புதன், 28 ஜனவரி, 2009

பொருக்கமுடியலீங்க....

பரங்கிபேட்டைக்கு பெருமை சேர்க்கும் பல விஷயங்களை சமீப காலமாக அழிக்கப்பட்டு வருவதை உண்மையான குடிமகன் எவனும் பொறுக்க மாட்டான். பெரிய தெரு ரோடு போட்டார்கள்.. பொறுத்துக்கொண்டோம். அரசு ஆண்கள் மற்றும் பெண்கள் பள்ளி புதிதாக கட்டினார்கள்... பொறுத்துக்கொண்டோம். ஆஸ்பத்திரி கட்டினார்கள். பொறுத்துக்கொண்டோம். அட, வெள்ளாத்துக்கு குறுக்கே பாலம் கட்ட முயற்சி செய்து வருகிறார்கள்.... எவ்வளவோ பொருத்துட்ட்டோம் இத பொருக்கமாட்டோமா என்று அதையும் பொறுத்துக்கொண்டோம்... ஆனால் தற்போது ஆட்டை கடித்து மாட்டை கடித்து... கதையாக, பரங்கிபேட்டை டு பி.முட்லூர் ரோட்டை புதிதாக போட்டு வருகிறார்கள் என்பதை எப்படி பொறுப்பது என்று விஷயம் தெரிந்தவர்கள் யாராவது சொல்லலாம்.

பெரிய தெரு முதல் முட்லூர் சந்திப்பு வரை உள்ள சாலை தரமான (கவனிக்கவும் தரமான...) முறையில் போடப்பட்டு வருகிறது என்பதை (முதல் கட்டம்) இதன் மூலம் தமிழ் கூறும் பரங்கிபேட்டை நல்லுலகிற்கு தெரிவித்துக்கொள்வதில் பெருமை கொள்கிறோம் (கொஞ்சம் கஷ்டமாகத்தான் இருக்கு.... இனி எதை குறை சொல்றது...)
ஆனால் பாதி ரோடு போட்டு கொண்டு இருக்கும் போதே ஏதோ இவர்கள் வீட்டு முற்றத்தில் சறுக்கி விளையாடுபவர்கள் போல யாரையும் கவனிக்காமல் பயங்கர வேகத்தில் பைக் ஒட்டி செல்பவர்களை பார்க்கும் போது சரிதான் நான் ஆக்சிடன்ட் ஆகப்போறேன், நான் ஆக்சிடன்ட் ஆகப்போறேன், நான் ஆக்சிடன்ட் ஆகப்போறேன் என்று வடிவேலு போல மூன்று முறை வீட்டில் சொல்லிவிட்டு வந்திருப்பார்களோ என்று தோன்றியது.

இறப்புச்செய்தி

பரங்கிபேட்டை கச்சேரி தெருவை சேர்ந்த வி. திருநாவுக்கரசு, வி. இளங்கோ இவர்களின் தகப்பனார் திரு எஸ். விஸ்வநாதன் (லண்டன்) அவர்கள் நேற்று இறந்து விட்டார்கள். அன்னாரின் பிரிவால் வாடும் அவரின் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுக்கு வலைப்பூ தனது ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்துகொள்கிறது.

திங்கள், 26 ஜனவரி, 2009

செல்வியின் செவ்வி - பகுதி 2

சட்டமன்ற உறுப்பினர் திருமதி. செல்வி ராமஜெயம் அவர்கள் இணையதளத்திற்கு பிரத்யேகமாக அளித்த பேட்டியின் நிறைவு பகுதி.

பேரூராட்சி தலைவரும் தாங்களும் எதிரெதிர் அரசியல் கட்சிகளில் அங்கம் வகிப்பதால் தங்களின் பொது நிதியினை நமதுருக்காக ஒதுக்குவதில் ஏதேனும் சிரமம் அதாவது கருத்து வேறுபாடுகள் உண்டா?

தொடர்ச்சியை முழுமையாய் படிக்க.... இங்கு சொடுக்கவும்.

வியாழன், 22 ஜனவரி, 2009

செல்வியின் செவ்வி

அதிகாரத்தின் "மை" என்றறியப்பட்ட பச்சை மையினால் தொடர்ந்தாற் போல் பதினைந்தாம் ஆண்டினை நோக்கி கையெழுத்திடும் பெண்மணி, ஆம்...! நீங்கள் யூகித்தது சரிதான் அவர், நமது சட்டமன்ற உறுப்பினர் திருமதி.செல்வி இராமஜெயம் அவர்கள். இவருக்கு இன்னுமொரு சிறப்பும் உண்டு, பரங்கிப்பேட்டையை உள்ளடக்கிய புவனகிரி தொகுதியின் கடைசி சட்டமன்ற உறுப்பினரும் இவர் தான் (இனி வரும் தேர்தல்களில் பரங்கிப்பேட்டை, சிதம்பரம் தொகுதியில் தான் உள்ளடங்கும்).
நமது வலைதளத்திற்காக செவ்வி (பேட்டி) கேட்டபோது, "அம்மா, பிஸியா இருக்காங்க" "இன்னைக்கி தொகுதி விஸிட் போறாங்க" போன்ற அதிகாரத்தில் இருக்கும் அரசியல்வாதிகளுக்கே உரித்தான படாடோபங்கள் இல்லை மாறாக, தானே தேநீர் கொண்டு வந்து நம்மை உபசரித்து இன்முகத்துடனேயே நமது வினாக்களை எதிர் கொண்டார்.


புதன், 21 ஜனவரி, 2009

இறப்புச்செய்தி

பரங்கிப்பேட்டை போலீஸ் லைனை சேர்ந்த சக்தி அச்சகத்தின் உரிமையாளர் சக்கரபாணி அவர்களின் மகனாரும், சுபாஷ், பிரகாஷ், கமல் ஆகியோரின் அன்பு தந்தையுமான திரு. ச. ராஜாராம் அவர்கள் நேற்று (20.01.09) இரவு இயற்க்கை எய்தினார். அன்னாரின் குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் வலைப்பூ குழுவினரின் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறோம்.

செவ்வாய், 20 ஜனவரி, 2009

நெகிழ வைத்த நிஜங்களுக்குப் பிறகு


கட்டுபாடுகளும் கட்டுகோப்பும் நிறைந்த ஒரு சமூக கூட்டமைப்பில் தன்னகத்தே எண்ணற்ற பல சேவைகளை உள்ளடக்கி ஒரு மிகப்பெரிய சமூக மற்றும் சமுதாயஅமைப்பாய், பல இஸ்லாமிய ஊர்களுக்கெல்லாம் முன் மாதிரியாய் திகழ்ந்து வரும் பரங்கிப்பேட்டை இஸ்லாமிய ஐக்கிய ஜமாஅத் தனது அடுத்த தலைவருக்கான தேர்தலை நோக்கிய நிலையில், நிகழ்ந்தேறிய பொதுக்குழு வரலாற்றுமுக்கியத்துவம் பெற்றுள்ளது.

பல்வேறு பிரச்சினைகளை முன்னிறுத்தி பரப்பரப்பாக எதிர்பார்க்கப்பட்ட இந்த பொதுக்குழுவில்தான் ஜமாஅத் நிர்வாகிக்கும் போட்டி ஜமாஅத்நிர்வாகிகளுக்கும் இடையே சமாதானப் படலம் படர்ந்தது. ஒப்பற்ற ஓரிறையின் அருள் மழை பொழிந்து, நேற்று வரை எதிரியாக பார்க்கப்பட்ட / பாவிக்கப்பட்டவர்களெல்லாம் இன்று அருகருகே அமர்ந்த காட்சி காண்போர் கண்களில்லெல்லாம் ஆனந்த கண்ணீரையே வரவழைத்தது என்றுரைத்தால் அதுமிகையான கூற்றல்ல.
கலைஞர் மொழியில் சொன்னால் ,
"கண்கள் பனித்தது - இதயம் இனித்தது."
"இதயம் இருந்தது, இணைந்தோம்".

இந்த ஒற்றுமை நீடித்து நிலைக்க, அமைய இருக்கின்ற புதிய தலைமைக்குபெரும் பங்குண்டு, அதற்கேற்ப என்ன செய்ய வேண்டுமெனில், கடந்த நிர்வாகத்தில் பதவி வகித்த நிர்வாக குழு உறுப்பினர்களில் தகுந்த மாற்றம்செய்து பல்வேறு திறமையான நபர்களை முன்னிறுத்துவதன் மூலம், குழுமனப்பான்மை வளர்வது தடுக்கப்படுவதுடன், ஆளுமை திறன் வளர்ந்து நல்ல பல வருங்கால தலைவர்கள் உருவாவதற்கும் வழிவகுக்கும், மேலும் போட்டி ஜமாஅத் என்று அறியப்பட்ட நிர்வாகிகளுக்கு இனி அமையப் போகிற புதிய நிர்வாகத்தில் முறைப்படி (அவர்களையும் உள்ளடக்கி) பொறுப்புகளை நியமித்தால் மட்டுமே இந்த பலமான ஒற்றுமை தொடரும்.

