப்படி செயல்படவேண்டும் என்பதற்கு பரங்கிபேட்டை இஸ்லாமிய ஐக்கிய ஜமாத்தை சிறந்த உதாரணமாக அனைவரும் காட்டுவதை பெருமிதத்துடன் தலைவர் அவர்கள் குறிப்பிட்டார். பிறகு செயற்குழு உறுப்பினர்கள் ஏற்புடன் கூட்டம் இனிதே நிறைவுற்றது.

திங்கள், 14 ஏப்ரல், 2008

இஸ்லாமிய ஐக்கிய ஜமாஅத்தின் செயற்குழு கூட்டம்


பரங்கிப்பேட்டை இஸ்லாமிய ஐக்கிய ஜமாஅத்தின் மாதாந்திர செயற்குழு கூட்டம் 13.04.08 ஞாயிறு மாலை நடைபெற்றது. இந்த கூட்டத்தின் அஜென்டாக்களாக நான்கு விஷயங்கள் எடுத்து கொள்ளப்பட்டன.

1. கடந்த ஆண்டிற்கான ஜமாஅத் மற்றும் பைத்துல்மால் நிதிநிலையறிக்கை. இதனை ஜமாஅத்தின் பொருளாளர் ஜனாப் இலியாஸ் நானா அவர்கள் வாசித்து அளித்தார்.

2. கீற்று கொட்டகையாக இருந்த ஜமாஅத்தின் கட்டிடத்தை ஒழுங்குபடுத்தி விஸ்தரிப்பதற்கும் செயற்குழுவிற்கு அறிவிக்கப்பட்டு அனுமதி பெறப்பட்டது,

3. சென்ற செயற்குழுவில் விவாதிக்கப்பட்தின்படி, கல்விக்குழு ஏற்பாடு செய்துள்ள 10ம், மற்றும் 12ம் வகுப்பு பயிலும் பெண்களுக்காக பெண் ஆசிரியைகள கொண்டே நடத்தப்படப்போகும் டியூஷன் பற்றி கல்விக்குழு தலைவர், செயற்குழு உறுப்பினர்களுக்கு விளக்கினார்.

4. புதிய அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளிக்கு மேலும் வசதிகள் ஏற்படுத்தி தந்த லயன்ஸ் கிளப் மற்றும் ஜமாஅத் செயலாளர் ஜனாப் ஹபீபுர்ரஹ்மான் இவர்களுக்கு நன்றி தெரிவிக்கபட்டது.

இவையல்லாமல், பொதுவிஷயங்களாக, மீராப்பள்ளி அடுத்துள்ள சிமெண்ட சந்தில் இருக்கும் பள்ளங்களால் ஏற்படும் இடர்பாடுகள் பற்றியும் அதை சரிசெய்யவும் உறுப்பினர் அலிஹுசைன் நானா அவர்கள் கோரிக்கை வைக்க, உடனே எழுந்த தலைவர் யூனூஸ் அவர்கள் இன்னும் 10 தினங்களில் கண்டிப்பாக அவை சிமெண்ட் பூசப்பட்டு சீர்செய்யப்படும் என்று உறுதியளித்தார். வாத்தியாபள்ளி பேருந்து அவ்வப்போது உள்ள வராமல் செல்லுவது, ஊரினுள்ள பேருந்து வேகமாக செல்லுவதால் கற்கள் பறக்கும் அபாயம், என்.டி. வரை டவுன் பேருந்தை இயக்க கோரிக்கை, நீண்ட நாட்களாக வாத்தியாபள்ளியில் இரவு ஹால்ட் ஆகாமல் உள்ள 5ஏ பேருந்து, கேஸ் சிலிண்டர் விநியோகத்தில் மெத்தனம், போன்ற பல விஷயங்கள் விவாதிக்கப்பட்டன. சமீபத்திய கலெக்டர் வருகையின் போது காஜியார் தெரு சிமெண்ட் ரோடு மாற்றங்கள், பழைய பெண்கள் மேல்நிலைபள்ளியில் வரவேண்டிய அரசு அலுவகங்கள் பற்றியும் அவர் அளித்த குறிப்புகளின் சுருக்கம் வாசித்து காட்டப்பட்டது. கல்வி மேற்படிப்பிற்காக கடலூர் சென்று படிக்கும் மாணவிகள் சந்திக்கும் அவலமான சிக்கல்கள பற்றி கல்விக்குழு தலைவர் விளக்கி ஜமாஅத்தினை ஏதேனும் ஆக்கபூர்வமான நடவடிக்கை எடுக்கும்படி கோரிக்கை வைத்தார். ஜனாப். ராசி டிராவல்ஸ் ராஜா நானா அவர்கள் மாதம் 22,000 க்கு ஒரு சேவையாக இதை ஏற்றுக்கொண்டார். அவர்களின் இந்த மகத்தான ஏற்பிற்கு நன்றி தெரிவிக்கப்பட்டது. இன்ஷா அல்லாஹ் அடுத்த கல்வியாண்டில், கடலூர் அதுவும் குறிப்பாக செயின்ட் ஜோசப் கல்லூரிக்கு சென்று படிக்கும் மாணவிகள் இந்த பிரத்யேக வசதியை பயன்படுத்திகொள்ளலாம். இதன்மூலம் இன்ஷா அல்லாஹ் வீட்டு வாசலில் கிளம்பி வீட்டு வாசலுக்கே சரியான நேரத்தில் பத்திரமாக வந்து சேரும் பாதுகாப்பான சூழல் உறுதிபடுத்தப்படுகிறது, எல்லா புகழும் அல்லாஹ் ஒருவனுக்கே.

சனி, 15 மார்ச், 2008

நிறைவு பகுதி - பேரூராட்சி தலைவரும் இஸ்லாமிய ஜக்கிய ஜமாஅத்தின் தலைவருமான எம். எஸ். முஹமது யூனுஸ் அவர்கள் அளித்த பேட்டியின் 3-வது பகுதி.


1. ஜமாஅத் சார்பாக ஊர் மக்கள் கணக்கெடுப்பு பணி ஆரம்பிக்கப்பட்டு, அது முழுமையடையாமல் உள்ளதே?
இந்த விசயத்தில் மக்கள் மிகவும் ஆர்வமாக ஆரம்பத்தில் கேட்ட தகவல்களைக் கொடுத்து வந்தார்கள். இதற்காக மற்றும் கல்விக்குழு தங்களின் பங்களிப்புகளை அளித்து வந்தார்கள். 50 சதவீத கணக்கெடுப்பு முடிக்கப்பட்டது உண்மைதான். இதற்கிடையில் அவரவர்களுக்கு உண்டான வேலை நிமித்தம் காரணமான தொடர முடியாமல் உள்ளது. யாரையும் கட்டாயப்படுத்தி மீத வேலைகளை தொடரச் சொல்ல இயலாத நிலையில் இக்கணக்கெடுப்பை முழுமையாக முடிக்கனும் என்கிற ஆர்வம் இருக்கிறது. இன்ஷா அல்லாஹ் கூடிய விரைவில் முடிக்க முயற்சிக்கிறோம்.

