பல வயது பிள்ளைகளை வகுப்பு வாரியாக பிரித்து அவர்தம் திறமைகளை சிறப்பாக செம்மை படுத்தி அவர்களை மேடையில் சிறப்பாக வெளிப்படுத்த தயார்படுத்துவது எனும் மாபெரும் பணியை இத்தனை சிறப்பாக செம்மையாக புரிந்திருக்கும் ஜமாத்துல் உலமா பேரவையினருக்கு அல்லாஹ் அருள் புரிவானாக.
ஏராளமான பிள்ளைகளும் தாய்மார்களும் பெரியவர்களுமாக கலந்து கொண்டனர். மண்டபம் போன்ற அடைந்த இடத்தில் அல்லாமல் திறந்த வெளியில் நிகழ்ச்சியை ஏற்பாடு செய்து இருந்தது சிறப்பு.
மேடை மிக எளிமையான முறையில் இருந்தது ஆனால் அதில் அமர்ந்து இருந்தவர்களும் சரி அதில் ஏறி கிராத் ஒதினவர்களும், பாங்கு சொன்னவர்களும், பேசி அசத்திய வருங்கால ஆலிம்களும் தங்களது வெளிப்பாடுகளால் மிகவும் நம்பிக்கை ஊட்டினார்கள்.
இதற்க்கு முன் நடைபெற்ற போட்டிகளிலும் மேடையிலும் பல சிறப்புகள் இருந்தன.
ஒரு வாண்டு, இரண்டு செண்டி மீட்டர் உயரத்தில் கைலி சட்டை போட்டு தொப்பி கொண்டு அட்சர சுத்தமாக தஜ்வீதுடன் இறை வார்த்தைகளை ராகமாக இசைத்ததை காணும் எந்த உள்ளமும் உருகாமல் இருக்க முடியாது.
சிறுவர்கள் முழங்கிய பாங்கொலியும், சிறுமிகள் சிந்திய மழலை பேச்சுக்களும் அனைவரின் மனதையும் உணர்வால் அசைத்துப்பார்த்தன.
ஆறாம் வகுப்பு (தான் படிப்பார்கள் என்று நினைக்கிறேன்) ரஜினா பேகம் மற்றும் உம்முள் ஹபீபா நபி (ஸல்) அவர்களின் கண்ணியத்தையும் மாண்பையும் பற்றி தெள்ளத்தெளிவாக பாடமெடுத்ததை கேட்க்கும் போது நாளைய இஸ்லாமிய சமுதாயத்தினை பற்றி நம்பிக்கை துளிர்த்தது.
எந்த ஒரு சமகால பேச்சாளர்களுக்கும் சளைத்தவனில்லை நான் என்பது போல் முழங்கிய பாரிஸ் அஹமது எனும் நல்முத்தை பேச்சு முடிந்தவுடன் நாம் நம்மோடு அணைத்து வாழ்த்து சொல்ல நேர்ந்தது. இந்திய விடுதலையில் முஸ்லிம்களின் பங்கு என்ற தலைப்பில் அவர் பேசிய மேடை பேச்சில் அத்தனை தெளிவு, தீர்க்கம் முக பாவனை மாறுதல்கள், கையசைவுகள் அத்தனையும் பிரமாதம். கவனிக்கப்பட வேண்டிய ஓர் வருங்கால பேச்சாளர் பாரிஸ் அஹமது.
முத்தாய்ப்பாக அமைந்தது ஹவுஸ் பள்ளி தெருவை சேர்ந்த ஜக்கரியா நானா அவர்களின் உரை. இத்தனை காலம் இவர்களை யார் எங்கே ஒளித்து வைத்தார்கள் என்று ஏங்க வைக்கும் உரை. கம்பீரமான வார்த்தைகளால் கல்விக்கு இஸ்லாம், நபி (ஸல்), தந்திருக்கும் முக்கியத்துவத்தை பற்றியும் முஸ்லிம்கள் கல்வியை ஆண்ட வரையில் எப்படி இருந்தார்கள் என்றும் வரலாற்று குறிப்புக்களையும் நவீன மாற்றங்களையும் அழகிய கலவையாக கலந்து அவர் தந்த அந்த பேருரை அவர்தம் ஞானத்தின் பரிமாணங்களை வெளிக்கொண்டு காட்டியது. இது போன்ற தெளிவான உரையை பரங்கிப்பேட்டையில் கேட்டு ரொம்ப நாட்க்களாகி விட்டன. ஜக்கிரியா நானா அவர்களை இந்த சமுதாயம் சரியாக பயன் படுத்திக்கொள்ளவில்லை எனும் ஆதங்கம் தோன்றியது.
கடைசியாக பரிசுகள் வழங்கப்பட்டன. அல்ஹம்துலில்லாஹ்.
கற்றவர்கள் கற்றவர்கள் தான் என்பதை பரங்கிப்பேட்டை நகர ஜமாத்துல் உலமா பேரவை இந்த அற்புத நிகழ்ச்சியின் மூலம் மீண்டும் நிரூபித்து உள்ளது. வாழ்த்துக்கள்.