ஞாயிறு, 27 ஏப்ரல், 2008

சமுதாயம் செழிப்புற பிரார்த்திப்போம்


பரங்கிமாநகரின் கல்வி வளர்ச்சிக்கு சீரிய பங்களித்து வரும் கல்விக்குழு இந்த கோடையில், வருங்கால சந்ததியினருக்கு புத்தகங்கள் எனும் மதிப்புமிக்க பொக்கிஷத்தின் பரிச்சயத்தை ஏற்படுத்தும் நோக்கில் இஸ்லாமிய கல்வி வளர்ச்சி மையத்துடன் இணைந்து இன்ஷா அல்லாஹ் இஸ்லாமிய புத்தக மற்றும் சி.டி/ டி.வி.டி கண்காட்சி (மற்றும் விற்பனை) ஒன்றினை வருகின்ற மே 1 முதல் 4 தேதி வரை மீராப்பள்ளித்தெரு, மஹ்மூதியா ஓரியண்டல் பள்ளியில் நடத்த உள்ளது. (பார்வையிடவும் : இணைக்கப்பட்டுள்ள நோட்டிஸ்)


மேலும் கல்விக்குழுவின் சென்றவருட செயல்திட்டத்தினடிப்படையில், இன்ஷா அல்லாஹ் அனைத்து மாணவ, மாணவியருக்கும் (குறிப்பாக 8 முதல் 12 வகுப்பு) கல்வி மாநாடு மற்றும் வழிகாட்டுதல் நிகழ்ச்சி மே மாதம் 10ம் தேதி சனிக்கிழமை காலை 9 முதல் மதியம் 12.30 வரை மஹ்மூதியா ஷாதி மஹாலில் நடத்த உள்ளது. சகோதரர். சி.எம்.என். சலீம் அவர்களின் மதிப்புமிக்க உரையோடு, கடந்த கல்வியாண்டுகளில் பள்ளி முதல் மதிப்பெண்கள் பெற்று சாதித்த மாணவமாணவியரின் மேடை கருத்துப்பகிர்வுகளும் இடம் பெறுகிறது. மாணவர்களின் வளர்ச்சியில் பெற்றோர்களின் பங்களிப்பு பற்றியும் கருத்துக்கள் வலுவாக பதியப்படும்.


இது தவிர, இந்த கோடைவிடுமுறையினை சிறார்கள் பயனுள்ள வகையில் கழித்திட பல்திறன் போட்டிகள (விளயாட்டு, ஆளுமைத்திறன் கல்வி உள்ளிட்டவை) நடத்திடவும் திட்டமிடப்பட்டுள்ளது.


இந்நிகழ்ச்சிகளின் நோக்கம் முழுஅளவில் எட்டப்படுவதற்காக தங்களின் மதிப்புமிக்க பிரார்த்தனைகளயும், இந்நிகழ்ச்சிகளில் அனைவரும் கலந்து கொண்டு பயனடையவும் கல்விக்குழு அன்புடன் கோருகிறது. நல்லவை தொடர்ந்து நடந்து சமுதாயம் செழிப்புற பிரார்த்திப்போம்.

சனி, 26 ஏப்ரல், 2008

மீண்டும் மீராப்பள்ளி...

ஜாமிஆ மஸ்ஜித் மீராப்பள்ளியின் முன்புற வளாகத்தில் சீரமைப்பு பணிகள் நடைபெற்று வரும் இவ்வேளயில், பள்ளியின் இடதுமுன்புறம் அமைந்துள்ள கபர் ஒன்று தரைமட்டத்திற்கு கீழேயும், குப்பைகள் மற்றும் கழிவுகளுக்கு மத்தியில் இருந்ததால், குப்பைகள் சேர்வதை தடுக்கும் முயற்சியாக பள்ளி நிர்வாகம் அந்த பகுதியை சீரமைக்க முடிவு செய்தது. இப்பணி நடந்துகொண்டிருக்கும் வேளயில் சில தனிப்பட்ட நபர்களின் வேண்டுகோளுக்கிணங்க அந்த கப்ர் சற்று உயர்த்தி கட்டப்பட்டது. அதே சமயம், மீராப்பள்ளி நிர்வாகத்திற்கு சிறிதும் சம்பந்தமில்லாத சிலநபர்கள் குழப்பம் விளவிக்கும் நோக்கோடு அந்த கபரை செம்மைப்படுத்தி அனாச்சாரங்களுக்கு அதனை பயன்படுத்த எண்ணி அதற்கான முயற்சிகளில் ஈடுபட்டனர். இதனையறிந்த இளஞர்கள் மற்றும் பொதுமக்கள் பரவலான எண்ணிக்கையில் ளுஹர் தொழுகைக்கு பிறகு கூடி நிர்வாகத்திடம் கேள்வி எழுப்பினர். அப்போது சிறிது பரபரப்பு ஏற்பட்டது. அதனையடுத்து இந்த பிரச்சனை ஐக்கிய ஜமாஅத்தின் பார்வைக்கு எடுத்துச்செல்லப்பட்டது. மஃக்ரிபுக்கு பிறகு நிர்வாகமும், பொதுமக்களும் அமைதியான முறையில் ஜமாஅத்தில் அமர்ந்து பேசி மேலும் இப்பிரச்சனை தொடராமலிருக்க, புதுப்பிக்கப்பட்ட கப்ர் அமைப்பு இதன் பிறகு எந்த மாற்றமும் செய்யப்படாது என்றும், அதனருகில், எந்தவிதமான வழிபாடு சார்ந்த அனாச்சாரங்களும் எக்காலத்திலும் நடைபெற மீராப்பள்ளி நிர்வாகம் கண்டிப்பாக அனுமதிக்காது என்றும் நிர்வாகத்தாலும், ஜமாஅத்தாலும் உறுதிமொழி வழங்கப்பட்டது.

செவ்வாய், 22 ஏப்ரல், 2008

நர்கிஸ்-மல்லாரி பதிப்பகம் நடத்தும் இலக்கிய போட்டிகள்.