2. பேரூராட்சி திட்டத்தின் கீழ் செம்மைபட்டு வரும் மீராப்பள்ளி மயானத்தில் சில குடும்ப கோரிகள் ஏன் அகற்றப் படாத நிலையில் உள்ளது?
அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் மீராப்பள்ளி மயானத்தில் காடுகள் அகற்றப்பட்டு, வேலிகளை எடுத்துவிட்டு சுவர்கள் எழுப்பப்பட்டு, பவர் சேவர் எனப்படும் மின் விளக்குகள் கம்பங்களுடன் அமைக்கப்பட்டுள்ளது. பாதையும் புதிதாகப் போடப்பட்டு மண் அடிக்கும் பணி நடைப்பெற்று வருகிறது. இது பற்றி அந்தந்த குடும்பத்தாரிடம் அனுமதி கேட்டு கோரிகளை அகற்றிவிட்டு ஒரே மட்டமாக ஆக்கிவிடலாம் என்று நானே சொல்லியிருந்தேன். பரங்கிப்பேட்டையைப் பொறுத்தவரை பல கொள்கையுடையவர்கள் வாழ்ந்து வருகிறார்கள். இதில் 100 வருடங்களாக பாரம்பரியமாக எங்களின் குடும்பத்தினரை அடக்கம் செய்து வருகிறோம் என்று சிலர் கூறிவரும் காரணத்தினால், முழுமையாக கோரிகளை அகற்றி ஊரில் ஒரு சலசலப்பினை உருவாக்க நாங்கள் விரும்பவில்லை. மீராப்பள்ளி நிர்வாகத்தின் நிலையும் இதுதான். தற்போது அதிக கோரிகள் தானாகவே இடிந்து போய்விட்டது. சிறிய அளவில் தான் மீதமுள்ள கோரிகள் உள்ளது. இதற்கு மேல் குடும்ப கோரி என்று யாரும் புதிதாக கட்ட வாய்ப்பு இல்லை. மீதமுள்ள கோரிகள் விரைவில் தானாகவே இடிந்துவிட்ட பிறகு, 10 வருடங்களுக்குப் பிறகு கோரிகள் இல்லாத மயானத்தை நாம் பார்க்கலாம்.

3. அவசத்திற்கோ முதலுதவிக்கோ கூப்பிட்டால் எந்த டாக்டரும் வருவதே கிடையாத நிலையில் இது குறித்து எந்த நடவடிக்கையும் நீங்கள் எடுத்தீர்களா?
பரங்கிப்பேட்டையில் முன்பு டாக்டர் நூர் முஹமது அவர்கள் மருத்துவ சேவை செய்து வந்தபோது, எந்த நேரத்திலும் (வீட்டிற்கு வந்தே) அவசரகால மற்றும் முதலுதவி சிகிச்சையளித்து வந்தார். அதன் பிறகு சில தொய்வுகள். அதன் பிறகு வேறு யாரும் வீட்டிற்கு கூப்பிட்டால் வருவது கிடையாது. இதற்காக வேண்டுகோள் விடுத்தும், சணடைப் போட்டும் பலனில்லை. இதற்கிடையில் கிள்ளை ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணிபுரியும் டாக்டர் ஷகீலா பேகம் என்பவர் ஊரில் க்ளினிக் ஆரம்பிக்க ஜமாஅத்தை அனுகியபோது, ஒரு கோரிக்கையை முன்வைத்தோம். அதாவது, எந்த சமுதாயத்தினரின் அவசரத்திற்காகவும் போன் செய்தாலும் சேவை மனப்பாண்மையுடன் சென்று பார்க்னும் என்று கூறினோம். இங்கு உயிர் போகிற தருணத்தில் கூட எந்த டாக்டரும் வந்து பல்ஸ் பார்க்க்கூட வரமுடியாத நிலையில் நிச்சயம் நீங்கள் இந்த சேவை செய்ய வேண்டும் என்று மிகவும் வலியுறுத்திக் கூறினோம். அவர் இதை ஏற்றபிறகு, நாங்களே முன்னின்று மீராப்பள்ளித் தெருவில் (நவாப்ஜான் நானா அவர்களுடைய) ஒரு வீட்டை வாடகைக்கு பெற்றுத் தந்துள்ளோம். தற்போது யார் கூப்பிட்டாலும் வருகிறார். அதுமட்டுமில்லாமல் காட்டுமன்னார்குடியிலிருந்து ஒரு டாக்டர் (அய்னுல்லாகான்) ஊரில் க்ளினிக் ஆரம்பிக்க வீடு எதுவும் கிடைக்காமல் சிரமபட்டு ஜமாஅத்தை அணுகியபோது, சின்னத்தெருவில் ஷேக் இமாம் நானா அவர்களின் பழைய வீட்டின் போர்ஷன் ஒன்றை வாடகைக்குப் பெற்று தந்துள்ளோம். அவரும் எங்கள் கண்டிஷனுக்கு ஒத்துக்கொண்டு தற்போது அவரும் அவசர சிகிச்சைக்கு எந்த நேரம் கூப்பிட்டாலும் மறுக்காமல் வருகிறார். அரசு மருத்துவமனையை பொறுத்தவரையில், ஆரம்பத்தில் இரண்டு டாக்டர்கள் மட்டுமே இருந்து வந்தனர். இதற்காக அமைச்சரிடம் முறையிட்டு தற்போது நான்கு டாக்டர்களைப் பெற்றுள்ளோம். இது மட்டுமில்லாமல் தற்போது புதிய கட்டிடம் கட்டப்பட்டு மேலும் விரிவாக்ம் செய்யப்பட உள்ள நிலையில், இந்த அரசு மருத்துமனையை தாலுக்கா அந்தஸ்து உள்ள மருத்துவமனையாக மாற்றித் தர கேட்டிருக்கிறோம். ஆறு மாதத்திற்குள் இது தாலுக்கா அந்தஸ்து பெற்ற மருத்துவமனையாக மாறிவிடும் என்று உறுதியளித்துள்ளார்கள். இதனால் ஆறு நிரந்தர மருத்துவர்கள் இங்கு இருப்பார்கள் இதுமட்டுமில்லாமல் இன்னும் நிறைய வசதிகளும் நம் மருத்துவமனைக்கு கிடைக்கும். தற்போது டாக்டர் பிரச்னை 99 சதவீதம் முடிவுக்குவந்துவிட்டது.

4. அரசு ஆண்கள் பள்ளியில் மாணவர்களுக்கு விளையாட்டு மைதானம் போன்ற வசதிகள் இல்லாமல் உள்ளதே?
கடந்த 100 ஆண்டுகளுக்கு மேலாக விளையாட்டுத் திடலாக இருந்து வந்த இடத்தில்தான் அரசினர் ஆண்கள் பள்ளி இப்போது புதிதாக இயங்கி வருகிறது. இறைவனின் கிருபையால், ஜமாஅத்தின் முயற்சியால்தான் விளையாட்டுத்திடலை அரசுக்கு (மாவட்ட ஆட்சித் தலைவருக்கு) புதிய பள்ளிக்கு காட்டினோம். இராஜஸ்தான் அரசு 1 கோடியே 20 இலட்ச ரூபாயும் வேல்ட் விஷன் 40 இலட்ச ரூபாயும் ஆக மொத்த 1.60 கோடி ரூபாய் செலவில் எல்லா வசதிகளுடனும் அருமையான கட்டிடத்தை கட்டிக் கொடுத்தார்கள். அதில் ஒரு சில குறைபாடுகள் இருக்கத்தான் செய்கிறது. இன்னும் ஒரு சில ஆண்டுகள் சென்றால்தான் எல்லா குறைகளையும் நிவர்த்தி செய்ய முடியும். அது ஏற்கனவே பள்ளமான இடம் - மழை காலத்தில் தண்ணீர் தேங்கும் இடம். இது சம்மந்தமாக சுனாமி திட்ட அலுவலர்கள் போன்றோர் வந்து பார்த்து சைக்கிள் ஸ்டாண்ட், ஆழ்துளை கிணறு (நல்ல தண்ணீருக்காக) மற்றும் (விளையாட்டுத்திடலுக்கு போதிய இடம் உள்ளதால்) மண் அடித்தல் போன்றப் பணிகளை செய்து தர இருக்கிறார்கள். மேலும் லயன்ஸ் க்ளப் உதவியுடன் விளையாட்டடுத்திடலைச் சுற்றியும் பள்ளியிலும் மரங்கள் நடப்பட்டு வருகிறது. எல்லாம் சரியாக கொஞ்ச கால அவகாசம் தேவைப்படுகிறது. விரைவில் சரி செய்யப்பட்டுவிடும். இது மட்டுமில்லாமல் மாணவர்கள் பெரியமதகு செல்லாமல் வண்ணாரப்பாளையம் வழியாக செல்ல தரைப்பாலம் ஒன்றினை அமைக்க முயற்சிகள் மேற்கொண்டு வருகிறேன். மாவட்ட ஆட்சியர் ஒப்புதல் கொடுத்து விட்டார்.

