மீனவர்கள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
மீனவர்கள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், 15 ஏப்ரல், 2009

மீனவர்களுக்கு கடலூர் மாவட்ட கலெக்டர் வேண்டுகோள்!

மீன்களின் இனவிருத்தியை மேம்படுத்த விசைப்படகு, இழுவலைகளை கொண்டு மீன்பிடிக்க வேண்டாம் - மீனவர்களுக்கு கடலூர் கலெக்டர் ராஜேந்திர ரத்னூ வேண்டுகோள்!

மீன்களின் இனப்பெருக்கத்தை அதிகரிக்க விசைப்படகு மற்றும் இழு வலைகளை கொண்டு மீனவர்கள் மீன்பிடிக்க வேண்டாம் என்று கடலூர் மாவட்ட கலெக்டர் ராஜேந்திர ரத்னூ வேண்டுகோள் விடுத்துள்ளார்.

மீன்பிடிக்க தடை

ஒவ்வொரு ஆண்டும் மீன்களின் இனப்பெருக்க காலமான ஏப்ரல் 15-ந் தேதி முதல் மே 29-ந் தேதி வரை 45 நாட்கள் கடலில் மீன் பிடிக்க மீனவர்களுக்கு அரசு தடை விதித்து வருகிறது. அதன்படி இந்த ஆண்டு இன்று (புதன் கிழமை) முதல் மே 29-ந் தேதிவரை மீன் பிடிக்க தடை விதிக்கப்படுகிறது.

இது குறித்து கடலூர் மாவட்ட கலெக்டர் ராஜேந்திர ரத்னூ வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

மீன்வளத்தை பாதுகாக்க

கடலில் மீன் வளத்தை பாதுகாக்கும் நோக்கத்துடன் தமிழக கிழக்கு கடற்கரை நெடுகிலும் உள்ள பகுதி முழுவதிலும் (திருவள்ளூர் மாவட்ட எல்லையில் இருந்து கன்னியாகுமரி மாவட்டம் வரை) ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 15-ந் தேதி முதல் மே 29 முடிய 45 நாட்களுக்கு விசைப்படகுகள் மற்றும் இழுவை படகுகள் மூலம் மீன்பிடிப்பதை தடை செய்து அரசாணை வெளியிட்டுள்ளது.

கடந்த 5 ஆண்டுகளாக நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள இந்த தடை ஆணையின் படி இந்த ஆண்டும் விசைப்படகுகள் மற்றும் இழு வலைப்படகுகள் மூலம் தடை செய்யப்பட்ட 45 நாட்களுக்கும் கடலில் சென்று மீன் பிடிக்க வேண்டாம் என மீனவர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

45 நாட்களுக்கு...

கடலில் மீன்கள் இனவிருத்திக்கு ஏற்ற காலமான மேற்கண்ட 45 நாட்கள், மீனவர்கள் கடலில் மீன் பிடிப்பதை நிறுத்தி வைப்பதன் மூலம் இடையூறு இல்லாத இனவிருத்தி மேம்பட்டு, மீன்வளம் பெருக வாய்ப்புள்ளதால் மீனவர்கள் நலன் கருதி அரசு வகுத்துள்ள இத்தடை ஆணையின்படி இந்த 45 நாட்கள் முடியும்வரை கடலூர் மாவட்ட மீனவர்கள் விசைப்படகுகள் மற்றும் இழுவலைப் படகுகளைக் கொண்டு மீன்பிடிக்க வேண்டாம் என கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

இவ்வாறு அந்த செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

செவ்வாய், 7 ஏப்ரல், 2009

கடலூர் மாவட்டத்தில் 45 நாட்கள் ஆழ்கடலில் மீன்பிடிக்க தடை

கடலூர் மாவட்டத்தில் வருகிற 15-ந்தேதி முதல் 45 நாட்களுக்கு ஆழ்கடலில் மீன்பிடிக்க தடைவிதிக்கப்பட்டு உள்ளது.

இது பற்றிய விவரம் வருமாறு:-

மீன்வளம்

ஆழ்கடலில் மீன்கள் அதிக அளவில் பிடிக்கப்படுவதால், மீன்வளம் குறைந்து கொண்டே வருகிறது. எனவே ஆழ்கடலில் மீன்களின் இனப்பெருக்க காலத்தில் மீன் பிடிக்கப்படுவதை உலக நாடுகள் தடை செய்து உள்ளன.

அதன்படி தமிழக கடலில் மீன்களின் இனப்பெருக்கக் காலமான ஏப்ரல் 15ந்தேதி முதல் மே மாதம் 29-ந்தேதி முடிய உள்ள 45 நாட்கள் மீன்பிடிக்க தடை விதிக்கப்பட்டு உள்ளது.

45 நாட்கள் தடை

இந்த தடை உத்தரவு வருகிற 15-ந்தேதி முதல் அமலுக்கு வருகிறது. எனவே இந்த தடை உத்தரவு அமலில் இருக்கும் காலத்தில் மீனவர்கள் மீன்பிடிக்க ஆழ்கடலுக்கு செல்லக்கூடாது என்று அறிவுறுத்தப்பட்டு உள்ளனர்.

எனவே இந்த தடை உத்தரவு காரணமாக கடலூர் மாவட்டத்தில் உள்ள 5 ஆயிரம் கட்டுமரங்களும், 1,100 விசைப்படகுகளும், ஆழ்கடலில் மீன்பிடிப்பதற்குரிய 600 எஸ்.டி.பி. படகுகளும் வருகிற 15-ந்தேதி முதல் மீன்பிடி தொழிலுக்கு செல்லாமல் கடற்கரையோரத்தில் நிறுத்தப்பட்டு இருக்கும்.

உதவித்தொகை

இந்த தடை உத்தரவு அமலில் இருக்கும் காலங்களில் மீனவர்கள் மீன்பிடி தொழில் செய்ய முடியாது என்பதால் கடந்த ஆண்டில் அவர்களுக்கு தமிழக அரசு உதவித்தொகை வழங்கியது.

ஆனால் இந்த ஆண்டில் தேர்தல் விதிமுறை அமலில் இருப்பதால் மீனவர்களுக்கு உதவித்தொகை வழங்குவது பற்றிய அறிவிப்பை தமிழக அரசால் வெளியிட முடியவில்லை. எனவே தேர்தலுக்கு பிறகே உதவித்தொகை வழங்குவது பற்றி தமிழக அரசு அறிவிப்பு வெளியிடும் என்று தெரிகிறது.