பிரபல முன்னோடி எழுத்தாளர் ஹிமானா சையத் அவர்களிடமிருந்து வந்த மின்மடல்:

நர்கிஸ் - மல்லாரிப் பதிப்பகம்
நாவல் -கட்டுரைப் போட்டிகள்

நர்கிஸ் - மல்லாரிப் பதிப்பகம் இணைந்து நடத்தும்
"முகம்மது இஸ்மாயில் -இபுறாஹீம் பீவி நினைவு"
நாவல் -கட்டுரைப் போட்டிகள்

கட்டுரைத்தலைப்பு
"இஸ்லாமிய வெளிச்சத்தில் மனித நேயம்"
முதல் பரிசு: ரூபாய் 5000/-
இரண்டாம் பரிசு: 3000/-
மூன்றாம் பரிசு: 2000/
5 ஆறுதல் பரிசுகள்: 1000/-

விதிகள்
1.கட்டுரை 12 முதல் 15 அத்தியாயங்களைக் கொண்டதாக அமையவேண்டும்.
2. ஒவ்வொரு அத்தியாயமும் வெள்¨ளை முழுத்தாள் அளவில் (A-4) கையெழுத்தில்4 - 6 பக்கம் அச்சில் 3 பக்கங்களுக்கு மிகாமல் இருக்கவேண்டும்
3. குர்ஆன், ஹதீஸ், நூல் மேற்கோள்கள் பயன்படுத்தும் போது சரியானஆதாரங்கள் தரப்பட வேண்டும்.

நாவல்
முதல் பரிசு: ரூபாய் 5000/-
இரண்டாம் பரிசு: 3000/-
மூன்றாம் பரிசு: 2000/
5 ஆறுதல் பரிசுகள் : 1000/-

விதிகள்
1.இஸ்லாமிய விழுமியங்கள், கலாசாரம், சமூக ஒற்றுமை, மனிதநேயம்,நாட்டுப்பற்று மேவும் முஸ்லிம் வாழ்வியலை மையமாக வைத்து எழுதப்படும் சமகால சமூக நாவலாயிருக்கவேண்டும். வரலாற்று நாவல்கள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டா.
2. அத்தியாயங்கள் 15 முதல் 18 -க்கு மிகாமல் இருக்கவேண்டும்.
3. ஒரு அத்தியாயம் வெள்¨ளை முழுத்தாள் அளவில் (A-4) கையெழுத்தில் 6 - 8பக்கம் அச்சில் 4 பக்கங்களுக்கு மிகாமல் இருக்கவேண்டும்

பொது விதிகள்
1.போட்டிகளில் பங்கு பெறுவோர் தனித்தாளில் தங்களது சரியானபெயர்/தகப்பனார்/கணவர் பெயர்கள் /கல்வித்தகுதி/ முகவரி/ தொலைபேசி எண்கள்/ஈமெயில் இவற்றுடன் ஆக்கம் தங்களுக்குச் சொந்தமானதென்றும், தழுவலோ அல்லதுமொழிபெயர்ப்போ அல்லவென்றும், போட்டி விதிகளுக்குக் கட்டுப்படுவதாகவும்உறுதிமொழி அளித்து கையொப்பமிட்டு அனுப்ப வேண்டும்
2. ஒரு பக்கம் மட்டுமே எழுத / டைப் செய்ய வேண்டும்
3. ஆக்கங்களை தபாலிலோ / கூரியர் சர்வீஸிலோ அனுபலாம். ஆக்கங்கள் கிடைத்தஒரு வாரத்துக்குள் பெற்றுக்கொண்டதற்கான தகவல் அனுப்பப்படும். அதன் பிறகுஅது சம்பந்தமாக அனைத்து கடித/ ஈமெயில்/ தொலைபேசித் தொடர்புகள் தவிர்க்கப்பட வேண்டும்.
4. நர்கிஸ் - மல்லாரி பதிப்பகம் நியமிக்கும் நீதிபதிகளின் தீர்ப்பே இறுதியானது.
5. ஆக்கங்கள் ஜூலை மாதம் 31 -ம் தேதிக்குள் கிடைக்கவேண்டும்
6. ஆக்கங்களைத் திருப்பி அனுப்ப இயலாது. தபால் தலைகள் அனுப்ப வேண்டாம்.
7.பரிசு பெறும் நாவல்கள்/ கட்டுரைகள் முழுமையாகவோ/ பகுதியாகவோ நர்கிஸில்தொடர் கதைகளாக/ கட்டுரைகளாக வெளிவரும்; அவற்றை நர்கிஸில் வெளிவரும் வரைவேறு வகையில் பிரசுரிக்கக் கூடாது.
8.பரிசீலனை முடிந்த பிறகு நர்கிஸ் இதழில் முடிவு அறிவிக்கப்படும்;அதைத்தொடர்ந்து பரிசுபெற்றவர்களுக்கும் பதிவுத் தபால் / கூரியர் சர்வீஸ்மூலம் தெரிவிக்கப்படும். அதனுடன் பரிசுத்தொகையும் காசோலை மூலம்அனுப்பிவைக்கப்படும்.
9.கட்டுரைகள்/ நாவல்கள் நர்கிஸ் முகவரிக்கு ( 54, மரியம் நகர்,மல்லிகைபுரம், திருச்சி- 620001, தமிழ்நாடு, இந்தியா) அனுப்பப் படவேண்டும் ; கடித உறையின்மீது கட்டுரை/ நாவல் என்று தெளிவாகக்குறிப்பிடவேண்டும்
10.ஒருவரே இரண்டு போட்டிகளிலும் கலந்து கொள்ளலாம்; ஒன்றுக்கு மேற்பட்டஆக்கங்களையும் அனுப்பலாம்.
எம். அனீஸ் பாத்திமா
பதிப்பாளர்/நிர்வாக ஆசிரியை
நர்கிஸ்
திருச்சி -620001

டாக்டர் அ. சையத் இப்ராஹீம் (ஹிமானா சையத்)
கௌரவ ஆசிரியர் : நர்கிஸ்
நிறுவனர்:மல்லாரி பதிப்பகம்
சித்தார்கோட்டை-623513

நமதூர் எழுத்தாளர்களே.., இவ்வாய்ப்பினை நன்றாகப் பயன்படுத்திக்கொள்வீர்களாக.

