வியாழன், 21 மே, 2009

இரவு நேர அரசு டவுன் பஸ்கள் திடீர் நிறுத்தம் : பிரபாகரன் மறைவால் பதட்டம்

விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரன் சுட்டுக்கொலை செய்யப்பட்டதன் எதிரொலியாக இரவு நேர பஸ்கள் நிறுத்தப்படுவதால் பயணிகள் தினம் தினம் அவதிப்பட்டு வருகின்றனர்.

இலங்கையில் விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரன், அவரது மகன் சார்லஸ் அந்தோணி இலங்கை ராணுவத்தால் சுட்டுக் கொலை செய்யப்பட்டதாக வந்த தகவல் தமிழக மக்களை கவலையில் ஆழ்த்தியுள்ளது.

இலங்கை அரசின் முன்னுக்கு பின் முரணான தகவலால் பிரபாகரன் இறந்தாரா, இல்லையா என்ற 'சர்ச்சை' உலகம் முழுவதும் பேசப்பட்டு வருகிறது.

கடலூர் மாவட்ட மக்கள் ஆங்காங்கே கூடி பேசி வருத்தத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.

பிரபாகரனின் மரண செய்தி கேட்டு இலங்கை ராணுவத்திற்கு எதிர்ப்பை தெரிவிக்கும் வகையில் கடலூர் மாவட்டத்தின் ஒவ்வொரு பகுதியில் உள்ள வர்த்தகர்கள் உணர்வுப் பூர்வமாக கடையடைப்பு நடத்தி வருகின்றனர்.

விருத்தாசலம், பண்ருட்டி போன்ற பகுதியில் உண்ணாவிரதம் மற்றும் சாலை மறியல் செய்தனர்.

கடலூர், நெல்லிக்குப்பத்தில் உள்ள தி.மு.க., அலுவலகம் தீ பிடித்து எரிந்துள்ளது.

சில சமூக விரோதிகள் பஸ்கள் மீது கல்வீசி தாக்கி வருகின்றனர்.

நேற்று முன்தினம் மட்டும் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் 20க்கும் மேற்பட்ட பஸ்கள் மீது கல்வீச்சு நடந்தது.

இதனால் மாலை நேரங்களில் கிராமப்புறங்களுக்கு செல்லும் அரசு டவுன் பஸ்கள் அடியோடு நிறுத்தப்பட்டு விடுகின்றன.

எங்கோ ஒரு மூலையில் பஸ்கள் மீது கல்வீச்சு நடந்துவிட்டால் உடனே ஒட்டுமொத்த அரசு, தனியார் பஸ்களை நிறுத்தி விடுவது வழக்கமாகி வருகிறது.

நடந்த சாலையில் பாதுகாப்பு அளிக்காமல் ஒட்டுமொத்தமாக பஸ் போக்குவரத்தை தடை செய்து விடுகின்றனர்.

பின்னர் மெயின் லைனில் மட்டும் கால நேரம் இல்லாமல் பல மணி நேரம் காத்திருக்க வைத்து வாகனங்கள் சேர்ந்த பின்னர் 'ஹைவே பேட்ரால்' பாதுகாப்புடன் பஸ்கள் இயக்கப்பட்டுகின்றன.

இதுபோல போலீஸ் பாதுகாப்புடன் கடலூர் - புதுச்சேரி, கடலூர் - சென்னை, கடலூர் - சிதம்பரம் போன்ற பெரிய ஊர்களுக்கு மட்டுமே பஸ் போக்குவரத்து இயக்கப்படுகிறது.

அண்டை மாநிலத்திற்கு கூட பஸ்கள் இயக்கப்படுவதில்லை.

நேற்று முன் தினம் இரவு 10 மணிக்கு கடலூர் பஸ் நிலையத்தில் இருந்து புறப்படத் தயாராக இருந்த விழுப்புரம் (தடம் எண் 155) திடீரென நிறுத்தப்பட்டது. இதனால் பயணம் செய்ய தயாராக இருந்த பயணிகள் வேறு வழியின்றி பஸ் நிலையத்திலேயே தவித்தனர்.

கிராமப் பகுதிகளுக்கு செல்லுவோர் நிலை அதோ கதிதான்.

இதனால் அரசு அலுவலர்கள், பெண்கள், வெளியூர்களிலிருந்து வருபவர்கள் பஸ் நிலையத்திலேயே காத்துகிடக்கும் அவலம் ஏற்பட்டது.

பகல் முழுவதும் உழைத்து விட்டு மாலை வீடு போய் சேர முடியாமல் சில தினங்களாக பயணிகள் தவித்து வருகின்றனர்.

மாவட்டத்தில் தொடரும் கடையடைப்பு... :

பிரபாகரன், அந்தோணி இறந்த செய்தி ஊடகங்கள் மூலம் வெளியானதைத் தொடர்ந்து மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் கடையடைப்பு நடந்து வருகிறது.

கடலூர், பண்ருட்டி, விருத்தாசலம் பகுதிகளில் கடந்த 4 நாட்களாக பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டுள்ளன.

ஒரு சில கடைகள் திறக்கப்பட்டுள்ளன.

