தேர்தல் 2009 லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
தேர்தல் 2009 லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், 18 மே, 2009

சிதம்பரம் லோக்சபா தொகுதியில் 8,66, 983 ஓட்டுகள் எண்ணப்பட்டன

சிதம்பரம் லோக்சபா தொகுதியில் 8 லட்சத்து 66 ஆயிரத்து 983 ஓட்டுகள் எண்ணப்பட்டன.

சிதம்பரம் லோக்சபா தொகுதியில் மொத்த வாக்காளர்கள் 11 லட்சத்து 25 ஆயிரத்து 649.

தேர்தலில் பதிவான ஓட்டுகள் 8 லட்சத்து 66 ஆயிரத்து 983.

இதில் ஆண் வாக்காளர்கள் 4 லட்சத்து 30 ஆயிரத்து 368ம், பெண் வாக்காளர்கள் 4 லட்சத்து 36 ஆயிரத்து 615 ஓட்டுகளும் பதிவானது.

மொத்த சதவீதம் 76.09.

வாக்காளர் அடையாள அட்டையுடன் ஓட்டு போட்டவர்கள் 8 லட்சத்து 10 ஆயிரத்து 986 பேரும், பிற ஆவணங்களை காண்பித்து ஓட்டு போட்டவர்கள் 56 ஆயிரத்து 90 பேரும் அடங்குவர்.

சிதம்பரம் லோக்சபா தொகுதிக்குட்பட்ட சட்டசபை தொகுதிகளான குன்னத்தில் ஒரு லட்சத்து 50 ஆயிரத்து 696 ஓட்டுகளில் 77 சதவீதம் பதிவானது.

அரியலூரில் 1 லட்சத்து 60 ஆயிரத்து 433 ஓட்டுகளில் 79 சதவீதம் பதிவானது.

ஜெயங்கொண்டத்தில் ஒரு லட்சத்து 55 ஆயிரத்து 67 ஓட்டுகளில் 78 சதவீதம் பதிவானது.

புவனகிரியில் ஒரு லட்சத்து 49 ஆயிரத்து 15 ஓட்டுகளில் 78 சதவீதம் பதிவானது.

சிதம்பரத்தில் ஒரு லட்சத்து 23 ஆயிரத்து 96 ஓட்டுகளில்73 சதவீதம் பதிவானது.

காட்டுமன்னார் கோவிலில் ஒரு லட்சத்து 28 ஆயிரத்து 676 ஓட்டுகளில் 76 சதவீதம் பதிவானது.

இந்த ஓட்டுகள் அனைத்தும் எண்ணப்பட்டு முடிவு அறிவிக்கப்பட்டது.

சிதம்பரம் தொகுதியில் 11 வேட்பாளர்கள் டிபாசிட் இழந்தனர்

சிதம்பரம் லோக்சபா தொகுதியில் தி.மு.க., கூட்டணி கட்சியான விடுதலை சிறுத்தைகள் வேட்பாளர் திருமாவளவன் 99 ஆயிரத்து 83 ஓட்டுக்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

சிதம்பரம் லோக்சபா தொகுதியில் தி.மு.க., கூட்டணியான விடுதலை சிறுத்தைகள் சார்பில் அக்கட்சியின் தலைவர் திருமாவளவன், அ.தி.மு.க., கூட்டணி சார்பில் பா.ம.க., பொன்னுசாமியும், தே.மு.தி.க., சார்பில் சபா சசிக்குமாரும் போட்டியிட்டனர்.

இதில் வி.சி., திருமாவளவனுக்கும், பா.ம.க., பொன்னுசாமிக்கும் கடும் போட்டி நிலவியது.

சிதம்பரம் தொகுதியில் உள்ள மொத்த வாக்காளர்கள் 11 லட்சத்து 25 ஆயிரத்து 649 பேரில் 8 லட்சத்து 71 ஆயிரத்து 76 பேர் ஓட்டளித்தனர்.

அரியலூர் மாவட்டம் தத்தனூர் கல்லூரியில் சிதம்பரம் லோக்சபா தொகுதி ஓட்டு எண்ணிக்கை நடந்தது.