மதிய உணவில் வண்டுகள்- அவலச் சத்துணவு.

பரங்கிப்பேட்டை நடுநிலைப்பள்ளியொன்றில் சத்துணவில் வண்டுகள் காணப்பட்ட அவலம் குறித்து இன்றைய தினத்தந்தி செய்தி வெளியிட்டுள்ளது.

மதிய உணவில் வண்டுகள் இறந்து கிடந்த சம்பவம் பரங்கிப்பேட்டை பள்ளி சத்துணவு பொறுப்பாளர் உள்பட 3 பேர் தற்காலிக பணி நீக்கம். வட்டார வளர்ச்சி அதிகாரி நடவடிக்கை

பரங்கிப்பேட்டை, ஏப்.22-
பரங்கிப்பேட்டை பள்ளிக்கூடத்தில் மதியஉணவில் வண்டுகள் இறந்து கிடந்த சம்பவத்தையொட்டி சத்துணவு பொறுப்பாளர் உள்பட 3 பேரை தற்காலிக பணி நீக்கம் செய்து வட்டார வளர்ச்சி அதிகாரி நடவடிக்கை மேற்கொண்டார்.

240 மாணவர்கள்

கடலூர் மாவட்டம் பரங்கிப்பேட்டை கும்மத்துப் பள்ளி தெருவில் ஊராட்சி ஒன்றிய கட்டுப்பாட்டில் நடு நிலைப்பள்ளி உள்ளது.இந்த பள்ளியில் 1-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை சுமார் 240 மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர்.

அதில் 140 மாணவ- மாணவிகள் மதிய உணவு சாப்பிட்டு வருகின்றனர்.அதபோல் கடந்த 17-ந் தேதி அன்று மாணவர்களுக்கு மதிய உணவு வழங்கப்பட்டது.அப்போது மதிய உணவில் வண்டுகள் இறந்து கிடந்தன.இதனால் மாணவர்கள் யாரும் மதிய உணவு சாப்பிடாமல் சாப்பாட்டை கீழே கொட்டி விட்டு சென்றனர்.இந்த சம்பவம், சமையல் செய்யும் போது அரிசி, பருப்பு ஆகிய வற்றை சரியான முறையில் சுத்தம் செய்யாதது தான் காரணம் என்று மாண வர்களின் பெற்றோர் குறை கூறினர்.

3 பேர் தற்காலிக பணிநீக்கம்

தகவல்அறிந்த வட்டார வளர்ச்சி அதிகாரி ராமச்சந்திரன் கும்மத்துப்பள்ளிக்கு சென்று விசாரணை நடத்தி னார்.விசாரணையில் சமையல் பொறுப்பாளர் மகுடேஸ்வரி,சமையலர் குஞ்சம்மாள்,உதவியாளர் காஞ்சனாஆகியோரின் தவறு தலால் தான் இந்தசம்பவம் நடந்தது என்பதை அறிந்தார்.அதையடுத்து அதற்கு காரணமான சத்துணவு பொறுப் பாளர் மகுடேஸ் வரி,சமையலர் குஞ்சம்மாள்,உதவியாளர் காஞ்சனா ஆகிய 3 பேரையும் தற்காலிக பணிநீக்கம் செய்து வட்டார வளர்ச்சி அதிகாரி ராமச்சந்திரன் நடவடிக்கை மேற்கொண்டார்.

தகவலுக்கு நன்றி: Mr.Syed (Haja Mohideen)


(கேடயக்குறிப்பு: நமதூர் சம்பந்தப்பட்டதென்பதால் இன்றைய தினத்தந்தி செய்தியை கூடுதல் குறைவின்றி 'அப்படியே' எடுத்தாளப்பட்டுள்ளது. எனவே, ஏன் தம்மைக் குறிப்பிடவில்லை என்று 'குளவிகள்' கோபித்துக்கொள்ளவேண்டாம்:-))))

சுன்னத் வல் ஜமாஅத் முப்பெரும் விழா


பரங்கிப்பேட்டை சுன்னத் வல் ஜமாஅத் சார்பாக மீலாது விழா, குத்பு முஹையதீன் நினைவு சொற்பொழிவு மற்றும் சுன்னத் வல் ஜமாஅத் அலுவலகம் திறப்பு ஆகிய முப்பெரும் விழா கும்மத்பள்ளித்தெருவில் நடைபெற்றது. ஜமாஅத் தலைவர் எம்.எஸ். முஹம்மது யூனுஸ் அவர்கள் அலுவலகத்தை திறந்து வைக்க, ஷேக் அப்துல்லா ஜமாலி, முதலானோர் கலந்து கொண்டு உரையாற்றினர். கூட்டத்தில் முன்னதாக பேசிய முஹம்மது காஸிம் என்பவர் தனது உரையில் முஹம்மது நபி ரசூல் (ஸல்) அவர்களின் கால் செருப்பு அல்லாஹ்வின் அர்ஷைவிட உயர்வானது, அன்னை ஆமினாவின் மணிவயிறு அல்லாஹ்வின் அர்ஷைவிட மகத்தானது என்றெல்லாம் உளறியது அங்கிருந்தவர்கள் அனைவருக்கும் அதிர்ச்சியையும் அருவெருப்பினையும் ஏற்படுத்தியதை காண முடிந்தது. சுன்னத்ஜமாஅத் சகோதரர்கள் சிலரும் கூட தங்களுக்கு அந்த கருத்தில் உடன்பாடில்லை என்று பிற்பாடு தனிப்பட்ட முறையில் நம்மிடம் தெரிவித்தனர்.