இந்த மாபெரும் பொறுப்பு தங்களது மீது சுமத்தப்பட்டிருப்பதை உணர்ந்தவர்களாக தற்போதுள்ள சில நிர்வாகிகள் விட்டுக் கொடுத்து செல்வதுதான் ஜமாஅத் செயல்பாடுகள் ஆரோக்கியப்பாதையில் செல்ல வழிவகுக்கும்.
இல்லையெனில் ஏதோ ஒரு வகையில் எதிர்ப்புகள் தொடர்ந்த வண்ணமாய் போட்டியும் பகைமையும் வளரும் என்பதில் சந்தேகமில்லை.
கட்டுரையாக்கம்:
M.Gee.ஃபக்ருதின் மற்றும் ஹம்துன் அப்பாஸ்

திங்கள், 19 ஜனவரி, 2009

அறிவிப்பு

இஸ்லாமிய ஐக்கிய ஜமாஅத்தின் பொதுக்குழு குறித்த "வரலாற்று சிறப்புமிக் பொதுக்குழு" என்கிற இடுகையில் போட்டி ஜமாத் து.தலைவர் எழுந்து பேசியது விடுபட்டிருந்தது. அதை வாசகர்கள் சிலர் நினைவுபடுத்தியதின் அடிப்படையில் சேர்க்கப்ட்டுள்ளது என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.

- ஆசிரியர் குழு

ஞாயிறு, 18 ஜனவரி, 2009

பரங்கிப்பேட்டையில் பேருந்து போக்குவரத்து பாதிப்பு

விடுதலை சிறுத்தைகள் தலைவர் உண்ணாவிரதம் குறித்து மிகுந்த பரபரப்புடன் கடலூர் மாவட்டத்தில் கடந்த 3 நாட்களாக பேருந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சில அரசு பேருந்துகள் சேதப்படுத்தப்பட்டுள்ளது. இதனால் கடலூருக்கு செல்லும் பேருந்துகள் பத்து பத்தாக போலீஸ் பாதுகாப்புடன் செல்கிறது. ஆனாலும் அரசுப் பேருந்துகள் கடலூருக்கு சென்று வர தயக்கம் காட்டி வருவதால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

பரங்கிப்பேட்டையை பொறுத்தவரை, ஒரு சில தனியார் பேருந்துகள் பகல் நேரத்தில் மட்டுமே இயக்கப்படுகின்றன. இன்று காலை 5-பி சிதம்பரம்-சாமியார்பேட்டை பேருந்து சில மர்ம நபர்களால் தாக்கப்பட்டு பின் கண்ணாடிகள் நொறுக்கப்ட்டு பேருந்து நிலையத்தில் கிடக்கிறது.

வரலாற்று சிறப்புமிக்க பொதுக்குழு




இதுவரை இல்லாத அளவிற்கு பல பிரச்சினைகளோடு எதிர்பார்த்த பரங்கிப்பேட்டை இஸ்லாமிய ஐக்கிய ஜமாஅத்தின் பொதுக்குழு இன்று மீராப்பள்ளியில் நடைபெற்றது. காலை 9.30 மணிக்கு துவங்கும் என்று எதிர்நோக்கி சரியாக 10.30 மணிக்கு ஆரம்பித்தது. துவக்க உரையாக தற்போதைய ஜமாஅத் தலைவர் முஹமது யூனுஸ் சிறிது நேரம் உரையாற்றிய பின், துணை தலைவர் இஷாக் 2 வாரங்களுக்கு முன்பு நடந்தேறிய செயற்குழு தீர்மானத்தை படித்து காட்டினார்.



அதன்பின்பு, மீண்டும் யூனுஸ் எதிர்வரும் ஜமாஅத் தேர்தல் குறித்தும் நிர்வாகத்தை குறித்தும் கேள்விகள் வைத்திருப்பவர்கள் பேசலாம் என்று சொன்னார். சிறிது சலசலப்பு நிலவிய நேரத்தில் மீ.மெ. மீரா உசேன் இனி வரும் புதிய தலைவரை தேர்தல் வைத்து தேர்ந்தெடுக்காமல் தேர்வு குழு ஒன்றை நியமித்து அதனடிப்படையில் தேர்வு செய்யலாம் என்று கருத்துகூறி அமர்ந்தார்.


இதற்கு மறுப்பு தெரிவித்தவராக சேட்டு எழுந்து, இதுவரைக்கும் அப்படித்தானே நடந்து வந்தது. அதனால் அந்த முறையை மாற்றி பொதுத் தேர்தல் அடிப்படையில் தேர்வு செய்வதுதான் சிறந்தது என்று சொல்ல... அவருடன் சேர்ந்து பலர் குரல் எழுப்பி மிகுந்த சலசலப்பு ஏற்பட்ட போது, போட்டி (ஆன்டி) ஜமாஅத் துணை தலைவர் லத்தீஃப் கருத்து சொல்ல எழுந்தசமயத்தில், OAW பாவாஜான் எழுந்து 'இது இஸ்லாமிய ஜமாஅத்தின் பொதுக்குழு, எனவே இங்கு கருத்து சொல்ல விரும்புவர்கள் இந்த ஜமாஅத்தை ஆதரவளிப்பவர்களாக இருக்க வேண்டும் - அதாவது எதிர் ஜமாஅத் என்கிற அமைப்பில் அங்கம் வைப்பவர்கள் பார்வையாளராக இருந்துவிட்டு போங்கள், கருத்து சொல்ல வேண்டாம்' என்று சொன்னதுதான் தாமதம், பள்ளியின் கண்ணியம் காப்பாற்றாமல் போய்விடுமோ என்கிற அச்சம் கொள்ளும் வகையில் சலசலப்பு கூடுதலானது.


இந்த சலசலப்புக்கிடையில் அப்துல் காதர் மதனி மைக் முன் நின்று பள்ளியின் கண்ணியம் குறித்தும், ஒற்றுமைக் குறித்தும் உரையாற்றத் தொடங்கிய போதுதான் அமைதி நிலவியது.



அதன் பின், மீண்டும் யூனுஸ் எழுந்து ஊர் ஒற்றுமைதான் நமக்கு முக்கியம். இந்த ஆன்டி ஜமாஅத் என்று சொல்லப்படும் முஸ்லிம் ஜமாஅத்தை கலைத்து விட்டு இதில இணைய தயார் என்றால் நான் எல்லாவற்யையும் விட்டுக் கொடுக்கிறேன். அவர்களும் இந்த இஸ்லாமிய ஐக்கிய ஜமாஅத் சார்பில் அங்கம் வகித்து இந்த தேர்தலில் போட்டியிடலாம் என்று கூறினார்.


இதன்பின் எழுந்த எதிர்ப்பாளர் எனறு அறியப்பட்ட மேற்படி ஆண்டி ஜமாஅத்தின் முக்கிய நிர்வாகி ஹமீது கவுங் எழுந்து அந்த பழைய ஜமாஅத்தை நாங்கள் கலைத்துவிட்டோம் என்று கூறியவுடன் எல்லோர் முகத்திலும் மகிழ்ச்சி படர்ந்தது. அதன்பின் அதன் இன்னொரு நிர்வாகியான மாலிமார் இதற்கு (ஜமாஅத்திற்கு) ஆதரவு தெரிவிக்கிறோம் ஒன்றுபட்டு செயல்படுவோம், ஊர் முன்னேற்றத்திற்கு பாடுபடுவோம் என்று சொன்னார்.


மிகுந்த பிரச்சினைகளை முன்னோக்கி எதிர்பார்த்த இந்த பொதுக்குழு எதிர்ப்புகளை முறியடித்து வரலாற்று சிறப்பாய் தன் பதிவினை பதித்துக் கொண்டது.

மனமுதிர்ச்சியும் மறுமலர்ச்சியும்


பல பிரச்சினைகளை எதிர்நோக்கி கூட்டப்பட்ட இஸ்லாமிய ஐக்கிய ஜமாஅத்தின் பொதுக்குழு வரலாற்று முக்கியத்துவம் பெற்றது. என்றும் எதிர்ப்பவர்கள் என்று அறியப்பட்ட ஆன்டி ஜமாஅத் என்றழைக்கப்படும் நிர்வாகிகள் இன்று இஸ்லாமிய ஐக்கிய ஜமாஅத்துடன் இணைந்தனர். 