துவக்கம் முதல் திருமாவளவன் முன்னிலை வகித்தார்.

இதில் விடுதலை சிறுத்தைகள் வேட்பாளர் திருமாவளவன் 4 லட்சத்து 28

ஆயிரத்து 804 ஓட்டுகள் பெற்று வெற்றி பெற்றார்.

பா.ம.க., வேட்பாளர் பொன்னுசாமி 3 லட்சத்து 29 ஆயிரத்து 721 ஓட்டுக்கள் பெற்று தோல்வியடைந்தார்.

திருமாவளவன் தம்மை எதிர்த்து போட்டியிட்ட பொன்னுசாமியைவிட 99 ஆயிரத்து 83 ஓட்டுகள் கூடுதலாக பெற்றார்.

தே.மு.தி.க., சார்பில் சபா சசிக்குமார் 66 ஆயிரத்து 283 ஓட்டுக்கள் பெற்றார்.

பகுஜன் சமாஜ் சார்பில் போட்டியிட்ட ராஜேந்திரன் 5,718 ஓட்டுக்களும், ராஷ்டிரிய கிரந்திகாரி சமாஜ்வாடி கட்சி வேட்பாளர் செல்வகுமார் 3,140 ஓட்டுக்களும், மணிகண்டன் (சுயே) 9799, மருதமுத்து (சுயே) 8367, கவியரசன் (சுயே) 6173, சுசீலா (சுயே) 4178, தர்மலிங்கம் (சுயே) 2678, சக்திவேல் (சுயே) 1,950, செந்தமிழ் செல்வி (சுயே) 1500, கனகசபை (சுயே) 1398 ஓட்டுக்கள் பெற்றுள்ளனர்.

தபால் ஓட்டில் திருமாவளவனுக்கு 825 ஓட்டுக்களும், பொன்னுசாமிக்கு 258 ஓட்டுக்களும், சபா சசிக்குமாருக்கு 10 ஓட்டுகளும், தர்மலிங்கத்துக்கு 2 ஓட்டுகளும் கிடைத்தன.

தபால் ஓட்டில் 1376 ஓட்டுகள் செல்லாதவையாக அறிவிக்கப்பட்டன.

இத்தொகுதியில் பா.ம.க.,வைத் தவிர தே.மு.தி.க., உள்ளிட்ட 11 வேட்பாளர்களும் டிபாசிட் இழந்தனர்.

வியாழன், 14 மே, 2009

கும்மத்பள்ளி ஓட்டுச்சாவடியில் வாலிபர் குடிபோதையில் ரகளை!

பரங்கிப்பேட்டை அடுத்த கும்மத்பள்ளி ஓட்டுச்சாவடியில் வாக்காளர் ஒருவர் குடிபோதையில் ரகளையில் ஈடுப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

சிதம்பரம் லோக்சபா தொகுதி பரங்கிப்பேட்டை ஒன்றியத்தில் உள்ள ஓட்டுச்சாவடிகளில் பொதுமக்கள் நேற்று காலை முதல் ஆர்வமுடன் வரத் துவங்கினர்.

நேற்று காலை 6.30 மணிக்கு மஞ்சக்குழி, பு.முட்லூர், சின்னகுமட்டி, பெரியகுமட்டி, தச்சக்காடு, சேந்திரக்கிள்ளை, அருண்மொழிதேவன் உள்ளிட்ட பகுதிகளில் ஏராளமான பொதுமக்கள் ஓட்டுப் போட ஓட்டுச்சாவடி முன் காத்திருந்தனர்.

காலை 7 மணிக்கு ஓட்டு பதிவு துவங்கியதும் வரிசையில் நின்று ஆர்வமுடன் ஓட்டளித்தனர்.

பரங்கிப்பேட்டை ஒன்றியத்தில் தி.மு.க., மற்றும் பா.ம.க.,வினர் அதிக அளவில் பணப் பட்டுவாடா செய்து இருந்தனர்.