வியாழன், 17 ஏப்ரல், 2008

சொற்பொழிவு மற்றும் கலந்தாய்வு நிகழ்ச்சி


கடந்த சில காலங்களாக பரங்கிப்பேட்டை முஸ்லிம் சமுதாயத்தின் கவனிக்கப்படாத கூறாக மாறி சீர்கேடுகளின் விளிம்புகளில் இருக்கும் இளஞர்கள பற்றி மிகுந்த அக்கறை கொண்டு அது பற்றிய ஒரு சொற்பொழிவு மற்றும் கலந்தாய்வு நிகழ்ச்சி அப்பாபள்ளியில் நடைபெற்றது. இதில் சிறப்புரையாற்றிய சகோதர் ஜி.நிஜாம் அவர்கள் சக்திவாய்ந்த இளய சமுதாயம் கடந்த காலங்களில் எப்படியெல்லாம் வழி நடத்தப்பட்டது, தற்போது அதன் அவல நிலை பற்றியும் மிகவும் சிந்தனை தூண்டும் வகையில் பேசினார். வெளிச்சத்தில் தன்னை அடையாளப்படுத்திகொள்ள வேண்டிய நமதூர் இளஞர்கள், இருள்களில் ஒளிந்து கொண்டு வெளிச்சத்தை பார்க்கும் நிலை இருப்பதை வருத்தத்துடன் குறிப்பிட்டார். இதனை தொடர்ந்து, இதற்கான தீர்வு பற்றி கலந்து கொண்ட சகோதரர்களிடம் ஆலோசனைகள கோரப்பட்டது.

வழிகாட்ட சரியான தலைமை இல்லாதது, தேவையற்ற செல்போன், பைக் கலாச்சாரம், பெற்றோர்களின் அதீத பரிவு மற்றும் அதீத கண்டிப்பு, தொடர் இஸ்லாமிய மார்க்க பிரச்சாரத்தில் தேக்கம், தகாத நண்பர்கள் சேர்க்கை, பொறுப்பினை அறியாமல் இருத்தல் (அ) தட்டி கழித்தல், திரைப்படங்களினால் மாற்றியமைக்கப்படும் சமுதாய மதிப்பீடுகள், வலிமையான ஜும்ஆ எனும் மிகப்பெரிய விஷயம் நீர்த்துபோன முறையில் பிசுபிசு உரையோடு கையாளப்படுதல், பெரும்பாலான தந்தைமார்கள் வெளிநாடுகளில் இருப்பதால் பிள்ளகளின் கண்டிப்பு மற்றும் கண்காணிப்பற்ற வளர்ச்சி போன்றவை முக்கிய காரணிகளாக முன்வைக்கப்பட்டன.

இளஞர்கள் குறித்த ஐக்கிய ஜமாஅத் மற்றும் இதர அமைப்புக்களின் நிலைப்பாடு மற்றும் செயற்பாடின்மையும் கேள்விக்குள்ளாக்கப்பட்டது.

தீர்வுகளாக, தஸ்கியா போன்ற தக்வா (இறையச்சம்) ஊட்டும் விஷயங்கள முன்னெடுத்தல், நன்னன்பர்களாக அவர்களுடனே ஊடாடி நன்மையை எத்திவைத்தல், விளயாட்டு போன்றவற்றில் கவனத்தை திசைதிருப்புதல் போன்றவை முன்வைக்கப்பட்டன. விளம்பரங்கள் ஏதும் செய்யப்படாத இச்சிறிய நிகழ்ச்சிக்கு கூடிய மிகஅதிகமான பங்கேற்கேற்பாளர்கள் சமுதாயம் இன்னும் உயிர்ப்புடன் உள்ளது என்ற திருப்தியை அனைவர் உள்ளத்திலும் ஏற்படுத்தியது. அல்லாஹ்விற்கே புகழ் அனைத்தும்.

திடக்கழிவு மேலாண்மை திட்டம்



பரங்கிப்பேட்டை பேரூராட்சி மன்றம் சார்பாக சமுதாயம் சார்ந்த திடக்கழிவு மேலாண்மை திட்டம் செயல்முறை விளக்கம் நகரின் பல இடங்களில் நடைபெற்றது. சின்னக்கடை முனையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், குப்பையினை மக்கும் குப்பை, மக்காத குப்பை என்று பிரிப்பதையும், பிளாஸ்டிக் மற்றும் அதன் பொருட்களால் விளயும் தீமைகள் குறித்தும், குப்பைகள கொண்டு இயற்கை உரம் தயாரிப்பது பற்றியும் புரொஜக்டர் மூலம் விளக்கப்படம் காண்பித்து விளக்கப்பட்டது. இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர். அரசினர் கும்மத்பள்ளி மாணவ மாணவியர் நடத்திய பிளாஸ்டிக் பொருட்கள தவிர்ப்பது பற்றிய விழிப்புணர்வு பேரணியில் இது பற்றிய கோஷங்கள் முழங்கப்பட்டது. பேரணியில் கலந்து கொண்ட மாணவர்களில் பலர் காலில் காலணியின்றி வந்திருந்தது உறுத்தலாகவே இருந்தது.

25 கி.மீ தள்ளியிருந்தால் நம்மை பாதிக்காதா என்ன?

சிப்காட்டிலிருந்து 25 கி.மீ தள்ளியிருந்தால் நம்மை பாதிக்காதா என்ன?சாபக்கேடாக வந்து வாய்த்திருக்கின்றன சில வரங்கள் கடலூருக்கு. சிப்காட் தொழிற்பேட்டை கடலூருக்கு ஒரு வரப்பிரசாதமாக கருதப்பட்ட நிலையில் அது தன் கோரமுகத்தை காட்ட துவங்கியிருக்கிறது இந்த வரம்.

சாதாரணமாக 10 லட்சம் பேரில் ஒருவருக்கு வர வாய்ப்பு இருக்கும் கேன்சர், இந்த பகுதியில் 1000‍ல் இருவருக்கு வர வாய்ப்பு இருப்பதாக கூறுகின்றன சோதனை அறிக்கைகள்.

