கடலூர் மாவட்டத்தில் பொது இடங்களில் அமைக்கப்பட்டுள்ள கட்சி கொடிகளை 48 மணி நேரத்துக்குள் அகற்ற வேண்டும் என கலெக்டர் சீத்தாராமன் அனைத்து கட்சியினருக்கும் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
சட்டமன்ற தேர்தலில் பதட்டமான வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவை வெப் கேமரா மூலம் கம்ப்ïட்டரில் பதிவு செய்யப்பட உள்ளது. இதை நேரடியாக கண்காணிப்பதற்கான செயல் விளக்கம் கடலூர் மாவட்ட பொதுமக்கள் குறைகேட்பு கூட்ட அரங்கில் மாவட்ட தேர்தல் அதிகாரியும், கலெக்டருமான சீத்தாராமன் தலைமையில் நேற்று காலை நடந்தது.
இதில் கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) வீரராகவராவ், வருவாய் அதிகாரி ராஜேந்திரன், பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் மனோகரன், தேர்தல் நடத்தும் அதிகாரிகள் கல்யாணம், கணபதி, திருவேங்கடம், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (தேர்தல்) சுந்தரேசன், செய்தி-மக்கள் தொடர்பு அதிகாரி முத்தையா ஆகியோர் கலந்து கொண்டனர்.
முன்னதாக கலெக்டர் சீத்தாராமன் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறுபவர்கள் மீது பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்க தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. தேர்தல் நடத்தை விதிமுறைகளை பொறுத்தவரை சுவர் விளம்பரங்கள், விளம்பர டிஜிட்டல் பேனர்கள், கட்சிக்கொடிகள் ஒரு பகுதியாகவும், பணம், பரிசுபொருட்கள் மற்றும் மதுபாட்டில்களை கடத்தி செல்லுதல், இலவசங்கள் விநியோகம் ஆகியவற்றை இன்னொரு பகுதியாகவும் பிரிக்கப்பட்டுள்ளன.
அந்த வகையில் கடலூர் மாவட்டத்தில் இதுவரை தேர்தல் நடத்தை விதிகளை மீறி அமைக்கப்பட்டிருந்த 5 ஆயிரத்து 651 சுவர் மற்றும் டிஜிட்டல் பேனர் விளம்பரங்கள், கட்சி கொடிகள் அகற்றப்பட்டுள்ளன. இதில் தி.மு.க. சார்பில் 1,735, அ.தி.மு.க. சார்பில் 2,082, காங்கிரஸ் சார்பில் 305, விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் 832, பா.ம.க. சார்பில் 145, தே.மு.தி.க. சார்பில் 250 விளம்பரங்கள் வைக்கப்பட்டிருந்தன. அவற்றை அகற்றியதற்கான செலவை அந்தந்த கட்சி வேட்பாளர்களிடம் வசூலிக்கப்படும்.
அதேபோல பணம், பரிசுபொருட்கள் மற்றும் மது கடத்தல் போன்ற தேர்தல் நடத்தை விதி மீறல்கள் தொடர்பாக இதுவரை 62 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதில் பணம் கடத்தி வந்ததாக தொடர்பாக திட்டக்குடியில் ரூ.41/4 லட்சமும், கடலூரில் ரூ.2 லட்சமும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
இது குறித்து விசாரிக்க வருமானவரித்துறை அதிகாரியின் தலைமையில் 8 பேர்கொண்டகுழு அமைக்கப்பட்டுள்ளது. பிடிபட்ட பணத்தை அவர்களிடம் ஒப்படைத்துவிடுவோம். அவர்களின் விசாரணைக்கு பின்னர் அந்த பணத்துக்குரிய ஆதாரங்களை தெரிவித்தால் அந்தபணம் உரியவரிடம் உடனடியாக வழங்கப்படும். இல்லை என்றால் தேர்தல் முடிவடைந்த பின்னரே ஒப்படைக்கப்படும்.
வாக்காளர்களுக்கு பணம் கொடுத்து ஓட்டுப் போட செய்வதை தடுக்க வேண்டும் என்ற நோக்கத்தில்தான் இந்த விதிமுறை பின்பற்றப்படுகிறது. எனவே பொதுமக்கள் யாரும் ரூ.1 லட்சத்துக்கு மேல் பணத்தை எடுத்து செல்ல வேண்டாம். மருத்துவ செலவுக்காக பணத்தை எடுத்துச் சென்றால் அதற்குரிய ஆவணங்களை எடுத்துச் செல்ல வேண்டும்.
வேட்பாளர்களின் செலவு கணக்குகளை கண்காணிக்கவும் எளிதில் அறிந்து கொள்ளவும் அவர்களும் வங்கியில் கணக்கு தொடங்க வேண்டும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. மேலும் வங்கியில் இருந்து வேட்பாளர்கள் ரூ.1 லட்சத்துக்கு மேல் எடுத்தால் அதற்கான விவரத்தை தேர்தல் நடத்தும் அதிகாரிகளிடம் தெரிவிக்க வேண்டும்.