5. அதே பள்ளியில் சில மாணவர்களின் ஒழுங்கு நடவடிக்கை குறித்து பிரச்சனை எழுந்துள்ளதே? குறிப்பாக மொபைல் ஃபோனை தவறாகப் பயன்படுத்துவதாகவும் சர்ச்சை உருவாகியுள்ளது, பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவராக இருக்கும் நீங்கள் இது குறித்து நடவடிக்கை மேற்கொண்டீர்களா?
உண்மைதான். ஆனால் மொபைல் ஃபோனை தவறாக பயன்படுத்திய தகவல் எனக்குத் தெரியவில்லை. தூரமாக பள்ளி சென்று விட்டதால் கண்கானிப்பு குறைவாக உள்ளது. வகுப்புகள் முடிவதற்கு முன்பே மாணவர்கள் வெளியேறிவிடுவதாக தகவல்கள் வருகிறது. பெற்றோர் ஆசிரியர் கழகத்தின் சார்பாக பலமுறை இதை கண்டித்து சொல்லியிருக்கிறேன். பள்ளியின் தலைமையாசிரியர் பதவிக்காலம் முடிவடைய இன்னும் ஒரு மாதம் உள்ளது. இதற்குப் பிறகு புதிய தலைமையாசிரியர் பதவியேற்றவுடன் இது குறித்து பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் என்கிற முறையில் எல்லா பெற்றோர்களையும் அழைத்து இதற்கு ஒரு சுமூக தீர்வு காண வழிவகை செய்வேன். மொபைல் போன் பயன்படுத்த அரசு தடைவிதித்துள்ளது. இது சம்மந்தமாக அரசினர் பெண்கள் பள்ளியிடம் பேசியதற்கு அங்கு யாரும் பயன்படுத்துவதில்லை என தெரியவந்நது. ஆண்கள் பள்யிலும் இதை கடைப்பிடிக்கிறார்கள். இருந்தாலும் இது குறித்து மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கிறேன்.

6. நம் கண் முன்பே சில நாட்களுக்கு முன்பு ஒரு பள்ளிச் சிறுமியை தெரு நாய் ஒன்று பாய்ந்து கடித்தது. பொது மக்களுக்கு இடைஞ்சல் தரும் தெரு நாய்களை பிடிக்க பேரூராட்சி நடவடிக்கை எடுக்குமா?
இப்போது தெரு நாய்களை பிடிக்க அரசு தடை செய்துள்ளது. இதற்கு பதிலாக ஆண் நாய்களை பிடித்து அதற்கு குடும்ப கட்டுப்பாடு செய்து திரும்ப வந்து விட்டுவிட வேண்டும் என அரசு அறிவிப்பு செய்திருக்கிறது. இது பெரும்பாலும் சாத்தியம் கிடையாது. நான் பேரூராட்சிக்கு வந்த உடனேயே நிறைவேற்றிய முதல் தீர்மானமே இந்த தெருநாய் ஒழிப்பு தீர்மானம்தான். அரசாங்க சட்டம் ஒருபுறமிருந்தாலும் மக்கள் நலனை கருத்தில் கொண்டு 10 நாட்களாக 498 நாய்களைப் பிடித்தோம். இதனால் மற்ற நாய்கள் பதுங்க ஆரம்பித்து விட்டது. மீதம் உள்ள சுமார் 500 நாய்களையும் பிடிக்க ஏற்பாடு செய்தபோது வேண்டாத சில நபர்கள் 'இவர் அரசாங்கத்தை மீறி செயல்படுகிறார்' என்று புகார் அளித்துவிட்டதால், அரசு தரப்பில் இனி நாய்களை பிடித்து குடும்ப கட்டுப்பாடு மட்டும் செய்ய ஏற்பாடு செய்யுங்கள் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இது சம்மந்தமாக எல்லா பேரூராட்சிகள் மற்றும் நகராட்சிகள் சார்பாக முதல்வர் கருணாநிதி தலைமையில் கூடிய கூட்டத்தில் இது முன் வைக்கப்பட்டுள்ளது. அரசு இதை பரிசீலிக்கும் என்று கூறியுள்ளது

7. பள்ளிவாசல்களின் பொதுக்குளங்கள் சரியான முறையில் பராமரிக்கப்படாமல் உள்ளது பற்றி....
எங்களுடைய காலங்களிலெல்லாம் குளத்தில் குளிக்க வேண்டிய கட்டாயம் இருந்தது. இதற்கு கூட்டுக் குடும்ப வாழ்கை முறை முக்கிய காரணமாக இருந்து வந்தது. அப்போதெல்லாம் வீட்டிற்கு பொதுவாக இருக்கும் கிணற்றில் தண்ணீர் எடுத்து துவைக்க வேண்டியிருந்ததால் குளத்தில் அதிகம் பேர் குளிக்க வருவார்கள். ஆனால் தற்போது தனிக்குடும்பம், ஷவர் பாத் என மாறி அதிகமாய் யாரும் குளத்திற்கு செல்வது கிடையாது. வழக்கமாய் குளத்தில் குளித்தே பழகியவர்கள் வந்து கொண்டுதான் இருக்கிறார்கள். அந்த காலத்தில் 100 பேர் குளித்தார்கள் என்றால் இப்போது 10 பேர்தான் குளத்திற்கு வருகிறார்கள். இருந்தாலும் நம்முடைய பள்ளிகளின் பழமையான குளங்களை குளிப்பதற்க ஏற்றவாறு மாற்றியமைக்கனும் என்கிற எண்ணம் இருக்கிறது. இதற்காக பேரூராட்சியிலும் தீர்மானம் நிறைவேறியுள்ளது. ஊர் மக்கள் ஒத்துழைப்பு தந்தால் விரைவில் இது சரி செய்யப்படும். குடிசைகள் நிறைந்த ஹக்கா சாயபு தர்காவளாக பகுதி மக்களின் அவசியம் கருதி அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தில் ஒரு லட்சம் செலவில் அங்குள்ள குளத்தை தூர் வாரி படிகட்டு கட்ட ஏற்பாடு செய்து பணிகள் நடந்து கொண்டு வருகின்றன.