மெல்ல மெல்ல ஊடுருவிக்கொண்டிருக்கிறது நோய். யாருக்கும் அறியாமல் ஆனால் உறுதியுடன்.
நாக்பூரில் அமைந்திருக்கும் தேசிய சுற்றுப்புறசூழல் ஆராய்ச்சி அமைப்பு தான் இத்தகவலை வெளியிட்டிருக்கிறது. (INDIA: Chemical Park increases cancer risk in Cuddalore - Study Confirms Bucket Brigade results!)

கடலூர் சிப்காட் தொழிற்பேட்டையில் இருப்பவை முழுவதும் கிட்டத்தட்ட கெமிகல் கம்பெனிகள். இருப்பது தவறில்லை யாருக்கும் பழுதில்லா நிலையில்.

பகலை விட இரவுநேரங்களில் அதிக மாசு வாயுக்களை வெளியிட்டு கொல்கின்றன பெரும்பாலான தொழிற்சாலைகள்.

இது பற்றிய அறிக்கையை தேசிய சுற்றுப்புறசூழல் ஆராய்ச்சி அமைப்பு, தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியத்துக்கு 2004‍ லிலேயே இந்த அறிக்கையை தந்துவிட்டதாம். இன்னும் சாவு எண்ணிக்கை வராததால் ஒருவேளை வாரியம் காத்திருக்கிறதா என்று தெரியவில்லை.

சிப்காட்டை சுற்றி இருக்கும் பகுதிகளில் உள்ள காற்றில் வழக்கத்துக்கு மாறாக 94 வித மாசுக்கள் கலந்திருக்கின்றன. அவற்றில் 15 மிகக்கொடியவை.
இரத்தப்புற்றுநோயை உருவாக்கும் பென்ஸீன் இப்பகுதிகளில் 15 மடங்கு அதிக அளவில் உள்ளது.

இதில் முக்கிய விஷயம், இந்த சோதனைகளை செய்த நேரத்தில் பல தொழிற்சாலைகள் மூடப்பட்டிருந்தனவாம். அதற்கே இந்த நிலைமை. அவையும் செயல்பட்டுக்கொண்டி(று)ருந்தால், என்ன நடந்திருக்கும்.

சாலை வழியாக மட்டுமே பரங்கிப்பேட்டை 25 கி.மீ. ஆனால் இந்த கொடிய வாயுக்கள் பஸ்ஸில் பயணம் செய்து ஊருக்கு வராது. கிட்டத்தட்ட 10 கி.மீ. ஆகாய பயணம் போதும்... பரங்கிப்பேட்டைக்கு.

எத்தனை கழகங்கள்! எத்தனை சமூக நிறுவனங்கள்!! எத்தனையோ அமைப்புகள்!!! அட யாராவது ஆரம்பித்து வையுங்களேன் அய்யா! அவசியமே இல்லாத விசயத்துக்கெல்லாம் போரட வீதியிறங்கும் போது இதை கண்டுக்கமாலேயே விட்டு விடுவீர்களா?

For more details... please click: INDIA: Chemical Park increases cancer risk in Cuddalore - Study Confirms Bucket Brigade results!

செவ்வாய், 15 ஏப்ரல், 2008

இறப்புச் செய்தி!

சகோ. கு. நிஜாம், சகோ. கு. அப்துஸ் ஸமத், சகோ. கு. ஹஸன் அலி, சகோ. கு. ஹிதாயத்துல்லாஹ் மற்றும் சகோ. கு. அப்துல் ஹமீது இவர்களின் தகப்பனார் குலாம் தஸ்தகிர் மர்ஹீம் ஆகிவிட்டார்கள்.. இன்ஷாஅல்லாஹ் இன்று பரங்கிப்பேட்டையில் அன்னாரின் உடல் நல்லடக்கம் செய்யயப்டுகிறது.

இன்னா லில்லாஹி வயின்னா இலைஹி ராஜீவூன்...

திங்கள், 14 ஏப்ரல், 2008

மாவட்ட அளவிலான கைப்பந்து (வாலிபால்) போட்டி



வாத்தியாப்பள்ளி வாலிபால் கிளப் (வி.பி.வி.சி) சார்பாக மாவட்ட அளவிலான கைப்பந்து (வாலிபால்) போட்டி, 12 மற்றும் 13 ஏப்ரல் சிறப்பாக நடைபெற்றது. மொத்தம் 28 அணிகள் கலந்து கொண்ட இந்த போட்டியில், சிதம்பரம் தமிழன், பாண்டி மெட்ரோ ஆகிய டீம்கள் இறுதிபோட்டிக்கு தகுதி பெற்றன. இறுதியாக சிதம்பரம் தமிழன் அணி சிறப்பாக விளயாடி சாம்பியன் கோப்பையை (+ ரொக்க பரிசு 4000) தட்டிச்சென்றது. இதில் பல மாநில முன்னனி விளயாட்டு வீரர்கள் கலந்து கொண்ட இந்த போட்டியில், பரங்கிப்பேட்டையிலேயே முதன்முறையாக மின்னொளியில் நடத்தப்பட்டது தனிச்சிறப்பாகும். இம்மாதிரி விளயாட்டு நிகழ்ச்சிகள் வருடந்தோரும் நடத்தப்பட்டால் பரங்கிப்பேட்டை இளஞர்கள் மத்தியில் புத்துணர்வுடன் கூடிய மாற்றத்தினை கொணடு வரும் என்பது உறுதி.

இஸ்லாமிய ஐக்கிய ஜமாஅத்தின் செயற்குழு கூட்டம்


பரங்கிப்பேட்டை இஸ்லாமிய ஐக்கிய ஜமாஅத்தின் மாதாந்திர செயற்குழு கூட்டம் 13.04.08 ஞாயிறு மாலை நடைபெற்றது. இந்த கூட்டத்தின் அஜென்டாக்களாக நான்கு விஷயங்கள் எடுத்து கொள்ளப்பட்டன.

1. கடந்த ஆண்டிற்கான ஜமாஅத் மற்றும் பைத்துல்மால் நிதிநிலையறிக்கை. இதனை ஜமாஅத்தின் பொருளாளர் ஜனாப் இலியாஸ் நானா அவர்கள் வாசித்து அளித்தார்.