இதனால் பணப்பட்டுவாடா செய்யப்பட்ட பகுதியில் இருந்து மக்களை அந்தந்த கட்சியை சேர்ந்த தொண்டர்கள் காலையிலயே ஓட்டுப்போட ஏற்பாடு செய்தனர்.

காலையில் ஓட்டுபோட ஆர்வம் காட்டிய பொதுமக்கள் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்ததால் பகல் 12 மணிக்கு மேல் பரங்கிப்பேட்டை நகர பகுதி ஓட்டுச்சாவடிகளில் மந்தமாக காணப்பட்டது.

மரத்தடியில் அந்தந்த பகுதி கட்சியினர் காத்திருந்தனர்.

கும்மத்பள்ளி ஓட்டுச்சாவடியில் ஜாக்கிர் உசேன் (32) என்பவர் குடிபோதையில் ரகளை செய்ததால் திடீர் பரபரப்பு ஏற்பட்டது.

இது பற்றி தகவலறிந்த பரங்கிப்பேட்டை இன்ஸ்பெக்டர் ராமபாண்டியன் மற்றும் போலீசார் விரைந்து வந்து குடிபோதையில் ரகளை செய்த ஜாக்கிர் உசேனை போலீஸ் ஸ்டேஷனுக்கு பாதுகாப்பாக அழைத்துச் சென்றனர்.

ஓட்டுச்சாவடிகளில் தயார் நிலையில் இருந்த மின் ஊழியர்கள்

சென்னை மின்தடை சம்பவம் எதிரொலியாக கடலூர், சிதம்பரம் தொகுதி ஓட்டுச்சாவடிகளில் மின்தடையை உடனடியாக சீரமைக்க மின்சார ஊழியர்கள் தயார் நிலையில் இருந்தனர்.

சென்னையில் நேற்று முன்தினம் இரவு திடீர் மின்தடை ஏற்பட்ட சம்பவம் அரசியல் கட்சிக்களுக்கிடையே பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இதனால் நேற்று சிதம்பரம் மற்றும் கடலூர் லோக்சபா தொகுதி தேர்தலின்போது அனைத்து ஓட்டுச்சாவடிகளிலும் முன்னேற்பாடுகள் செய்யப்பட்டது.

தொடர்ந்து தடையில்லா மின்சாரம் வழங்கவும், தடை ஏற்பட்டால் உடனடியாக சரி செய்யவும், சமூக விரோதிகள் மின்சாரத்தை தடை செய்தால் அசம்பாவிதங்கள் நடக்காமல் கண்காணிக்கவும் மின்சார ஊழியர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

கடலூர் மாவட்ட மின்சார வாரியத்தின் சார்பில் திடீர் மின்தடை ஏற்பட்டால் உடன் சரி செய்ய 24 மணி நேரமும் உஷார் நிலையில் மின்சார ஊழியர்களை தயார் நிலையில் வைத்துள்ளது.

கடலூர் பாரதி ரோட்டில் டவுன் ஹால் அருகில் அமைக்கப்பட்டுள் தகவல் மையத்தில் ஒரு போர்மேன் தலைமையில் 10க்கு மேற்பட்ட லைன்மேன்கள் தயார் நிலையில் இருந்து வருகின்றனர்.

பரங்கிப்பேட்டை ஒன்றிம் பு.முட்லூர் துணை மின் நிலையத்திற்குட்பட்ட தச்சக்காடு, சேந்திரக்கிள்ளை, பால்வாதுண்ணான், வேளங்கிப்பட்டு, புதுச்சத்திரம் உட்பட 16 ஓட்டுச்சாவடிகளிலும், பரங்கிப்பேட்டை உதவி மின்பொறியாளர் அலுவலகத்திற்குட்பட்ட பரங்கிப்பேட்டை, அகரம், சாமியார்பேட்டை, புதுக்குப்பம் உட்பட 18 ஓட்டுச் சாவடிகளிலும் 32 ஊழியர்கள் தயாராக இருந்தனர்.

இந்த மின்சார ஊழியர்கள் பணியில் இருப்பதை உயர் அதிகாரிகள் அடிக்கடி கண்காணித்தனர்.

சிதம்பரம் தொகுதியில் 74 சதவீத வாக்குப்பதிவு!