தலைவர் யூனுஸ் கேட்டு கொண்டதற்கிணங்க இவர்கள் அனைவரும் ஜமாஅத் அலுவலகத்திற்கு வருகை புரிந்து அனைவருடனும் கைகுலுக்கி தேனீர் அருந்தினர். ஊர் நலனில் அக்கரை கொண்டு இன்றைய பொதுக்குழுவில் ஏற்பட்ட மனமுதுர்ச்சி புதிய மறுமலர்ச்சியை இறையருளால் ஏற்படுத்தும் என்கிற நம்பிக்கை இப்போது எல்லோர் மனதிலும்.

சனி, 17 ஜனவரி, 2009

நல்லாசிரியர் விருது வழங்க கதிரேசன் யோசனை


பரங்கிப்பேட்டை ஷாதி மஹாலில் இன்று கல்வி ஊக்குவிப்பு குறித்து நீயா? நானா? மாதிரி விவாத கருத்தரங்கம் நடைபெற்றது. இதில் அரங்கு நிறைய ஏராளமானோர் பங்கேற்றனர். இதில் இறுதியாக கருத்தரங்கத்தை நிறைவு செய்து பேசிய பேராசிரியர் கதிரேசன், இது ஒரு மாதிரி நிகழ்ச்சி அல்ல! ஒரு முன்மாதிரி நிகழ்ச்சி என்று கருத்ரங்கத்தையும் கல்விக்குழுவையும் பாராட்டி பேசினார்.  

ஜமாஅத் மற்றும் கல்விக்குழு தொடர்ந்து கல்விக்கு முக்கயத்துவம் அளித்து வருகிறது என்றும் அதனடிப்படையில் ஆண்டுதோறும் சிறந்த ஆசிரியர்களை தேர்வு செய்து நல்லாசிரியர் விருதினை கல்விக்குழு சார்பாக வழங்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டர்.

நீயா? நானா? காரசாரமான வாத-விவாத நிகழ்ச்சி!

முன்னெப்பொழுதும் நடந்திராத புதுமையான நிகழ்ச்சியாக இருந்தது மஹ்மூதியா ஷாதி மஹாலில் இன்று நடந்தேறிய நீயா? நானா? மாதிரி கல்வி வாத-விவாத நிகழ்ச்சி. பரங்கிப்பேட்டை கல்விக்குழு ஏற்பாடு செய்திருந்த இந்த புதுமை நிகழ்ச்சி பரங்கிப்பேட்டை மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

காலை சரியாக 9.30 மணிக்கு தொடங்கிய இந்நிகழ்ச்சிக்கு பேரூராட்சி தலைவரும் ஜமாஅத் தலைவருமான முஹமது யூனுஸ் தலைமை தாங்கினார். கல்விக்குழு தலைவர் ஹமீது மரைக்காயரின் வரவேற்புரையுடன் தொடங்கியது. மாணவ-மாணவிகள், ஆசிரியர்கள், பெற்றோர் என மூன்று அணிகள் மேடையில் வீற்றிருக்கு நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்கள் அ.பா. கலீல் பாகவியும், ஹமீது மரைக்காயரும்.

எங்களை பெற்றோர் ஊக்கப்படுத்துவதில்லை; ஆசிரியர்கள் நட்புடன் நடந்து கொள்வதில்லை என்று மாணவர்கள் ஒரு புறம் குற்றம் சாட்ட, நாங்கள் தரும் செல்லத்தினைக்கூட தவறாக (சாதகமாக) பயன்படுத்திக் கொள்கிறீர்கள் என்று மாணவர்மீது பெற்றோர் குற்றம் சாட்ட மாறி மாறி வாத விவாதங்கள் சூடு பிடித்தது.

'ஏன் சார்... நாங்க தப்பு செய்தா திருத்தாம எங்கள அடிக்கிறீங்க?' என்று மழலை குரலில் சின்ன வாண்டு ஒன்று விவாதத்தில் குரல் எழுப்பியதும் அரங்கம் அதிர கைதட்டல் ஒலித்தது.

இறுதியாக விவாவதங்களுக்குப் பிறகு இறுதியுரையாக ஆசிரியர் இஸ்மாயில் மரைக்காயர் மற்றும் பேராசிரியர் டாக்டர் கதிரேசன் சிறப்புரையாற்றி நிகழ்ச்சியில் முடித்து வைத்தார்கள். இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற சிறப்பு விருந்தினருக்கும் பங்கேற்ற ஆசிரியர்கள், பெற்றோர் மற்றும் மாணவ-மாணவியருக்கு பரிசும் வழங்கப்பட்டது.


வியாழன், 15 ஜனவரி, 2009

தலைநகரத்தில், ஓரு தேவை...


கடந்த மாதத்தில் ஒரு நாள், நம்முடைய சக செய்தியாளர்நண்பரொருவருடன் அரசு மருத்துவமனை அருகே உரையாடிக்கொண்டிருந்த ஒரு மாலைப் பொழுதில் ...

"இவங்ககிட்ட கேக்கலாமா, வேண்டாமா" என்றதயக்கத்தை முகத்தில் கொண்டு, நாகரீகமான தோற்றத்துடன்அங்குமிங்கும் உலாவிக் கொண்டிருந்த வெளியூர் அன்பரொருவர்,தயக்கத்தை விட்டொழித்து இறுதியில் கேட்டே விட்டார்,

"சார், யூரின் பாஸ் பண்ண இங்கே டாய்லெட் எங்கே இருக்கு?
இ..ங்...கே அந்த வசதி இல்லே, வாங்க என் ஆபிஸூக்கு,அங்கிருக்கும் டாய்லெட்ட நீங்க யூஸ் பண்ணிக்கோங்க"

என்ற நமது சக செய்தியாளர் நண்பரின் அழைப்பிற்குநன்றி சொல்லிவிட்டு அப்போது வந்த 5A பஸ்ஸில் ஏறிஅவர் சிதம்பரம் நோக்கி சென்று விட்டார்.

பரங்கிப்பேட்டை மின்வாரிய அலுவலகத்திற்கு, மருத்துவமனைக்கு,பத்திர பதிவு அலுவலகத்திற்கு வரும் கிராமத்து மக்களுடன்பரங்கிப்பேட்டையின் தலைநகரத்துக்கு அவ்வப்போது வரும் உள்ளூர்மக்களும் தங்களது அவசர தேவைகளுக்காக நீண்ட நெடுங்காலமாகஅரசு மருத்துவமனையை ஒட்டியுள்ள (நெல்லுக்கடை தெருவுக்கு செல்லும்வழியான அந்த) சந்தை பயன்படுத்தி வந்ததால், அது "ஏகாம்பர ஆசாரி சந்து"என்ற தனது சொந்த பெயரினை இழந்து, "மூத்திர சந்து" என்ற சோகப்பெயரினைதாங்கி நிற்கின்றது.

சரி, இதற்கு தீர்வு தான் என்ன? என்ற வினாவுக்கு, அரசு மருத்துவமனையில்அதன் இறுதி பகுதியில், அதாவது கச்சேரி தெருவின் மத்தியில் ஒரு கட்டணகழிப்பறை அமைப்பதுடன் மட்டுமல்லாது, ஏகாம்பர ஆசாரி சந்தில் சிறுநீர்கழிக்கக்கூடாது என்ற விழிப்புணர்வுடன் கூடிய எச்சரிக்கை பலகை அமைப்பதுதான் தீர்வாக அமையலாம். அப்போது தான் நம் எல்லோர் மனதில் இருக்கும்,மேலும் கிரஸண்ட் நல்வாழ்வு சங்கமும், தனது ஐம்பெரும் விழாவில் பொதுமக்களுக்கு வேண்டுகோளாக விடுத்திட்ட "CLEAN PORTONOVO, GREEN PORTONOVO" என்ற கனவு கை வரப்பெறும்.

தொடர்புடைய அரசு துறை அதிகாரிகள் முயற்சி எடுப்பார்களா? என்பதே பொதுமக்களின் எதிர்பார்ப்பாக இருக்கின்றது.

