அரசுத்திட்டம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
அரசுத்திட்டம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, 20 டிசம்பர், 2008

வெள்ள நிவாரணத்தொகை: பரங்கிப்பேட்டை பரபரப்பு.

கடந்த வாரம் வெள்ள நிவாரணத் தொகையாக பரங்கிப்பேட்டையின் சில வார்டு (பேரூராட்சித்தொகுதி) களில் ரூ. 75இலட்சம் வரை வழங்கப்பட்டதாம்।
வெள்ள நிவாரணத் தொகை வழங்குவதில் சில வார்டுகளில் சில வீடுகள் விடுபடுவதாகக் கூறி பரங்கிப்பேட்டையில் நடைபெற்ற சாலைமறியலில் சில மன்றஉறுப்பினர்(கவுன்சிலர்)களும் கலந்துகொண்டனர்.

சாலைமறியல் தொடர்பாக கைது நடவடிக்கையில் காவல்துறை ஈடுபட்டது. இதில் கவுன்சிலர் ஒருவருக்கும் காவல்துறை அதிகாரிகளுக்கும் ஏற்பட்ட வாக்குவாதத்தை யடுத்து பரபரப்பு ஏற்பட்டது. சுமார்117பேர் மீது வழக்குப்பதிவும் செய்யப்பட்டது.

சிதம்பரம் வட்டாட்சியர் தன்வந்த கிருஷ்ணன், செல்வி இராமஜெயம் ச।ம।உ, ஆகியோர் சமாதான பேச்சுவார்த்தை நடத்தி வெள்ளத்தால் பாதிப்படைந்த அனைவருக்கும் நிவாரணத்தொகை வழங்குவதாக காவல்நிலையத்தை சூழ்ந்துகொண்ட மக்களுக்கு உறுதி அளித்தனர்.

நமது நிருபர்

ஞாயிறு, 14 டிசம்பர், 2008

வெள்ள நிவாரணத்தொகை: ஒரு அதிருப்தி சம்பவம்.

பரங்கிப்பேட்டை மாதாகோவில் பகுதியில் சமீப வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசு உதவித் தொகை வழங்கும் நிகழ்ச்சி சலங்குக்கார தெரு அரசு பள்ளியில் நடைபெற்றது. வெள்ளத்தால் முழுமையாகப் பாதிக்கப்பட்ட அப்பகுதிவாழ் 363 பேருக்கு ரூ.2000 என்ற அளவிலும், பகுதியளவு பாதிக்கப்பட்ட 45 பேருக்கு ரூ.1000 என்ற அளவிலும் உதவித் தொகை குறிப்பிடப்பட்டிருந்தது.

இதில் அதிருப்தியடைந்த சரவணன் என்ற வாலிபர், அனைவருக்கும் ரூ.2000 வழங்கவேண்டும் என்ற கோரிக்கையுடன் பயனாளிகள் பெயர்பட்டியலை எடுத்துச்சென்று விட்டாராம். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

கிராம நிர்வாக அலுவலர் அசோகன் என்பார் உடனடியாக காவல்துறையில் முறையீடு செய்ய, அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருவதாக ஊரிலிருந்து எமது செய்தி முகவர்கள் தெரிவிக்கின்றனர்.
இச்செய்தி நாளேடுகளில் வந்துள்ளதாம்.

வெள்ளி, 31 அக்டோபர், 2008

சிறுபான்மை இளைஞர்களுக்கு தொழிற்பயிற்சி!

சிறுபான்மை இளைஞர்களுக்கு தொழிற்பயிற்சி!
அக் 31க்குள் விண்ணப்பிக்க வேண்டுகோள்!!

தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம், படித்து வேலையில்லாத சிறுபான்மை சமுதாயத்தைச் சேர்ந்த இளைஞர்களுக்கு மாவட்ட தலைநகரங்கள் மற்றும் சிறுபான்மையினர் அதிகமாக வசிக்கும் இடங்களில் தேர்ந்தெடுக்கப்பட்ட பயிற்சி நிலையங்கள் மூலமாக தொழிற்பயிற்சி வழங்க உள்ளது.

இப்பயிற்சியில் கம்ப்யூட்டர் ஹார்டுவேர் அண்ட் நெட் ஒர்க்கிங், சி.சி. பிளஸ், பிளஸ், டி.டி.பி. டேலி வித் எம்.எஸ். ஆபீஸ் ஆகிய பயிற்சிகள் அளிக்கப்படும்.