சிதம்பரம் மக்களவைத் தொகுதியில் புதன்கிழமை நடைபெற்ற தேர்தலில் அமைதியான வாக்குப் பதிவு நடைபெற்றது.

தேர்தலில் மொத்தம் 74.1 சத வாக்குகள் பதிவாகின.

இந்தத் தொகுதியில், சட்டப்பேரவைத் தொகுதி வாரியாக பதிவான வாக்குகள் விவரம் (சதவீதத்தில்):

  • குன்னம்- 82

  • அரியலூர்- 65

  • ஜெயங்கொண்டம்- 76

  • புவனகிரி- 77

  • சிதம்பரம்- 71

  • காட்டுமன்னார்கோவில்- 74.

அரியலூர் மாவட்டத்தில் செந்துறையில் 3 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களும், திருமானூரில் 2 வாக்குப்பதிவு இயந்திரங்களும் பழுதாகி, உடனடியாகச் சரிசெய்யப்பட்டன.

பல்வேறு பகுதிகளில் வாக்காளர்கள் நீக்கப்பட்டது குறித்து புகார் தெரிவிக்கப்பட்டதால் சிறிது நேரம் வாக்குப் பதிவு பாதிக்கப்பட்டது.

சிதம்பரம் மக்களவைத் தொகுதியில் ஆயிரக்கணக்கானோர் வாக்காளர் அடையாள அட்டை வைத்திருந்தும் வாக்காளர் பட்டியலில் பெயர் நீக்கப்பட்டிருந்ததால் வாக்களிக்க முடியாமல் வீடு திரும்பினர்.

வாக்காளர் கணக்கெடுப்பின் போது வீட்டில் இல்லாததால் பெயர் நீக்கப்பட்டதால் ஏற்பட்ட குளறுபடியால் இந்த பாதிப்பு ஏற்பட்டுள்ளது என பொதுமக்கள் தெரிவித்தனர்.

வாக்குப்பதிவு நிறுத்தம்:

சிதம்பரம் மாலைக்கட்டித்தெரு நகராட்சி தொடக்கப் பள்ளியில் உள்ள 101- எண் வாக்குச் சாவடியில் 98 வாக்காளர்கள் நீக்கம் செய்யப்பட்டிருந்தனர்.

அவர்களும் வாக்களிக்க வேண்டும் அதுவரை வாக்குப்பதிவை நிறுத்துமாறு அலுவர்களுடன் பூத் ஏஜெண்ட்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் காலை 7.10 மணி முதல் 7.40 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறவில்லை. மேலும் வாக்குச் சாவடியிலிருந்து அனைத்து பூத் ஏஜெண்டுகளும் வெளியேறினர்.

தகவல் அறிந்த அதிகாரிகள் அந்த வாக்குச் சாவடிக்கு சென்று பூத் ஏஜெண்டுகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி சமரசம் செய்த பின்னர் வாக்குப்பதிவு மீண்டும் தொடங்கப்பட்டது.

இதுபோன்று புதுச்சத்திரம் வில்லியநல்லூர், சி.தண்டேஸ்வரநல்லூர் வாக்குச் சாவடிகளில் அடையாள அட்டையுடன் வந்த வாக்காளர்கள் பெயர் பட்டியலில் நீக்கம் செய்யப்பட்டு இருந்ததால் வாக்களிக்காமல் திரும்பினர்.

மேற்கண்ட வாக்குச் சாவடிகளில் தேர்தல் மேற்பார்வையாளர் உமேஷ்குமார்கோயல் நேரில் சென்று விசாரணை நடத்தினார்.

புதன், 13 மே, 2009

பரங்கிப்பேட்டையில் விறுவிறு வாக்குபதிவு!

இன்று காலை 7 மணிக்கு துவங்கிய வாக்குபதிவு சுறுசுறுப்புடன் நடைபெற்று வருகிறது.

வெயில் காரணமாக 7 மணிக்கே மக்கள் தமது ஜனநாயக கடமையாற்ற சீக்கிரமாக வாக்குச் சாவடிகளுக்கு வந்துவிட்டனர்.