நன்றி: பரங்கிப்பேட்டை செய்தி மடல்

பரங்கிபேட்டையில் ஒரு நீயா நானா நிகழ்ச்சி

நமது மாணவர்களின் கல்வி தரத்தை பற்றிய கவலை நாளுக்கு நாள் ஆழமாகி கொண்டே செல்கிறது. அட்வைஸ் என்ற பெயரில் அல்லாமல் வித்தியாசமான ஒரு நிகழ்ச்சி மூலம் அவர்களின் நிலை உணர்த்தி அவர்களை ஊக்கபடுத்திடவும், கவனிக்க வேண்டிய முக்கிய குழுவாக உள்ள ஆசிரியர்களும் பெற்றோர்களும் அதில் சேர்த்து கொள்ளவும் கல்விக்குழு முடிவு செய்தது.

விஜய் டிவியில் நடைபெறும் ஆரோக்கியமான நிகழ்ச்சியான நீயா நானா போன்று ஆசிரியர்கள் பெற்றோர்கள் மற்றும் மாணவர்களை மேடையில் அமர்த்தி அவர்களுக்கிடையேயான கலந்துரையாடலை நிகழ்ச்சியாக வழங்க தீர்மானித்துள்ளது.


இன்ஷா அல்லாஹ், வருகிற 17.01.9 சனிக்கிழமை காலை 9 மணிக்கு ஷாதி மஹாலில் நிகழ்ச்சி நடைபெறும்.


இஸ்லாமிய ஐக்கிய் ஜமாஅத் மற்றும் பேருராட்சி மன்ற தலைவர் முஹம்மத் யூனுஸ் அவர்கள் தலைமை தாங்க, ஐந்து பள்ளிகளின் தலைமைஆசிரியர்கள் முன்னிலை வகிக்க அண்ணாமலை பல்கலைகழக கடல் வாழ உயிரின ஆராச்சி மையத்தின் பேராசிரியர் டாக்டர் கே.கதிரேசன் அவர்களும் கலிமா பள்ளியின் தாளாளர் ஜனாப். ஐ. இஸ்மாயில் அவர்களும் சிறப்பு விருந்தினர்களாக இருப்பதாக நிகழ்ச்சி அமையும். குவைத் பரங்கிபேட்டை இஸ்லாமிய பேரவை தலைவர் ஜனாப். அ. பா. கலீல் அஹ்மத் பாகவீ அவர்கள் நிகழ்ச்சியை சிறப்பாக நடத்தி தர உள்ளார்.


காலை 9 மணிக்கு முன் வரும் முதல் நூறு மாணவர்களுக்கு நுழைவு பரிசு உண்டு.

பல்வேறு சிந்தனையுடைய ஆசிரியர்களும், மாணவர்களும், பெற்றோர்களும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தங்கள் கருத்தை பதிக்க இப்போதே ஆர்வமாக பெயர் கொடுத்து உள்ளனர்.


உங்களில் யாரேனும் மற்றும் வெளிநாடு வாழ சகோதரர்கள் தங்கள் குடும்பத்தினர் மற்றும் தங்கள் பிள்ளைகள் இந்த ஆரோக்கியமான வித்தியாசமான நிகழ்ச்சியில் கலந்து கொள்ள விரும்பினால் உடனே கல்விகுழுவை தொடர்பு கொள்ளுங்கள். (9894321527, 9894838845, 9994106594) அனைவரும் கலந்து கொண்டு சிறப்பிக்க அன்புடன் கேட்டுக்கொள்கிறது கல்விக்குழு.

நல்லவை எதுவும் நடப்பதில்லை என்று நாம் குறைபட்டுகொள்வது வழக்கம். நல்லது ஒன்று நடக்கும் போது அதில் பங்களிக்காமல் இருப்பதின் மூலம் அப்படி குறைசொல்வதற்கான தார்மீக தகுதியை இழந்தவர்களாக நாம் ஆகவேண்டாமே...

புதன், 14 ஜனவரி, 2009

ஹாஜிகள் வருகை

கடந்த ஆண்டு இறுதியில் 29/11/08 அன்று புனித ஹஜ் பயணம் சென்று இருந்த 25 ஹஜ்ஜாஜிகளும் அல்லாஹ்வின் கிருபையால் புனித ஹஜ் பயணத்தை முடித்து கொண்டு இன்று காலை சரியாக 9.00 மணி அளவில் ஜாமியா மஸ்ஜித் மீராப்பள்ளி வந்து அடைந்தனர்,இவர்களை வரவேற்க ஏராளமான ஊர் மக்கள் மீராபள்ளியில் திரண்டு வந்து ஹாஜிகளை ஆரத்தழுவி முலாகத் செய்து கொண்டனர்.
தகவல் நன்றி : irfan ahamed, CWO

செல்வியின் செவ்வி! - MYPNO Exclusive!


புவனகிரி சட்டமன்ற உறுப்பினர் திருமதி. செல்வி இராமஜெயம் அவர்கள் MYPNO.COM இணையத்திற்கு பிரத்யேகமாக அளித்த சிறப்பு பேட்டி.... இன்னும் ஒரு சில தினங்களில்.

பொங்கல் ஓ பொங்கல்

கல் தோன்றி மண் தோன்றா காலத்திற்கு பின்னாலே தோன்றிய மற்ற குடிகளை போல வாழ்ந்து வரும் தமிழ் பெருமக்களாகிய நாம் சிறப்புற கொண்டாடும் காவிய விழா பொங்கல்.
எமது சிறு வயதுகளில் பொங்கல் என்பது இப்போது போல் ஒரு சிறு விழா அல்ல. பெரும் கேளிக்கைக்கும், பிராவகமெடுத்து பொங்கும் சந்தோஷமுமாக ஒரு திருவிழாவாக பொங்கல் இருந்ததை (நான் கூட) கண்டுள்ளேன். அப்போதே எனது பாட்டன் தனது கால பொங்கல் வைபவ நிகழ்வுகளை வர்ணிக்கும் போது ஏக்கமாக இருக்கும்.


சிறுபிராயம் என்பதனால் நம்மை மிகவும் கவரும் மாட்டுப்பொங்களில் மாடுகள் கூட எங்களுடன் கூடி களிப்பதாக (கொடுமை படுத்துகிறோம் அதை) பதிந்த நம்பிக்கை இன்னும் தேயவில்லை.

எங்களின் சிறு விளையாட்டு பானைகளில் பொங்கி வரும் சிறு அழுக்கு கூழை ஆளுக்கு இரண்டு மில்லிலிட்டர் பகிர்ந்து குடிப்பதில் பொங்கல் தனது மதிப்பை பெருந்தன்மையாக பெற்றுக்கொள்ளும்.

மற்றைய பண்டிகைகளை போல் இல்லாமல் இதற்க்கு வரும் ஐந்து நாட்கள் லாங் லீவ் கூட பொங்கலை நாம் நேசிப்பதற்கு காரணமாக இருந்திருக்குமோ என்னவோ..

ஆனால் தற்போதைய பொங்கல் கொண்டாட்டம் அச்சமூட்டுவதாக உள்ளது... தற்போதைய சிறார்கள் ஓடி ஆடி பாடி திரிவதை விட்டு இரண்டுக்கு இரண்டு சைஸ் பெட்டிக்குள் தங்கள் இயலுமையை (potential) தொலைத்த்விட்டு சப்பானிகளாய் முடங்கி போய் ஸ்ரேயாவையும், படிக்காதவனையும், அபத்த காமடிகளையும் வாய் பிளந்து பார்த்துக்கொண்டு தங்களது பொழுதுகளை கழிப்பதை பார்க்கும் பொது அச்சமாகத்தான் உள்ளது. அதை விட ஆபத்து முன்னுதாரணமாக திகழ வேண்டிய பெற்றோர்கள் தங்கள் வேலைய்களை விட்டு விட்டு தாங்களே இந்த கூத்துக்களை பார்த்து கும்மியடிப்பது தான்.

கிராமங்கள் கூட இதற்க்கு விதிவிலக்கு இல்லாத களமாக மாறிவிட்டது இன்னும் கொடுமை.

ஐயாயிரம் ஆண்டுகள் முன்பு, எந்த மதமும் சாராமல் தஸ்யுக்களாக சிந்து சமவெளியில் வாழ்ந்த எமது பெரு முன்னோர்களின் பிற்கால அடையாள மிச்சமாக எஞ்சியிருப்பதாக தோன்றும் இந்த அழகிய நிகழ்வு இன்று அதன் சாரம் இழந்து மற்றொரு விடுமுறை நாளாக மாறிவிட்ட கொடுமை கண்டு மனம் கனக்கிறது.

