புதன், 29 ஏப்ரல், 2009

ஆசிரியர் பயிற்சி சேர்க்கை 20க்கு பின் விண்ணப்பம்

ஆசிரியர் பயிற்சி சேர்க்கைக்கான விண்ணப்பங்கள், மே 20ம் தேதிக்குப்பின் வழங்கப்பட உள்ளன.

தமிழகத்தில் அரசு ஆசிரியர் பயிற்சிப் பள்ளிகள் உட்பட 750 ஆசிரியர் பயிற்சிப் பள்ளிகள் இயங்கி வருகின்றன.

இதில், 40 ஆயிரம் இடங்கள் உள்ளன. 50 சதவீத இடங்கள் கவுன்சிலிங் மூலம் தமிழக அரசு நிரப்புகிறது. மீதமுள்ள 50 சதவீத இடங்களை, பள்ளி நிர்வாகங்கள் நிரப்புகின்றன.

வரும் கல்வியாண்டில் மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்களை வழங்குவதற்கு ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.

பிளஸ் 2 தேர்வு முடிவுகள், மே 8 அல்லது 9ம் தேதி வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஒரு வாரத்திற்குப் பின் மாணவர்களுக்கு மதிப்பெண் பட்டியல் வழங்கப்படும்.

எனவே, 20ம் தேதிக்குப் பின் ஆசிரியர் பயிற்சி சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் வழங்கப்படும் எனத் தெரிகிறது.

பிளஸ் 2 தேர்வில் 45 சதவீத மதிப்பெண்கள் எடுப்பவர்கள், ஆசிரியர் பயிற்சிப் படிப்பிற்கு விண்ணப்பிக்கலாம்.

எஸ்.சி., - எஸ்.டி., பிரிவு மாணவர்கள் 250 ரூபாய் செலுத்தியும், இதர பிரிவு மாணவர்கள் 500 ரூபாய் செலுத்தியும் விண்ணப்பிக்க வேண்டும்.

அனைத்து மாவட்டங்களிலும் உள்ள அரசு ஆசிரியர் பயிற்சிப் பள்ளிகளில், விண்ணப்பங்கள் வழங்கப்பட உள்ளன.

இதற்கிடையே, வரும் கல்வியாண்டில் மாணவர் சேர்க்கை நடத்த விரும்பவில்லை என, 15க்கும் மேற்பட்ட தனியார் ஆசிரியர் பயிற்சி நிறுவனங்கள் ஒப்புதல் கடிதம் வழங்கியுள்ளன.

மே 6ம் தேதி இன்ஜினியரிங் விண்ணப்பம்

"பொறியியல் படிப்புக்கான விண்ணப்பங்கள், மே மாதம் 6ம் தேதி முதல் வழங்கப்படும்" என சென்னை அண்ணா பல்கலைக்கழகத் துணைவேந்தர் மன்னர் ஜவஹர் தெரிவித்தார்.

சென்னையில் நிருபர்களிடம் அவர் கூறியதாவது:

  • பொறியியல் படிப்புக்கான கவுன்சிலிங், இந்த ஆண்டு சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் நடக்கவுள்ளது.

  • இதற்கான விண்ணப்பங்கள் மே மாதம் 6ம் தேதி முதல் வழங்கப்படும்.

  • தமிழகம் முழுவதும் 58 மையங்களில் விண்ணப்பங்கள் வழங்கப்படும்.

  • எஸ்.சி., எஸ்.டி., பிரிவினருக்கு 250 ரூபாய், இதர பிரிவினர் 500 ரூபாய் கட்டணம் செலுத்தி விண்ணப்பத்தைப் பெற்றுக்கொள்ளலாம்.

  • விண்ணப்பத்தைப் பெறும் மாணவர்களுக்கு 450 பக்கங்கள் கொண்ட பொறியியல் கல்லூரிகள் பற்றிய விவரக் குறிப்பு வழங்கப்படும்.

  • விண்ணப்பங்களை ஆன்-லைன் மூலம் டவுன்லோடு செய்தும் விண்ணப்பிக்கலாம்.

  • மே மாதம் 31ம் தேதி வரை விண்ணப்பங்கள் வழங்கப்படும்.

  • ஜூன் 20ம் தேதிக்குள் தரவரிசைப் பட்டியல் வெளியிடப்படும்.

  • மருத்துவப் படிப்புக்கான கவுன்சிலிங் முடிந்த பின், பொறியியல் படிப்புக்கான கவுன்சிலிங் நடக்கும்.

இவ்வாறு மன்னர் ஜவஹர் கூறினார்.

மருத்துவப் படிப்புக்கான விண்ணப்பங்கள் மே மாதம் மூன்றாம் வாரத்தில் வழங்கப்படும் என மருத்துவ மாணவர் சேர்க்கை செயலர் ஷீலா தெரிவித்தார்.

செவ்வாய், 28 ஏப்ரல், 2009

தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகத்தில் ஓராண்டு நர்சரி பள்ளி ஆசிரியர் டிப்ளமோ படிப்பு அறிமுகம்

தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகத்தில் ஓராண்டு கால நர்சரி பள்ளி ஆசிரியர் டிப்ளமோ படிப்பு நடப்பு கல்வியாண்டு முதல் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

தமிழகத்தில் உள்ள அனைத்து நர்சரி பள்ளிகளிலும் தற்போது பிளஸ் 2 மற்றும் ஏதேனும் பட்டப்படிப்பு படித்தவர்களே வகுப்பு ஆசிரியர்களாகப் பணியாற்றி வருகின்றனர்.

நர்சரி மாணவர்களுக்கு எவ்வாறு பாடங்கள் போதிப்பது, எவ்வாறு மாணவர்களைக் கையாள்வது, என்னென்ன வகையில் அவர்களை ஒழுங்குபடுத்துவது போன்ற புதிய கல்வி முறையை பயிற்றுவிக்கும் விதமாக இந்த டிப்ளமோ படிப்பு தொடங்கப்பட்டுள்ளது.

இந்தப் படிப்பை படிப்பதன் மூலம் ஆசிரியர்கள் தகுதியுள்ளவர்களாக ஆகின்றனர். தற்போது ஆசிரியர்களாக பணிபுரிபவர்களும், பிளஸ் 2 படித்தவர்களும் இந்தப் பட்டயப் படிப்பில் சேரலாம். இந்தப் படிப்பை முடித்தவர்களுக்கு ப்ரி-பிரைமரி பள்ளிகளில் பணியில் முன்னுரிமை வழங்கப்படும்.

பிளஸ் 2 அல்லது டிப்ளமோ முடித்தவர்கள் இந்தப் படிப்பில் சேர விண்ணப்பிக்கலாம். இந்தப் படிப்புக்கான சேர்க்கை நடைபெற்று வருகிறது.

முதலில் வரும் 50 மாணவர்கள் மட்டுமே சேர்த்துக் கொள்ளப்படுவர்.

இதில் சேர விரும்புவோர் கோரிப்பாளையத்தில் உள்ள தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழக கல்வி மையத்தை அணுகி விண்ணப்பத்தை பெற்றுக் கொள்ளலாம்.

மேலும், விவரங்களுக்கு "0452-6522013' என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

தகவலை பல்கலை. மதுரை கல்வி மைய ஒருங்கிணைப்பாளர் பாலன் தெரிவித்துள்ளார்.