பலத்த போலீஸ் பாதுகாப்புடன் விறுவிறுப்புடன் வாக்குப் பதிவு தற்போது நடைபெற்று வருகிறது.

பெண்கள் ஆர்வத்துடன் வந்து தமது வாக்குப்பதிவை செலுத்தி வருகின்றனர்.

விறுவிறுப்பாக நடைபெற்று வரும் சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினருக்கான வாக்குபதிவில் ஆண்களை விட பெண்கள் வெயிலையும் பொருட்படுத்தாமல் வரிசையில் நின்று வாக்குகளை பதிவு செய்கின்றனர்.

Source: பரங்கிப்பேட்டை தகவல் களஞ்சியம்

செவ்வாய், 12 மே, 2009

உங்கள் தொகுதி வேட்பாளர் எப்படி?

Source: சமரசம்

பரங்கிப்பேட்டை பகுதிகளில் மாஜி எம்.எல்.ஏ., ஓட்டு சேகரிப்பு!

பரங்கிப்பேட்டை அருகே பா.ம.க., வேட்பாளர் பொன்னுசாமியை ஆதரித்து முன்னாள் எம்.எல்.ஏ., அருள் ஓட்டு சேகரித்தார்.

சிதம்பரம் லோக்சபா தொகுதி அ.தி.மு.க., கூட்டணி கட்சி வேட்பாளர் பொன்னுசாமியை ஆதரித்து பூதகேணி, வண்டிகேட் பகுதிகளில் முன்னாள் அ.தி.மு.க., எம். எல்.ஏ., அருள் ஓட்டு சேகரித்தார்.


அ.தி.மு.க., பொதுக்குழு உறுப்பினர் சிங்காரவேலு, ராசாங்கம், ஒன்றிய எம்.ஜி.ஆர்., மன்ற செயலாளர் வீரபாண்டியன், ராஜேந்திரன், கோவிந்தராஜன், மாரியப்பன், ராமானுஜம், ராமச்சந்திரன் உடன் இருந்தனர்.


அ.தி.மு.க., கலைக்குழுவினர் பிரசாரம்


பரங்கிப்பேட்டை ஒன்றியத்தில் பா.ம.க., வேட்பாளரை ஆதரித்து அ.தி.மு.க., கலை குழுவினர் ஓட்டு சேகரித்தனர்.


சிதம்பரம் தொகுதியில் அ.தி.மு.க., கூட்டணி சார்பில் போட்டியிடும் பா.ம.க., வேட்பாளர் பொன்னுசாமியை ஆதரித்து பரங்கிப்பேட்டை ஒன்றியத்தில் தேர்தல் பிரசாரம் நடந்தது.


அ.தி. மு.க., ஒன்றிய மகளிரணி செயலாளர் வளர்மதி சண்முகசுந்தரம் தலைமையில் ஓட்டு சேகரித்தனர்.


பா.ம.க., மாவட்ட அமைப்பு செயலாளர் முடிவண்ணன், ஒன்றிய செயலாளர் வாசுசரவணன், ஒன்றிய அமைப்பு செயலாளர் பரமகுரு, அ.தி. மு.க., நிர்வாகிகள் திருமுருகன், ஆனந்தன், பா. ம.க., ராமரத்தினம், நகர செயலாளர் நிர்மல்குமார், ம.தி.மு.க., நடராஜன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.


பரங்கிப்பேட்டை தெற்கு ஒன்றியம் கொத்தங்குடி, தொத்தங்குடி தோப்பு, அனுவம்பட்டு, காரைப்பாடி உள்ளிட்ட கிராமங்களில் அ.தி.மு.க., சார்பில் கலைக் குழு மூலம் பிரசாரம் செய்தனர்.


சிதம்பரம் நகரில் நேற்று பா.ம.க., வேட்பாளர் பொன்னுசாமி வீதிவீதியாக இறுதி கட்ட பிரசாரத்தில் ஈடுபட்டார்.


வேட்பாளர்களுக்கு வாழ்த்து! தபால் துறை புது ஏற்பாடு!!

வேட்பாளர்களுக்கு வாழ்த்து தெரிவிக்க, தபால் துறையின், 'இ-போஸ்ட்' முறையை அனைவரும் பயன்படுத்திக் கொள்ளலாம்.

அனைத்து தபால் நிலையங்களிலும், 'இ-போஸ்ட்' மூலம் தகவல் அனுப்பும் வசதி செயல் பட்டு வருகிறது.

'ஏ-4' பக்க அளவில் இந்தியாவில் உள்ள எந்த பகுதிக்கும், எந்த மொழியிலும் செய்திகள் அனுப்ப கட்டணம் 10 ரூபாய் மட்டுமே.

தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை முன்கூட்டியே வாழ்த்தியும், தேர்தலில் வெற்றி பெறும் வேட்பாளர்களை வாழ்த்தியும், குறைந்த கட்டணத்திலான இச்சேவையை பொதுமக்கள் அதிகளவில் பயன் படுத்திக் கொள்ள வேண்டும்.

இது குறித்து தபால் துறை அலுவலகத்தை மார்க்கெட்டிங் அலுவலர்களையோ, அஞ்சலகத்தையோ அணுகலாம்.

ஊனமுற்றோர், பார்வையற்றோர் ஓட்டளிக்க வசதிகள் தயார்

லோக்சபா தேர்தலில் பார்வையற்றவர்கள் ஓட்டளிக்க வசதியாக, ஓட்டுப்பதிவு இயந்திரத்தில் முதன் முறையாக, 'பிரைல் ஸ்டிக்கர்' ஒட்டப்படுகிறது.

தேர்தலின் போது, வேட்பாளர்கள் பெயர் மற்றும் சின்னம் கொண்ட ஓட்டுச்சீட்டில் வாக்காளர்கள் முத்திரையிடும் முறை கடந்த காலங்களில் நடைமுறையில் இருந்தது.

இந்திய தேர்தல் கமிஷன் பல்வேறு புதிய நடைமுறைகளைப் புகுத்தியது. இதில், ஓட்டுப்பதிவு இயந்திரம் முக்கியமானது.

2004ம் ஆண்டு லோக்சபா தேர்தலிலும், 2006ம் ஆண்டு சட்டசபைத் தேர்தலிலும் ஓட்டுப்பதிவு இயந்திரம் முழுமையாக்கப்பட்டது.

ஓட்டுப்பதிவு இயந்திரத்தில் ஓட்டளிப்பதும், ஓட்டு எண்ணுவதும் சுலபம்.

நாளை நடக்கும் தேர்தலுக்காக ஓட்டுப்பதிவு இயந்திரத்தில் ஓட்டுச்சீட்டுகள் பொருத்தப்பட்டு, சட்டசபை வாரியாக அனுப்பி வைக்கப்பட்டது.

தேர்தலுக்காக ஒவ்வொரு ஓட்டுச்சாவடிக்கும் தேவையான 80 வகையான பொருட்களும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

ஓட்டுச்சாவடியில் உள்ள படிகளில் உடல் ஊனமுற்றவர் எளிதாக ஏறிச் செல்ல வசதியாக, சாய்வு தளம் அமைக்கப்பட்டுள்ளது.

கண் பார்வையற்றவர்கள் ஓட்டளிக்க வசதியாக ஓட்டுப்பதிவு இயந்திரத்தில் சின்னம் மற்றும் பட்டனுக்கு நடுவில், 'பிரைல் ஸ்டிக்கர்' ஒட்டப்படுகிறது.

இந்த நவீன ஸ்டிக்கரில் சின்னங்களின் வரிசை எண்கள் 'பிரைல்' முறையில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

வரிசை எண்களை வைத்து தாங்கள் விரும்பும் வேட்பாளரைத் தேர்வு செய்து, வரிசை எண்ணுக்கு நேராக உள்ள பட்டனை அழுத்தினால் வேட்பாளருக்கு ஓட்டு பதிவாகிவிடும்.

ஓட்டுப்பதிவு இயந்திரத்தில் உள்ள சின்னங்களின் வரிசையை பார்வையற்றவர்கள் அறிந்துகொள்ள, 'பிரைல்' முறையில் தயாரிக்கப்பட்ட புத்தகமும் ஓட்டுச்சாவடியில் இருக்கும்.

அதை ஓட்டுச்சாவடி அலுவலரிடம் வாங்கி, வேட்பாளர் சின்னம் இருக்கும் வரிசையை அறிந்து கொள்ளலாம்.

இந்த நடைமுறை நடப்பு லோக்சபா தேர்தலில் தான் முதன் முறையாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

ஞாயிறு, 10 மே, 2009

முன்னாள் படை வீரர்கள் தேர்தல் பணியாற்ற அழைப்பு!

தேர்தல் பணிக்கு வர விருப்பம் உள்ள முன்னாள் படைவீரர்கள் வரும் 11ம் தேதி கடலூர் அண்ணா விளையாட்டரங்கில் எஸ்.பி., முன்னிலையில் அறிக்கை செய்து கொள்ளலாம்.

இது குறித்து எஸ்.பி., அலுவலக தேர்தல் பிரிவு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

லோக்சபா தேர்தல் பாதுகாப்பு பணிக்கு விருப்பம் தெரிவித்துள்ள முன்னாள் படை வீரர்களுக்கு உணவு மற்றும் உழைப்பூதியம் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

தேர்தல் பாதுகாப்பு பணியாற்ற 4 நாட்களுக்கான உணவுப்படி மற்றும் உழைப்பூதியம் அவர்களின் நிலைக்கு தகுந்தவாறு குறைந்தபட்சம் 1,440 ரூபாய் முதல் 1,640 வரை வழங்கப்படவுள்ளது.

பணிக்கு வரும் முன்னாள் படைவீரர்கள் மற்றும் இதுவரை பணிக்கு வர விருப்பம் தெரிவிக்காமல் இருந்து தற்போது விருப்பம் தெரிவிக்கும் முன்னாள் படை வீரர்களும் வரும் 11ம் தேதி நேரில் ஆஜராகலாம்.

தங்களது முழுச்சீருடை, அடையாள அட்டை மற்றும் 4 நாட்களுக்கு தேவையான உடைமைகளுடன் வரும் 11ம் தேதி காலை 8 மணிக்கு கடலூர் அண்ணா விளையாட்டரங்கில் எஸ்.பி., முன்னிலையில் அறிக்கை செய்து கொள்ள கேட்டுக் கொள்ளப்படுகிறது.

இது குறித்து விவரம் வேண்டுவோர் எஸ்.பி., அலுவலக தேர்தல் பிரிவு போன் 04142-284335 அல்லது முன்னாள் படை வீரர் நல அலுவலகம், கடலூர், போன் 04142-220732 என்ற எண்களுக்கு தொடர்பு கொள்ளவும்.

வியாழன், 7 மே, 2009

அடையாள அட்டை இல்லாதோர் வாக்களிப்பது எப்படி?

தேர்தலில் வாக்காளர் அடையாள அட்டை இல்லாதவர்கள் எப்படி வாக்களிப்பது என்பது குறித்து தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

வாக்களிப்பதற்கு முக்கியமாக தேவை தேர்தல் ஆணையம் வழங்கும் புகைப்பட வாக்காளர் அடையாள அட்டை. ஆனால், இந்த அட்டை இல்லாமல் பல வாக்காளர்கள் இருக்கிறார்கள்.

புகைப்பட வாக்காளர் அடையாள அட்டை இல்லாதவர்களும் வாக்களிக்க சில புகைப்பட அடையாள ஆவணங்களை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதில் ஏதாவது ஒன்றைக் காட்டி வாக்களிக்கலாம்.

அதன்படி வாக்காளர் அடையாள அட்டை இல்லாதவர்கள் 13 வகையான ஆவணங்களில் ஒன்றைக் காட்டி வாக்களிக்கலாம்.

அந்த 13 ஆவணங்கள்...

  1. பாஸ்போர்ட்

  2. ஓட்டுனர் உரிமம்

  3. வருமான வரி பான் அட்டை

  4. மத்திய மாநில அரசுகள் பொதுத்துறை நிறுவனங்கள், உள்ளாட்சி அமைப்புகள், பப்ளிக் லிமிடெட் நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களுக்கு வழங்கிய போட்டாவுடன் கூடிய அடையாள அட்டை.

  5. அரசு வங்கிகள், தபால் அலுவலகங்கள் வழங்கிய பாஸ் புக்குகள் மற்றும் விவசாயிகளுக்கான பாஸ் புக்குகள்

  6. நிலம், வீட்டு விற்பனை பத்திரங்கள், மனை பட்டா

  7. பிற்படுத்தப்பட்டோர், எஸ்.சி., எஸ்.டி. சான்றிதழ்கள்

  8. ஓய்வு ஊதிய ஆவணங்கள்

  9. சுதந்திர போராட்ட வீரர்களின் அடையாள அட்டை

  10. துப்பாக்கி லைசென்ஸ்

  11. உடல் ஊனமுற்றோர்க்கான சான்றிதழ்

  12. தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில் வழங்கப்பட்ட அடையாள அட்டை

  13. மருத்துவ காப்பீடு திட்டத்திற்காக வழங்கப்பட்ட ஸ்மார்ட் கார்டுகள்.

இந்த 13 ஆவணங்களில் ஏதாவது ஒன்று இருந்தால் போதும். அதைக் காட்டி வாக்களிக்கலாம்.

சில நேரங்களில் குடும்பத் தலைவர் உள்பட குடும்பத்தில் வேறு சிலருக்கும் புகைப்பட வாக்காளர் அடையாள அட்டை இல்லாமல் இருக்கும். அப்படிப்பட்டவர்கள், குடும்பத் தலைவர் மேற்கண்ட ஆவணங்களில் ஒன்றைக் காட்டினால் போதும், மொத்த குடும்பமும் அவருடன் சேர்ந்து வாக்களிக்கலாம். தனித் தனியாக அடையாள அட்டை தர தேவையில்லை.

இதை விட முக்கியம் வாக்காளர் பட்டியலில் நமது பெயர் இடம் பெற்றிருப்பது. அது இல்லாமல் இதில் எதைக் காட்டினாலும் வாக்களிக்க முடியாது. எனவே முதலில் வாக்காளர் பட்டியலில் நமது பெயர் இருக்கிறதா என்பதை உறுதி செய்து கொள்ள வேண்டியது மிக மிக அவசியம்.

வாக்களிப்பது நமது ஜனநாயகக் கடமை. எனவே 13ம் தேதி மறக்காமல், புகைப்பட அடையாள அட்டை அல்லது மேற்கண்ட 13 ஆவணங்களில் ஒன்றுடன் முதல் வேலையாக போய் ஓட்டுப் போட்டு விட்டு வந்து விடுங்கள்.

Source: தட்ஸ் தமிழ்

புதன், 6 மே, 2009

பார்வையற்றோர் ஓட்டளிக்க புது ஏற்பாடு!

லோக்சபா தேர்தலில் பார்வையற்றோர் மின்னணு எந்திரத்தில் நேரடியாக ஓட்டுப்பதிவு செய்ய புதிய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

கடந்த தேர்தல்களில் பார்வையற்றோர் ஓட்டுச்சாவடி தலைமை அலுவலர் உதவியுடன் ஓட்டுப்பதிவு செய்தனர்.

வரும் லோக்சபா தேர்தலில் ஓட்டுப்பதிவு மின்னணு எந்திரத்தில் தடவிப்பார்த்து அறிந்து கொள்ளும் வகையில் பிரைலி முறையில் வேட்பாளர்களின் பெயரின் ஆங்கில எழுத்துக்கள் கொண்ட ஸ்டிகர் ஓட்டப்பட உள்ளது.

இதன் மூலம் பார்வையற்றோர் ஓட்டுச்சாவடி அலுவலரின் உதவியின்றி தாம் விரும்பிய வேட்பாளரின் பெயருக்கு அருகில் உள்ள பட்டனை அழுத்தி ஓட்டுப்பதிவு செய்யலாம்.