இந்த நாளில் கேமரா எடுத்து கொண்டு அலைந்ததில் ஊரின் இரண்டு மூன்று தெருமுக்குகளில் கரும்பு விற்பனை சூடு பிடித்து ஓடி கொண்டிருந்தது. அகரம் அருகில் சில பெண்கள் புது பானை சுமந்து நாளை பொழைப்பை பற்றி பேசி கடந்து சென்றனர். வழக்கம் போல் டாஸ்மாக்இல் விற்பனை படுஜோர். நான் நடிகையா வராமல் இருந்தால் கண்டிப்பாக டாக்டர் ஆகா வந்திருப்பேன் என்று ஒரு வீட்டில் இருந்து ஒலித்த so called நடிகையின் குரலில் மறைந்து அமிழ்ந்து போய் கொண்டிருந்தது பொங்கல் கொண்டாட்டம்.
நல்லவேளை அப்போதெல்லாம் எங்கள் வீட்டில் டி.வி. இல்லை.
பொங்கலோ பொங்கல்.

ஞாயிறு, 11 ஜனவரி, 2009

பாலங்கள் இரண்டு

இந்த படத்திற்கு விளக்கம் தேவை இல்லை என்று முன்பு ஒரு பத்தரிகையில் தொடர் கார்டூன் வரும். நாம் ரசிப்போம். அப்படி ஒரு தலைப்பு சூட்ட பொருத்தமான இந்த படங்கள் நமது ரசிப்பிற்கு அல்ல.
சற்று உற்றுப்பார்த்தால் அருவருப்பான, தேசதுரோக, அரசியல்வாதிகள் மற்றும் அதிகாரிகளின் ஆணவம் மற்றும் மக்களின் மீதான அலட்சியப்போக்கு மெகா சைஸில் தெரியும். தெரிகிறதா?
இன்றும் வழக்கம் போல அத்தனை வாகனங்களும் அதே வேகம் குறையாமல் இந்த நொண்டி பாலத்தை கடந்து சென்று கொண்டு தான் உள்ளன. இதற்க்கு முன் இரண்டு தடவைகள் இந்த பாலம் குறித்து இதே வலைப்பூவில் பதிவிட்டும் எந்த பாயிதாவும் இல்லை. ( http://mypno.blogspot.com/2008/03/blog-post_27.html & http://mypno.blogspot.com/2008/11/blog-post_8168.html )
கும்பகோணம் பள்ளி தீவிபத்து, சரிகாஷா ஈவ்டீசிங் மரணம் போல இங்கும் எதாவது பெரிய சம்பவங்கள் நிகழ்ந்தால்தான் இவர்கள் தூக்கத்திலிருந்து விழிப்பார்கள் போல.

பாலம் இரண்டு

" வர்ர்ர்ர் ரூரூம்ம்ம்ம் ஆனா வராஆஅஆஆ...து" என்று ஏதோ வடிவேலு காமடி ரேஞ்சில் போய்கொண்டு இருக்கும் இந்த பாலம் தான் பரங்கிபேட்டை மற்றும் அதன் சுத்துப்பட்டு அத்தனை கிராமங்களுக்கும் கனவுப்பாலம்.

முஹம்மது யூனுஸ், பஜுலுர்ரஹ்மான் போன்றவர்கள், கொடி பிடிக்கும் கட்சிகள் முதல் தெருமுக்கு ஷாஜகான் வரை அத்தனை பெரும் கனவு கண்டு முட்டி மோதி முயற்சி செய்து ஒரு வழியாக ஒன்பது கோடி செலவில் பல வருடங்களுக்கு முன்பு sanction ஆகிய பாலம், இன்று கிட்டத்தட்ட பதினாலு கோடி ப்ராஜக்டாக வளர்ந்து நிற்கிறது.
நாம் சென்று பார்த்த போது ஆற்றின் கால்வாசி தூரம் மணல் அடித்து வேலை மிக ஜரூராக நடந்து கொண்டு இருந்தது. அதன் முடிவான இடத்தில் நின்று அக்கரையை ஏக்கத்துடன் பார்த்தபோது தொட்டு விடும் தூரம் தான் என்ற நம்பிக்கை துளிர்த்தது
இந்த பாலம் வந்து விட்டால் "கொல்லைக்கி போய் ரெண்டு கொத்து கருவாப்பெளை பறிச்சிட்டு வா என்பது போல் கிள்ளைக்கு போய் ரெண்டு மூட்ட அரிசிய வண்டியில போட்டுட்டு பத்து நிமிஷத்துல வா ராசா" என்று நம் வீட்டு பெண்கள் நம் சிறார்களை இயல்பாய் ஏவக்கூடிய வசதியான நிலை வரலாம்.
சில பல வருடங்களுக்கு முன்பு சமாளிக்க முடியாது என்று அடாசு ரேட்டுக்கு முன்னோர்களின் அக்கறையான அக்கறை நிலங்களை விற்றவர்கள், இப்போது யோசிக்க கூடும். இப்போது நிலம் இருந்தால் மட்டும் என்ன அவையும் மனைபிரிவுகளாக மாறி விடும்.
சிதம்பர பயணத்திற்கு கிட்டத்தட்ட பன்னிரண்டு கிலோ மீட்டர், பெட்ரோல் மற்றும் நேர மிச்சம் தரும் இந்த பாலம் இத்தனை லேட்டாக வந்தாலும் லேட்டஸ்ட்டாக வரும் என்பது பொதுமக்களின் எதிர்பார்ப்பு.

வெள்ளி, 9 ஜனவரி, 2009

இறப்புச்செய்தி

பரங்கிபேட்டை தில்லி சாஹிப் நகர் புது நகரை சேர்ந்த பஷீர் அவர்களின் மருமகனார் ஷம்சுத்தீன் அவர்கள் மர்ஹூம் ஆகி விட்டார்கள். அன்னாரின் ஹக்கில் இறைவனிடம் துஆ செய்வோம்.

வியாழன், 8 ஜனவரி, 2009

சில எண்கள் - சில தகவல்கள்


6751643600 - 2009 ஜனவரி 1 அன்று உலக மக்கள் தொகை (குத்து மதிப்பாய் தாங்க)


50 கோடி ரூபாய் - இந்த வருடம் விளம்பரத்தில் மட்டும் டோனி சம்பாத்தித்த தொகை. (வாழ்க புத்திசாலி ரசிகர்கள்)


10000 ரூபாய் - ஒரு ரேஷன் கார்டை காட்டினால் போதும் இவ்வளவு கிடைக்கும் என்று சொல்லப்படுகிறது. உங்க ஊரில் அல்ல திருமங்கலமான ஊரிலாம் .... ( எல்லாம் இடை தேர்தல் மாயஜாலம்).


80000000 - ஒரே நாளில் இத்தனை முறை இன்டர்நெட் விளையாட்டில் செருப்படி பட்ட ஒரே தானை தலைவர் - வேறு யார் ... அவர் தான்.


8000 கோடி ரூபாய் - சத்யம் கம்ப்யூட்டர் நிறுவனர் மற்றும் நிர்வாக இயக்குனர் ராமலிங்க ராஜூ செய்துள்ள மோசடியின் அளவாக கூறப்படுவது..


ஜனவரி 8 முதல் 18 வரை - சென்னையில் 32 ஆவது மாபெரும் புத்தக கண்காட்சி. இந்த ஆண்டு 1 லட்சத்து 75 ஆயிரம் சதுர அடி பரப்பில், 588 அரங்குகள் அமைக்கப்படுகின்றன. 512 நிறுவனங்கள் தங்கள் நூல்களை விற்பனைக்காக வைக்கின்றன.

ஜனவரி 8, 2008 - இன்று சுமார் 53171 நோக்கர்கள் வரை பார்வையிட்டுள்ள இந்த வலைப்பூ துவக்கப்பட்ட நாள். இன்றுடன் சரியாக ஒரு வருடம். எல்லா புகழும் இறைவன் ஒருவனுக்கே

திங்கள், 5 ஜனவரி, 2009

குவைத் பரங்கிப்பேட்டை இஸ்லாமிய சங்கம் (KPIA)

வெளிநாடுகளில் வாழும் பரங்கிப்பேட்டை சகோதரர்கள் இறைவன் அவர்களுக்கு அருளிய அழகிய இயல்புகளை துணையாய் கொண்டு தாம் வாழும் ஊர்களில் எல்லாம் ஊர்மக்கள் நலனுக்காக அமைப்புக்கள் துவக்கி அழகிய முறையில் நடத்தி வருவதை நாம் அறிவோம். அவ்வாறான அமைப்புக்களில் தற்போது ஊர் வந்திருக்கும் குவைத் பரங்கிப்பேட்டை இஸ்லாமிய சங்கத்தின் (KPIA) தலைவர் ஜனாப் அ.பா.கலீல் அஹமது பாகவி செயலாளர் ஹாஜி. எஸ். குலாம் ஜெய்லான் மியான் பொருளாளர் இஸட். ஹபீபுல்லாஹ் மரைக்காயர் அவர்களை மைபிஎன்ஓ சார்பாக சந்தித்தோம்..