சனி, 8 மார்ச், 2008

பேரூராட்சி தலைவரும் இஸ்லாமிய ஜக்கிய ஜமாஅத்தின் தலைவருமான எம். எஸ். முஹமது யூனுஸ் அவர்கள் MYPNO வலைப்பூவிற்கு பிரத்யேகமாக அளித்த பேட்டியின் 2-வது பகுதி

1. ஹஜ் பெருநாள் அன்று மாவட்ட ஆட்சித் தலைவர் 'பெரிய தெரு' சாலையில் உடனடியாக பேட்ச் ஒர்க் செய்யப்படும் என்று சொல்லியும் இதுவரை எந்த ஏற்பாடும் செய்யப்படாமலேயே உள்ளது. இது குறித்து மாவட்ட ஆட்சித் தலைவரை மீண்டும் தொடர்பு கொண்டீர்களா?
சரிதான். இதற்காக சஞ்சீவிராயர் முனை முதல் சின்னக்கடை வரை மாவட்ட ஆட்சித் தலைவர் 3 இலட்சம் ரூபாய் செலவில் பேட்ச் ஒர்க் செய்ய அனுமதியளித்துவிட்டார். ஆனால் இதற்கிடையில், ஆசிய வளர்ச்சி வங்கி நிதியுதவியுடன் ஆர். ஆர் எனப்படும் நெடுஞ்சாலைப் பிரிவு திட்டத்தின் கீழ் ஆலப்பாக்கத்திலிருந்து (பெரியகுப்பம்) சாமியார்பேட்டை, சின்னக்கடை-பெரியத் தெரு வழியாக அன்னங்கோயில் வரை 9.5 கோடி ரூபாய் திட்ட மதிப்பீடடில் 7 மீட்டர் அகலமுடைய சாலையை உருவாக்கி வருகிறார்கள். இதற்கிடையில் மழையினால் பெரியதெருவில் ஏற்பட்ட சேதத்தை பேரூராட்சி சொந்த செலவில் ஜே.சி.பி. வைத்து சரிசெய்யப்பட்டுள்ளது. தற்போது போக்குவரத்து இடையூறில்லாமல் ஓரளவு சரிசெய்யப்பட்டு விட்டது. அதே போல் பு.முட்லூரிலிருந்து மெயின்ரோடு-பெரியக்கடைத் தெரு வழியாக கண்டெடுத்த தர்கா வரை 7 மீட்டர் அகலமுள்ள சாலையை உருவாக்கும் பணியும் ஆரம்பிக்கப்பட்டுவிட்டது. இது மட்டுமில்லாமல் தெத்துக்கடை காந்தி சிலையிலிருந்து போலிஸ் ஸ்டேஷன் வழியாக ஹைஸ்கூல் ரோடு முடிய 7 மீ அகலமுள்ள சாலையும் போடப்பட்டுவிடும். இப்பபணிகளுக்காக ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு வருகின்றன். தற்போது பெரியக்கடையில் உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றப்படுகிறது. இதன்படி ஏற்கனவே பேரூராட்சியில் நிறைவேறிய தீர்மானத்தின் படி, பேருந்துகள் காந்தி சிலையிலிருந்து பெரிய கடை - பக்கீர் மாலிம் தெரு வரியாக சென்று திரும்பும் போது ஹைஸ்கூல் ரோடு - சஞ்சிவீராயர் கோயில் தெரு வழியாக செலுத்தப்டும். இதன் மூலம் போக்குவரத்து நெருக்கடியும் குறையும்.

2. பணி முழுதும் முடிக்கப்பட்டப்பிறகும் நெடு நாட்களாக அரசு மருத்துவமனை மற்றும் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி திறக்கப்படாமலேயே உள்ளதே?
இதற்காக கடந்த 25, 26 தேதிகளில் 3 அமைச்சர்கள் மூலம் இவற்றை திறக்க ஏற்பாடு செய்திருந்தோம். ஆனால் சில தவிர்க்க முடியாத காரணங்களால் மார்ச் 10 தேதிக்குள் வந்து திறந்து தருவதாக கூறியிருக்கிறார்கள். அரசு பெண்கள் பள்ளியைப் பொருத்தவரை 69 இலட்சம் ரூ செலவில் கட்டிடத்தை மட்டுமே கட்டிக்கொடுத்தார்கள். பள்ளிக்கூடம் பெண்கள் பயிலும் இடமாக இருப்பதினால் அவர்களின் பாதுகாப்பு குறித்து பலர் கோரிக்கை வைத்ததினால் ஜமாஅத் முன்னின்று லயன்ஸ் கிளப் உதவியுடன் கேட்டை அடைத்து பாதுக்காப்பானதாகவும் சகோ. ஹபீப் ரஹ்மான் அவர்கள் மதில் சுவற்றை உயர்த்தி 40 அடி நீளம் வரை கட்டிக் கொடுத்து பெயிண்டிங் வேலையையும் சொந்த செலவில் செய்துக் கொடுத்தார். மேலும் ஆண்கள் மேநிலைப் பள்ளியாக இயங்கி வந்த போது இங்கு பராமரிக்கப்பட்ட கம்ப்யூட்டர் லேப் ஒன்றை இடிக்காமல் கம்ப்ப்யூட்ர்களுடன் இப்பெண்கள் மேநிலைப் பள்ளி பயன் பெற ஆண்கள் பள்ளிக்கு 10 ஆயிரம் ரூ நிதியளிக்கப்பட வேண்டிய சூழ்நிலையில் பெண்கள் பள்ளி நிர்வாகத்திதிடம் இதற்கான நிதியாதாரம் இல்லாததினால், என் மனைவி அந்த வார்டு உறுப்பினர் என்கிற முறையில் என்னுடைய சொந்த பணத்தில் 5000 ரூபாயை கொடுத்து இதை பெண்கள் பள்ளிக்காக பெற்றோம். மருத்துவமனையைப் பொருத்தவரை இராஜஸ்தான் அரசு நிதியுதவியடன் கட்டப்பட்டதால் அந்த மாநில முதல்வரே வந்து திறக்க நடவடிக்கை மேற்கொண்டார். அவர் வர முடியாத சூழ்நிலை ஏற்பட்டதால், வேறு யாரையாவது வைத்து திறந்துக் கொள்ள இத்திட்டக்குழு எங்களிடம் ஒப்படைத்து சென்றுவிட்டது. பின்பு இதிலிருந்த நிறைய குறைபாடுகளை என்னுடைய செலவில் சரி செய்யப்பட்டு இப்போது தயார் நிலையில் உள்ளது. கூடிய விரைவில் மார்ச் 10 தேதிக்குள் திறக்கப்பட்டுவிடும். திறந்தபின் எல்லோரும் பயன் பெரும் வகையில் நல்ல மருத்துவமனையாக இருக்கும். இன்னும் 100 ஆண்டுகள் கடந்தாலும், அன்றைய மக்கள்தொகையை கணக்கு வைத்து மேலும் வசதிகளுடன் மருத்துவர்கள் தங்க குடியிருப்புகள், சித்த மருத்துவமனை, ஆம்புலன்ஸ் நிறுத்த இடம் போன்றவற்றை கருத்தில் கொண்டு கச்சேரித் தெரு தொடக்கப்பள்ளியும் மருத்துவமனை வளாகத்தில் கொண்டு வர ஏற்பாடுகளை செய்து விட்டோம். இது தவிர பிரேத பரிசோதனைக்கூடமும் மாற்றி பள்ளி வளாகத்தில் அமைய ஏற்பாடு செய்துள்ளோம்.

3. தங்களையும் ஜமாஅத்தின் ஒரு சிலரையும் தவிர பெரும்பாலான ஜமாஅத் நிர்வாகிகள் செயல்படுவதாகவே தெரியவில்லை. நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கும்-நீக்கும் அதிகாரம் உள்ள நீங்கள் செயல்படக்கூடியவர்களை ஏன் தேர்ந்தெடுத்து உங்கள் பணிகளை இன்னும் செம்மைப் படுத்தக்கூடாது?
இது நான் பதவியேற்ற 9 வருடங்களாக உள்ள பிரச்சினை. எந்த வகையிலும் தொய்வு இருக்கக் கூடாது என்று முயற்சிகள் செய்கிறோம். அவர் அவர்களின் வேலைகளை ஜமாஅத் நிர்வாகிகள் செய்துகொண்டுதான் இருக்கிறார்கள். சிலர் அந்த வேலையைத் தான் செய்யனும், சிலர் இந்த வேலையைத் தான் செய்யனும் என்கிற சூழ்நிலையில் இருக்கிறார்கள். ஒவ்வொருக்கும் ஒவ்வொரு துறையில் ஆர்வம் இருக்கும். யார் எந்தப் பணியை செய்தாலும் பணிகள் தொய்வில்லாமல் தொடர்ந்துக் கொண்டிருக்கிறது. இன்னும் தேர்தலுக்கு ஒரு வருடம்தான் இருக்கிறது. அதன்பிறகு யார் வருகிறார்களோ அவர்கள் சிறப்பாக செயல்பட அதற்குண்டான வழிமுறைகளை நாங்கள் மேற்கொள்வோம்.

