திங்கள், 7 ஜூலை, 2008

இதுவும் கடந்து போகும்...! இன்னும் எத்துனை மாதங்களுக்கு?

இராஜஸ்தான் நிதியுதவிடன் கட்டி முடிக்கப்பட்டு கடந்த ஆண்டிலிருந்தே காத்துக் கிடக்கின்றன அரசு மருத்துவமனையும், அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியும். இதோ! இதோ வருகிறோம்!! இதோ வந்துட்டோம் என்று மாதம் மாதம் ஒரு தேதியை அறிவிக்கிறார்கள் சம்மந்தப்பட்ட அமைச்சர் பெருமக்கள்(?). இரண்டு கட்டிடங்களுமே அத்தியாவசிய பணிகளான மருத்துவம் மற்றும் கல்விக்கென தெரிந்திருந்தும் கூட இவர்கள் இத்தனை இழுத்தடிப்பு செய்கிறார்கள் என்று புரியாத புதிராக இருந்தாலும் இந்த ஏமாற்றங்கள் எல்லாம் வாடிக்கையான விசயமாய் ஆகிவிட்டது வெகுஜன மக்களுக்கு.

போதிய படுக்கைகள் மற்றும் மருத்துவ வசதிகள் இன்றி மிகவும் துன்பத்திற்கு ஆளாகி நிற்கும் நடுத்தர மற்றும் ஏழை மக்கள் வேதனைமிக்க ஆர்வத்தோடு பூட்டியிருக்கும் புதிய மருத்துவமனை கட்டிடத்தை தரிசித்து மட்டுமே செல்கிறார்கள்.

தற்போது வண்டிகாரத் தெருவில் இயங்கி வரும் பெண்கள் பள்ளியில் சில வருடங்களாக தமிழைத் தொடர்ந்து ஆங்கிலவழிக் கல்வியும் நடைபெற்று வருகிறது. இதனால் ஆண்டுதோரும் மாணவிகளின் சேர்க்கை கூடி கொண்டு செல்கிறது. மிகுந்த நெருக்கடிக்கு மத்தியில் மாணவிகள் போதிய வகுப்பறைகளின்றி வராண்டாவில் (வெயிலில்) உட்கார வைக்கப்படுகிறார்கள். அதுமட்டுமின்றி மாணவிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால் போதிய கழிவறை வசதியில்லாமல் மிகவும் சிரமத்துக்குள்ளாகி உள்ளனர். சில மாணவிகள் வெட்கத்தை விட்டு பேரூராட்சித் தலைவருக்கு போன் செய்து இந்த சிரமத்தை சொல்லியிருக்கின்றனர். பேரூராட்சித் தலைவரும் பொறுமையிழந்து மீண்டும் மீண்டும் முயற்சிகள் எடுத்தாலும் அரசியல் கலந்த மர்மாகவே நீடிக்கின்றது இந்த திறப்பு விழாக்கள்.
இந்த பிரச்சினையை முன்னிறுத்தி கம்யூனிஸ்ட் போன்ற கட்சிகளும் அடிக்கடி ஆர்ப்பாட்டங்கள் செய்து வருகின்றனர். பரங்கிப்பேட்டை கூகிள் குழுமம் சார்பாக மாவட்ட ஆட்சித் தலைவருக்கு மின்னஞ்சல் மற்றும் ஃபாக்ஸ் செய்தி அனுப்பப்பட்டது. இதை மாவட்ட ஆட்சித் தலைவரும் உறுதிப்படுத்தியுள்ளார். மீண்டும் மீண்டும் இவருக்கு பல்வேறு தரப்பினரும் வேண்டுகோள் விடுத்து வருவதால் பொறுமையிழந்து, பேரூராட்சித் தலைவரை போனில் தொடர்பு கொண்டு, 'நீங்களே இதை திறந்து விடுங்களேன்' என சொன்னதாக தகவல்.
இதுகுறித்து ஜமாஅத்தின் முக்கிய நிர்வாகி ஒருவரை தொடர்பு கொண்டு கேட்டபோது, எத்தனை கோரிக்கைகள் வைத்தாலும் இவர்கள் இப்படித்தான் இழுத்தடிப்பார்கள். பொதுமக்கள் நேரடியாக களத்தில் இறங்கி போரடினால்தான் இது முதலமைச்சர் செல்லிற்கு போகும் என்று தன்னுடைய கருத்தை கூறினார்.

வெள்ளி, 4 ஜூலை, 2008

கடல்வாழ் உயிரின ஆராய்ச்சி நிலையத்திற்கு பரங்கிப்பேட்டையின் பங்கு



அண்ணாமலை பல்கலைகழகத்தின் கடல்வாழ் உயிரின ஆராய்சி நிலையம் (Marine Biologocal Station) பரங்கிப்பேட்டையில் இயங்கி வருகிறது. இந்த ஆராய்சி நிறுவனம் பரங்கிப்பேட்டையின் ஒரு முத்திரை பதித்த அடையாளமாக விளங்கி வருகிறது.