2. கீற்று கொட்டகையாக இருந்த ஜமாஅத்தின் கட்டிடத்தை ஒழுங்குபடுத்தி விஸ்தரிப்பதற்கும் செயற்குழுவிற்கு அறிவிக்கப்பட்டு அனுமதி பெறப்பட்டது,

3. சென்ற செயற்குழுவில் விவாதிக்கப்பட்தின்படி, கல்விக்குழு ஏற்பாடு செய்துள்ள 10ம், மற்றும் 12ம் வகுப்பு பயிலும் பெண்களுக்காக பெண் ஆசிரியைகள கொண்டே நடத்தப்படப்போகும் டியூஷன் பற்றி கல்விக்குழு தலைவர், செயற்குழு உறுப்பினர்களுக்கு விளக்கினார்.

4. புதிய அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளிக்கு மேலும் வசதிகள் ஏற்படுத்தி தந்த லயன்ஸ் கிளப் மற்றும் ஜமாஅத் செயலாளர் ஜனாப் ஹபீபுர்ரஹ்மான் இவர்களுக்கு நன்றி தெரிவிக்கபட்டது.

இவையல்லாமல், பொதுவிஷயங்களாக, மீராப்பள்ளி அடுத்துள்ள சிமெண்ட சந்தில் இருக்கும் பள்ளங்களால் ஏற்படும் இடர்பாடுகள் பற்றியும் அதை சரிசெய்யவும் உறுப்பினர் அலிஹுசைன் நானா அவர்கள் கோரிக்கை வைக்க, உடனே எழுந்த தலைவர் யூனூஸ் அவர்கள் இன்னும் 10 தினங்களில் கண்டிப்பாக அவை சிமெண்ட் பூசப்பட்டு சீர்செய்யப்படும் என்று உறுதியளித்தார். வாத்தியாபள்ளி பேருந்து அவ்வப்போது உள்ள வராமல் செல்லுவது, ஊரினுள்ள பேருந்து வேகமாக செல்லுவதால் கற்கள் பறக்கும் அபாயம், என்.டி. வரை டவுன் பேருந்தை இயக்க கோரிக்கை, நீண்ட நாட்களாக வாத்தியாபள்ளியில் இரவு ஹால்ட் ஆகாமல் உள்ள 5ஏ பேருந்து, கேஸ் சிலிண்டர் விநியோகத்தில் மெத்தனம், போன்ற பல விஷயங்கள் விவாதிக்கப்பட்டன. சமீபத்திய கலெக்டர் வருகையின் போது காஜியார் தெரு சிமெண்ட் ரோடு மாற்றங்கள், பழைய பெண்கள் மேல்நிலைபள்ளியில் வரவேண்டிய அரசு அலுவகங்கள் பற்றியும் அவர் அளித்த குறிப்புகளின் சுருக்கம் வாசித்து காட்டப்பட்டது. கல்வி மேற்படிப்பிற்காக கடலூர் சென்று படிக்கும் மாணவிகள் சந்திக்கும் அவலமான சிக்கல்கள பற்றி கல்விக்குழு தலைவர் விளக்கி ஜமாஅத்தினை ஏதேனும் ஆக்கபூர்வமான நடவடிக்கை எடுக்கும்படி கோரிக்கை வைத்தார். ஜனாப். ராசி டிராவல்ஸ் ராஜா நானா அவர்கள் மாதம் 22,000 க்கு ஒரு சேவையாக இதை ஏற்றுக்கொண்டார். அவர்களின் இந்த மகத்தான ஏற்பிற்கு நன்றி தெரிவிக்கப்பட்டது. இன்ஷா அல்லாஹ் அடுத்த கல்வியாண்டில், கடலூர் அதுவும் குறிப்பாக செயின்ட் ஜோசப் கல்லூரிக்கு சென்று படிக்கும் மாணவிகள் இந்த பிரத்யேக வசதியை பயன்படுத்திகொள்ளலாம். இதன்மூலம் இன்ஷா அல்லாஹ் வீட்டு வாசலில் கிளம்பி வீட்டு வாசலுக்கே சரியான நேரத்தில் பத்திரமாக வந்து சேரும் பாதுகாப்பான சூழல் உறுதிபடுத்தப்படுகிறது, எல்லா புகழும் அல்லாஹ் ஒருவனுக்கே.

நலம் பெற பிரார்திப்போம்

ஜம்மியத்துல் அஹ்லில் குர்ஆன் வல் ஹதீஸ் (ஜாக்) அமைப்பின் மாநில துணை பொதுச்செயலாளரும், பரங்கிப்பேட்டை அல்ஹஸனாத் மகளிர் இஸ்லாமிய கல்லூரியின் முதல்வருமான ஜனாப் எஸ்.ஐ.அப்துல் காதிர் மதனி அவர்கள் எதிர்பாரா விதமாக ஒரு சிறு விபத்தில் கால் எலும்பு முறிவு ஏற்பட்டு சென்னை மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள். மதனி அவர்களின் உடல்நலம் மிக விரைவில் சீர்பெற்று, இஸ்லாமிய மார்க்கப்பணிகள முன்போல் தொடர அல்லாஹ்விடம் பிரார்த்தனை புரியுமாறு அனைவரையும் அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

சனி, 12 ஏப்ரல், 2008

இறப்புச் செய்தி!

S.J. முஹமது கவுஸ், S.J. ஹசன் அலி, S.J. சிராஜூதீன் இவர்களின் தகப்பனாரும் ஹம்துன் ஃபக்ருத்தீன், ஹம்துன் அப்பாஸ் இவர்களின் பாட்டனாருமான சையத் ஷேக் ஜமாலுதீன் மரைக்காயர் அவர்கள் மர்ஹூம் ஆகிவிட்டார்கள். இன்ஷாஅல்லாஹ் இன்று பரங்கிப்பேட்டையில் நல்லடக்கம் செய்யப்படுகிறது. இவர் அரபி மொழியில் வல்லமை பெற்றவர் என்பதும் குர்ஆன் சூராக்களை தன்னுடைய அழகிய கையெழுத்தால் எழுதியவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

தகவல்: M.E.S. அன்சாரி, M.A., B.L.