4. பல விசயங்களில் சிறப்பாக செயல்படும் நீங்கள் உங்களுக்குப் பிறகு ஒரு சிறந்த நிர்வாகக் குழுவினை அடையாளம் கண்டு உருவாக்க எடுக்கும் முயற்சிகள் என்ன?
இது குறித்து (இது போல) ஏற்கனவே ஒரு கேள்விக்கு பதில் சொல்லியிருக்கிறேன். எதுவாக இருந்தாலும் என்னுடைய இடைவிடாத உழைப்பின் அடிப்படையில் சிறந்த நிர்வாகம் அமைய செயல்பட்டு வருகிறேன். அப்படி வருபவர்களுக்கு எங்களால் இயன்ற ஒத்துழைப்பினையும் ஆதரவினையும் தர தயாரக உள்ளோம். ஆனால் யார் வருவார் - யார் வரனும் என்பதை இப்போதே நாம் சொல்ல முடியாது. ஏனென்றால் தேர்தல் முறையில் தான் அடுத்த நிர்வாகத்தை தேர்ந்தெடுக்கனும் என்று பைலா போடப்பட்டுள்ளது. யார் மக்களுக்காக உழைக்கிறார்களோ அவர்கள்தான் வரவேண்டும். ஜனநாயகத்துக்கு முரணாக இவர்தான் வர வேண்டும் என்று கை காட்டி ஒருவரை முன்னிருத்த விரும்பவில்லை. எனவே, பைலாவின்படி, என் பதவிக் காலம் முடியும்போது பொதுக்குழுவைக் கூட்டி-தேர்தல் அறிவித்து- 10 பேர் நின்றாலும் மக்கள் யாரைத் தலைவராகத் தேர்ந்தெடுக்கிறார்களோ அவர் தலைவராக வருவார். இதை முழுமையாகப் பின்பற்ற முயற்சிகளை செய்கிறோம். இதனால் நாங்கள் யாரையும் கை காட்டி இவர் தான் வரணும் என்று விரும்பவில்லை.

5. ஐக்கிய ஜமாஅத்தின் செயற்பாடுகள் பற்றி எதுவுமே தெரியாமல் அதனை குறை சொல்லும் போக்கு இருந்து வருகிறது. இதை தவிர்க்க ஜமாஅத்தின் செயற்குழுவில் அதிகளவில் சமுதாய அக்கறையுள்ளவர்களை குறிப்பாக இளைஞர்களை செயற்குழுவில் இணைப்பதுப் பற்றி ஜமாஅத் என்ன நினைக்கிறது?
ஜமாஅத்தில் 180 பேர் செயற்கழு உறுப்பினர்களாக உள்ளனர். கடந்தக் காலங்களை ஒப்பிட்டு 3 மாதங்களாக கூட்டத்திற்கு வராதவர்களை நீக்கி விட்டு புதியவர்களை நியமிக்கிறோம். இந்த 180 பேர்களில் கிட்டதட்ட 90 பேர் இளைஞர்கள். செயற்குழு கூடும்போது 90 (அ) 100 பேர்தான் கலந்துக் கொள்கிறார்கள். முழுக்க முழுக்க 100 சதவீத உறுப்பினர்கள் கலந்துக் கொள்ள இயலாது. தேவைப்படும் நேரங்களில் பொதுக்குழு கூட்டப்படும்போது ஊர் விசயங்கள் மற்றும் ஒரு சில குடும்பங்களில் நடக்கும் தவறான செயல்கள் குறித்து கருத்து சொல்ல ஆயிரம் பேர் வந்துவிடுவார்கள். இந்த ஆயிரம் பேரை வைத்துக் கொண்டு (எந்த தவறான) பிரச்னைகளை எப்படி கையாள்வது-அணுகுவது இது உண்மையா-பொய்யா என்று ஆராய்ந்து செயல்பட வாய்ப்புகள் கிடையாது. மனிதன் தோன்றிய காலத்திலிருந்தே சொந்தக் கருத்து சொல்வதெனபது நடைமுறையில் உள்ளதுதான். மற்றபடி இளைஞர்களை அதிகமாக செயற்குழுவில் சேர்க்கனும் என்றுதான் விரும்புகிறோம். இதற்காக கல்விக்குழு தலைவர் ஹமீத் மரைக்காயர் அவர்களிடம் இளைஞர்களின் பட்டியலைக் கேட்டுள்ளோம். எனவே அதிகமான இளைஞர்கள் இன்ஷாஅல்லாஹ் விரைவில் சேர்க்கப்படுவார்கள்.

6. 2 வருடங்களுக்கு முன்பு ஜமாஅத் பொதுக்குழுவில் 'வரதட்சனை ஒழிப்பு தீர்மானம்' போடப்பட்டது, அத்தீர்மானம் செயல் வடிவில் உள்ளதா? நிறைய பேர் வரதட்சனை வாங்குவதாகவே கருத்து தென்படுகிறதே?
வரதட்சணை வாங்கக்கூடாது, சீர் சாமான்கள் வாங்கக்கூடாது என்று பொதுக்குழுவில் தீர்மானம் போட்டது உண்மைதான். மேலும் பேண்ட் வாத்தியங்கள் வைக்கக்கூடாது, ரேடியோ, வானவேடிக்கைகள் கூடாது என்று சட்டங்கள் போட்டு திருமண நிகழ்ச்சிகளை வசதிக்கு தக்கவாறு மிக எளிமையாக செய்யுங்கள் என்று சொன்னோம். திருமண செலவுகளைக் குறைத்துக் கொண்டு ஏழைகளுக்கும் குறிப்பாக கல்விக்கு உதவிகளை செய்யுங்கள் என்று வலியுறுத்திக் கொண்டுதான் இருக்கிறோம். ஊரில் நடக்கும் ஒவ்வொரு திருமண முடிவின் போதும் ஜமாஅத் பிரதிநிதி யாரவது கலந்துக் கொண்டு ஜமாஅத் மூலமாக உருவாக்கப்பட்ட உறுதிப் படிவத்தில் 'வரதட்சணை வாங்குவதிலலை என உறுதி கூறுகிறோம்' என்று இரு தரப்பினரிடமும் கையெழுத்து வாங்குகிறோம். அவர்களும் கையெழுத்துப் போட்டு தருகிறார்கள். இதுதான் எங்களுக்கு நம்பிக்கை. அவர்கள் மறைமுகமாக வாங்குகிறார்களா இல்லையா என்பது நமக்குத் தெரியாது. மற்றபடி பேண்ட் வாத்தியங்கள், ரேடியோ போன்றவை முழுமையாக ஒழிக்கப்பட்டுவிட்டது. இது ஒருவகையில் மாபெரும் வெற்றி.