கேள்வி : தங்களின் அமைப்பின் நோக்கம் மற்றும் செயல்பாடுகள் பற்றி.... ?
ஊர் நலனை மட்டுமே நோக்கமாக கொண்டு நாங்கள் செயல்படுகிறோம். குவைத் பரங்கிப்பேட்டை ஜமாஅத் என்ற பெயரில் முன்பு செயல்பட்டு வந்த அமைப்புதான் 3 வருடங்களுக்கு முன்பு குவைத் பரங்கிப்பேட்டை இஸ்லாமிய சங்கமாக மாற்றம் பெற்று செவ்வனே செயல்பட்டு வருகிறோம். அல்லாஹ்வின் கிருபையால் இது 4 வது வருடம்.

கேள்வி : உறுப்பினர்கள் எத்தனை பேர்? அவர்களின் ஒத்துழைப்பு பற்றி .... ?
குவைத்தில் நமது பரங்கிப்பேட்டைக்காரர்கள் சுமார் 200 - 250 பேர் இருக்கலாம். எங்கள் அமைப்பில் சுமார் 60 பேர் அங்கத்தினர்களாக இருக்கிறார்கள். மாதா மாதம் இரண்டாவது வெள்ளிக்கிழமை கூடுகிறோம். மாத சந்தா 1 அல்லது அரை தினார். இங்கே பெரிய அமைப்பான குவைத் அய்யம்பேட்டை அமைப்பை (1500 அங்கத்தினர்கள்) போலவோ, மற்ற ஊர்களில் உள்ள நமதூர் அமைப்புக்கள் போலவோ அல்லாமல், துவக்கநிலை அமைப்பான எங்களுக்கு அத்தனை பொருளாதார பலம் இல்லையன்றாலும், எங்கள் சேவைகளை திட்டமிட்டும் தீர்க்கமானதாகவும் அமைத்துக்கொள்ள முயற்சித்து வருகிறோம்.

கேள்வி : என்னென்ன களங்களில் தங்களின் பணி உள்ளது.. ?
இதுவரை சுமார் 13 திருமணங்களுக்கு உதவி, 3 வருடங்களாக அனைத்து பள்ளிகளுக்கும் நோன்பு கஞ்சி முறை, சில பள்ளிவாசல் மின்கட்டணம், 3 வருடங்களாக பித்ரா - இவை அனைத்தும் ஊரின் பொதுத்தலைமையான இஸ்லாமிய ஐக்கிய ஜமாஅத்துடன் இணைந்து செய்யப்பட்டு வந்துள்ளது. இவை அல்லாமல், உள்ளூர் (குவைத்) தபால் சேவை, வேலைவாய்ப்புக்கள் பற்றிய தகவல்களை பகிர்வது, மற்றும் கல்வியில் சிறார்களுக்கு ஆர்வமூட்டுதல் போன்றவற்றை செய்து வருகிறோம்.

கேள்வி : வருங்கால திட்டங்கள்.....?
உறுப்பினர்களின் ஒத்துழைப்போடு கல்வி போன்ற நிலையான நற்காரியங்களுக்காக ஒரு நிலப்பிரிவை, அமைப்பின் பேரில் வாங்கும் திட்டம் ஒன்று உள்ளது. இறைவன் நாடினால்... நல்லவை நடக்கும்.

இன்ஷா அல்லாஹ் நல்லவை நடக்கும் என்ற வாழ்த்துக்களுடன் நாம் விடைபெற்ற போது சகோதரர்கள் முக்கியமாக சொன்ன வி­டயம் உறுப்பினர்களின் பங்களிப்பை பற்றியது.
அவரவர் வேலைபளுவினால் கூட்டங்களுக்கு வராமல் இருக்கும் சகோதரர்கள் அவர்களின் பங்கினை இன்னும் சிறப்பாக செய்தால் அமைப்பு இன்னும் வலுப்பெற்று இன்னும் பல சாதனைகளை படைக்கலாம் என்றார்கள்.

இன்ஷா அல்லாஹ் இனி நிகழும் அந்த மாற்றம் என்று துஆ செய்தவர்களாக விடைபெற்றோம்.
இறைவனுக்காக இவர்கள் செய்யும் இந்த செயல்களுக்கான கூலியை அல்லாஹ் ஈருலகிலும் தந்தருள்வானாக.

இஸ்லாமிய ஐக்கிய ஜமாஅத்தின் செயற்குழு கூட்டம்

பரங்கிப்பேட்டை இஸ்லாமிய ஐக்கிய ஜமாஅத்தின் செயற்குழு கூட்டம் நேற்று 04.01.2009 ஞாயிறு அன்று மாலை அஸர் தொழுகைக்கு பிறகு மஹ்மதியா ஓரியன்டல் பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. வழக்கம் போல் இல்லாமல் நிறைய எண்ணிக்கையிலான செயற்குழு உறுப்பினர்கள் மற்றும் கிரீன் பாஸ் ஹோல்டர்களான வெளிநாட்டு வாழ் சகோதரர்கள் வந்திருந்தனர்.

கடந்த மூன்றாண்டுகளாக (யூனுஸ் நானா தலைமையில் இது 9 ஆண்டுகள்) செயல்பட்டுவந்த ஜமாஅத்தின் பதவிக்காலம் அடுத்த மாதம் முடிவடைவதால் இந்த ஜமாஅத்திற்கு இது கடைசி செயற்குழுவாகும். இந்த வருடத்திற்க்கான கணக்கு ஜனாப் ஆடிட்டர் இலியாஸ் நானா அவர்களால் வாசித்துக்காண்பிக்கப்பட்டு உறுப்பினர்களால் சிற்சில கேள்விகளுடன் ஏற்கப்பட்டது.

அடுத்து இது இந்த ஜமாஅத்திற்கு கடைசி செயற்குழுவாக இருப்பதால் தலைவர் எழுந்து தனக்கு ஒத்துழைப்பளித்த அனைவருக்கும், நிர்வாககுழு, செயற்குழு, வெளிநாடு வாழ் அமைப்பினர் மற்றும் சகோதரர்கள், மற்றும் ஊர் பொதுமக்கள் அனைவருக்கும் நன்றி தெரிவித்துக்கொண்டார். கணக்கு வழக்குகளில் எந்த சிறு தெளிவு தேவைப்பட்டாலும், எந்த நேரத்திலும் ஜமாஅத்தில் வந்து தெளிவுசெய்துக்கொள்ளும்படியும், கணக்கு வழக்கு மட்டுமல்லாமல், எந்த விட­யமானாலும் நேரில் கேட்கலாம் எனவும் தயவு செய்து பின்னால் பேசுவதை தவிர்க்கும்படியும் கேட்டுக்கொண்டார்.

பிறகு, ஜமாஅத்தின் பைலாவில் விதிமுறை எண் 9 ல் (தேர்தல்) சில மாற்றங்கள் (ஜமாஅத் தலைவராக போட்டியிடுபவர் போஸ்டர், ஆட்டோ, நோட்டிஸ் விளம்பரம் மற்றும் தனிநபர் தாக்குதலை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும், தனிப்பட்ட முறையில் மக்களை சந்தித்து மட்டுமே ஆதரவு தேட வேண்டும், வெளிநாடு வாழ் சகோதரர்களுக்கு வாக்கு வழங்க இணையத்தின் (வெப் கேமரா) மூலம் வசதி போன்றவை) முன்வைக்கப்பட்டு ஏற்கப்பட்டது.

பிறகு, அடுத்த ஜமாஅத்தினை எங்ஙணம் தேர்ந்தெடுப்பது என்பது குறித்த விவாதம் துவங்கியது.
வெளிநாடு வாழ் சகோதரரான ஜனாப். ஜுல்பிகாதர் அலி தேர்ந்தெடுக்கப்படும் தலைவர் தனது நிர்வாகத்தை தானே தேர்வு செய்யும் தற்போதைய முறை மாறி நிர்வாகிகளும் பொதுமக்களாலேயே தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்ற தனது கருத்தை முன்வைத்தார். இதற்கு பிறகு பல விதமான கருத்து பரிமாறல்கள் நடைபெற்றன. இதுவிட­யமாகவும் தேர்தல் எப்படி, என்று, எப்போது என்பது குறித்து ஒரு கருத்து எட்டப்படாததால் மக்ரிபு தொழுகைக்கு பிறகும் கூட்டம் தொடர்ந்தது.பிறகு, தேர்தலை செயல்படுத்தும் அதிகாரிகள் 5 பேரின் பெயர்கள் அறிவிக்கப்பட்டது.