செவ்வாய், 8 ஏப்ரல், 2008

பரங்கிப்பேட்டையில் சுற்றுலா வளாகம் - தினத்தந்தி செய்தி

பரங்கிப்பேட்டை பேரூராட்சியில் அமைக்கப்பட்டு வரும் சுற்றுலா தளம் பற்றி தினத்தந்தி வெளியிட்டுள்ள செய்தி:



பரங்கிப்பேட்டை பேரூராட்சியில்
ரூ.50 லட்சம் செலவில் சுற்றுலா தலம்
கலெக்டர் பார்வையிட்டார்


பரங்கிப்பேட்டை,ஏப்.8-

பரங்கிப்பேட்டை பேரூராட்சியில் ரூ.50 லட்சம் செலவில் சுற்றலா தலம் அமைக்கப்பட்டு வருகிறது. இந்த சுற்றுலா மையத்தை கலெக்டர் ராஜேந்திரரத்னூ பார்வையிட்டார்.

புகழ் பெற்ற நகரம்

கடலூர் மாவட்டம் பரங்கிப் பேட்டை மிகவும் புகழ்பெற்ற நகரமாகும். இந்த நகரில் பாபாஜி கோவில், ஆயிரம் ஆண்டுகள் புகழ் வாய்ந்த சிவன்கோவில், அண்ணாமலைப் பல்கலைக்கழக உயிரியில் உயர் ஆராய்ச்சி மையம் மற்றும் கலங்கரை விளக்கம், ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்புள்ள பள்ளிவாசல் போன்றவை உள்ளன.

இந்த புகழ்வாய்ந்த பரங்கிப் பேட்டை நகரை சுற்றுலா தலமாக ஆக்க அந்த பகுதி மக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்தனர். அதே போல் பேரூராட்சி சார்பில் தலைவர் முகமது யூனுஸ் மாவட்ட கலெக்டர் ராஜேந்திர ரத்னூவுக்கு கோரிக்கை மனு கொடுத்தார்.

அரசு நிதி ஒதுக்கீடு

இந்த கோரிக்கையை பரிசீலனை செய்து பரங்கிப்பேட்டை பேரூராட்சியில் சுற்றுலா தளம் அமைக்க தமிழக அரசு ரூ. 50 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்தது.

அதன்படி பரங்கிப்பேட்டையில் கலங்கரை விளக்கம் செல்லும் வழியில் அண்ணாமலைக்கழக உயிரியில் உயர்ஆராய்ச்சி மையம் எதிர்புறம் உள்ள பேரூராட்சிக்கு சொந்தமான இடத்தில் ரூ.50 லட்சம் செலவில் சுற்றுலா தலம் அமைக்கப்பட்டு வருகிறது.

விரைவில் முடிக்க உத்தரவு

இந்த சுற்றுலா தலத்தில் உணவு விடுதி, பயணிகள் ஓய்வு எடுக்கும் குடில்கள், உயர்மின்கோபுர விளக்கு, விளையாட்டு பூங்கா, சுற்றுலா பயணிகள் வெள்ளாற்றில் செல்லும் படகுகள் , படகுகள் நிறுத்தப்படும் ஜிட்டி பகுதி ஆகியவை அமைக்கப்பட்டு பணி கள் முடிவடையும் நிலையில் உள்ளது.

இந்த சுற்றுலா மைய கட்டிடங்கள் மற்றும் விளையாட்டுப் பூங்கா ஆகியவற்றை கலெக்டர் ராஜேந்திர ரத்னூ பார்வையிட் டார். அப்போது கலெக்டர், பணிகளை விரைவில் முடிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட் டார்.

கலெக்டருடன் பரங்கிப்பேட்டை பேரூராட்சி தலைவர் முகமது யூனுஸ், துணைத்தலைவர் செழியன், தாசில்தார் பட்டுசாமி, கவுன்சிலர்கள் காஜாகமால், பசிரியாமாஜாபர், அபாகான், வருவாய்ஆய்வாளர் சரவணன், செயல் அலுவலர் சேவியர் அமல்தாஸ், கிராம நிர்வாக அதிகாரி முத்துநாயகம் மற்றும் அரசு அதிகாரிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

நன்றி: Syed (Haja Mohideen).

திங்கள், 7 ஏப்ரல், 2008

சட்டத் துறையில் பட்டம் பெற விரும்புவோர்களின் கவனத்திற்கு...

1. 3 வருட LL.B/B.L பட்டப் படிப்பிற்கு 40 சதவீத தேர்ச்சி பெற்ற எந்த டிகிரி முடித்தவர்களும் விண்ணப்பிக்கலாம் (நுழைவுத் தேர்வில் 45 சதவீதம் தேர்ச்சி பெற வேண்டும் அல்லது மேனேஜ்மென்ட் கோட்டாவில் சேர்வதற்கு நுழைவு தேர்வு அவசியமில்லை ஆனால் 45% மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும்.)
2. டிகிரி முடிக்காத ப்ளஸ் 2 தேர்ச்சி பெற்றவர்கள் 5 வருட LL.B/B.L பட்டப் படிப்பிற்கு விண்ணப்பிக்கலாம். ப்ளஸ் 2 வில் 40 சதவீதம் மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும். (நுழைவுத் தேர்வில் 45 சதவீதம் தேர்ச்சி பெற வேண்டும் அல்லது மேனேஜ்மென்ட் கோட்டாவில் சேர்வதற்கு நுழைவு தேர்வு அவசியமில்லை ஆனால் 45% மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும்.)
விண்ணப்பிக்க கடைசி நாள்: 16-04-2008. மேலும் விபரங்களுக்கு....
சகோ. M.E.S. அன்ஸாரி அவர்களைத் தொடர்பு கொள்ளவும்.
Mob.: 9952756420, 9443879995.