புதன், 27 பிப்ரவரி, 2008

பேரூராட்சி தலைவரும் இஸ்லாமிய ஜக்கிய ஜமாஅத்தின் தலைவருமான எம். எஸ். முஹமது யூனுஸ் அவர்கள் MYPNO வலைப்பூவிற்கு பிரத்யேகமாக அளித்த பேட்டியின் முதல் பகுதி

தன்னுடைய இரு முக்கிய பணிகளை சுமந்துக் கொண்டு, எண்ணற்ற பணிகளுக்கிடையே... வலைப்பூவிற்கு பேரூராட்சி மன்றத் தலைவரும் இஸ்லாமிய ஜக்கிய ஜமாஅத்தின் தலைவருமான எம். எஸ். முஹமது யூனுஸ் அவர்கள் அளித்த பேட்டியை தொகுத்து முதல் பகுதியை உங்களுக்காக வழங்குகிறோம். பல வேலைகளுக்கு மத்தியில் எப்போதும் பிஸியாகவே இருந்தவரிடம் ஒரு நாள் முன்பே கேள்விகளை நீட்டியபோது, கேள்விகளை நேரிடையாகவே கேளுங்கள், எந்த கேள்விக்கும் நான் பதில் சொல்லத் தயார்! அது எனது கடமை!! என்று சொன்னது நமக்கு மகிழ்ச்சியை அளித்தது.
1. பரங்கிப்பேட்டை தற்போது ஓரளவு வளர்ச்சிப் பணிகளை நோக்கி சென்றாலும், வெளியூர் சென்று திரும்பும் பெண்களுக்கு குறிப்பாக கடலூர் சென்று படிக்கும் மாணவிகளுக்கு போதிய போக்குவரத்து வசதியில்லை. இவர்கள் குறிப்பாக மிகஅதிகமாக நெருக்கித் தள்ளும் என். டி. (N.T.) போன்ற பஸ்ஸில் சென்று வருவது வேதனை. இதற்காக ஏற்கனவே (மாணவிகளுக்காக) வேன் வாங்குவது என்ற திட்டம் நிறைவேற்றப்படாமல் உள்ளதே... ஏன்?
- கு. நிஜாமுத்தீன் மற்றும் ஊர் (கூகிள்) குழுமம்.
அதற்கான முயற்சியாக குறிப்பாக வெளியூர் சென்று படிக்கும் மாணவிகளுக்காக 1.25 இலட்சம் ரூபாய் வசூல் செய்து, மேற்கொண்டு 1.25 இலட்சம் ரூபாய் போட்டு வேன் ஒன்று வாங்கி விடலாம் என்று முடிவு செய்தோம். ஆனால் தற்போது மஹிந்திரா வேன் மார்க்கெட்டில் கிடைக்கவில்லை. 3.5 (அ) 4 இலட்சம் ரூபாய் செலவில் வேன் வாங்ககூடிய நிலை ஏற்பட்டுள்ளது. அதற்கான போதிய நிதி இல்லாததினாலும், எதிர்பார்க்கும் மாடல் கிடைக்காததினாலும் வேன் வாங்கும் திட்டம் கிடப்பில் உள்ளது. இதை நாங்கள் பொதுக்குழுவில் அறிவித்தோம். 1.25 இலட்சத்தில் 50 ஆயிரம் ரூபாய் நிதி கொடுத்த ஒருவர் மீண்டும் அதை திரும்ப பெற்றுக்கொண்டார். மீதப் பணத்தை யார் கொடுத்தார்களோ அவர்களிடம் கேட்டதற்கு, இதை வேறு நல்ல பணிக்கு பயன்படுத்திக் கொள்ள சொல்லிவிட்டார்கள். எனவே, புதிய வேன் வாங்கி அதை பராமரிக்க போதிய நிதி இல்லை, இருந்தாலும் பழைய வேன் வாங்க நிதி திரட்டி அதை செயல்படுத்த பரிசீலனை செய்து வருகிறோம்.


2. ஊரின் பல தெருக்களில் புதிய சாலைகள் போடப்படுவது மகிழ்ச்சியான செய்தி. ஆனால் பழைய சாலை மீதே புதிய சாலைகள் போடுவதால் சலைகள் உயர்ந்து கொண்டே போய் வீட்டு வாயில்கள் பள்ளங்களில் காணப்படுவதால் மழைநீர் வீடுகளில் புகுந்து விடுகிறது. எனவே, இனி போடஉள்ள சாலைகளிலாவது பழைய சாலைகளை அகற்றி விட்டு போடலாமே? - கு. நிஜாமுத்தீன் மற்றும் ஊர் (கூகிள்) குழுமம்

அப்படிப்பார்த்தால்... பரங்கிப்பேட்டையின் ஒட்டு மொத்த சாலைகளையும் தோண்டி எடுத்து புதிய சாலைகள் போட்டால்தான் இது சாத்தியம். ஏற்கனவே சில சிமெண்ட் சாலைகள் போட்டுவிட்ட நிலையில் புதிய (நீளமான) சாலைகளை கொத்திவிட்டு போடும் போது மழை காலங்களில் சிறு சிறு சாலைகளில் இருந்து வரும் நீர் இந்த சாலைகளில் தேங்கிவிடும். அதனால், ட்ரைனேஜ் வசதி இருந்தால் மட்டுமே இதை முழுமையாக சரி செய்யப்படும். 2.75 கி.மீ.க்கு மத்திய அரசு நிதியுதவியுடன் (பெரியமதகிலிருந்து) முக்கிய தெருக்களான ஹைஸ்கூல் ரோடு, பெரிய தெரு, சின்னக் கடை போன்ற தெருக்களில் ட்ரைனேஜ் வசதி அமைக்க முயற்சிகளை எடுத்து வருகிறோம். கூடிய விரைவில் இதற்கு ஒப்புதல் கிடைத்த பிறகு இப்பிரச்சனை ஓரளவுக்கு சரிசெய்யப்பட்டுவிடும்.

3. ரேஷன் கார்டு குறித்து தனிப்பட்ட முறையில் குடும்ப பெண்கள் தாசில்தார் அலுவலகத்திற்கு பலமுறை ஏறி இறங்கி அலைகழிக்கப்படுகிறார்கள். எனவே எளிதான வகையில் ரேஷன் கார்டு கிடைக்க பேரூராட்சி தலைவராக இருக்கும் நிலையில் வழி வகை செய்யலாமே? - கு. நிஜாமுத்தீன் மற்றும் ஊர் (கூகிள்) குழுமம்

ரேஷன் கார்டு எடுக்கும் முறை கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு வரை எளிய வகையில்தான் இருந்து வந்தது. அதாவது பேரூராட்சி தலைவரோ (அ) ஜமாஅத் தலைவரோ ஒரு பரிந்துரைக் கடிதம் கொடுத்தாலே அது உடனடியாக பரிசீலிக்கப்பட்டு ரேஷன் கார்டு வழங்கப்பட்டு வந்தது. ஆனால் தற்போது ஏகப்பட்ட மனுக்கள் குவிய ஆரம்பித்தததினால் அரசு தற்போது சில விதிகளை போட்டுள்ளது. இருப்பிடச் சான்று, வருவாய் சான்று மற்றும் வேறு ஏதாவது ஒரு சான்றுடன் (Proof) மனு செய்பவருக்கு மட்டுமே ரேஷன் கார்டு வழங்கப்படுகிறது. இதனால் கண்டிப்பாக குடும்பத் தலைவரோ (அ) தலைவியோ நேரில் மனு செய்யக்கூடிய நிலை ஏற்பட்டுள்ளது. இருந்தாலும் இது குறித்து எங்களை அனுகுகிறவர்களுக்கு சகோ. ஜீ.எம். கவுஸ் அவர்கள் மூலம் இருப்பிடச் சான்று மற்றும் வருவாய் சான்று எடுத்துத் தர வழிவகைகளை செய்துள்ளோம். மற்றபடி இதில் தனிப்பட்ட முறையில் பரிந்துரை செய்ய தற்போது எந்த வழியுமில்லாமல் அரசு சட்டம் அமைத்துவிட்டது.