முதுகலை மற்றும் ஆராய்சி படிப்புகளை மேற்கொள்வதற்கு மாணவ-மாணவியர்கள் பல்வேறு மாநிலங்களிலிருந்தும் வந்து கல்வி கற்றாலும், பரங்கிப்பேட்டை மாணவர்கள் (மண்ணின் மைந்தர்கள்) இந்த கல்வி கற்பதோ ஆராய்சி மேற்கொள்வதோ என்பதோ என்பது மிக மிக குறைவு.


கடந்த ஒரு சில வருடங்களாகத்தான் சுமார் 8 பரங்கிப்பேட்டை மாணவர்கள் இதில் முதுகலை படிப்பு மேற்படிப்பு மேற்கொண்டு வருகிறார்கள். மதிப்பு வாய்ந்த இந்த ஆராய்சி கல்வி குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கல்விகுழு சார்பாக இங்கு பயிலும் பரங்கிப்பேட்டை மாணவர் அக்பர் ஜான் என்பவர் ஆராய்சி கட்டுரையை (Thesis Report) மிகவும் திறம்பட தயாரித்து அண்ணாமலைப் பல்கலைகழக துணைவேந்தரிடம் சமர்பித்துள்ளார்.
இதற்காக சிறப்பு நினைவு பரிசும், பாராட்டுச் சான்றிதழும் துணைவேந்தரிடமிருந்து பெற்றுள்ளார்.


இது குறித்து மாணவர் அக்பர் ஜானிடம் கேட்டபோது, கல்விகுழு சார்பாக நான் தயாரித்த இந்த ஆராய்சி கட்டுரை மூலம் இக்கல்வி குறித்து நல்ல விழிப்புணர்வை ஏற்படுத்தவும் இவ்வாராய்சி நிலையத்திற்கு பரங்கிப்பேட்டையின் பங்களிப்பை விளக்கவும் செய்துள்ளேன். இதற்காக கல்விக்குழுவிற்கு நன்றி கூறுகிறேன். எனக் கூறினார்.

கடலூர் கலெக்டர் நடத்திய பாடம்!


சில மேனிலைப்பள்ளிகளில் 100-க்கு 88 மாணவர்கள் ஃபெயில். 50 விழுக்காடு தேர்ச்சி பெற்றவை ஒரு சில பள்ளிகள் தான். இப்படி கல்வியில் தாழ்ந்து தலைகுனிந்து நிற்கும் கடலூர் மாவட்டத்தில் மாணவர்களில் தரத்தை உயர்த்துவது எப்படி? மாவட்டத்திலுள்ள 42 மேனிலைப் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களையும் அழைத்துக்கூட்டம் போட்டார் கலெக்டர் ராஜேந்திர ரத்னூ!

"நமது கவனம் சிதையக்கூடாது. ஆகவே முதலில் நமது செல்ஃபோன்களை ஆஃப் செய்து விடுவோம்". என்ற அறிவிப்போடு பேச்சைத் தொடங்கினார்.
இடையில் ஒரு செல்ஃபோன் இடைவிடாமல் அலற, சத்தம் வந்த திசை நோக்கி நடந்தார் கலெக்டர்.... அலறியது சேத்தியாதோப்பு பெண்கள் மேன்நிலைப்பள்ளியில் தலைமையாசிரியை சந்திராவின் செல்போன் என்பதைக்கண்டறிந்தார்.

"ஏம்மா ஆஃப் பண்ணலை?" கொஞ்சம் கோபமாகக் கேட்டார். ஆசிரியை கண்கள் கலங்கி விட்டன. "எனக்கு ஆஃப் பண்ணத்தெரியலை சார்!" உண்மையைச் சொன்னார் ஆசிரியை.

"ஒரு தலைமை ஆசிரியை இது கூடத் தெரியாமல் இருக்கலாமா?" தலையில் அடித்துக் கொண்ட கலெக்டர், மற்ற தலைமையாசிரியர்களைப் பார்த்து "நான் பேசியதை எல்லாம் குறிப்பெடுத்துக்கொண்டீர்களா?" என்றார். "இல்லீங்க சார்!" எல்லாரும் தலையாட்டினார்கள். "சரி போகட்டும்... நான் என்ன சொன்னேன்னு சொல்லுங்க பார்ப்போம்", கீரப்பாளையம், கருப்பேரி பள்ளித் தலைமையாசிரியர்களைப் பார்த்துக்கேட்டார்.

கடைசி பெஞ்ச் மாணவர்களைப் போல திருதிருவென விழித்தார்கள் அந்த ஆசிரியர்கள். இவர்களை வைத்துக்கொண்டு கடலூர் மாவட்டத்தின் கல்வித்தரத்தை எப்படி மேம்படுத்துவது?
நன்றி: நக்கீரன் (05-07-2008)