வெள்ளி, 4 ஏப்ரல், 2008

வருமுன் காப்போம் மருத்துவ நிகழ்ச்சி




பரங்கிப்பேட்டை பேரூராட்சி மன்றத்தின் சார்பாக தமிழ்நாடு அரசின் வருமுன் காப்போம் மருத்துவ விழிப்புணர்வு, மருத்துவ பரிசோதனை மற்றும் சிகிச்சை நிகழ்ச்சி சலங்குகாரத்தெரு, அன்னங்கோயிலில் உள்ள ஊராட்சி ஒன்றிய பள்ளியில் நடைபெற்றது. பேரூராட்சி மன்ற தலைவர் எம்.எஸ. முஹம்மது யூனுஸ் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் அரசு மருத்துவர்கள் மற்றும் அதிகாரிகள் பலரும் கலந்து கொண்டனர். பொது மருத்துவம் மற்றும் மகப்பேறு மருத்துவம் முதல் நீரிழவு, இருதய நோய், போன்றவற்றிற்கு சிகிச்சையும், இரத்தம் மற்றும் சிறுநீர் பரிசோதனை மற்றும் ஈ.சி.ஜி., ஸ்கேனிங், கண்புரை போன்ற பரிசோதனைகள் செய்யப்பட்டன. ஏராளமான பொதுமக்கள் கலந்துகொண்டு பயன்பெற்ற இந்நிகழ்ச்சியில் நமதூர் இஸ்லாமிய சமுதாய மக்களின் பங்கேற்பு மிகவும் சொற்பமாக இருந்ததற்கு என்ன காரணம் என்று சிந்தித்து பார்க்க வேண்டும். இந்த பயனுள்ள நிகழ்ச்சி சரியான முறையில் மக்களிடம் விளம்பரப்படுத்தப்படாததும், இயல்பாகவே நம் சமுதாய மக்களிடம் நிலவும் அலட்சிய மனோபாவமும்தான் முக்கிய காரணங்களா?. மேலும், அரசு நலத்திட்ட நிகழ்ச்சியான இதில் சரியான முறைப்படுத்துதல் இல்லை என்பது குறைபாடாகவே இருந்தது. உதாரணமாக, பெண்களுக்கான ஈ.சி.ஜி. போன்ற பரிசோதனையின் போது மறைப்பிக்கு கூட சரியான ஏற்பாடு இல்லை. பரங்கிப்பேட்டையில் பல தன்னார்வ சேவை நிறுவனங்கள் இருந்தும், இது போன்ற தருணங்களில் அந்த சேவை அமைப்புகளின் பங்களிப்பு அறவே இல்லாமல் போனது ஏன் என்று கேள்வி எழுகிறது.

செவ்வாய், 1 ஏப்ரல், 2008

வணிக கடன் வழங்கும் விழா





தமிழ்நாடு கூட்டுவுத்துறையின் டாம்கோ சார்பாக சிறு வணிக கடன் வழங்கும் விழா பரங்கிப்பேட்டை ஷாதிமஹாலில் மாவட்ட ஆட்சித்தலைவர் முன்னிலையில் நடைபெற்றது. இதில் பல சுயஉதவிக்குழுக்கள் கலந்து கொண்டு சுமார் 15 லட்சத்திற்க்கான சிறு வணிக கடன்கள கலெக்டர் அவர்களிடம் பெற்றுக்கொண்டனர். கலெக்டர் பேசுகையில் சுயஉதவிக்குழுக்களுக்கு குறிப்பாக முஸ்லிம் குழுக்களுக்கு இதுவரை சுமார் 80 லட்சம் அளவில் சிறு வணிக கடன்கள் அளிக்கப்பட்டுள்ளன என்று பேசினார். இதில் தாசில்தார், பேரூராட்சி மன்ற தலைவர் முஹம்மது யூனுஸ் அவர்கள் வங்கி மேலாளர்கள், அரசு அதிகாரிகள் மற்றும் முக்கிய பிரமுகர்களும் கலந்து கொண்டனர். நிகழ்ச்சி முடிந்ததும் அருகிலுள்ள காஜியார் சந்தில் சரியில்லாத வகையில் போடப்படும் சிமெண்ட் ரோட்டினை குறிப்பிட்டு ஜனாப். சுல்தான் சேட் அவர்கள் முறையிட்டதின் பேரில் அவ்விடத்திற்கு வந்து கலெக்டர் நேரில் வந்து ஆய்வு செய்தார். முடிவில் சாலையினை முறையாக போட உத்திரவிட்ட கலெக்டர் அதற்கு மேலதிகமாக ஆகும் செலவில் மூன்றில் இரண்டு பங்கினை தான் ஏற்பதாகவும் அறிவித்தார். இந்த அமளிதுமளிகளில் சின்னக்கடையில் பிசியான போக்குவரத்தில் சிறிது பரபரப்பு ஏற்பட்டது.

இறப்புச் செய்தி

நெல்லுக்கடைத்தெரு, மர்ஹும். முஹம்மது கவுஸ் அவர்களின் மகனாரும் எம்.எஸ். முஹம்மது இக்பால் அவர்களின் தகப்பனாரும், எம்.ஜி.நிஜாமுத்தீன், எம்.ஜி.அஜீஸ் மியான் இவர்களின் சகோதரருமான எம்.ஜி. முஹம்மது சாஹிப் (சாப்ஜான்) அவர்கள் மர்ஹும் ஆகிவிட்டார்கள். அன்னாரின் நல்லடக்கம் இன்று (01.04.2008) மாலை 4 மணிக்கு மீராப்பள்ளியில்.

வெளிச்சமூட்டிய வெளக்குகள்

இன்று நினைத்து பார்க்க முடியாத அளவில் விஞ்ஞானம் வளர்ந்து விட்டது. அன்று தாமஸ் ஆல்வா எடிசன் என்கிற ஒரு விஞ்ஞானி கண்டுபிடித்த ஒரு 'டங்ஸ்டன...