4. அரசியலில், சமூகப்பணியில் உங்களின் அடுத்தக்கட்ட எண்ணம், விருப்பம் என்ன? - இப்னு ஹம்துன், (ரியாத்), பரங்கிப்பேட்டை

தற்போது அரசியலில் தான் பேரூராட்சித் தலைவராக செயல்பட்டு வருகிறேன். இனி அடுத்த பேரூராட்சித் தலைவரகவோ (அ) வேறு உயர் பதவிக்கோ எங்களின் செயல்களை வைத்து மக்கள் தேர்ந்தெடுக்க வாய்ப்புகள் உள்ளது. சமூகப் பணியைப் பொறுத்த வரை ஜமாஅத் மூலமாக நிறைய சமுகப் பணிகளை தொடர்ந்து செய்து வருகிறேன். இதை இனி எந்த காலத்திற்கும் தொடர்வோம் (அ) தொடரப்படனும் என்கிற எண்ணம் நமக்கு இல்லை. ஜமாஅத்தை பொறுத்தவரை, 3 முறை பதவி வகித்து விட்டேன். தற்போது இரண்டு பணிகளில் செயல்பட சிரமமாக இருப்பதினாலும் இவர் மட்டுமே ஜமாஅத் தலைவராக இருக்கவேண்டுமா என்கிற எண்ணம் மக்கள் மத்தியில் எழுந்துவிடக்கூடாது என்பதினாலும் தேர்தல் முறையில் அறிவிப்பு செய்து இனி புதிய தலைவரை தேர்ந்தெடுக்க பொதுக்குழுவில் முடிவு செய்துள்ளோம். இதன் மூலம் மக்கள் நலனுக்கு உழைப்பவர்கள் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்படுவார்.

5. பரங்கிப்பேட்டையை நகராட்சியாகக்கும் திட்டம் எந்த அளவு செயற்பாட்டிலுள்ளது? - இப்னு ஹம்துன், (ரியாத்), பரங்கிப்பேட்டை

பரங்கிப்பேட்டையை நகராட்சியாக்குவற்காக அரசு விதிகளுக்கு உட்பட்டு மாவட்ட ஆட்சித் தலைவர் 3 முறை கூட்டம் நடத்தினார். இதற்காக அரசு தரப்பில் 2001-ல் எடுக்கப்பட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பில் 21,912 பேர் என்று தவறான தகவல் அளிக்கப்பட்டு விட்டது. நகராட்சியாக்குவதற்கு குறைந்தபட்சம் 30,000 பேர் இருக்கவேண்டும் அதற்கான போதிய வருவாயும் இருக்க வேண்டும். இது குறித்து மாவட்ட ஆட்சித் தலைவர் திரு. இராஜேந்திர ரத்னூ தலைமையில் கூடிய கூட்டத்தில் இத்திட்டத்தை வலியுறுத்தப்பட்டும் அதற்கான வழிவகைகள் இல்லாததினால் கிடப்பில் இருக்கிறது. இதற்காக அரியகோஷ்டி, புதுப்பேட்டை பஞ்சாயத்தையும் பரங்கிப்பேட்டையோடு சேர்த்துவிட்டால் இது நகராட்சியாகிவிடும் என்கிற கருத்தை வைத்தபோது, இந்த இரண்டு பஞ்சாயத்து தலைவர்களிடமும் மாவட்ட ஆட்சி தலைவர் கருத்து கேட்டபோது அவர்கள் இதற்கு ஒப்புக் கொள்ளவில்லை. இருந்தாலும் நாங்கள் மீண்டும் மாவட்டஆட்சித் தலைவரிடம், மக்கள்தொகை தவறாக கணக்கெடுக்கப்ட்டுள்ளது எனவே மீண்டும் சரியான முறையில் கணக்கெடுப்பு எடுத்தால் 30 ஆயிரம் நிச்சயம் வரும் என்று வேண்டுகோள் விடுத்ததின் பேரில் இதை அவர் தமிழக அரசுக்கு பரிந்துரை செய்துள்ளார். நகராட்சியாக ஆக்குவதற்குத்தான் நாங்களும் பல முயற்சிகளை தொடர்ந்து எடுத்து வருகிறோம்.

6. சிமெண்ட் ரோடு (சிமிட்டி சாலைகள்) பல தெருக்களிலும் அமைக்கப்பட்டு வரும் நிலையில் அதன் ஓர பகுதிகளில் யாரேனும் தவறி விழும் அபாயங்கள் காணப்படுகிறதே, என்ன தீர்வு செய்யப்டுகிறது? - இப்னு ஹம்துன், (ரியாத்), பரங்கிப்பேட்டை

சிமெண்ட் சாலைகள் சுனாமி திட்டத்தின் கீழ்தான் அதிகமாகப் போடப்பட்டுள்ளது. திட்டத்தின்படி ஓரங்களில் செம்மண் அடித்து நடைபாதையாக அமைக்க வேண்டும் என்பதுதான் விதி. ஆனால் காண்ட்ராக்டார்களின் தாமதத்தினால் அது முழுமையாக செய்யப்படாமல் போய்விட்டது. செம்மண் முழுமையாக போடுவதற்குள் சுனாமி நிவாரண அதிகாரிகள் சுனாமித் திட்ட கணக்குகளை முடித்து விட்ட காரணத்தால் பாதியிலேயே நின்று விட்டது. இது குறித்து நடவடிக்கை எடுத்துள்ளோம். கூடிய விரைவில் இது சரி செய்யப்பட்டு விடும் இன்ஷாஅல்லாஹ்.

7. வெற்றி பெற்ற மேல் நிலைப்பள்ளி மாணவர்கள், எஸ்.எஸ்.எல்.சி. மாணவர்களுக்கு பரிசளிப்பு திட்டத்தை ஐ.இ.டி.சி நடைமுறைப்படுத்தி வந்தது. ஜமாத்தும் அதற்கான உதவிகளை, பங்களிப்பை செய்து வந்தது. இடையில் நிறுத்தப்பட்டாமல் தெடர்ந்தால் என்ன? - இப்னு ஹம்துன், (ரியாத்), பரங்கிப்பேட்டை

இதுவரைக்கும் நாங்கள் நிறுத்தவில்லை. வெற்றி பெற்ற மாணவர்களுக்கு ஐ.இ.டி.சி. (I.E.D.C.) யுடன் சேர்ந்து 7 வருடங்களாக தொடர்ந்து செய்து கொண்டுதான் இருக்கிறோம். கடந்த வருடம்கூட 600 மாணவர்களுக்கு சிங்கப்பூர் அமைப்பிலிருந்து பெற்ற நிதியுதவியுடன் இலவச நோட்டுகள், யூனிஃபார்ம் உடைகள், கல்விக் கட்டணம் மாவட்ட ஆட்சித் தலைவர் முன்னிலையில் வழங்கப்பட்டது. அதே மேடையில் வெற்றிபெற்ற மாணவ-மாணவிகளுக்கு வெள்ளிப் பதக்கங்கள் வழங்கப்பட்டது.