பிறகு இலக்கின்றி நீண்ட வாத விவாதங்களுக்கு பிறகு ஜமாஅத் தலைவர் தனது நிர்வாகிகளை தானே தேர்ந்தெடுப்பதா அல்லது பொதுமக்களா என்ற விடயத்திற்கு முடிவு இன்ஷா அல்லாஹ் வருகின்ற 18 .01. 2009 ஞாயிறு அன்று காலை 10 மணிக்கு நடைபெறும் பொதுக்குழுவில் தீர்மானத்திற்கு விடப்படும் என்கிற தீர்மானங்கள் ஏற்பிற்கு பிறகு இஷா தொழுகை க்கு வெகு நேரம் கழித்தே கூட்டம் நிறைவுற்றது.

நாம் செய்ய வேண்டியது ஒன்று பாக்கியுள்ளது. அல்லாஹ் நமக்கு வழங்கியுள்ள நமது கட்டமைப்பு எனும் மிகப்பெரும் அருட்கொடை இறைவனும் அவனது தூதரும் காட்டித்தந்த வழியின்படி மேம்பட்டு சிறக்கவும் அதில் ஷைத்தான் தனது வேலையை காட்டிவிடாமல் இருக்கவும் மனம் உருகி இறைவனிடம் பிரார்த்தனை செய்வதுதான் அது.

ஞாயிறு, 4 ஜனவரி, 2009

இந்தியா: கைபேசி சேவைக்கட்டணங்கள் 30% குறைகிறது.

சனிக்கிழமை, 03 ஜனவரி 2009 18:55


மொபைல் போன் நிறுவனங்களிடம் வசூலிக்கும் கட்டணத்தை கணிசமாகக் குறைக்க தொலைத் தொடர்பு ஆணையமான 'டிராய்' முடிவு செய்துள்ளது.

இதனால், மொபைல் போன் சேவை கட்டணங்கள் 30 சதவீதம் வரை குறைய வாய்ப்புள்ளது.

தொலைபேசி நிறுவனங்களைக் கட்டுப்படுத்தும் அமைப்பு மத்திய அரசின் 'டிராய்'.

மொபைல் இணைப்பு வழங்க மொபைல் நிறுவனங்களுக்கு சில கட்டணங்களை விதித்துள்ளது. அதாவது பிஎஸ்என்எல், மொபைல் போனில் இருந்து ஒரு அழைப்பு, வேறு ஒரு நிறுவன மொபைல் போன் இணைப்புக்கு போகிறதென்றால், பி.எஸ்.என்.எல். நிறுவனத்திடம் இருந்து 'கால் டெர்மினேஷன்' கட்டணமாக ஒரு அழைப்புக்கு 30 பைசாவை 'டிராய்' வசூலித்து வருகிறது.

இந்த கட்டணத்தான் இப்போது 13 பைசாவாகக் குறைக்க முடிவு செய்துள்ளது.

இந்த வகையில், உள்ளூர் போன் பேச ஒரு மொபைல் சந்தாதாரர் நிமிடத்துக்கு ஒரு ரூபாய் கட்டணம் செலுத்துகிறார் என்றால், அவர் இந்த கட்டண குறைப்பால் 80 பைசா செலவழித்தால் போதும்.

இதுபோல, தொலைதூர மெபைல் சேவைக்கும் கட்டணத்தை 'டிராய்' குறைக்க திட்டமிட்டுள்ளது. இந்த கட்டணம் 'கேரேஜ்' கட்டணம் என்று அழைக்கப்படுகிறது.

இதை 65 பைசாவில் இருந்து 16 பைசாவாக குறைக்க திட்டமிடப்பட்டுள்ளது.

மார்ச் மாதம் முதல் இந்தக் கட்டணக் குறைப்புகள் அமலுக்கு வரும் என்று தெரிகிறது. சாதாரண தொலைபேசிக்கான கட்டணத்தையும் கணிசமாகக் குறைக்கவிருப்பதாக தொலைத் தொடர்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

நன்றி: தட்ஸ்தமிழ்.

சனி, 3 ஜனவரி, 2009

இறப்புச் செய்தி

நாட்டான் கிணற்று முடுக்கில் மர்ஹீம் முஹம்மத் சித்திக் அவர்களின் மகனாரும், மர்ஹீம் ஹக்கீம், முத்து நானா அவர்களின் மருமகனாரும் S.உதுமான் அலி அவர்களின் தம்பியும், கவுஸ் ஹமீது, சாகுல், முத்து ராஜா இவர்களின் தகப்பனாருமாகிய S.முஸ்தபா மர்ஹீம் ஆகிவிட்டார்கள் இன்ஷா அல்லாஹ் இன்று மாலை 4:00 மணி அளவில் நல்லடக்கம் வாத்தியாபள்ளயில்.
இன்னா லில்லாஹி வா இன்னா இலைஹி ராஜிவூன்.

வெள்ளி, 2 ஜனவரி, 2009

நித்திரைத் தோழர்!

இன்று நடந்த CPI உண்ணாவிரதப் போராட்டத்தில் ஒரு தோழர் சிறப்புரையாற்றிக்கொண்டிருக்கும் போது, எந்த சலனமும் இல்லாமல் அமைதியான தூக்கத்தில் இன்னொரு தோழர்.

ஏன்? எதற்கு? எப்படி?

ஊரில் எப்போதும் பரபரப்பான போக்குவரத்து நிறைந்த கச்சேரி தெரு - சஞ்சிவீராயர் கோயில் தெரு சந்திப்பில் வசதியாக நாற்காலி போட்டு அமர்வது என்பது சாத்தியம் என்றால், அது பெரும்பாலும் கம்யூனிஸ (CPI) தோழர்களாலேயே முடிகிறது. அந்த அளவிற்கு குறைந்தபட்சம் மாதம் ஒரு முறையேனும் பொதுக்கூட்டம், ஆர்ப்பாட்டம், உண்ணாவிரதம் என்று மக்கள் பிரச்சினைகளை பட்டியலிடுகிறது.

அந்த வகையில் இன்று (02-01-2009) கச்சேரி தெரு முனையில், வெள்ள நிவாரணம் வழங்குவதில் முறைகேடு, நெடுஞ்சாலைத் துறையின் அலட்சியப்போக்கு என்று நீண்ட பட்டியலுடன், அவற்றை எதிர்த்து உண்ணாவிரதம் போரட்டத்தை நடத்தியது.

தமிழ்நாடு விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில் நடைபெற்ற இவ்வுண்ணாவிரதத்தில் நகர மற்றும் மாவட்ட நிர்வாகிகள், உறுப்பினர்கள் கலந்து கொண்டு உரையாற்றினர்.

என்னதான் இவர்கள் மக்கள் பிரச்சினைகள் என்று பட்டியலிட்டாலும், இவர்களின் போராட்டங்களைப் பார்த்து மிஸ்டர் பொதுஜனமோ ஏன்? எதற்கு? எப்படி? என்று தலை சொறிந்துதான் செல்கிறார்.

3G - புதிய தொழில்நுட்பம்



கடந்த வாரம் தான் இந்தியாவில் 3ஜி வசதியை அதிகாரபூர்வமாக அறிமுகப்படுத்தி இருக்கிறது நமது மத்திய அரசு. கிட்டத்தட்ட உலகத் திறவுகோல் விழா அது!

3ஜி என்றால் 3rd Generation - 3-வது தலைமுறை தொழில்நுட்பம் என்று அர்த்தம். கம்ப்யூட்டர்களின் அதிவேக இன்டர்நெட் வசதிக்கு பிராட்பாண்ட் இணைப்பைப் பயன்படுத்துவார்கள். அதற்குக் கொஞ்சமும் குறையாத ஹைஸ்பீட் இன்டர்நெட் இணைப்பை செல் போனில் சாத்தியப்படுத்தும் டெக்னாலஜிதான் 3ஜி. 2001-ல் ஜப்பானில் அறிமுகமான இந்த டெக்னாலஜி, உலகம் முழுக்கப் பரவி இப்போதுதான் இந்தியா வந்து சேர்ந்து இருக்கிறது.