10-ம் வகுப்பு தேர்ச்சி அல்லது தோல்வியடைந்த இளைஞர்கள் தங்கள் குடும்ப ஆண்டு வருமானம் ஒரு லட்சத்துக்கு மிகாமல் இருந்தால் இப்பயிற்சியில் சேர தகுதி உடையவர்கள் ஆவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை

எனவே, விருப்பம் உள்ள சிறுபான்மையின இஸ்லாமிய இளைஞர்கள் தங்கள் விண்ணப்பத்தை வெள்ளைத்தாளில் எழுதி அதனுடன் சாதிச் சான்றிதழ் நகல், 10ஆம் வகுப்பு மதிப்பெண் பட்டியல் நகல் அல்லது கூடுதல் கல்வித் தகுதி இருந்தால் அதற்குரிய சான்றிதழ்கள், வருமான சான்றிதழ் நகல், பள்ளி அல்லது கல்லூரி மாற்று சான்றிதழ் நகல் ஆகியவற்றை இணைத்து தபாலில்

மேலாண்மை இயக்குநர்,
தமிழ்நாடு சிறுபான்மையின பொருளாதார மேம்பாட்டுக் கழகம்,
5வது தளம்,
807, அண்ணாசாலை,
சென்னை.

என்ற முகவரிக்கு வருகிற 31ஆம் தேதிக்குள் அனுப்ப வேண்டும்.

தபால் உறையின் மேல் பகுதியில் பயிற்சியின் பெயர், பயிற்சி பெற விரும்பும் ஏதேனும் ஒரு பாடத்தினை மட்டும் குறிப்பிட வேண்டும். இந்த வாய்ப்பை முஸ்லிம் சமுதாய இளைஞர்கள் பயன்படுத்திக் கொள்ளுமாறு கடலூர் மாவட்ட இந்திய யூனியன் முஸ்லிம் லீக் செயலாளர் சுக்கூர் கேட்டுக்கொண்டுள்ளார்.

திங்கள், 27 அக்டோபர், 2008

அனைவருக்கும் கல்வி

நேரடியாக எஸ்.எஸ்.எல்.சி., தேர்வு எழுத வாய்ப்பு!


அனைவருக்கும் கல்வித் திட்டத்தின் கீழ் படிக்கும் மாணவர்களை நேரடியாக எஸ்.எஸ்.எல்.சி., தேர்வு எழுத அனுமதித்து அரசு உத்தரவிட்டுள்ளது.

எஸ்.எஸ்.எல்.சி., படிப்பதற்கு அங்கீகரிக்கப்பட்ட பள்ளியில் படித்து எட்டாம் வகுப்பு தேர்வை எழுதி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். பதினான்கரை வயது முடியும் போது நேரடியாக எஸ்.எஸ்.எல்.சி., தேர்வை எழுதலாம். பள்ளியில் சேராமல் தனித் தேர்வர்களாக வருவோர் அரசு தேர்வுத்துறை நடத்தும் எட்டாம் வகுப்பு பொதுத் தேர்வை எழுத வேண்டும். இதுவே இதுவரை இருந்துவரும் நடைமுறை.

தற்போது தேசிய திறந்தநிலைப் பள்ளி, அனைவருக்கும் கல்வித் திட்டம் ஆகியவற்றில் எட்டாம் வகுப்பு தகுதி பெற்றவர் என்ற அடிப்படையில் மாற்று சான்றிதழ்கள் வழங்கப்படுகின்றன. இப்படிப்பட்டவர்கள் இ.எஸ்.எல்.சி., தேர்வை எழுதாமலேயே எஸ்.எஸ்.எல்.சி., தேர்வை எழுதலாம்.

பள்ளிப் படிப்பைப் பாதியில் நிறுத்திய மாணவர்கள் அனைவருக்கும் கல்வித் திட்டத்தின் கீழ் இயங்கும் உண்டு உறைவிடப் பள்ளியில் சேர்க்கப்படுகின்றநர். இவர்களுக்கென உள்ள மாற்றுப் பள்ளிகளில் சில மாதங்கள் பயிற்சி அளிக்கப்படுகிறது.

பின், அவர்களை ரெகுலர் பள்ளிகளில் அவர்களின் வயதிற்கேற்ப வகுப்புகளில் சேருகின்றனர். இந்த இடைப் பயிற்சி அனைவருக்கும் கல்வித் திட்டத்தில் செயல்படும் காப்புறுதித் திட்டத்தின் மூலம் நடக்கிறது.

அதேபோல் தேசிய திறந்தநிலை பல்கலைக்கழகத்தின் சார்பிலும் வயது, தகுதி அடிப்படையில் மாற்றுச் சான்றிதழ் வழங்கப்படுகின்றன. மேற்கண்ட மாணவர்களும் எஸ்.எஸ்.எல்.சி., தேர்வை எழுதலாம்.

இது தொடர்பாக தமிழக அரசு ஆணை பிறப்பித்துள்ளது. அனைவருக்கும் கல்வி இயக்கக கல்வி காப்புறுதி திட்டத்தின் மூலம் உண்டு உறைவிடப் பள்ளியினால் மாற்று சான்றிதழ் பெறுபவர்கள் மற்றும் திறந்தநிலை பல்கலைக்கழகத்தில் சான்றிதழ் பெறுபவர்களையும் எஸ்.எஸ்.எல்.சி. பொதுத் தேர்வை நேரடித் தனித்தேர்வராக எழுத அனுமதி அளிக்கப்படுகிறது என்று அரசு ஆணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


நன்றி : http://www.kalvimalar.com/NewsDetails.asp?id=1597