மாவட்டம் முழுவதும் இதே நிலைதான் உள்ளது.

கடையடைப்பு காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கையில் பாதிப்பில்லை.

சமூக விரோத செயலில் ஈடுபட்டால் துப்பாக்கிச்சூடு: எஸ்.பி., எச்சரிக்கை

சமூக விரோத செயல்களில் ஈடுபடுவோர் மீது வெளியில் வர முடியாத வழக்குகள் பதிந்து சிறையில் அடைக்கப்படுவர் என எஸ்.பி., பிரதீப்குமார் எச்சரித்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு:

இலங்கை பிரச்னையை தொடர்ந்து கடலூர் மாவட்டத்தில் கடந்த நான்கு நாட்களாக பத்து அரசு பஸ்கள் அடித்து சேதப்படுத்தப்பட்டன.

இது தொடர்பாக வழக்கு பதிந்து 11 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்கள் மீது தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும்.

மாவட்டம் முழுவதும் ஆயுதம் ஏந்திய போலீசார் ரோந்து பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

பொதுமக்களின் உயிருக்கும், உடமைக்கும் தீங்கு ஏற்படும் முயற்சிகளில் ஈடுபட்டால் அதை தடுக்கும் பொருட்டு போலீசார் துப்பாக்கி பிரயோகம் செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

மாவட்டம் முழுவதும் தேர்வு செய்யப்பட்ட 136 போலீசார் முக்கிய இடங்களில் பாதுகாப்பு பணியிலும், முக்கிய சாலைகளில் ரோந்து பணியிலும் ஈடுபட்டு வருகின்றனர்.

சிறப்பு படையினர் சமூக விரோதிகளை தேடி வருகின்றனர்.

சமூக விரோத செயல்களில் ஈடுபடுவோர், கைது செய்யப்பட்டு வெளியில் வரமுடியாத பிரிவுகளில் வழக்குகள் பதிந்து சிறையில் அடைக்கப்படுவர். இதனால் இளைஞர்களின் எதிர்காலம் பாதிக்கப்படும்.

சமூக விரோதிகள் பற்றிய தகவல் தெரிவிப்பவர்களுக்கு சன்மானம் வழங்கப்படும்.

தகவல் தெரிவிப்பவர்களின் விவரம் ரகசியமாக வைக்கப்படும்.

இவ்வாறு செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

இரவு நேரங்களில் பஸ்கள் 'கட்' ஆட்டோ கட்டணம் அதிகரிப்பு

சிதம்பரத்தில் இருந்து சுற்றுப்புற கிராமங்களுக்கு இரவு நேரங்களில் பஸ் போக்குவரத்து நிறுத்தப்படுவதால் ஆட்டோ கட்டணம் திடீரென அதிகரித்துள்ளது.

விடுதலைப்புலி தலைவர் பிரபாகரன் இறந்த தகவலால் பஸ் உடைப்பு போன்ற சம்பவங்கள் நடப்பதால் கடந்த சில தினங்களாக பெரும்பாலான பகுதிகளுக்கு இரவு நேர பஸ்கள் நிறுத்தப்பட்டு வருகிறது.

இதனால் கிராம பகுதியை சேர்ந்த மக்கள் கடும் அவதியடைந்து வருகின்றனர்.

சிதம்பரம் பகுதிகளில் உள்ள துணிக்கடைகள் உள்ளிட்ட வர்த்தக நிறுவனங்கள், பள்ளிகள், அரசு அலுவலகங்களில் கிராம பகுதிகளை சேர்ந்த அதிகமானவர்கள் பணி செய்கின்றனர்.

அவர்கள் பணி முடிந்து இரவு நேரங்களில் வீட்டிற்கு திரும்ப பஸ் கிடைக்காமல் கடும் அவதியடைகின்றனர்.

கூடுதல் செலவு செய்து ஆட்டோ எடுத்துக் கொண்டும், இரு சக்கர வாகனங்களில் சென்றும், நீண்ட தூரம் நடந்து சென்றும் மக்கள் அவதியடைந்து வருகின்றனர்.

ஆனால் ஆட்டோ கட்டணம் இரவு நேரத்தில் அதிகரிக்கப்படுவதால் கிராம மக்கள் கடும் அவதியடைந்து வருகின்றனர்.

சிதம்பரத்தில் இருந்து சென்னை, கடலூர், புதுச்சேரி மற்றும் மயிலாடுதுறை மார்க்கம் செல்லும் பஸ்களும் வழியில் ஆங்காங்கே 'கான்வாய்' முறையில் இயக்கப்படுவதால் பல மணி நேரம் பயணிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

இருந்தாலும் பாதுகாப்பான பயணம் அமைந்தால் போதும் என பயணிகள் தெரிவிக்கின்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

வெளிச்சமூட்டிய வெளக்குகள்

இன்று நினைத்து பார்க்க முடியாத அளவில் விஞ்ஞானம் வளர்ந்து விட்டது. அன்று தாமஸ் ஆல்வா எடிசன் என்கிற ஒரு விஞ்ஞானி கண்டுபிடித்த ஒரு 'டங்ஸ்டன...