தேர்தல் விளம்பரங்கள் தொடர்பாக அதிரடி மாற்றத்தை தேர்தல் ஆணையம் கொண்டுவந்துள்ளது. அதன்படி பொது இடங்களில் பறக்கவிடப்பட்டுள்ள கட்சி கொடிக்கம்பங்களும் மறுக்கப்பட்ட விளம்பரங்களில் அடங்கும் என அறிவித்துள்ளது. அதன்படி கடலூர் மாவட்டத்தில் நெடுஞ்சாலை, சந்திப்புகள் உள்ளிட்ட பொது இடங்களில் அமைக்கப்பட்டுள்ள கட்சி கொடிக்கம்பங்களை அகற்றுவதால் சட்ட-ஒழுங்கு பிரச்சினை ஏற்படும். இதை கருத்தில் கொண்டு கட்சிக் கொடிகளை 48 மணி நேரத்துக்குள் அவரவர்களே அகற்ற வேண்டும். கட்சி கொடிகளை அகற்றியபின் கொடிக்கம்பங்களில் வெள்ளை நிற பெயிண்ட் அடித்து விட வேண்டும். குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் கட்சி கொடிகளை அகற்றாவிட்டால் நாளை (வியாழக்கிழமை) தேர்தல் நடத்தை விதி மீறல் கண்காணிப்பு குழுக்கள் மூலம் அவைகள் அகற்றப்பட்டு அதற்கான செலவை வேட்பாளர்களின் கணக்கில் சேர்த்துக் கொள்ளப்படும்.
ஆனால் தனியார் இடத்தில் அனுமதி பெற்று கட்சி கொடிகளை பறக்க விடலாம். அதேபோல கிராமங்களில் தனியார் சுவர்களில் அனுமதி பெற்று விளம்பரங்கள் செய்யலாம்.
தேர்தல் பார்வையாளர்களும் செல்போனில் தொடர்புகொள்ள தொடங்கி விட்டார்கள். கடலூர், சிதம்பரம், குறிஞ்சிப்பாடி, காட்டுமன்னார்கோவில், புவனகிரி ஆகிய 5 தொகுதிகளுக்கு வேட்பாளர்களின் செலவு கணக்குகளை கண்காணிக்க பார்வையாளர் நியமிக்கப்பட்டுள்ளர். காட்டுமன்னார்கோவிலுக்கு ஒரு தேர்தல் பார்வையாளரும், சிதம்பரம், புவனகிரிக்கு ஒரு தேர்தல் பார்வையாளரும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
கடலூர் மாவட்டத்தில் பதட்டமான 199 வாக்குச்சாவடிகளையும் வெப் கேமரா மூலம் கம்ப்யூட்டரில் பதிவு செய்ய உள்ளோம். வாக்காளர் யாருக்கு வாக்களிக்கிறார் என்ற விவரம் தெரியாத வகையில் வாக்குச்சாவடிக்குள் கேமரா பொருத்தி வாக்குப்பதிவை கம்ப்யூட்டரில் பதிவு செய்யப்படும். இந்த வாக்குப்பதிவு விவரத்தை பொதுமக்கள் இன்டர்நெட்டில் பார்க்க முடியாது. தேர்தல் அதிகாரிகள் மட்டுமே பார்க்க முடியும்.
கடந்த முறை வாக்குபதிவின்போது கம்ப்யூட்டர்களை இயக்க தனி அதிகாரிகள் நியமிக்கப்பட்டனர். ஆனால் இம்முறை கல்லூரி மாணவர்களை கொண்டு அவை இயக்கப்பட உள்ளன.
மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களை போல, தேர்தலுக்கு பயன்படுத்தப்பட உள்ள லேப்டாப் கம்ப்யூட்டர்களையும் தேர்தல் பார்வையாளர்கள் பார்த்து அவர்களின் அனுமதி பெற்ற பின்னரே வாக்குப்பதிவுக்கு பயன்படுத்தப்படும். வாக்குபதிவின்போது எந்தவித இடையூறும் ஏற்படாத வகையில் கம்ப்யூட்டரை முன்கூட்டியே பரிசோதனை செய்து தயார் நிலையில் வைக்கப்படும்.
பொதுமக்கள் வாக்களிக்கும்போது லேப்டாப் கம்ப்யூட்டர் முன்பு நின்று தங்கள் பெயரை ஒரு முறை சொல்லிவிட்டு செல்ல வேண்டும். வாக்குப்பதிவின்போது ஏற்படும் பிரச்சினைகளை அறிந்து கொள்ள இந்த நவீனமுறை கையாளப்படுகிறது.
வழக்கமாக பூத் சிலிப்புகளை சம்பந்தப்பட்ட அரசியல் கட்சிகளே வீடு தேடி வந்து கொடுப்பார்கள். ஆனால் தற்போது முதல் முறையாக பூத் சிலிப்புகள் அந்தந்த வாக்குச்சாவடி அதிகாரிகள் மூலம் வீடுகள் தோறும் நேரடியாக விநியோகம் செய்யப்படும்.
இவ்வாறு அவர் கூறினார். முன்னதாக சட்டமன்ற தேர்தலுக்கு பயன்படுத்தப்பட உள்ள லேப்டாப் கம்ப்யூட்டர்கள் கூட்ட அரங்கில் பார்வைக்காக வைக்கப்பட்டிருந்தன. அவற்றை கலெக்டர் சீத்தாராமன் மற்றும் அதிகாரிகள் பார்வையிட்டனர்.
Source: Daily Thanthi
Source: Daily Thanthi
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக