வியாழன், 7 மே, 2009

ஓட்டு போட விழிப்புணர்வு தேர்தல் கமிஷன் போஸ்டர்!

ஓட்டு போட தூண்டும் வகையில் மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்த தேர்தல் கமிஷன் போஸ்டர் அச்சடித்துள்ளது.

தேர்தலில் மக்கள் ஓட்டு போடுவது குறைந்து வருகிறது. வாக்காளர்கள் அனைவரையும் ஓட்டு போட தூண்டும் வகையில், மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்த தேர்தல் கமிஷன் முடிவு செய்துள்ளது.

'வாக்காளர்களே' என்ற தலைப்பில் பெண் ஒருவர் ஓட்டு போட்டு விட்டு மகிழ்ச்சியுடன் விரலில் மை வைக்கப்பட்டுள்ளதை காட்டுவது போன்ற படத்துடன் கூடிய பெரிய போஸ்டரை தேர்தல் கமிஷன் தயாரித்துள்ளது.

இவை அனைத்து மாவட்ட கலெக்டர் அலுவலகங்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

பொது இடங்களில் ஒட்டப்படவுள்ள போஸ்டரில் கூறியுள்ளதாவது:

  • வாக்காளர்களே வாக்களிப்பது ஒரு புனிதமான உரிமை.

  • நம் தாய்நாட்டிற்கு செலுத்த வேண்டிய ஒரு கடமை.

  • உங்கள் வாக்கு ரகசியமாக இருக்கும்.

  • எந்தவித இடையூறும் இன்றி நியாயமாகவும், சுதந்திரமாகவும் தேர்தல் நடப்பதை மத்திய பார்வையாளர்கள் கண்காணிக்கின்றனர்,

  • எனவே தயக்கமின்றி வாக்களியுங்கள்.

  • ஓட்டுச்சாவடியில் நுழைந்த பின் ஓட்டு போட விரும்பாவிட்டால், 1961ம் ஆண்டு தேர்தல் நடத்தும் விதி 49 Oவின் படி படிவம் 17(A)ல் பதிவு செய்ய வேண்டும்.

  • ஓட்டுச்சாவடியில் உள்ள இந்த படிவத்தை கேட்டு பெற்று பதிவு செய்ய வேண்டும்.

இவ்வாறு போஸ்டரில் கூறப்பட்டுள்ளது.

விஜயகாந்த் நாளை பரங்கிப்பேட்டை வருகை! தே.மு.தி.க.வேட்பாளர் சபா. சசிக்குமாரை ஆதரித்து பேசுகிறார்!!

சிதம்பரம் பாராளுமன்ற தொகுதி தே.மு.தி.க. வேட்பாளர் சபா. சசிக்குமாரை ஆதரித்து பேசுவதற்காக நாளை (வெள்ளிக்கிழமை) விஜயகாந்த் பரங்கிப்பேட்டை வருகிறார்.

வருகின்ற பாராளுமன்ற தேர்தலில் தே.மு.தி.க. தனித்து போட்டியிடுகிறது. தே.மு.தி.க. வேட்பாளர்களை ஆதரித்து அதன் தலைவர் விஜயகாந்த் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து சூறாவளி பிரசாரம் செய்து வருகிறார்.

அதன்படி அவர் சிதம்பரம் பாராளுமன்ற தொகுதி வேட்பாளர் சபா. சசிக்குமாரை ஆதரித்து பேசுவதற்காக நாளை (வெள்ளிக்கிழமை) பரங்கிப்பேட்டை வருகிறார்.

மேற்கண்ட தகவலை மாவட்ட செயலாளர் உமாநாத் தெரிவித்தார்.

புதன், 6 மே, 2009

பொதுத்தேர்வு எழுதிய மாணவர்களுக்கு பள்ளியில் வேலை வாய்ப்புப் பதிவு ஏற்பாடு!

பிளஸ் 2, 10ம் வகுப்பு தேர்வு எழுதிய மாணவர்களுக்கு அந்தந்த பள்ளி மூலம் வேலை வாய்ப்பு அலுவலக பதிவு நடவடிக்கைகளை மேற்கொள்ள பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

பள்ளி இறுதி தேர்வு முடிவுகள் வெளியான உடன் கல்வித்தகுதியை வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்ய மாணவர்கள் கூட்டம் அலைமோதும்.

வேலை வாய்ப்பு அலுவலகங்களில் போதிய இடவசதி இல்லாத நிலையில் திருமண மண்டபம், பள்ளிகளில் சிறப்பு பதிவு மையங்கள் அமைக்கப்பட்டு கூட்ட நெரிசல் தவிர்க்கப்பட்டு வந்தது.

நெரிசல், காலதாமதத்தை தவிர்க்க இந்தாண்டு அரசு, அரசு உதவி பெறும் உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் 10ம் வகுப்பு, பிளஸ் 2 பொது தேர்வு முடித்த மாணவர்களுக்கு அந்தந்த பள்ளிகளிலேயே வேலை வாய்ப்பு அலுவலக பதிவு நடவடிக்கையை மேற்கொள்ள பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.

இதன்படி வேலை வாய்ப்பு பதிவிற்கான படிவத்தை மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகங்களில் இருந்து தலைமை ஆசிரியர்கள் பெற்று வர வேண்டும்.

படிவங்களை மாணவர்களுக்கு கொடுத்து, பூர்த்தி செய்த படிவத்துடன் அவர்களது ரேஷன் கார்டு நகல், மார்க் சீட் நகலை இணைத்து வேலை வாய்ப்பு அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும்.

வேலை வாய்ப்பு அலுவலகத்தில் மாணவர்களின் கல்வித்தகுதியை பதிவு செய்து, பதிவு எண் அட்டைகள் வழங்கப்பட்டதும் அவற்றை உரிய மாணவர்களிடம் தலைமை ஆசிரியர்கள் ஒப்படைக்க வேண்டும்.

இதற்காக தனியாக பதிவேடு துவங்கி பராமரிக்க வேண்டும். இந்த பணிகளை செய்ய 10ம் வகுப்புக்கு ஒருவர், 12ம் வகுப்புக்கு ஒருவர் என இரண்டு பொறுப்பு ஆசிரியர்களை நியமித்துக்கொள்ளலாம் என உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.