3ஜி-யில் வீடியோ கால் வசதி மெகா ப்ளஸ். அதாவது, எதிர்முனையில் பேசுபவர் ஸ்க்ரீனில் தெரிவார். நமது முகமும் அவருடைய ஸ்க்ரீனில் தெரியும். டி.வி. நிகழ்ச்சிகளை மொபைலிலேயே லைவ்வாகப் பார்க்கலாம். வீட்டிலோ, அலுவலகத்திலோ சின்ன கேமராவைப் பொருத்திவிட்டு, அதை மொபைலுடன் இணைத்துவிட்டால், உட்கார்ந்த இடத்திலிருந்தே அங்கு நடப்பவற்றைக் கண்காணிக்கலாம். விரல் நுனியில் பங்கு மற்றும் வானிலை நிலவரங்கள், வேர்ட், பிடிஎஃப் கோப்புக்களை படிக்க முடியும். பிளாக் எழுதுவது ஆர்குட், பேஸ்புக், நண்பர்களுடன் சாட் செய்வது என எல்லாமே சிம்பிள், ஆடியோ, வீடியோ, யூ-டியூப் டவுன்லோடுகள் எக்ஸ்பிரஸ் வேகம். 3ஜி வசதியுடன் வரும் லேப்டாப்களில் 3ஜி சிம்கார்டைப் பொருத்தி, இன்டர்நெட் இணைப்பைப் பெற முடியும். வை-ஃபை வசதி தேடி அலைய வேண்டியது இல்லை.

கிட்டத்தட்ட ஜேம்ஸ்பாண்ட் மொபைல் கணக்கான சங்கதிதான் இது. ஆரம்பத்தில் சேவைகள் காஸ்ட்லியாக இருந்தாலும், சந்தாதாரர்கள் அதிகரித்தால் சாமானியர்களின் மொபைலுக்கும் எட்டும் வசதியாக 3ஜி இருக்கும்!

3ஜி வசதிகொண்ட செல்போன்கள் கடந்த ஆகஸ்ட் மாதமே இந்தியாவில் அறிமுகமாகிவிட்டது. ஆனால், நெட்வொர்க் ஆபரேட்டர்களிடம் இச் சேவை வழங்கும் வசதியில்லை. இப்போதுதான் அதற்கான வாசல் திறந்திருக்கிறது. ஆனால், அதற்குள்ளாகவே ஆப்பிள் ஐ போனில் ஆரம்பித்து மற்ற 3ஜி வசதிகள் கொண்ட செல்போன்களை வாங்கிக் குவித்துவிட்டனர் இந்திய மக்கள்.

3ஜி போன்களின் மைனஸ் என்று பார்த்தால் .... விலை குறைவான செல்போன்களில் இத்தகைய வசதி சாத்தியமில்லை. காரணம், சின்ன ஸ்க்ரீன்களில் இந்த 3ஜி வேகம் சாத்தியமாகாது. டைப் செய்ய வேண்டிய கீ-பேடும் இதில் வசதியாக இருக்காது. டச் ஸ்க்ரீன் அல்லது மெகா சைஸ் ஸ்க்ரீன் கொண்ட போன்களில்தான் இந்த வசதியை அசத்தலாக அனுபவிக்க முடியும். 3ஜி வசதிக்கான கட்டணங்களும் இதுவரை துல்லியமாக நிர்ணயிக்கப்படவில்லை.

3ஜி வசதியை அனுமதிக்கும் சில மொபைல்களின் பட்டியல்...
ஆப்பிள் ஐபோன் 3 ஜி - ரூ. 30000,
நோக்கியா என்96 - ரூ. 33,300,
நோக்கியா ஈ63 - ரூ 22,100 ,
நோக்கியா 7900 - ரூ. 17400,
நோக்கியா என்85 - ரூ. 23,600,
சாம்சங் ஓம்னியா - ரூ. 31,250,
ஸோனி எரிக்ஸன் சி905 - ரூ. 31,250,
ஸோனி எரிக்ஸன் ஜி705 - ரூ. 28,000....
நன்றி ஆ.வி.

வியாழன், 1 ஜனவரி, 2009

புத்தாண்டும் பரங்கிப்பேட்டையும்

ஜனவரி 1 - ஆங்கில புதிய ஆண்டு பிறப்பு என்றிருந்தாலும், இதை ஏதோ ஒரு வழியில் கொண்டாட்டமாகவே வெகுஜன மக்கள் எண்ணுகிற வேளையில், சில ஆண்டுகளுக்கு முன்பெல்லாம் இது கொண்டாட்டமாக ஆர்கெஸ்ட்ரா, வீதி உலாக்கள் என்று நீண்டிருந்தது. புத்தாண்டு முதல் நாளே, அதாவது அன்று இரவே (NewYear Eve) இதன் அடையாளங்கள் தெரிந்துவிடும்.

ஆனால் இந்த புதிய ஆண்டிற்கு, எவ்வித அடையாளமும் காணப்படாமல் இருந்தது. சஞ்சீவிராயர் முனையில் மட்டும் (முன்னால்) மியான் கடையில் லேசான அலங்கார விளக்கோடு Happy New Year என்கிற வாழ்த்து வாசகத்தோடு கூட்டமே இன்றி, இரவு 12 மணி வரை வெறிச்சோடியே காணப்பட்டது.

01-01-2009; 00:00 சரியாக துவங்கியவுடன் ஊரின் பக்கவாட்டுகளிலிருந்து பக்காவாக ஒலித்தது வெடியும் வேட்டு சத்தங்களும். பல்ஸரும், அப்பாச்சிகளும் சரக்-புரக் என்று சிமெண்ட் சாலைகளில் இனம்புரியாத ஓசைகளை எழுப்பியவாறு சோழாவரம் ரேஸ் ஒன்றை நடத்திவிட்டு சென்றது.

அதன் பிறகு மியான் கடையில் டீ விற்பனையும் சூடு பிடித்துக்கொண்டது.
இதனிடையே நள்ளிரவு 2 மணி வரை ஊரின் பல முக்கிய வீதிகளில் இளைஞர் பட்டாளம் ஒன்று கார் ஒன்றில் அதன் உள்ளேயும் மேற்கூரையிலும் உட்கார்ந்தவாறு அதிரடி இசை முழங்க, கைத்தட்டல்கள் மற்றும் வெடிகளை வெடித்தவாறு தூக்கத்தில் இருந்தவர்களை அதிர்ச்சியூட்டிவிட்டு சென்றது.

இவர்களை புகைபடமெடுக்க முயன்ற தருணத்தில் சுதாகரித்து கொண்டு எஸ்கேப் ஆகிவிட்டது.

இன்று முதல் MYPNO இணையதள சோதனைச் சேவை

இறையருளால், அவன் நன்னாட்டபடி, இன்று முதல் http://www.mypno.com/ இணையதள சோதனைச் சேவை உங்களுக்காக!


அன்பு வாகசர்களே! இந்த இணையதள சேவையை உங்களுக்காக கடந்த ஹஜ் பெருநாள், முஹர்ரம் 1 ஆகிய இரு தினங்களில் முழுமையான சேவையுடன் வழங்க நாங்கள் திட்டமிட்டோம். ஆனால் சில இடர்கள் இதனை ஒத்திவைக்க நேரிட்டது. முக்கியமாக.... பரங்கிப்பேட்டையில் BSNL அலுவலகம் இடம் மாற்றும் வேலைகளால் இன்றுவரை இண்டெர்நெட் சேவை கிடைக்கவில்லை.


ஆதலால், சிரமங்களுக்கிடையே.... இவ்வலைதளச் சேவையை சோதனைச் சேவையாக வழங்குகிறோம்.


இதில் உள்ள நிறை-குறைகளை எங்களுக்கு உடனே மின்னஞ்சல் செய்யுங்கள். இந்த இணையத்தில் உறுப்பினராக பதிவு செய்து கொள்ளுங்கள்.
வெளிநாட்டுவாழ் வாசகர்களே! உங்கள் பகுதிகளில் நடக்கும் செய்திகளையும்; தகவல்களையும் தொகுத்து அனுப்புங்கள். அவை இன்ஷாஅல்லாஹ்... NRI பக்கத்தில் பிரசுரிக்கப்படும்.

இன்னும் சில.... தினங்களில் அனைத்து தகவல்களையும் தாங்கி...... முழுமையான இணையமாக உங்களுக்காக... மிக விரைவில், இன்ஷாஅல்லாஹ்.

நன்றிகள் பல.
-MYPNO குழு

வெளிச்சமூட்டிய வெளக்குகள்

இன்று நினைத்து பார்க்க முடியாத அளவில் விஞ்ஞானம் வளர்ந்து விட்டது. அன்று தாமஸ் ஆல்வா எடிசன் என்கிற ஒரு விஞ்ஞானி கண்டுபிடித்த ஒரு 'டங்ஸ்டன...