8. கடந்த சில ஆண்டுகளாக பொதுமேடைகளின் மூலம் தங்களால் வலியுறுத்தப்பட்டு வரும் கோரிக்கையான, 'கிராம நிர்வாக அலுவலர், வருவாய் ஆய்வாளர் அலுவலகங்கள் பரங்கிப்பேட்டை நகரினுள் அமைக்கப்பட வேண்டும்' என்ற கோரிக்கைக்கு வலுவூட்டும் வகையில் பேரூராட்சி மூலம் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு அரசின் கவனத்திற்;க்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதா? - ஹம்துன் A. அப்பாஸ், அல் ஹஸா, சவூதி அரேபியா

இது ஏற்கனவே திரு. ககன்தீப்சிங் பேடி மாவட்ட ஆட்சி தலைவராக இருக்கும்போதே ஜமாஅத் சார்பாக கோரிக்கை வைத்தோம். தற்போது புதிதாக கட்டப்பட்டுள்ள அரசினர் பெண்கள் மேல்நிலைப் பள்ளி விரைவில் அமைச்சரால் திறக்கப்ப் உள்ளது. அது திறக்கப்பட்ட உடன் தற்போது வண்டிக்காரத் தெருவில் இருக்கும் பள்ளிக் கட்டிடத்தில் கிராம நிர்வாக அலுவலகம், வருவாய் ஆய்வாளர் அலுவலகம், உதவி கல்வி இயக்குனர் அலுவலகம் ஆகியவற்றையும் கச்சேரிதெருவில் உள்ள தொடக்கப் பள்ளியையும் நூலகத்தையும் அங்கு மாற்ற முடிவு செய்து மாவட்ட ஆட்சித் தலைவரிடம் தெரிவித்துள்ளோம். இதை அவர் ஏற்றுக் கொண்டுள்ளார். நேரில் இடத்தை ஆய்வு செய்த பிறகு விரைவில் இந்த அலுவலகங்கள் இங்கு மாற்றப்ப பட்டுவிடும்.
9. சின்னக்கடை மீன் மார்க்கெட்டை புதியதாக கட்டும் எண்ணம் பேரூராட்சியின் செயல் திட்டத்தில் உள்ளதா? - ஹம்துன் A. அப்பாஸ், அல் ஹஸா, சவூதி அரேபியா

சுனாமி அவசரக்கால உதவித்திட்டத்தின் கீழ் சின்னக் கடை மீன் மார்க்கெட்டிற்காக ஏற்கனவே திட்டம் வகுக்கப்பட்டு பிறகு தள்ளபடி செய்யப்பட்டு விட்டது. தற்போது மீண்டும் சுனாமி நிதியில் மீதமுள்ள பணத்தில் பேரூராட்சிகளின் இயக்குனரகம்த்திற்கு 32 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் மாவட்ட ஆட்சித் தலைவர் முன்னிலையில் புதிய திட்டக் கொள்கையை அனுப்பி வைத்துள்ளோம். அதன்படி கோட்டாத்தங்கரை தெரு பக்கவாட்டில் 9 கடைகளும் அதன் வழியே கேட் போடப்பட்டு இறைச்சி கடை மார்க்கெட் மற்றும் மீன் மார்க்கெட் அமைக்கப்படும். அதுபோல சஞ்சீவிராயர் கோயில் தெருவில் 9 இலட்சம் ரூபாய் செலவில் ஆண் பெண்களுக்கு நவீன கழிவறை அமைக்கும் திட்ட மதிப்பீட்டினையும் அனுப்பி வைத்துள்ளோம். அகரம் ரயிலடி பக்கக்கால்வாயும் இதில் அடங்கும்.

10. சாமியார்பேட்டையில் அமைந்துள்ள குழந்தைகள் விளையாட்டு பூங்காவை விட இன்னும் சிறப்பான பூங்கா, கடல் வாழ்உயிரின ஆராய்ச்சி உயரரய்வு மையத்தின் உதவியுடன் அமைக்கும் திட்டம் நமது பேரூராட்சிக்கு உண்டா? - ஹம்துன் A. அப்பாஸ், அல் ஹஸா, சவூதி அரேபியா

இதற்காக திட்டத்தின் கீழ் திப்பு சுல்தான் போர் நினைவகத்தில் ஒரு பூங்கா ஏற்கனவே கட்டி முடிக்கப்பட்டு விட்டது. அதற்கு எதிரிலேயே மீனவர் பயிற்சி மையமும் கட்டப்பட்டுள்ளது. அதை ஒட்டி உணவகம், குடில்கள், படகு குழாம் கட்டப்பட்டு இவற்றுடன் புதிய படகுகள் (பிச்சாவரம் வரை செல்ல) விடவும் இதைத் தொடர்ந்து அங்கேயே சிறுவர் பூங்கா ஒன்றினையையும் நிறுவுவதற்கான வேலையும் ஆக மொத்தம் 50 இலட்சம் ரூபாய் செலவில் வேலைகள் நடைபெற்று வருகிறது. இன்னும் 6 மாதங்களில் இப்பணிகள் அனைத்தும் முடிந்த பிறகு, முழுக்க முழுக்க சாமியார்பேட்டை பீச்சுக்கு செல்வதை தவிர்க்கப்பட்டு, பரங்கிப்பேட்டையிலேயே அனைத்து வசதிகளுடன் எழில் நிறைந்த பீச்சை ரசிப்பதற்கும் விளையாடுவதற்கும் இடமாக மாறிவிடும். இதையொட்டி வெளிநாட்டினர் தங்க ஏதுவாக 20 காட்டேஜ குடில்கள் கட்டுவதற்கு மாவட்ட ஆட்சித் தலைவர் அனுமதியளித்துள்ளார். இந்தப் பணியும் விரைவில் ஆரம்பிக்கப்படும். அதுமட்டுமில்லாமல், முஸ்லிம் சகோதரர்கள் நிறைந்த பகுதியில் பாவா மரைக்ககாயர் பூங்காவினையும் இந்து சகாதரர்கள் நிறைந்த பகுதியில் அகரம் வீரப்பா பூங்காவினையும் தலா 4 இலட்சம் ரூபாய் செலவில் விளையாட்டு வசதிகளுடன் பணிகள் முடிக்கப்பட்டுவிடடது. இதுவும் விரைவில் திறக்கப்பட்டுவிடும்.

திங்கள், 28 ஜனவரி, 2008

இஸ்லாமிய ஐக்கிய ஜமாஅத்திற்கு நன்றி!

ஜனவரி 8, 2008 அன்று வலைப்பூவில் குறிப்பிட்டு எழுதியிருந்த 'நிறைய வசதிகளுடனும் நிறைவான கட்டிடங்களுடனும் பாதுகாப்பு சூழலற்ற அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி' என்கிற செய்தி இஸ்லாமிய ஐக்கிய ஜமாஅத்தின் கவனத்திற்கு எடுத்து செல்லப்பட்டதின் விளைவாக, தற்போது உடனடி நடவடிக்கை எடுக்கப்படுகிறது.இது குறித்து ஜமாஅத் தனது முழுமுயற்சியுடன் அரசின் பார்வைக்கு எடுத்து சென்றும் இதற்கான நிதி ஒதுக்கும் ஆதாரம், திட்டம் எதுவும் இல்லாததினால் ஜமாஅத்தே இதை கையில் எடுத்து தற்போது தீர்வு கண்டுள்ளது. இதன்படி, பள்ளியின் உட்புறம் தெரியாதவாறு நுழைவு (கிரில்) கேட்டில்; அடைப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதற்கான முழு செலவினை பரங்கிப்பேட்டை லயன்ஸ் கிளப் ஏற்றது. மேலும் பள்ளியின் வகுப்பறைகள் தெரியதாவறு தற்போதைய காம்பவுண்ட் சுவரினை உயரப்படுத்திதர சகோ. ஹபீபுர்ரஹ்மான் (ஹபீபிய்யா) ஒப்புக்கொண்டுள்ளார். இந்தப் பணி ஓரிரு நாட்களில் துவங்கிவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.இந்நற்பணிகளுக்காக முயற்சி எடுத்த ஜமாஅத்திற்கும், சகோ. ஹபீபுர்ரஹ்மானுக்கும், லயன்ஸ் கிளப்பிற்கும் பரங்கிப்பேட்டை மக்கள் சார்பாக இவ்வலைப்பூ நன்றிகளைத் தெரிவிக்கிறது.